« February 2011 | Main

April 24, 2011

1961 சத்தியாக்கிரக இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

"....இப்படியாக அடக்குமுறையாளரின் வன்முறை, அடக்கப்பட்டவர்களின் அஹிம்சையை ஒடுக்கியது. சிங்கள பெருமிதவாதத்தின் ஆயுத வலு தமிழர்களின் வன்முறையில்லாத போராட்டத்தை நசுக்கியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தமிழ் தேசிய போராட்டத்துக்கு மிகவும் அவசியமான அரசியல் அநுபவத்தின் தொடக்கமாக அமைந்தது.

இந்த அநுபவம் தமிழர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. தமது அகிம்சை வழியான போராட்டத்தின் ஆன்மீக பலம், வன்முறை அடக்குமுறையாளரின் இராணுவ பலத்தின் முன் தாக்குபிடிக்காது என அவர்கள் அறிந்து கொண்டனர். இந்த அடக்குமுறையாளர்கள் மனிதத்தின் தார்மிக நியமங்கள், நாகரிகப்பண்பு என்பவற்றை கடந்தவர்களாக காணப்பட்டனர்.

தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இராணுவ பயங்கரவாதத்தின் மூலம்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை இந்த நிகழ்வு, அடக்கு முறையாளரிடம் உண்டாக்கியது.

தமிழ் அரசியல் எதிர்ப்பின் அஹிம்சை வழி என்னும் அத்திவாரம், துப்பாக்கிக் குழலின் முன் பலவீனமானது, வலுவுற்றது என அவர்களை எண்ண வைத்தது." - அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை புலிகளும் தமிழீழ சுதந்திர போராட்டமும்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
இழந்த உரிமைகளை பெறுவதற்கான இலங்கை தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் பெப்ரவரி 20, 1961 ஒரு முக்கிய நாளாகும்.

இந்த நாளில்தான் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தால் தலைமை தாங்கப்பட்ட ஆங்கிலத்தில் 'பெடரல்' கட்சி என அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி ஐம்பது ஆண்டுகளுக்கு முன், உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமா பண்டாரநாயக்காவால் தலைமை தாங்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக அஹிம்சைவழி நேரடி நடவடிக்கை இயக்கத்தை ஆரம்பித்தது.

தமிழ் போராளிகள் மேற்கொண்ட கொடூரமான ஆயுத போராட்டத்தை ஆண்டாண்டு காலமாக கண்டு வந்தமையால் பலரின் மனதில் தமிழ் அரசியல் இயல்பு அடிப்படையில் வன்முறையானது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வன்முறை, தமிழர் கோரிக்கைகளின் நியாயத்தை தட்டிக்கழிக்க சுயநலமிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. இந்த 'பிரச்சினை'யை சட்டம், ஒழுங்கு தொடர்பான விடயமாக சித்திரிக்கவும் முடிந்தது.

சுதந்திரத்துக்கு பின்னரான மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழ் அரசியல் போராட்டம் மாகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவத்தை கடைப்பிடித்த வன்முறையில்லாத வழியில் அமைந்திருந்தது என்ற உண்மை மறக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, வருகிறது.

வன்முறையில்லாத தமிழ் போராட்டம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற தவறியதே விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களை துப்பாக்கி தூக்க வைத்தது என பலர் கருத்து தெரிவித்தனர்.

இது எவ்வாறு இருந்தபோதிலும், 20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காற்பகுதி, இலங்கைத் தமிழர்களால் நடத்தப்பட்ட வன்முறை சாராத எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறைந்து காணப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. இந்த காலத்தில் ஹர்த்தால்கள், சத்தியாக்கிரகங்கள், கறுப்புக் கொடி காட்டுதல், ஊர்வலங்கள் , பேரணிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், துக்கதினம் அனுஷ்டிப்புகள் ஒத்துழையாமை இயக்கம், மக்கள் எதிர்ப்பியக்கம், பகிஷ்கரிப்பு என்பன தமிழ் அரசியலின் வெளிப்பாடாக இருந்தன.

இந்த வன்முறை சாரா அரசியல் எதிர்ப்பின் முக்கிய வெளிப்பாடாக பெப்ரவரி 20, 1961 இல் தொடக்கி நடத்தப்பட்ட மகா சத்தியாக்கிரக இயக்கம் இருந்தது.

இலங்கை தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாக இந்த சத்தியாக்கிரகம் அமைந்தது. இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரையில் ஒரு சிறிய, ஆயுதம் தாங்காத மக்கள், அர்ப்பணிப்பு மற்றும் ஐக்கியம் மூலம், கொழும்பு அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரண்டு மாதகாலமாக முடக்கி வைத்திருந்தனர்.

அறிகுறி
ஆயுத படைகள் அழைக்கப்பட்டமை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதன் அறிகுறியாக அமைந்தது. இப்பகுதிகளில் அதிகரித்த தீவிரவாதம், அதிகரித்த இராணுவமயப்படுத்தலால் எதிர்கொள்ளப்பட்டது.

இப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அளவுக்கு மீறிய இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது. இந்த மாகாணங்களில் பிரதிநிதித்துவ அரசியல் வீழ்ச்சி கண்டு, சிதைந்து வருகிறது.

அடிப்படையில் வன்முறையற்ற இயல்பினதாக இருந்தபோதும் 1961 சத்தியாக்கிரகம், தமிழ் அரசியலின் எதிர்கால செல்நெறியின் அறிகுறிகளையும் வெளிப்படுத்தியது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சில இளைஞர்கள் வெளிப்படுத்திய அவசரம், வரக்கூடிய தீவிரவாதத்தின் எழுச்சியை அடையாளம் காட்டியது.

சத்தியாக்கிரகத்தின்போது, சமாந்தரமாக நடத்தப்பட்ட தபால்சேவை போன்ற சட்டமறுப்பு நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் வளரப்போகும் பிரிவினையையை சுட்டுவதாக இருந்தன.

திருமதி பண்டாரநாயக்கவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த 1960 யூலை தேர்தல்களில் சமஷ்டி கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் கூட்டாளியாக இருந்தது என்பது கவலைக்குரிய முக்கிய விடயமாக இருந்தது.

இவ்வாறு இருந்தபோதும், நிலைமைகள் மோசமடைந்தன. ஒரு வருட காலத்தினுள் பிரதான சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கபடாதவாறு தடைப்பட்டபோது அது அரசியல் மோதலாகி 1961 சத்தியாக்கிரகத்தில் முடிந்தது.

முக்கியத்துவம்

இந்த விடயங்களை நன்கு விளங்கிக்கொள்வதற்கு மார்ச் 1960 இலும் யூலை1960 இலும் நடந்த பொது தேர்தல்கள்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த தேர்தல்களில் டட்லி சேனநாயக்க அரசாங்கத்தை வீழ்த்தியும் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை கொண்டு வந்தும் சமஷ்டி கட்சி முக்கிய பங்காற்றியது.

ஐ.தே.க.விக்கு எதிராக சமஷ்டிக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு வைப்பதற்கு காரணமாக அமைந்தவை பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – சமஷ்டிக் கட்சி கூட்டு உடைந்தமை பற்றியும் விபரமாக அறிந்திருப்பது முக்கியமானதாகும்.

1961 சத்தியாக்கிரகம் நடைபெற்ற பின்னணியை நன்கு விளங்கிக் கொள்வதற்கு, அதற்கு முந்தைய கால நிகழ்வுகளை ஆராய்வது அவசியமானதாகும்.

மார்ச் 1960 இற்கும் யூலை 1960 இற்கும் இடையில் மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவற்றில் சமஷ்டிக் கட்சி வெளியில் தெரியாத முக்கிய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது. 1961 சத்தியாக் கிரகத்தைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள இந்த விடயங்களை நன்கு ஆராயவேண்டும்.

சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கமும் எதிர்க்கட்சியான சமஷ்டிக கட்சியும் காட்டிய தீவிரமும், உறுதிப்பாடும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படுவதற்கு, மார்ச்- யூலை 1960 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.

செப்டெம்பர் 1959 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலையுண்ட பின், வித்தியாசமான போக்குக் கொண்ட டபிள்யூ. தஹநாயக்கா பிரதமரானார். ஆனால் இவர் பிரதமராக இருந்தது கொஞ்சக் காலத்திற்குதான். மார்ச் 1960 இல் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது.

101 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 157 ஆக அதிகரித்தது. இதில் 6 பேர் நியமன உறுப்பினர்களாக இருந்தனர். 151 உறுப்பினர்கள் 145 தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு தெற்கு, அக்குரணை, மட்டக்களப்பு, மூதூர் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதிகளாக இருந்தன. கொழும்பு மத்தியிலிருந்து மூன்று அங்கத்தவர்கள் தெரிவாகினர்.

பிரசாரம்

1953 இல் தானாக அரசியலை விட்டு நீங்கிய டட்லி சேனநாயக்க 1957 இல் மீண்டும் அரசியலுக்கு வந்திருந்தார். அவர் 1960 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சி.பி.டி சில்வாவினால் தலைமை தாங்கப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தில் கொலையுண்ட பண்டாரநாயக்கவின் மனைவி சிறிமா முக்கிய பங்கு எடு;க்கவில்லை.

மக்கள் ஒற்றுமை முன்னணியின் தலைவர் பிலிப் குணவர்த்தன, லங்கா சம சமாஜிஸ்ட கட்சியின் தலைவர் டாக்டர். என்.எம். பெரேரா, காபந்து பிரதமர் தஹநாயக்க ஆகியோர் பிரதமராக ஆசைபட்டவர்களாக இருந்தனர்.

தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்தது. லங்கா சமசமாஜிஸ்ட் கட்சி, மக்கள் ஒற்றுமை முன்னணி ( ஆநுP) என்பவை தலா 10 இடங்களை எடுத்திருந்தன. மூன்றாவது பெரிய கட்சியான சமஷ்டிக் கட்சி 15 இடங்களை எடுத்திருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் சமஷ்டி கட்சி தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது.

ஐ.தே.க. சார்பானவர் என கருதப்பட்ட கவர்னர் ஜெனரல் சேர். ஒலிவர் குணதிலக தனியொரு கட்சியாக அதிகூடிய இடத்தை எடுத்த ஐ.தே.க.வை அரசாங்கத்தை அமைக்கும்படி அழைத்தார். ஆனால் டட்லி சேனாநாயக்காவினால் அரசாங்கத்தை அமைக்க கூடிய பெரும்பான்மையை பெற முடியுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே இருந்தது.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சுயேட்சை அங்கத்தவர்கள், கட்சி மாறிவரக் கூடியவர்கள் என்று பார்த்தாலும் டட்லி சேனாநாயக்கவினால் மொத்தமாக 157 அங்கத்தவர்களில் 60 அல்லது 61 பேரை மட்டுமே சேர்க்கக் கூடியதாக இருந்தது. சமஷ்டி கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டால், இன்னும் சில சுயேட்சை அங்கத்தவர்களையும், சிறுகட்சிகளின் அங்கத்தவர்களையும் தன்பக்கம் இழுக்க முடியும் என டட்லி சேனநாயக்கா நம்பிக்கை கொண்டிருந்தார்.

செல்வநாயகம்
சேனநாயக்க ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு செல்வநாயகத்தின் ஆதரவு அத்தியாவசியமான இருந்தது. இவ்வாறே மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சமஷ்டிக் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது.

எனவே வெற்றியாளரான சமஷ்டிக் கட்சி தலைவர் பலாலியிலிருந்து இரத்மலானைக்கு விமானத்தில் சென்றபோது, அவர் அரசியல் ரீதியில் மிகவும் வேண்டப்பட்டவராக காணப்பட்டார்.

முன்னாள் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல முன்னாள் சட்டசபை உறுப்பினர் சேர். அருணாசலம் மகாதேவா, இளைப்பாறிய பிரதம நீதியரசர். சேர்.எட்வேட் ஜயதிலக, முன்னாள் நீதியமைச்சரும், செனட் தலைவருமான சேர். லலித் ராஜபக்ஷ ஆகிய முக்கியஸ்தர்கள், ஐ.தே.க.வின் சார்பில், செல்வநாயகத்தை தமது பக்கம் இழுக்க முயன்றனர். டட்லி சேனநாயக்கவுடன் கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சியால், போட்டியிட முடியாத துரும்புச் சீட்டு ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைத்திருந்தது.

இதுதான் பண்டா- செல்வா ஒப்பந்தமாகும். இது யூன் 1957 இல் கையொப்பமிட்டது.

இந்த ஒப்பந்தத்தில் வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரண்டு பிராந்திய சபையும் அமைப்பதாக ஏற்கப்பட்டிருந்தது. இதில் இணைக்க கூடிய ஏற்பாடும் காணப்பட்டது. நிர்வாகத்திலும், நீதிமன்றங்களிலும் தமிழின் பயன்பாட்டிற்கான வழிமுறைகளும் ஏற்கப்பட்டிருந்தன. குடியேற்றங்கள் என்ற விடயம் தொடர்பிலும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

ஐ.தே.க.வும் பௌத்த துறவிகளில் ஒரு பகுதியினரும் காட்டிய எதிர்ப்பின் காரணமாக பண்டா- செல்வா ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக கைவிடப்பட்டது.

செல்வநாயகம் இரத்மலானையில் வந்திறங்கியபோது எதிர்பாராத ஒருவரும் வந்திருந்தார.; மலைநாட்டு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராமானுஜம் தான் அவர்.

அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொணடமானின் பிரதிநிதியாக அங்கு வந்திருந்தார். அப்போது தோட்டத்துறையின் தமிழ் தலைவரான எஸ்.பி.வைத்தியலிங்கத்துடன், டட்லி சேனநாயக்கா நெருக்கமாகவிருந்தார். முன்யோசனை மிக்க தொண்டமான் இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருக்கமாகி வந்தார்.

சமஷ்டிக் கட்சி பதவியிலுள்ள எந்த அரசாங்கத்தோடு பேசினாலும் மலைநாட்டு தமிழர்களின் நலன்களையும் முன்வைக்க வேண்டும் என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை சமஷ்டிக்கட்சி ஏற்றிருந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்குமிடையில் அரசியல் ரீதியான நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

ராமானுஜம், செல்வாநாயகத்தை தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திக்கு வந்து எதிர்பாராத ஒரு விருந்தாளியை சந்திக்குமாறு வற்புறுத்தினார். அங்கு தொண்டமானுடன் காத்துக்கொண்டிருந்தவர் டாக்டர் .பதியுதின். மஃமூத் ஆவார்.

பின்னர் திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திலும் கல்வியமைச்சராக வந்த டாக்டர். மஃமூத் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு மிக நெருக்கமாகவிருந்தார். சிறிமாவை முழுதாக அரசியலில் ஈடுபட வைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பண்டா - செல்வா ஒப்பந்தம்

சமஷ்டி கட்சி, ஐ.தே.கவுக்கு. ஆதரவு வழங்காதுவிடின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பண்டா- செல்வா ஒப்பந்தத்தை அழுலுக்கு கொண்டுவரும் எனவும், நிலம், குடியேற்றம் ஆகியவை தொடர்பில் இன்னும் கூடிய அதிகாரம் கொண்ட பிராந்திய சபைகளை அமைக்க தயாராக இருக்கின்றதெனவும் டாக்டர். மஃமூத் செல்வநாயகத்திடம் கூறினார்.

நிர்வாகம் மற்றும் சட்டத்துறைகளில் தமிழுக்கு நியாயமான இடத்தை வழங்கும் முற்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். பண்டா செல்வா ஒப்பந்தத்தை சமஷ்டிக் கட்சிக்கு ஐ.தே.கவினால் அமுலாக்க முடியாது என மஃமூத், சாதுரியமாக பேசினார்.

எனவே, டட்லி சேனநாயக்காவுடன் பேசும்போது, பண்டா – செல்வா ஒப்பந்தம் கிடைக்கவுள்ளது என்ற தைரியத்துடன் செல்வநாயகம் காணப்பட்டார்.

பேச்சுவார்த்தை தொடங்க முன்னரே, டட்லி சேனாநாயக்கா, தேசாதிபதிக்கு சமஷ்டிக் கட்சியின் ஆதரவு கிடைக்கவுள்ளதாக அறிவித்ததாக பத்திரிகைகளில் வந்த செய்திகளால் சமஷ்டிக் கட்சி எரிச்சலடைந்து இருந்தது.

டட்லி சேனநாயக்கவுடன் பேசும்போது சமஷ்டிக் கட்சியின் தலைவர் பரந்தளவில் நான்கு கோரிக்கைகளை வாய்மொழியாக முன்வைத்தார். காணி, குடியேற்றம் ஆகிய விடயங்களில் அதிகாரம் கொண்ட, பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் முன் மொழியப்பட்டிருந்த பிராந்திய சபைகள் இவற்றில் முதலாவது ஆகும்.

நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழியாக தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது இரண்டாவது ஆகும்.

மூன்றாவது கோரிக்கை, 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தை திருத்தி இதன் மூலம் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட, வாக்குரிமை பறிக்கப்பட்ட மலைநாட்டுத் தமிழர்களை பிரஜைகளாக பதியும் நடவடிக்கையை விரைவுபடுத்தலாகும்.

ஆறு நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மலை நாட்டு தமிழர்களாக இருக்க வேண்டும் என்பது நாலாவது கோரிக்கையாகும்.

தேவையேற்படின் கோரிக்கைகளில் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள சமஷ்டிக் கட்சி தயாராக இருப்பதாக செல்வநாயகம், டி.எஸ்.சேனநாயக்கவிடம் கூறினார்.

தமிழர்கள் அனுபவித்த துயரங்களையும் போக்குவதற்கு டி.எஸ்;.சேனநாயக்க நேர்மையாக முயற்சிகளை மேற்கொள்வாராயின் தனது கட்சி ஐ.தே.க.வை ஆதரிக்கும் என செல்வநாயகம், டி.எஸ்.சேனநாயக்கவிடம் தெரிவித்தார்.

எந்த கோரிக்கைகளில், செல்வநாயகம் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளார் என டி.எஸ். சேனநாயக்க கேட்காமலே கூட்டம் முடிந்தது. அடுத்த கூட்டம் மார்ச் 26 இல் நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைந்து செயற்பட்டு டட்லியை ஓரங்கட்டியது.

மார்ச் 23 இல் செல்வநாயகத்துடன் பேச ஒரு இளைஞன் வந்திருந்தார். இவர் பண்டாரநாயக்கவின் மருமகனும் தொம்பே நாடாளுமன்ற உறுப்பினருடான பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்க ஆவார்.

அதிவிவேகமான இந்த இளம் வழக்குரைஞர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக திகழ்ந்தவர். உயர்நீதிமன்றத்தின் நீதியரசரான, பீலிக்ஸின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயக்கதின் நண்பராவார்.

1957 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் ஒப்புக்கொண்ட விடயங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடைமுறைப்படுத்தும் என பீலிக்ஸ் செல்வநாயகத்துக்கு உறுதியளித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் முழுமையாக அமுலாகும், பிராந்திய சபைகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. சிம்மாசன பிரசங்கத்தின் போது இது பற்றி கொள்கைப்பிரகடனம் செய்யப்படும் என பீலிக்ஸ் செல்வநாயகத்திடம் கூறினார்.

மார்ச் 26 இல் சேனநாயக்க, செல்வநாயகத்துடன் பேசும் போது, சமஷ்டிக் கட்சியின் கோரிக்கைகளை வழங்குவதில் தனக்குள்ள கஷ்டங்களைப் பற்றி கூறினார். இயலுமாயின் கோரிக்கைகளை குறைக்குமாறு டட்லி, செல்வநாயகத்திடம் கூறினார்.

சிங்கள, தமிழ் மொழிகளின் சம அந்தஸ்துக் கோரிக்கைகையை கைவிடத் தயாரென செல்வநாயகம் கூறினார். பதிலாக வடக்கு, கிழக்கில் உத்தியோக மொழியாக தமிழை பயன்படுத்தும் ஏற்பாட்டுடன், நிர்வாக, சட்ட துறைகளில் தமிழ் மொழியின் நியாயமான பிரயோகத்தை ஏற்பதாக கூறினார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக 4 தோட்டத்துறை தமிழர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலாக, ஒரு உறுப்பினரை நியமித்தால் போதும் என சமஷ்டிக் கட்சி கூறியது.

பிராந்திய சபைகள், குடியுரிமை சட்டம் என்ற விடயங்களில் விட்டுக் கொடுக்க முடியாது என சமஷ்டிக் கட்சி கூறியது. சேனநாயக்க இறுதியான கோரிக்கைளை எழுத்து வடிவில் தரும்படி கேட்டுக் கொண்டார். அன்றே அது செய்யப்பட்டது.

மார்ச் 27 காலை டட்லி சேனாநாயக்க செல்வநாயகத்துடன் தொடர்புக்; கொண்டு ஐ.தே.க வேட்பாளரை சபாநாயகராக தெரிவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க சம்மதித்து விட்டதால், இது முடியாதது என செல்வநாயகம் மறுத்துவிட்டார்.

சபாநாயகர் தெரிவில் ஐ.தே.க. வின் தெரிவான சேர். அல்பேர்ட் பீரிஸை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ரி.ரீ. சுபசிங்க தோற்கடித்தார்.

சேனாநாயக்க மார்ச் 27 மாலை மீண்டும் செல்வநாயகத்தை சந்தித்தார்.

பிரிவினை

பிரிவினைக்கான முதல்படி என ஐ.தே.க. கடுமையாக எதிர்த்ததனால். பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட பிராந்திய சபைகளை அமைக்க தன்னால் முடியாதென சேனாநாயக்க அப்போது வெளிப்படையாக பேசினார்.

பதிலாக, தன்னை நம்புமாறு சமஷ்டிக் கட்சியை கேட்டுக்கொண்டார். தான் தமிழர்களுக்கு எதிராக செயற்படமாட்டாரென்றும் உறுதியளித்தார். அவர் சமஷ்டிக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் முன்வந்தார்.

செல்வநாயகம் அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்தார். அவர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி கொண்டார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. வெளிப்படையாக தெரிந்தது.

ஆயினும், கண்ணியமான அரசியல்வாதியாகிய டட்லி சேனநாயக்காவை நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என கொழும்பு வாழ் தமிழர்கள், சமஷ்டிக் கட்சி மீது பொதுவிலும், செல்வநாயகத்தின் மீது குறிப்பாகவும் பெரும் அழுத்தத்தை பிரயோகித்தனர்.

சமஷ்டிக் கட்சி இந்த அழுத்தங்களை உறுதியாக எதிர்த்து நின்றது.

எற்கெனவே கட்சி, சில விடயங்களி;ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்தமையே சமஷ்டிக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

செல்வாவுக்கும் பீலிக்ஸுக்குமிடையில் நடந்த முதல்கட்ட 'பேச்சு'க்கு புறம்பாக, சி.பி டி. சில்வா, மைத்திரிபால சேனநாயக்கா, ஏ.பி.ஜயசூரிய மற்றும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோர் அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோக பூர்வ குழு ஒன்று செல்வநாயகம் தலைமையிலான குழுவை சந்தித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்த அதே கோரிக்கைகளையே, செல்வநாயகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமும் முன்வைத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடக்கத்திலேயே சமஷ்டி கட்சியுடன் ஒப்பந்தம் எதையும் செய்யாது என கூறியது.

பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு காட்டப்பட்ட சிங்கள எதிர்ப்பின் பின்னணியில் இன்னொரு ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக செய்துகொள்வது நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்பார்க்கப்படுவது போல ஐ.தே.க அரசாங்கம் விழும்போது அரசாங்கம் அமைக்குமாறு அழைக்கப்பட்டால் தனது சிம்மாசன பிரசங்கத்தில், சமஷ்டி கட்சி எழுப்பிய பிரச்சினைகள் மீது கொள்கை பிரகடனம் ஒன்றை செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது.

மாவட்ட சபைகள்

முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகள் தொடர்பில், பீலிக்ஸ் பண்டாரநாயக்காவினால் சொல்லப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து சி.பி.டி. சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட தூதுக் குழு சற்று வித்தியாசமான நிலைப்பாட்டிலிருந்தது.

வடக்கு, கிழக்குக்கான பிராந்திய சபைகளை நிறுவுவதை அதுவும் எதிர்ப்பதாக வெளிப்படையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டிருந்த போதும், பின்னர் நடந்தவை அந்த எண்ணக்கருவை சிதைத்துவிட்டன.

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு என தனியான ஏற்பாடு சாத்தியமில்லை, அது சிங்கள எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது.

இதற்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்துக்குமான 'மாவட்டசபை'யை நிறுவுவதாக கூறியது. முன்னர் கூறப்பட்ட பிராந்திய சபைகளுக்கு இருந்த அதிகாரங்கள், கடமைகள் இந்த மாவட்ட சபைகளுக்கு இருக்குமென கூறப்பட்டது.

மொழிப் பிரச்சினை விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க தயாராக இருக்கவில்லை. நிர்வாக தேவைகளுக்கும் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களிலும் தமிழை பயன்படுத்தும் ஏற்பாடுகளை அமுலாக்க அது தயாராக இருந்தது. வடக்கு, கிழக்குக்கு அப்பால், தமிழின் நியாயமான பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவால் முன்வைக்கப்பட்டு ஆக்ஸ்ட் 1958 இல் நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்ட தமிழ் மொழி (விசேட ஏற்பாடு) சட்டம் இதற்கான வழிக்காட்டலை வழங்கும்

ஆயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரஜாவுரிமை சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யமுடியாது என கூறியது. இந்த விடயத்தில் அது நெகிழ்வுத்தன்மையை காட்டவில்லை. அது இரண்டு தோட்டத்துறை தமிழர்களை நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க சம்மதித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் மலைநாட்டு தமிழ் மக்கள் பிரச்சினை அவருடன் பேசி தீர்க்கப்படுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி கூறியது.


சிம்மாசன பிரசங்கம்

இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக்கொண்ட விடயங்களுக்கு சிம்மாசனப் பிரசங்கத்தின் போது கொள்கைப் பிரகடனம் வழியாக தூல வடிவம் கொடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறியது. ஆயினும் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் இருக்காது.

தனது நிலைப்பாட்டை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தியப்பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிமொழியை நிறைவேற்ற தவறினால், சமஷ்டி கட்சியால் சிம்மாசன பிரசங்கத்தின் பின் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க முடியும் என கூறியது.

சமஷ்டி கட்சியின் ஆதரவு இல்லாதுவிடின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் வீழ்ச்சி காணும். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் வாக்குறுதியை மீறமுடியாது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு சில விடயங்களில் விட்டுக்கொடுப்பு இல்லாததாக இருந்தபோதும் சமஷ்டிக் கட்சி அதற்கு ஆதரவு வழங்கவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக வாக்களிக்கவும் தீர்மானித்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுடன் அடையப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டமை மீற முடியாத வகையில் ஆசை காட்டியது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை முறியடிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி வகித்த பாத்திரம், அதன்மீது வெறுப்பை உருவாக்கியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் கதை முடிந்து போயிற்று. நாடாளுமன்றம் வைபவரீதியாக ஏப்ரில் 19 இல் திறந்து வைக்கப்பட்டது. சிம்மாசன பிரசங்கம் மீதான விவாதம் ஏப்ரில் 20 இல் தொடங்கியது. விவாதத்தின் இறுதி நாளன்று செல்வநாயகம் ஐக்கிய தேசிய கட்சியை கடுமையாக சாடினார்.

தமிழ் பேசும் மக்களின் எதிரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்ல, ஐக்கிய தேசிய கட்சிதான். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்காவை கிழிக்க செய்தது, ஐக்கிய தேசியக் கட்சி பிக்குகள் தான்;' என செல்வநாயகம் குற்றஞ் சுமத்தினார்.

ஏப்ரில் 22 இல் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சமஷ்டிக்கட்சி எதிர்க்கட்சியோடு சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தது. சிம்மாசன பிரசங்கம் 25 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தியப் பின் டட்லி சேனாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு தேசாதிபதிக்கு சிபாரிசு செய்ததார்.

சேர்.ஒலிவர் சகல அரசியல் கட்சிகளினதும் தலைவர்களை அழைத்து தேர்தலை நடத்துவதற்கு பதிலாக மாற்று அரசாங்கம் அமைப்பதைப் பற்றி, தான் ஆராய்வதாக கூறினார். இப்போது 46 இடங்களை வைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருந்தது.

சி.பி.டி.சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சி.பி.டி.சில்வா தேசாதிபதியை சந்தித்து தனக்கு அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை தரும்படி வலியுறுத்தினார். அவர் தனக்கு தேவையான பலம் உண்டு என்றும் சமஷ்டி கட்சியின் ஆதரவு நிச்சயம் தனக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

இதன் பின், தேசாதிபதி செல்வநாயகத்தை இராணி மாளிகைக்கு அழைத்தார். உண்மையில் சமஷ்டிக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதா என்பதை நிச்சயப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது. தனது அல்பிரட் ஹவுஸ் கார்டன்லில் இருந்த வீட்டிலிருந்து கோட்டைக்கு செல்லும் வழியில் செல்வநாயகம் மஹனுகே கார்டன்ஸில் இருந்த பீலிக்ஸின் வீட்டுக்கு சென்றார். அங்கு சி.பி.டி சில்வாவும் ஏ.பி. ஜயசூரியாவும் காத்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் இன்னும் வலுவுடையனவா என செல்வநாயகம் மீண்டும் கேட்டார். விடை உடன்பாடானதாக இருந்தது. அதன் பின் செல்வநாயகம், பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படை விடயங்கள் வாக்கு தரப்பட்டதைப் போல அமுல்படுத்தப்படுமா எனக் கேட்டார். மீண்டும் உடன்பாடான விடையே கிடைத்தது.

இப்போது செல்வநாயகம் தன்னோடு சென்.தோமஸ் கல்லூரியில் படித்தவரும், பிரதமராக வரக் கூடியவருமான சிபி.டி.சில்வாவை பார்த்து 'இந்த உறுதி மொழிகளை நீங்கள் அமுலாக்;குவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?' என முகத்துக்கு நேரே கேட்டார்.

இதற்கு சிபி.டி.சில்வா, தனக்கே உரித்தான பாணியில் விடையளித்தார்.

'நான் பேச்சுவார்த்தையில் இறுக்கமாகத்தான் இருப்பேன். ஆனால் ஒன்றை சொல்லிவிட்டால் அதை செய்வேன்' - சி.பி இவ்வாறு குறிப்பிட்டார்.

செல்வநாயகம் திருப்தியோடு இராணி மாளிகை நோக்கி சென்றார். சி.பி.டி.சில்வா விதி நல்லது செய்யும் என காத்திருந்தார். பாவம் ! விதியின் முடிவு வேறு வழியாக இருந்தது.

சேர் ஒலிவர் குணதிலக செல்வநாயகத்தை வரவேற்றார். தான் சி.பி.டி. சில்வாவினால் மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியுமா என நிச்சியப்படுத்த முயற்சிப்பதாக கூறிய தேசாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் தேவையான பெரும்பான்மை இல்லாதுவிடின் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக கூறினார்.

நிபந்தனையற்ற ஆதரவு

இந்த வகையில் சமஷ்டிக் கட்சியின் ஆதரவு முக்கியம் என கூறிய தேசாதிபதி, சமஷ்டிக் கட்சியின் தலைவரிடம், குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மாற்று அரசாங்கத்துக்கு சமஷ்டி கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமா என நேரடியாகவே கேட்டார்.

சேர் ஒலிவர் ' நிபந்தனையற்ற' ஆதரவு என்பதை அழுத்தியதிற்கு ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சமஷ்டி கட்சிக்கு வழங்கிய உறுதி மொழிகளை கௌரவிக்காதவிடத்து சமஷ்டி கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் செல்வநாயகத்திடமிருந்து ஒரு உறுதி மொழியை பெற்று புதிய அரசாங்கத்தின் உறுதித் தன்மை பற்றி உறுபடுத்திக் கொள்ள விரும்பினார்.

ஆனால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டாம் என செல்வநாயகத்தின் சட்ட மூளை தடை போட்டது.

நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கூறினால் தானும், கட்சியும் இரண்டு வருடங்களுக்கு முடக்கப்பட்டு விடுவார்கள் என்பதை செல்வநாயகம் உணர்ந்து கொண்டார். நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்குறுதியை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடும் முறையில்; செல்வநாயகம் கெட்டித்தனமான பதிலளித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சமஷ்டிக்கட்சி ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளது. இரண்டு வருடமல்ல முழுப்பதவிக் காலத்துக்குமே தனது கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கும்' என்றார் செல்வநாயகம்.

இந்த பதிலினால், நிபந்தனையற்ற ஆதரவு தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டார். ஆனால் அரசியல் மதிநுட்பம் வாய்ந்த சேர். ஒலிவர் செல்வநாயகத்தின் தயக்கத்தில் அமைக்கவுள்ள அரசாங்கத்தின் உறுதியின்மையை கண்டுகொண்டார்.

செல்வநாயகத்தின் பதிலால் தான் திருப்தியடையவில்லை எனக் கூறிய தேசாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.


தேசாதிபதி

தேசாதிபதியின் நடவடிக்கைக்கு அவர் ஐ.தே.க.வின் பால் அவர் கொண்டிருந்த பக்கச் சார்பே காரணம் என்றும் தேசாதிபதி இதற்கு செல்வநாயகத்தை சாட்டாக பயன்படுத்தினார் என்றும் பரவலாக நம்பப்பட்டது.

ஆனால் ஒலிவரின் நடத்தைக்கு மோசமான ஒரு விளக்கமும் உண்டு.

செல்வநாயகத்தின் மகளின் கணவனும் அரசியல் விஞ்ஞானியுமான ஏ.ஜே.வில்சன், உண்மைக் காரணம் சாதி என்றார். சி.பி.டி. சில்வா சலகம சாதியை சேர்ந்தவர். ' ஒரு சலகம சாதியை சேர்ந்த ஒருவரை நான் எப்படி நியமிப்பது'? என என்.எம். பெரேராவிடம் சேர் ஒலிவர் கூறியதாக வில்சன் கூறுகிறார்.

தேசாதிபதியின் நடத்தைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமஷ்டிக் கட்சி உட்பட சகல எதிர்க்கட்சிகளும் சேர் ஒலிவர் குணதிலகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை விமர்சித்து கடிதங்களையும் எழுதின. ஆனால் புதிய தேர்தல் யூலை 60 இல் நடத்தப்பட்டது.

தேர்தல் பிரசாரம் தொடங்கிய பின் சீரமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மார்ச்சில் நடந்த தேர்தலிலும் பார்க்க கூடிய இடத்தை பெறும் என்று தெரிந்தது.

அழுகின்ற விதவை

சிறிமா பண்டாரநாயக்காவின் பிரசாரமே இதற்கு பிரதானமான காரணமாக இருந்தது. ஊடகங்களின் சில பிரிவுகளால் 'அழுகின்ற விதவை' என கிண்டலாக அழைக்கப்பட்ட திருமதி. பண்டாரநாயக்கவின் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர்.

பண்டாரநாயக்காவின் மரணத்தின் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுப்போன பல தலைவர்களும், செல்வாக்குள்ள பிரிவினரும் கட்சிக்கு திரும்பினர். மகஜன எக்சத் பெரமுன, எல்.பீ.பீ. ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்த ஆதரவாளர்களும ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு திரும்பி வந்த கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சமசமாஜிஸ்ட், கம்யூனிஸ்ட கட்சிகளுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைவிட, சமஷ்டிக் கட்சியுடன் எய்தப்பட்ட எழுத்துவடிவில் இல்லாத புரிந்துணர்வு, சமஷ்டி கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறைவான தேர்தல் கூட்டாளி என கருதக் கூடிய ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றது.

'1960 ஜுலை தேர்தலும் தொங்கு நாடாளுமன்றத்திலேயே முடியுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் அதி கூடிய ஆசனங்களை எடுக்கும் என்றும் கருதப்பட்டது. சமஷ்டிக் கட்சியின் ஆதரவு, அரசாங்கம் அமைப்பதற்கு தீர்க்கமான காரணியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

'ஜூலை தேர்தலில் வென்ற பின் முன்னர் தரப்பட்ட வாக்குறுதிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றும் என சமஷ்டி கட்சி எதிர்பார்த்தது.

'செல்வநாயகம், திருமதி பண்டாரநாயக்காவை பகிரங்கப்படுத்தப்படாத கூட்டமொன்றில் சந்தித்தார். பீலிக்ஸ் டயசும் பிரசன்னமாக இருந்த இந்தக் கூட்டத்தில் சிறிமா, பண்டாரநாயக்க, சிபிடி சில்வா தலைமை தாங்கிய குழுவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய நடப்பதாக உறுதியளித்தார். இதை நம்பிய சமஷ்டி கட்சி ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் சென்றது.

'செல்வநாயகம், இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து வாக்குறுதியை பெற்றுக்கொண்டதாலும் ஒரு முக்கிய விடயத்தில் உத்தரவாதத்தை பெறுவதில் சமஷ்டி கட்சி தவறிவிட்டது.

கட்டுப்படுதல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைத்தது. சமஷ்டி கட்சியின் ஆதரவு தேவைப்படாது காணப்படும் நிலையிலும் வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்னும் உறுதி;மொழியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து சமஷ்டி கட்சி கோரவில்லை என செல்வநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் அது தான் வழங்கிய வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு நடக்குமென்றே செல்வநாயகம் விளங்கிக்கொண்டார். ஆனால் இது செல்வநாயகம் கொண்டிருந்த விளக்கம் மட்டுமே என அவரது மகளின் கணவனான வில்சன் கூறுகிறார்.

இது தொடர்பில் தெளிவான உத்தரவாதம் கேட்கப்படவுமில்லை, பெறப்படமில்லை சமஷ்டி கட்சியின் இந்த தவறு பற்றி கூறுவதாயின் குறைந்த பட்சம் இது அரசியல் அப்பாவி;த்தனத்தின் பாற்பட்டது எனலாம்.

இவ்வாறு உறுதியான உத்தரவாதம் இல்லாதபோதும் சமஷ்டிக் கட்சி பலத்த நம்பிக்கையோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தது. சமஷ்டிக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமஷ்டி கட்சி தமிழ் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டது.

சமஷ்டிக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளதாகவும், பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுமெனவும் சமஷ்டிக் கட்சி தனது அரசியல் கூட்டங்களில் கூறியது. இதை வைத்துக்கொண்டு ஐ.தே.க , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – சமஷ்டி கட்சிக் கூட்டுக்கு எதிராக நச்சுத் தனமான பிரசாரத்தை தொடக்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமஷ்டி கட்சியுடன் சேர்ந்து நாட்டை பிரிக்கப் போவதாக ஐ.தே.க. குற்றஞ் சாட்டியது.

இந்த பிரசாரத்தின் உச்சமாக, இலங்கைத் தீவை ஒரு பெரிய 'கேக்' ஆக காட்டும் சுவரொட்டிகள் நாடெங்கும் ஒட்டப்பட்டன. திருமதி பண்டாரநாயக்க ' கேக்' கின் வடக்கு-கிழக்கை கத்தியால் வெட்டிப் பிரிப்பது போலவும் சி.பி.டி.சில்வா அதை பார்த்து கொண்டிருப்பதாகவும் செல்வநாயகம் தனது பங்கை வாங்க தட்டை நீட்டியபடி நிற்க அவர் பின்னால் ஈ.எம்.வி. நாகநாதன் நிற்பது போலவும் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இரகசிய உறவு

ஐ.தே.க.வின் இந்த பிரசாரத்தின் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிகை அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமஷ்டிக் கட்சிகளிடையே உடன்பாடு எதுவுமில்லை என அறிக்கை விடுமாறு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க செல்வநாயகத்திடம் வலியுறுத்தினார்.

செல்வநாயகம் தயக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் சமஷ்டிக் கட்சி, உடன்பாடு ஏதுமின்றியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பாதாக செல்வநாயகம் கூறினார். அவர் ஊடகங்களுடானான நேர்முகங்களிலும் இதை மீள வலியுறுத்தினார். இது, சமஷ்டிக் கட்சியின் பிரதான போட்டியாளரான அகில இலங்கை தமிழ் காங்கிரஸுற்கு சமஷ்டி கட்சியை தாக்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காமல், எந்த உத்தரவாதமும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதனால் சமஷ்டி கட்சி ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளதாக கண்டித்தார்.

இவ்வாறான பாதகமான நிலைமையிலும் தமிழ் பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் சமஷ்டி கட்சி வெற்றி பெற்றது. மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் வென்ற 15 ஆசனங்களையும் அது தக்க வைத்திருந்தது. அத்தோடு முஸ்லிம் பெரும்பான்மை தொகுதியான கல்முனையில் 'வீடு' சின்னத்தில் போட்டியிட்ட எம்.சி. அஹமட்டும் வெற்றி பெற்றிருந்தார்.

157 ஆசனங்களில் சமஷ்டிக் கட்சி 16 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 30 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களையும் பெற்றன.

பெரும்பான்மை

நியமிக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், சில சுயேட்சை உறுப்பினர்களுடனும் சேர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சொற்பமான ஆனால் உறுதியான பெரும்பான்மை காணப்பட்டது. முக்கியமாக அது சமஷ்டி கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை. திருமதி பண்டாரநாயக்கா பிரதமாராகி வரலாறு படைத்தார்.

ஆனால், சமஷ்டிக் கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சமஷ்டி கட்சியின் ஆதரவு தேவையில்லாத நிலையிலும் எழுதப்படாத புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்படும் என்ற அப்பாவித் தனமான எதிர்பார்ப்பு அடித்து நொறுக்கபட்டது.

சமஷ்டி கட்சியுடன் எந்த விதமாக பேச்சும் இல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த சமஷ்டிக் கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன.

புதிய அரசாங்கத்தின் சிம்மாசன பிரசங்கம் ஆக்ஸ்ட் 12 இல் இடம்பெற்ற போது சமஷ்டி கட்சி மகிழ்ச்சியடைந்தது. இந்த ஆரம்பக்கட்ட மகிழ்ச்சி, சிம்மாசன பிரசங்கத்தின் உள்ளடக்கம் வெளிவந்த போது கணப்பொழுதில் கலைந்து போயிற்று.

மாவட்ட சபைகள், அல்லது தமிழ் மொழி ஏற்பாடுகள் பற்றி சமஷ்டி கட்சிக்கு தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

மாறாக, ஜனவரி.1.1961 இலிருந்து ஒரே ஒரு அரசகரும மொழியாக சிங்களம் இருக்கும் என அரசாங்கம் அறிவித்தது. சிங்களம் மட்டுமே நீதிமன்ற மொழியாக இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. சமஷ்டிக் கட்சியை தாழ்த்தி பேசும் தமிழர்களிடையே சமஷ்டிக் கட்சி நகைப்புக்குரிய பொருளாகியது. சமஷ்டிக் கட்சி இரண்டாம் தரமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக பொது அபிப்பிராயம் காணப்பட்டது. டட்லியை ஆதரிக்காமல் விட்டமை சமஷ்டிக் கட்சி செய்த மோசமான பிழை என குற்றஞ் சாட்டப்பட்டது.

மறு புறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் நிர்வாகத்தை முழு அளவில் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டது.

மோதல்

இது தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது. தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சமஷ்டி கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என்ற அழுத்தம் காணப்பட்டது.

அரசியல் மோதல் களம் தயாராகி வந்தது. மார்ச் தேர்தலுக்கும் ஜுலை தேர்தலுக்கும் இடையில் உண்டான நிகழ்வுகளே மோதலுக்கான அத்திவாரமிட்டன. நடந்த நிகழ்வுகளும் விசை கொடுக்க அதன் தர்க்க ரீதியான முடிவாக பெப்ரவரி 20, 1961 இல் சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கிற்று.

(தொடரும்)

தமிழில்: ந.கிருஷ்ணராசா

சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்

(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

ஹெல்வீச்சியா அல்லது சுவிட்ஸர்லாந்து, இலங்கையில் பிறந்த 40000 - 42000 தமிழர்களின் வதிவிடமாக உள்ளது. கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரைவிட இந்த எண்ணிக்கை குறைவானது ஆகும்.

பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட எந்தவொரு மேற்கத்தைய நாட்டைவிடவும், சுவிட்ஸர்லாந்து தமிழர்கள் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்பு விகிதாசார ரீதியில் அதிகமானதாகும்.

புலிகளின் கோட்டை

அண்மைக் காலத்தில் சுவிஸ் வாழ் தமிழர்கள் புலிகளின் இலட்சியத்திற்காக அதிகளவான பணவலு, மனிதவலு, சிரமவலு, என்பவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறான பண்பு ரீதியான பங்களிப்பு சுவிட்ஸர்லாந்தை ஐரோப்பாவில் உள்ள புலிகளின் கோட்டை என கருத வைத்தது.

இந்த பின்னணியில் பார்க்கும்போது சுவிஸ் அதிகாரிகளின் அண்மைக்கால நடவடிக்கை, சுவிடஸர்லாந்தில் புலிகளின் எதிர்காலம் கெட்ட காலமாக அமையப் போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாக உள்ளது. புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க பல தமிழர்கள் முன்வந்துள்ளது போல தோன்றுவதால் புலிப் பப்படம் சுவிட்சர்லாந்தில் நொறுங்கிப் போவதாக தெரிகின்றது.

சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் தற்போதைய தலைவர் விஜயரட்ணம் சிவனேசன் அல்லது ரகு அல்லது ரகுபதி, இவருக்கு முன் தலைவராக இருந்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிட்ஸர்லாந்து புலி நிதிப்பொறுப்பாளர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.

சுவிஸ் அதிகாரிகள் முக்கிய புலிச் செயற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் வெற்றி பெறுவார்களாயின், சுவிட்ஸர்லாந்தில் உள்ள புலிகளின் அமைப்பு நிச்சயம் பலவீனப்படும், அத்துடன் அங்குள்ள தமிழ் மக்கள் மீதான புலிகளின் பிடியும் தளரும்.

இவ்வாறான நீதி விசாரணை வெற்றி பெறுவதற்கு புலிகளால் பாதிக்கப்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமானது ஆகும்.

இந்த முறை புலிச் செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதற்காக பல தமிழர்கள் அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்பதாக தெரிகிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தமிழர்கள் தயங்கினர். இந்த முறை இது வித்தியாசமாக உள்ளது.

இவ்வாறு பலர் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க விரும்புவதை பற்றிய விசேட அம்சம், இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட புலி ஆதரவாளர் அல்லாதவர்களாக இல்லாமல், புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்களாக இருப்பதுதான். புலியோடு சேர்ந்திருந்தவர்களே புலிகளுக்கு எதிராக செயற்பட வந்தமையால் சுவிட்ஸர்லாந்து புலிக் குமிழி உடைந்து போயிற்று.

இவ்வாறு வழமைக்கு மாறாக நடப்பதற்கு புலிச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளே காரணமாயின. நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில், புலிகளின் ஆட்கள் தமது ஆதரவாளரக்ளின் பெயரில் வங்கிக் கடனை பெற்று அந்த பணத்தை கையாடியதுடன் கடனையும் கட்டாமல்விட்டு விட்டார்கள்.

இவ்வாறு கடன் பெற்றுக் கொடுத்தவர்கள் இப்போது மிகவும் அந்தரமான ஆபத்தான நிலையில் உள்ளனர். கடன் கொடுத்த நிறுவனங்களும் சங்கடமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் புலிகளின் நம்பி;க்கைக்கு உரித்தாயிருந்த ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட வேண்டிய நிலைக்கு ஆளாகியதுடன் பிரதான புலிச்செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்கவும் சம்மதித்துள்ளளர். இது ஒழுங்காக நடைபெற்று புலியின் முக்கிய தலைவர்கள் மீது வெற்றிகரமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இதுவொரு முன்மாதிரியாக அமைந்து ஏனைய நாடுகளில் உள்ள புலிசார்பு புலம்பெயர்ந்தோர்கள் மீதும் தொடர் தாக்கத்தை முடுக்கிவிடலாம்.

தாக்கங்கள்

சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான நடவடிக்கைகளின் தார்ப்பரியங்களையும் தாக்கங்களையும் விளங்கிக்கொள்ள புலிகளின் நிதிசேகரிப்பு பொறிமுறையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதில் 5 வகைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையியல் கட்டளை முறையாகும். இந்த முறையில் புலிகளின் மனப்பூர்வமான ஆதரவாளர்கள் தத்தம் நாடுகளில் உள்ள புலிகளின் முகப்பு அமைப்புகளுக்கு தமது வங்கியூடாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை பணத்தை தவறாது அனுப்பும் நிலையியல் கட்டளையொன்றை பிறப்பித்து இருப்பர். இது, ஒப்பீட்டளவில் குறைவான தொகையாக இருப்பினும், ஒழுங்காக கிடைக்கும் உத்தரவாதம் இருந்தது.

இதில் பலவந்தம் இருக்கவில்லை. ஏனெனில் இவ்வகையில் நிதி கொடுத்தோர் புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாக இருந்தனர். இவ்வகையில் கிடைத்த பணம் அந்தந்த நாட்டிலிருந்த முகப்பு நிறுவனங்களையும் புலி இயக்கத்தின் கிளைகளையும் நடத்தப் பயன்பட்டது. இது இலங்கைக்கு அனுப்பப்படவோ அல்லது ஆயுதம் வாங்கவோ பயன்படவில்லை.

இரண்டாவது முறை 'ஆண்டுப் பொது நிதிசேகரிப்பு' ஆகும். இது வருடம் முழுவதும் செயற்படும் திட்டமாகும். இதில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும், ஆதரவாளர் இல்லாதோரும் இலக்காக உள்ளனர். சில தவணைகளில் குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்த வேண்டும்.

இதில் பணத்தை வாங்கவும், பங்களிப்பின் அளவை அதிகரிக்கவும், நெருக்குவாரம் பலவந்தம் என்பன பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் உள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கப்படும் என பயமுறுத்துவது இலகுவான வழியாக இருந்தது. தாமே விரும்பி நிதி கொடுத்தோரும் கணிசமாக காணப்பட்டனர்.

ஆரம்பத்தில் தொண்டர்களே நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நிதி சேகரிப்போருக்கு தரகுப்பணம் கொடுக்கப்பட்டது. இந்த ஊக்குவிப்பு நிதி சேகரிப்பில் பெரும் அதிகரிப்புக்கு வழிகோரியது. அதேசமயம், தமது தரகுப்பணத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நிதிசேகரிப்பாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பிரான்ஸில் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்போர் பாரிஸுக்கு அப்பால் ஒரு பண்ணையொன்றை வைத்திருந்தனர். இங்குதான் நிதிக்காக கடத்தப்பட்டவர்கள் நிதி செலுத்தும்வரை மறைத்து வைக்கப்பட்டனர்.

இவ்வகையில் சேகரிப்பட்ட நிதி மூன்று வழிகளில் செலவழிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி இயக்கத்தை நடத்துவதற்காக வன்னிக்கு அனுப்பப்பட்டது. இன்னொரு பகுதி ஆயுதம் வாங்குவதற்குப் பயன்பட்டது. ஆகக் கூடுதலான பகுதி புலி இயக்கம் வெளிநாடுகளில் நடத்திக் கொண்டிருந்த வணிக நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்பட்டது.


விசேட நிதி சேகரிப்பு

மூன்றாவது வகை நிதி சேகரிப்பு, 'விசேட சேகரிப்பு' என கூறப்பட்டது. இது உண்மையில் ஆயுதம் வாங்குவதற்காக மட்டும் என விசேடமாக ஒழுங்கு செய்த கடன் ஏற்பாடாக இருந்தது. இது கே.பி. இராணுவ தளவாடம் வாங்குவதற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அவராலேயே தொடக்கப்பட்ட விடயமாகும். ஆயுதம் வாங்குவதற்கு பெருமளவு பணத்தை சொற்ப கால அவகாசத்தில் பெற வேண்டியிருந்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் நிர்வாகத்திற்கும், நிதி சேகரிப்புக்கும் பொறுப்பாக இருந்த கேபியின் மனதிலேயே இந்த திட்டம் உதயமாயிற்று.

இந்த முறையில், வெளிநாடுகளிலிருந்த நம்பிக்கைக்குரிய, உறுதியான விசுவாசிகள் குறிப்பாக இவர்களில் வங்கியில் நற்பெயர் உடையவர்களாக இருந்தவர்கள் தமது பெயரில் கடனைப் பெற்று எல்.ரீ.ரீ.ஈ. முகவர் அல்லது முகப்பு நிறுவனத்திடம் கொடுத்தனர். இந்த கடனை பெற்றவர்கள் தமது சொத்துக்களை பிணையாக காட்டினர்.

இந்த முறையினால் பெருந்தொகையான பணம் விரைவில் சேகரிக்கப்பட்டது. இப்பணம் ஆயுதம் வாங்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த வங்கிக் கடனுக்கான வட்டி, நிலையியல் கட்டளை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து, கொடுக்கப்பட்டது. கடனின் முதல், படிப்படியாக, பொது சேகரிப்பிலிருந்து பெற்ற பணத்தால் கட்டப்பட்டது.

கே.பி, புலிகளின் ஆதரவாளர்கள் தமது பெயரில் பெற்றுக்கொடுத்த கடனை மீளச் செலுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். அவரின் பின் வந்தவர்களும் அவ்வாறே செய்தனர். விசேட நிதி சேகரிப்பு எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள்களின் மனதில் இடம்பிடித்தது. மிக அதிகளவான நிதி சேகரிக்கப்பட்டு பிரச்சினை ஏதுமின்றி மீளச் செலுத்தப்பட்டு வந்தது. விசேட நிதி சேகரிப்பு 18 மாதங்களுக்கு ஒரு தடவை செய்யப்பட்டது.

இவற்றுக்கு மேலாக நிதி சேகரிக்க இரண்டு விரிந்த முறைகள் காணப்பட்டன. இதில் ஒன்றாக, மேடை நிகழ்வுகள் நடத்துதலும், கலண்டர், வீடீயோ, டீவிடி, ஓடியோ சீடிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், ஞாபகார்த்த சின்னங்களை விற்பதும் அமைந்திருந்தது. கரும்புலி தினம், மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலும் நிதி சேகரிக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் நுழைவுக்கட்டணமாக பெருமளவு பணம் அறவிடபட்ட வேளையில் செலவுகளை சரிக்கட்ட நன்கொடை வழங்கும்படியும் மக்களிடம் கேட்கப்பட்டது.

வர்த்தகம்

இறுதியானது வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். போரை தொடர்ந்து நடத்துவதற்கு ஒழுங்கான நிதிகிடைக்கும் வழிகள் காணப்பட வேண்டுமெனக் கூறி எல்.ரீ.ரீ.ஈ. தனது வர்த்தக நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. நன்கொடையில் மட்டும் தங்கியிருப்பது, நீண்டகால நோக்கில் உறுதியில்லாது போகலாம் என்பதால் புலிகள் பல்வகையான வர்த்தக முயற்சிகளிலும் ஈடுப்பட வேண்டுமென காரணம் கூறப்பட்டது.

புலிகளின் பெருந்தலைவர் வே.பிரபாகரன் இதற்கான சம்மதத்தை கொடுத்தபோது வான் கதவுகளை திறந்தது போலாயிற்று. பினாமிகள், மற்றும் முகப்பு நிறுவனங்களுடாக பல வகையான வர்த்தக நடவடிக்கைகளில் புலிகளின் கிளைகள் ஈடுபட்டன.

இந்த வணிக முயற்சிகள் தமிழ்படம் காட்டுதல், உணவு விடுதிகள், உணவு வழங்குதல், மெய்ச்சொத்து வியாபாரம், சில்லறைக்கடைகள், அச்சகங்கள், கட்டுமான வேலை, பணம் அனுப்புதல், கணினி சேவைகள், வாகன சேவைகள் என அமைந்தன.

சில வர்த்தக நடவடிக்கைகள் புதிதாக தொடங்கப்பட்டன. ஆனால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே இருந்த வியாபார முயற்சிகளை புலிகள் அதிக விலை கொடுத்து தமதாக்கி கொண்டனர். இலாபத்தில் ஒரு பகுதியை இந்த வர்த்தக நிறுவனங்கள் எல்.ரீ.ரீ.ஈ. க்கு கொடுத்தனர். நிறுவனங்களை நடத்தியோருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.

அநேகமாக முகவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசத்துக்கு உரியவர்களின் கூட்டாளிகளாக அல்லது உறவினர்களாக இருந்தமையால் துர்ப்பிரயோகமும், ஊழலும் இந்த வர்த்தக நிறுவனங்களில் காணப்பட்டன. பல வர்த்தக நிறுவனங்கள் வங்குரோத்தாகியுள்ள வேளையில் ஏனையவை நட்டத்தை காட்டுகின்றன. (2009 மே ) முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் இந்த வர்த்தக நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் அவற்றை தமக்கே சொந்தமாக்கிக் கொண்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ.க்கு சுவிட்ஸர்லாந்தில் நடந்தது, புலிகளின் வீழ்ச்சிக்கு பின் வேறு இடங்களில் நடப்பதன் ஒரு அடையாளமே. இதனால்தான் சுவிட்ஸர்லாந்தில் நடந்தது எல்.ரீ.ரீ.ஈ.யின் எதிர்காலத்தின் மீது பாரிய விளைவுகளை ஏற்படுத்திக் கூடியதாக உள்ளது.

சில தசாப்தங்களின் முன் சுவிட்ஸர்லாந்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களே இருந்தனர். இலங்கையில் இன முரண்பாடு தீவிரமாகத் தொடங்கியதோடு இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 1979 இல் யாழ்ப்பாணத்தில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதன்போது 'இன்பம்' போன்ற தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதும், பலர் சிறைகளில் அடைக்கப்பட்டதும், பல தமிழர் இளைஞர்கள் ஐரோப்பாவில் புகலிடம் கோர வழிவகுத்தது. பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை இந்த வகை வெளியேறுகையை மேலும் முடுக்கிவிட்டது.

1981 மே – ஜுன் பகுதியில் ஒழுக்க கட்டுப்பாடில்லாத பொலிஸாரினால் யாழப்பாண பொது நூல் நிலையம், ஈழநாடு புதினப்பத்திரிகைக் காரியாலயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காரியாலயம், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு என்பன எரிக்கப்பட்டதுடன் புகலிடம் கோருதல் மேலும் விசைகொண்டது.

குடித்தொகை

இவ்வாறு, 1979, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் உண்டான உந்தலுடன் தமிழர் குடித்தொகை சுவிட்ஸர்லாந்தில் அதிகரிக்க தொடங்கியது. இதன் பின் சுவிட்ஸர்லாந்தில் தமிழர்களின் வருகை சீராக காணப்பட்டது. சிலர் இந்த நாட்டை விட்டு வெளியேறவும் செய்தனர். அண்மைக்காலத்தில் இலங்கையை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். தற்சமயம் சுவிட்ஸர்லாந்தில் 2200 தஞ்சம் கோரும் விண்ணப்பதாரிகள் உள்ளனர்.

'ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலுள்ள தமிழர்கள் போலன்றி, சுவிஸ் தமிழர்கள் பெரியளவில் உயர்கல்வியை நாடவில்லை. இவர்கள் வெண்ணிற ஆடை வேலைகளில் அதிகம் காணப்படவில்லை. அநேகமான தமிழர்கள் தொழிற்சாலைகள், உணவகங்கள், போக்குவரத்து, நகரசுத்தி, வயோதிபர் பராமரிப்பு, காவல் துறைகளில் நீல ஆடை வேலைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.

இவர்கள் பொதுவில் கடின உழைப்பாளர்களாக உள்ளனர். மாதம் 2000-4000 பிராங்வரை சம்பாதிக்கின்றனர். (ஒரு சுவிஸ் பிராங்க் 117 இலங்கை ரூபாவுக்கு சமன்) சுவிட்ஸர்லாந்தில் நன்றாக உழைத்தபின் பல தமிழர்கள் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கச் சென்றுள்ளனர்.

40000 – 42000 வரையிலான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்றனர். இவர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஆதரவாளர்கள் உள்ளனர். படிப்படியாக எல்.ரீ.ரீ.ஈ. ஆதிக்கம் பெற தொடங்கியது. ஆயுதப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரேயொரு இயக்கம் என்பது புலிகள் இயக்கத்தின் பலமாக இருந்தது. கடும ;பிரச்சார வேலை, தேவையான போது பலவந்தம் போன்ற தந்திரங்கள் சுவிட்ஸர்லாந்து தமிழர் மீது புலி இயக்கம் தனி ஆதிக்கம் பெற உதவியது. சுவிடஸர்லாந்தில் புலிகளுக்கு எதிர்ப்பு காட்டும் ஒரே ஒரு அமைப்பாக புளொட் இருந்து வந்தது. இதன் தலைவராக சொக்கலிங்கம் ஞானலிங்கம் அல்லது ரஞ்சன் இருந்து வருகிறார்.

1991 இல் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு லண்டனிலிருந்து சுவிட்சர்லந்துக்கு சென்றபோது அங்கிருந்த எல்.ரீ.ரீ.ஈ. உற்சாகம் பெற்றது. 1984- 1987 காலப்பகுதியில் புலிகளின் இரணுவ தளபதியாக இருந்த கிட்டு லண்டனில் எல்.ரீ.ரீ.ஈ.யின் சர்வதேச செயலகத்தை நிறுவியிருந்தார். லண்டனில் கைது செய்யப்படலாம் என கருதி கிட்டு சுவிட்ஸர்லாந்தில் இடம்பெயர்ந்தார். கிட்டு சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்தமை சுவிட்சர்லாந்துக்கான எல்.ரீ.ரீ.ஈ. தலைவராகவிருந்த நடராஜா முரளிதரன் அல்லது முரளியின் கரத்தை வலுப்படுத்தியது.


சுவிஸ் முரளி

கிட்டுவினால் போடப்பட்ட அத்திவாரத்தின் மீது முரளியால் சுவிட்ஸர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை புனருத்தாரணம் செய்து வளர்க்க முடிந்தது. முரளி பொறுப்பாயிருந்த 1991-1997 காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் பலம் பெற்று வளர்ந்தது. முரளி சுவிடஸர்லாந்தில் தமிழ் பாடசலைகளின் வலையமைப்பை ஏற்படுத்தினார். இவர் மக்கள் கடைகள் என அழைக்கப்பட்ட கடைத் தொகுதியையும் அமைத்தார். எதிர்ப்புகளை அடக்க மாற்றுக் கருத்தை எடுக்க, பணம் கொடுக்குமாறு மக்களை பலவந்தப்படுத்த வன்முறையை பயன்படுத்தியமை முரளியின் தலைமைத்துவத்தின் பாதகமான அம்சமாக இருந்தது.

சுவிஸ் முரளியினால் பயன்படுத்தப்பட்ட முறை பெரும் வெற்றியை கண்டது. புலிகள் சுவிட்ஸர்லாந்தில் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டனர். சூரிச், பேர்ண், ஜெனீவா ஆகிய இடங்களில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐரோப்பிய நாடுகளில் நடந்த கூட்டங்களில் பங்குப்பற்றி சனக் கூட்டத்தை அதிகரிக்கவும் சுவிட்சர்லாந்தில் இருந்த தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் நிதி சேகரிப்பதில் விகிதாசார ரீதியில் முதலிடத்தை பெற்றனர். தலைக்குரிய பங்களிப்பில் ஆகக் கூடிய நிதியை சுவிஸ் தமிழர்கள் வழங்கினர்.

இதனால் முரளி எல்.ரீ.ரீ.ஈ.யின் பெருந்தலைவர் பிரபாகரனின் விருப்புக்குரியவரானார். ஒரு முறை, பிரபாகரன், சுவிட்ஸர்லாந்திலுள்ள முரளிதரன் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் தலைவர்களுள் மிகவும் வினைத்திறன் மிக்கவர் என பிபிசி தமிழ் சேவை அறிவிப்பாளர் ஒருவருக்கு கூறினார். ஆனால் முரளிதரன், ஹம்ரி – டம்ரி போல விழவிருந்தார்.

வன்முறை, மிரட்டல், மிரட்டி பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் பேரில் முரளியும் இன்னும் பதினான்கு எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும் 1996 இல் சுவிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் முரளி 18 மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முரளிதரன், தன்னை பிழையாக கைது செய்து அடைத்து வைத்தனர் என சுவிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். முரளிக்கு எதிராக தமிழர் சாட்சி சொல்லாதவாறு தடுக்க பயமுறுத்தல் உட்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முரளி மறியலிலிருந்த காலத்தில் அவரை படியிறக்க விரும்பிய சில எல்.ரீ.ரீ.ஈ.யினர், இயக்கத்தின் நலனுக்காக முரளியை பதவியிலிருந்து அகற்றுவது நல்லதென எல்.ரீ.ரீ.ஈ.யில் அதிகாரமுள்ளவர்களை நம்ப வைப்பதில் வெற்றி பெற்றனர். எனவே 1997 இல் முரளி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டபோது முரளி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். முரளி வன்னிக்கு வருமாறு பணிக்கப்பட்டார். இதை மறுத்த முரளி தனது குடும்பத்தோடு கனடாவில் குடியேறினார். அவர் இப்போது கனடாவில் வசிக்கின்றார். ஆனால் இப்போது அவர் 'சுவிஸ் முரளி' எனவே அறியப்படுகிறார்.

தவறாக தான் கைது செய்யப்பட்டதற்கு நட்ட ஈடு கோரி முரளி தாக்கல் செய்த வழக்கில் வென்று, பெருந்தொகை பணத்தை நட்ட ஈடாக, கனடாவிலிருந்த போது பெற்றுக்கொண்டார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும்.

அவ்ரோ குலம்

சுவிஸ் முரளி பதவி நீங்கி தனிவழி போன போதும், எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் நல்ல வளர்ச்சி கண்டது. சிலகால கூட்டுத் தலைமையின் பின் செல்லையா குலசேகர சிங்கம் அல்லது குலம் அல்லது அவரோ குலம் சுவிட்ஸர்லாந்து புலித் தலைவராக நியமிக்கப்பட்டார். குலம் எல்.ரீ.ரீ.ஈ.யின் பழைய அங்கத்தவர் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகாவும் ஆவார்.

1978 செப்டெம்பர் இல் இரத்மலானையில் 'எயர் சிலோன் விமானத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செயய்யப்பட்டபின், குலம், அவ்ரோ குலம் என அழைக்கப்பட்டார்.

'2002 இல் கேபி நிர்ப்பந்தம் காரணமாக பதவி விலகியபின், குலத்தின் நிலைமை ஆட்டம் காணத் தொடங்கியது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் புதிய தலைவராக வந்த மணிவண்ணன் அல்லது காஸ்ட்ரோ, குலத்தை கேபியின் விசுவாசியாக கருதி அவரை ஒதுக்கத் தொடங்கினார். குலம், பிரபாகரனுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்திருந்தமையால், காஸ்ட்ரோவால் குலத்தை பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. எனவே குலத்தை கஸ்ட்ரோ ஒதுக்கி, அப்துல்லா என்னும் இயக்கப்பெயர் கொண்டவரை முதன்மைப்படுத்தி அதிகாரத்தையும் வழங்கினார்.

அப்துல்லாவின் உண்மைப் பெயர் செல்லையா ஜெயபாலன். இவர் சுவிஸ் புலிகள் நிதிப்பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவரிடமே உண்மையான அதிகாரம் இருந்தது. குலம் பெயரளவில் மட்டுமே தலைவராக காணப்பட்டார். அதிகாரம் செலுத்த முடியாத நிலையில் குலம் இருந்த வேளையிலும், பெயரளவிலான தலைமைப் பொறுப்பிலிருந்தும் இவர் அகற்றப்பட்டார்.

இது நடந்தது மார்ச் 2009 இல் ஆகும். குலம் பதவியிலுருந்து அகற்றப்பட்ட சூழல்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை சூழ்ந்துள்ள நெருக்கடியோடு தொடர்பானது ஆகும். 2007-2008 எல்.ரீ.ரீ.ஈ. 'இறுதியுத்தம்'; என பெயரிடப்பட்ட பெரும் நிதி சேகரிப்பு இயக்கமொன்றை வெளிநாடுகளில் நடத்தியது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னணி வகித்தது. பொது சேகரிப்பு, விசேட சேகரிப்பு என பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டது.

ஆனால் 2009 ஆரம்பத்தில், ஆயுதம் வாங்குவதற்கு என இன்னொரு விசேட நிதி சேகரிப்பை தொடங்கும்படி சுவிஸ் புலிகளுக்கு காஸ்ட்ரோ அறிவுறுத்தல் வழங்கினார்.

காஸ்ட்ரோ இந்த முறையும் சுவிஸ் புலிகள் நிதிசேகரிப்பதில் முன்னணி வகிக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். ஆனால் குலம் இந்த விடயத்தில் காஸ்ட்ரோவுக்கு கடும் எதிர்ப்பை காட்டினார். முன்னர் விசேட சேகரிப்புக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பதை குலம் சுட்டிக் காட்டினார். இன்னுமொரு விசேட சேகரிப்பு மக்களுக்கு தாங்க முடியாத சுமையாகிவிடும் என அவர் கூறினார்.

அப்துல்லா

போர் தீவிரமடைந்திருந்த நிலையில் பிரபாகரனுக்கும் குலத்துக்கும் இடையிலான நேரடி தொடர்புகள் தடைப்பட்டுப் போயிருந்தன. இதனால் காஸ்ட்ரோவுக்கும் ஐரோப்பாவிலிருந்த அவரது கையாளான நெடியவனுக்கும் குலத்தை பதவியிலிருந்து நீக்குவது சுலபமாக இருந்தது. மீண்டும் ஒரு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டது. புதிய நிதிசேகரிப்பு இயக்கம் ஜெயபாலன் அல்லது அப்துல்லாவினால் தொடக்கி நடத்தப்பட்டது. இதனால் சுவிஸ் புலி அமைப்பில் பிளவு ஏற்பட்டது. குலமும் அவரது விசுவாசிகளும் தள்ளி வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டனர்.

அப்போது காணப்பட்ட சூழலின் காரணமாக அவசரமாக ஆயுதங்கள் வாங்குவதற்கென தொடக்கப்பட்ட விசேட நிதிசேகரிப்பு, புலி ஆதரவாளர்கள், விசுவாசிகளினால் மனதார ஏற்கப்பட்டது. அப்போது எல்.ரீ.ரீ.ஈ. , முல்லைத்தீவில், கடலோரமாக அமைந்த ஒரு ஒடுங்கிய துண்டு நிலத்தில் அடைபட்டுக் கொண்டு வந்தது. எதிரியை அழித்தொழிப்பதற்கான ஆயுதங்களை வாங்கவென கூறி வெளிநாட்டு புலிகள் நிதிசேகரிப்பு இயக்கத்தை நடத்தியபோது உணர்;ச்சி மேலிட்ட நிலையிலிருந்த புலம் பெயர்ந்தோர் நிதியை வாரி வழங்கினர்.

இது சுவிட்ஸர்லாந்தில் மட்டும் நடந்ததல்ல. தமிழர்கள் செறிவாக வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இது நடந்தது. எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு அமைப்புகள் பரந்தளவில் விசேட நிதி சேகரிப்பு இயக்கத்தை நடத்தினர்.

இதற்காக பெருமளவிலான புலி ஆதரவாளர்கள் தமது பெயரில் வங்கிக் கடனைப் பெற்று ஆயுதம் வாங்கவென புலிகளிடம் கொடுத்தனர். சில இடங்களில் புலிகள் கடனுக்காக வட்டி தருவதாகவும் கூறி ஊக்குவித்தனர். இது வங்கிக்கு செலுத்தும் வட்டிக்கு மேலானதாகும்.

பொதுசன அபிப்பிராயம்

இவ்வாறு மார்ச் 2009- மே 2009 காலப்பகுதியில், வங்கிக் கடனாகவும், விசேட நிதி சேகரிப்பாகவும் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னிலை வகித்தது. மூன்று, நான்கு மாதங்களில் வெளிநாட்டு புலிகள் பெரும் நிதி சேகரிப்பதில் வெற்றி பெற்றனர்.

எவ்வளவு தான் உணர்ச்சியோடு நீதி சேகரிப்பட்டபோதும், ஒரு சதம் கூட ஆயுதம் வாங்கப் பயன்படவில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தமாகும். இந்த இலட்சணத்தில் வன்னிக்கு ஆயுதம் அனுப்புவதைப்பற்றி பேசவேண்டுமா? ஆயுதம் வாங்கவென சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படாமல் கிடந்த வேளையில் எல்.ரீ.ரீ.ஈ. முள்ளிவாய்க்காலில் இராணுவ ரீதியில் தோல்வியை தழுவி முழுதாய் அழிந்து போயிற்று.

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடிக்கான விதைகள், புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட புலி மற்றும் புலிசார்பு சக்திகளிடையே விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வங்கிக்கடன் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்பான சுயநலமிகளின் பைகளுக்குள் போய்விட்டது. தமது பெயரில் கடன் பெற்ற தீவிர ஆதரவாளர்கள் கடன் செலுத்த முடியாது கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி செலுத்துவோம் என உத்தரவாதம் வழங்கிய பெருங் கைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் ஒளித்து விளையாடுகின்றனர்.

எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்த வெளிநாட்டு தமிழர்களின் எண்ணத்திலும் இதயத்திலும் வெறுப்பும் ஆத்திரமும்; பொங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ.யின் பப்படம் நொறுங்க தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்தில் நாம் காண்பது இதைத்தான். இந்த வகையில், வேறு எங்கும் உள்ள தமிழர்களைவிட சுவிஸ் தமிழர்கள் கூடுதலாக வருந்துகின்றனர். ஏனெனில் இவர்கள் தமது சக்திக்கு அப்பால் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி வழங்கியுள்ளனர். இவர்களை புலித் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்.
DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)