mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், - என்மேல் அன்பு கொள்வையாயின்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:

mp3 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:
திருவேட்கை
ராகம் - நாட்டை ~ தாளம் - சதுஸ்ர ஏகம்
மலரின் மேவு திருவே! - உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும், - தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் - கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்.
கமல மேவும் திருவே! நின்மேல்
காத லாகி நின்றேன்;
குமரி தன்னை இங்கே - பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன், - என்மேல்
அன்பு கொள்வை யாயின்;
இமய வெற்பின் மோத, - நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்.
வாணி தன்னை என்றும் - நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம் - நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ?
பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ - திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் - தழுவி
நிக ரிலாது வாழ்வேன்.
செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்:
இல்லை என்ற கொடுமை - உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்.

