முஸ்லீம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிக்கும்?
டி.பி.எஸ். ஜெயராஜ்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணியுடன் இருந்துக் கொண்டே அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் தீர்மானித்தபின் அது மீண்டும் சிறு புயலின் மையமாகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஓகஸ்ட் 27 இல் அந்த கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாமில் கூடியது. பல விவாதங்கள், கலந்துரையாடலின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட அங்கத்தவர்கள் 24 பேர் ஏகமனதானது எனக் கூறப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு வந்தனர்.
இந்தக் கூட்டத்தின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான 50 வயதான ரவூப் ஹக்கீம், ஊடகங்களை சந்தித்துப் பேசியபோது தமது கட்சி உத்தேசித்துள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கும், ஆனால் எதிரணியோடு தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான இதன் இந்த தீர்மானம் எதிரணியிரிடையே எதிர்பார்த்தவாறே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியின் (யூ.என்.எவ்.) இன் இணை நிறுவுனர் என்பதுடன் அந்த எதிரணியின் உற்சாகமான, முக்கியமான பங்காளராகவும் இருந்தது.
இந்த வருடம் ஏப்ரல் 08 ஆம் திகதிதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கண்டி, வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆறு இடங்களை வென்றது. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு இடங்களை கொடுத்ததுடன் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தத் தீர்மானம்பற்றி ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்களில் பெருங் கசப்புணர்வு காணப்பட்டது. இது ஒரு அரசியல் துரோகமாக, முக்கியமாக பிரதான பங்காளிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினால் (யூ.என்.பி.) காணப்பட்டது.
முன்னரும் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களில் மனக்கசப்பு காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அங்கத்தவரான கண்டியை சேர்ந்த அப்துல் காதர், ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கவனம் செலுத்த மறுத்தமை அப்துல்காதரை தேர்தலின் பின் தனிவழி போக வைத்தது. இவர் விரைவில் அரசதரப்புக்கு முறையாக மாறவுள்ளதாக நம்பப்படுகிறது.
தேர்தல் முடிவடைந்தபின் தேசிய பட்டியலில் இடங்களை ஒதுக்குவதுபற்றி ஐக்கிய தேசிய முன்னணியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிறையவே காணப்பட்டன. தேசியப்பட்டியல் இடத்துக்கான பல கோரிக்கைகள் குவிந்தமையால் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார பீடம் திணறியது. ஆனால், எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியமாயிற்று. இதனால் பல கசப்புகள் தோன்றின. அழுத்தங்கள் இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அந்த கட்சிக்கு இரண்டு இடங்களைக் கொடுத்தார்.
தீர்மானம்
இப்போது இதே முஸ்லிம் காங்கிரஸ் தனிவழிபோய், பாரிய அரசியல் விளைவுகளைக் கொண்டுவரக் கூடிய பெரும் கருத்து முரண்பாடுகளுக்கு இட்டுச் சென்றுள்ள அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை தனித்து எடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவரான கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான ஒருதலைபட்சமான தீர்மானத்தை எடுப்பதற்கு முன் ஐக்கிய தேசிய முன்னணியை கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற அரசாங்கத்துக்கு உதவும். இது போன்ற வேறு விடயங்களிலும் எதிர்வரும் காலங்களிலும் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சாத்தியம் உண்டு. ஆயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆதரவுக்கு பிரதியுபகாரமாக மந்திரிசபை அல்லது அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள மாட்டாது.
சுருங்கக் கூறின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டே தொடர்ந்தும் எதிரணியில் இருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது விட்டாலும் இப்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலையில்தான் உள்ளது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்தது போன்ற நிலைமையே காணப்படுகிறது. ஒரே அடியில் அரசாங்கத்தில் கட்சியை உள்வாங்காமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாக எதையும் பதிலுக்கு பெற்றுக்கொள்ளாமல் ஒரு அடிப்படையான ஒரு பிரச்சினையில் அரசாங்கத்துக்கு விட்டுக்கொடுத்தது போலத் தோன்றலாம். மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது ஒரு பக்கச் சார்பானதாக தோன்றும் இந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற காரணம் யாதாக இருக்கலாம்?
இதில் வெளியில் தெரிவதைவிட, கூடுதலான விடயங்கள் உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த தீர்மானம் பற்றிய கண்டனத்தை தாங்க வேண்டிய நிலையில் ரவூப் ஹக்கீம் காணப்படினும் இவர் கொந்தளிக்கும் அரசியல் கடலில் கட்சிப் படகை கரைசேர்க்க முயன்று கொண்டிருந்தார் என்பதும் மிகவும் சிக்கலான சங்கடமான நிலைமையில் காணப்பட்டார் என்பதுமே யதார்த்தம்.
முஸ்லிம் காங்கிரஸ் அதன் புகழ் மிக்க இணை நிறுவுனர் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் அவரிடத்துக்கு வந்த ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தலைமையின் கீழ் கடந்த காலங்களில் நடந்த நாடாளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களின்போது வெற்றியாளரை ஆதரிக்கும் கெட்டித் தனத்தை கொண்டிருந்தது.
எம்.எச்.எம்.அஷ்ரப்
1988 இல் சிறிமா பண்டாரநாயக்காவுக்கான ஆதரவை விலக்கி, ரணசிங்க பிரேமதாஸவுடன் எம்.எச்.எம். அஷ்ரப் சார்ந்ததிலிருந்து 2001 இல் சந்திரிகா அரசிலிருந்து விலகி, ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் ரவூப் ஹக்கீம் கெட்டித்தனமாக மாறியதுவரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெல்லும் பக்கத்திலேயே இருந்து வந்தது.
இந்த யோகம் ரவூப் ஹக்கீம் விக்ரமசிங்கவுடன் அணி சேர்ந்தபின் அண்மைக்காலமாக குறையத் தொடங்கிற்று. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2004 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து எதிரணிக்குத் தள்ளப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் 2005, 2010 ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முறையே ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா ஆகியோரை ஆதரித்தது. 2010 நாடாளுமன்ற தேர்தலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எதிரணிக்கே தள்ளியது.
ஆனால், இந்தத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராட்டும் வகையில் சாதித்தது முரண்நகையானது. இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இந்தக் கட்சி விக்கிரமசிங்கவுக்கும் பொன்சேகாவுக்கும் முஸ்லிம் வாக்குகளில் பெரும் பங்கை பெற்றுக்கொடுத்தது. அதேபோன்று இந்தக் கட்சி 2004 ,2010 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களில் மிகப் பிரபலமான தனிக்கட்சி என்பதை நிருபித்தது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரது கட்சிக்கும் சிங்கள வாக்காளர்கள் பெருந்தொகையில் ஆதரவு வழங்கிய அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் எதிர்க்கட்சியினருக்கு மிகுந்த ஆதரவை வழங்கியமை ஆபத்தான முனைவாக்கம் பெற்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இது இனம் சார்ந்த சகல அரசியல் கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும் என்னும் கொள்கையை முன்வைக்கும் சிந்தனைப் பள்ளியின் தோற்றத்துக்கும் காரணமாயிற்று.
தற்போதைய அரசியல் இயங்கியலின் ஓட்டத்தின் விரும்பத் தகாத விளைவே இது எனக் கொண்டாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் சோரம்போகும் தொடர்ச்சியான தோற்றப்பாடும் காணப்படுகிறது.
பிளவு
அண்மைக்காலத்தில் முஸ்லிம் அரசியலில் ஒரு புறத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான உறுதியும் மறுபுறத்தில் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் சலனப்படும் இயல்பும் கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது. மக்கள் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர். ஆனால், தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலர் தலைமைக்கு விசுவாசமாக இல்லை. இதனால் கட்சிக்கும் விசுவாசமாக இல்லை. பிளவுகளும் உடைதல்களும் கட்சியின் சிதைவுக்கு காரணமாயுள்ளன.
எம்.எச்.எம். அஷ்ரப்பின் காலத்திலேயே இந்தவகைப் போக்கு காணப்பட்டது. 2000 இல் நாடாளுமன்றம் அதன் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேரில் ஐவர் அஷ்ரபுடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஹக்கீம் மட்டுமே தலைவருடன் முரண்படாதவராகக் காணப்பட்டார்.
செப்டெம்பர் 16 2000 இல் அஷ்ரபின் மறைவுக்கு பின் ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது 2000 ஆம் ஆண்டு 10 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்யப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் என 11 எம்.பிக்களைப் பெற்றுக்கொண்டது. அஷ்ரப்பின் மனைவி பேரியலுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் பிளவு உண்டானது.
ஹக்கீமுடன் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் சேர்ந்தனர். நான்கு பேர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தனர். பேரியலின் அணி தேசிய ஐக்கிய முன்னணியை (நுஆ) பொறுப்பேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக இயங்கியது. 2001 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் பன்னிரண்டு இடங்களைப் பிடித்தது. மீண்டும் ஒரு பிளவு கட்சியில் தோன்றியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையின் பொருட்டு ரவூப் ஹக்கீம் வெளிநாடு சென்றிருந்த சமயம் கட்சியின் தலைவர் டாக்டர் ஹஸரத் ஒரு புரட்சியை கிளப்பினார். இந்த பிரச்சினையை கையாளவென ஹக்கீம் விரைந்து நாடு திரும்பினார்.
தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பன்னிருவரில் அரைப்பங்கினரே எஞ்சியிருந்தனர். அதாவுல்லா, அன்வர் இஸ்மாயில், ஹரிஸ் , அஸீஸ் உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியிருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக முஸ்லிம் தேசிய காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை அதாவுல்லா தோற்றுவித்தார்.
உடைந்துடைந்து போதல்
பேரியல் அஷ்ரப், அதாவுல்லா போன்ற காரணிகள் இருந்த போதிலும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் முஸ்லிம் கட்சிகளிடையில் அதிசிறந்த அடைவைப் பெற்றது. இந்த கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன. பரிதாபம்! உடைந்துப்போதல் மீண்டும் தொடங்கிற்று. ரிஸாட் பதியுதின் தலைமையிலான நால்வர் குழு ஒன்று சந்திரிகா அரசாங்கத்துடன் சேர்ந்தது. இந்தக் குழுவில் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி ஆகியோர் இருந்தனர். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி இந்தக் குழுவால் தோற்றுவிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தபின் எஞ்சியிருந்த ஆறு பேருக்கிடையில் இரண்டாவது பிளவு ஏற்பட்டது. இந்த ஆறுபேரில் மூவர்- பைஸல் காஸிம், நஜீமுதின், கே.ஏ.பாயிஸ் ஆகியோர் பிரிந்து சென்று அரசுடன் சேர விரும்பினர். மீண்டும் கட்சி உடைவதை தடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுத்து ஒரு கட்சியாக அரசாங்கத்துடன் சேர்ந்தது.
ஆனாலும் ராஜபக்ஷ ஆட்சியில் இந்தக் கட்சி ஒடுக்கப்படுவதாக அறிந்துகொண்டது. கட்சியின் அடிமட்டத்தில் கட்சி மீண்டும் எதிர்த்தரப்புக்கு திரும்ப வேண்டும் என்னும் உறுதிப்பட்ட கருத்து காணப்பட்டது. கட்சி வெளியேறியபோது நிஜாமுதின் ,கே.ஏ.பாயிஸ் ஆகியோர் திரும்பிவர மறந்துவிட்டனர். எனவே மீண்டும் ஒரு பிரிவினை ஏற்பட்டு ஹக்கீம், ஹஸன் அலி, சேகுதாவூத் பைஸல் காசிம் ஆகியோர் மட்டும் திரும்பி வந்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தெரியப்பட்டு பின்பு அரசாங்க பக்கத்துக்கு தாவும் சுயலாப நோக்கு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழக்கமே அண்மைக்காலமாக ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை கெடுக்கும் சாபக்கேடாக உள்ளது. எந்த நேரமும் அறுந்து தலைமேல் விழக்கூடும் நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாள் போன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கட்சிப்பிளவுதான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தலைமையின் அதிகாரத்தை உறுதியாக பிரயோகிக்க முடியாது முடக்கியுள்ளது.
இந்த தீர்க்கமான காரணியே இப்போது காணப்படும் நெருக்கடியின் மூலவேராக உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், எந்த நேரமும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிப்பதவிக்காக கட்சிதாவும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார். கட்சி உடைந்துபோதலை தவிர்க்கவும் கட்சி ஒற்றுமையாக இருப்பதுபோன்ற தோற்றத்தை காட்டவும் வேறேதும் செய்ய முடியாத நிலையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், எதிர்த்தரப்பிலிருந்து கொண்டு அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கும் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
தற்போதைய நெருக்கடியான தோற்றம் தேர்தல் பிரசார காலத்திலேயே இருந்ததாக அறியப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக நியமிக்கப்பட்ட சிலர் தேர்தலில் வென்றப்பின் அரச தரப்புக்குத் தாவுவார்கள் என்று முஸ்லிம் வட்டாரத்தில் கதை அடிப்பட்டது.
தோற்றப்பாடு
பிரிந்துபோகும் தோற்றப்பட்டை தடுக்குமுகமாக, ரவூப் ஹக்கீம் வேட்பாளர்களிடமிருந்து அவர்கள் கட்சியைவிட்டு போகமாட்டார்கள் என்னும் உறுதிமொழியை எழுத்து மூலம் பெற்றிருந்தார். சில இஸ்லாமிய சமயத் தலைவர்களும் இதை அழுத்திக் கூறினர். சில வேட்பாளர்கள் இந்த வாக்குறுதியை பள்ளிவாசல்களில் வைத்தும் அளித்திருந்தனர் எனவும் கூறப்பட்டது. ஒருவர் வாழ்நாள் பூராவும் கட்சிக்கான விசுவாச பிரமாணத்தை மெக்காவில் எடுத்ததாகவும் அறிய வருகிறது. இப்படி இருந்தும் கூட தேர்தலின் பின் கட்சியின் உடைவு தவிர்க்க முடியாதது என வதந்தி பரப்புவோர் கூறித் திரிந்தனர். கடந்த காலங்களில் பிரிந்துபோதல் வழமையான நிகழ்வாக இருந்த காரணத்தால் இப்படி நடக்காது என யாரும் எதிர்வாதம் செய்ய முடியவில்லை.
இருப்பினும் இப்போதைய வதந்தி உன்மையாகாது என நினைக்க வைக்கும் ஒரு அம்சம் காணப்பட்டது. இம்முறை கட்சியின் தலைவர் சேகு தாவூத் கட்சிமாறும் குழுவுக்கு தலைமை தாங்குவார் என கூறப்பட்டது.
பஷீர் சேகு தாவூத் தான் ரவூப் ஹக்கீமின் விசுவாசி என்றும் தீவிர கட்சிப்பற்றுள்ளவர் என்றும் பல முறை நிறுவியிருந்தார். சேகு தாவூத், முதன் முறையாக ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பின் (ஈரோஸ்)) சுயேச்சை பட்டியலூடாக 1989 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர். இவர் தொடர்ந்து நாடாளுமன்றம் வராமலிருந்து தனது உறுப்புரிமையை துறந்த அழகு குணசீலனின் இடத்தை நிரப்பியவர்.
சேகு தாவூத்
பின்னர் சேகுதாவூத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து ஹக்கீமின் பற்றுறுதி மிக்க சீடன் ஆகினார். சேகு தாவூத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக முணுமுணுப்புகள் காணப்பட்டபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்கட்சி அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை.
மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சேகுதாவூத்தும் அம்பாறை நிந்தவூரை சேர்ந்த எஸ்.எம். ஹஸன் அலியும் ரவூப் ஹக்கீமின் வலதுகை இடது கையாக கருதப்பட்டவர்கள். ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைவராக இருக்க சேகு தாவூத் தவிசாளராகவும் ஹஸன் அலி செயலாளராகவும் உள்ளனர்.
இந்த மூவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார்கள்.
ஹக்கீமும் ஹஸன் அலியும் தேசிய பட்டியலூடாக மீண்டும் நாடாளுமன்றம் வந்த போதிலும் சேகு தாவூத் மாகாண சபையில் 2010 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
ஹக்கீமுடனான நன்கறியப்பட்ட நெருக்கத்தின் பின்னணியில் சேகு தாவூத் தலைமை தாங்கி கட்சித் தாவல் ஒன்றை மேற்கொள்வார் என்பது கிட்டத்திட்ட அசாத்தியமானதாகவே காணப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த சில நிகழ்வுகள் காரணமாக எதிர்பாராதது நடந்தேறியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூவர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை விற்பன்னர் உடன் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபபட்டுள்ளனர் என்பது சகலருக்கும் தெரிந்த இரகசியம் ஆயிற்று.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் ஆறு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தேசிய பட்டியலூடாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். கண்டியிலிருந்து வந்த ரவூப் ஹக்கீம, வன்னியிலிருந்து வந்த நூர்தீன் மஷுர், திருகோணமலையிலிருந்து வந்த எஸ்.எம். தௌபீக், மட்டக்களப்பு சேகு தாவூத், அம்பாறை எச்.எம்.எம். ஹரிஸ், பைஸல் காஸிம் ஆகியோர் தேர்தலில் தெரிவாகியவர்கள். ஹஸன் அலி, களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எம். அஸ்லாம் ஆகியோர் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டவர்கள்.
எட்டு எம்பிக்கள்
இந்த நாடாளுமன்ற உருப்பினர்களில் பஷீர் சேது தாவூத், நூர்தீன் மஷுர், பைஸல் காஸும் ஆகியோர் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பேச்சு வார்த்தையாளருடன் பேச்சுகளில் ஈடுப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுலிருந்து பிரியப்போவதாகவும் செய்திகள் வந்தன. அரசாங்கத்திடம் 144 அங்கத்தவர்கள் இருந்ததாலும் அதனை வலுப்படுத்த மேலும் ஆதரவு தேவைப்படாததாலும் ராஜபக்ஷ அரசாங்கம் இந்த மூவரையும் கவர்ந்திழுப்பதில் அக்கறை காட்டாது போனமை ஒரு தடங்கலுக்கு வழிகோலியது. அமைச்சுப் பதவிகளை ஒதுக்குவதும் பிரச்சினையாகக் காணப்பட்டது.
இன்னொரு பக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு நிரந்தர ஆதரவு தெரிவிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்களாகவும் இருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து முறைசார் ரீதியாக பிரிந்து கட்சி மாறும்போது நீதிமன்றம் அதை எப்படி பார்க்கப் போகின்றது என்பதுவும் நிச்சயமற்றதாக காணப்பட்டது. அண்மையில் நீதிமன்றம் ‘கட்சி தாவலுக்கு’ எதிராக எந்த தீர்ப்பையும் கொடுத்திராத போதும் இனிமேலும் எதிரான தீர்ப்பை வழங்க மாட்டாது என தட்டிக் கழித்துவிட முடியாது.
எதிர்பார்க்கப்பட்ட பிளவு கிடப்பில் போடப்பட்டிருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசாங்க பக்கம் சேரும்படி அழுத்தம் அதிகரித்துச் சென்றது. இதற்கான பிரதான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சிப் பூசல் ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பல வருடங்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க விதிக்கப்பட்டுள்ளது என்பதை மகத்தான அப்பெரும் கட்சி அற்பவிடயங்கள் மீதான பூசல்களும் அதிகாரப்போட்டியும் தெளிவாக எடுத்துக் காட்டின. ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து இருக்கும் வரை அதிகாரத்தின் ருசி எதுவும் அனுபவிக்காமல் போகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில் எச்.எச்.எம். ஹரிஸ், எஸ்.எம். தௌபீக் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணையும் விருப்பம் கொண்டனர். ஒப்பீட்டளவில் அபிவிருத்தி குறைந்த பிரதேசங்களிலிருந்து வந்த சிறுபான்மை இனப் பிரதிகளுக்கு தமது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ளவும் தமது வாக்காளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் சில அரசியல் அதிகாரங்கள் தேவை.
இருப்பினும் ஹரிஸ், தௌபீக் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகவே அரசாங்கத்தில் இணைய விரும்பினர். கட்சியை விட்டு விலகிப்போக அவர்கள் தயங்கினர். இந்த வகையில் இந்த இருவரும் தேவையேற்படின் கட்சியை விட்டு விலகிப்போக தயாராக இருந்த மூவரிலிருந்து வேறுபட்டனர்.
சுருங்கக் கூறின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்துபேர் அரசாங்கத்துடன் சேர விரும்பிய சூழல் உருவாகியிருந்தது. இவர்களில் மூவர் தனிக்குழுவாக இணைய விரும்பும்போது இருவர் கட்சியாக அரசாங்கத்தில் சேர விரும்பினர். ஹக்கீம், ஹஸன் அலி, அஸ்லாம் ஆகியோர் மட்டுமே எதிரணியில் இருக்க விரும்பினர் போலத் தெரிந்தது.
ஊகங்கள்
இதே சமயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாக்கீர் மாக்கர் நிலையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஒரு விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீமுக்கு பாதகமான பிரசித்தம் கொடுக்கப்பட்டது. மக்கள் திசைப்பட்ட அரசியலமைப்பை ஏற்படுத்தவதற்கு மக்களின் ஆதரவை பெறுதல் என்னும் கருப்பொருளில் அங்கு பேசிய அவர் நீதித்துறைபற்றி சில விடயங்களை தொட்டுச்சென்றார் என கூறப்படுகிறது. இதை வைத்து ஹக்கீம் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்ட முயற்சி நடந்தது என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த சந்திப்பில் பங்குபற்றும்படி ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இதற்கு முன்பே ரவூப்ஹக்கீம் கல்முனையில் புதிய சந்தை திறப்பு விழாவில் பங்குபற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஹக்கீம் கல்முனையில் பேசும் போது இது பற்றிக் கூறி, தான் அங்கு போகாமல் விட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி புரிந்துகொள்வார் எனக் குறிப்பிட்டார்.
மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மறைவின் பத்தாவது வருட நினைவு தினம் (செப்.16) நெருங்கிக் கொண்டிருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் இதனை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஷ ஒரு கூட்டத்துக்கு தலைமை வகிக்க நாடாளுமன்றம் வந்தபோது ரவூப் ஹக்கீம் அவரை நேரில் சந்தித்து பிரதம விருந்தினராக வரும்படி அழைப்பு விடுத்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு நினைவு தினத்துக்கு வந்தார். இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கப் பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாக ஊகங்கள் அதிகம் வரத் தொடங்கின.
அதேநேரம் ஆச்சரியமாக பல நிகழ்வுகள் நடந்தேறின. முன்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டுவரும் சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
திடீரென ஜனாதிபதி அரசியல் இணக்கப்பாட்டுக்கான முயற்சிகளை கைவிட்டு விட்டு, ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகளை அதிகரிக்கும் தனது பழைய திட்டத்துக்கு மீண்டும் வந்தார். அவரிடம் வேறு யாப்புத் திருத்த யோசனைகளும் இருந்தன.
திட்டத்தை மாற்றிக்கொண்டமையால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டது. அரசாங்கத்திடம் ஏற்கெனவே இருந்த 144 இற்கு மேலாக அப்துல் காதர், பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகிய தத்தம் கட்சிகளுடன் கருத்து வேறுபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.
குறைந்தபட்சம் ஐந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களாவது வெளியேறி அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பர் என ஊகங்கள் பலமாக அடிபடத் தொடங்கின. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சிலரும் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பார் என்ற வதந்தியும் பரவியது.
பழைய இடதுசாரிகள்
எதிர்பாராத பகுதியிலிருந்து ஜனாதிபதியின் திட்டத்துக்கு பிரச்சினை வரத் தொடங்கியது. அரசாங்கத்துள் இருந்த மூன்று சமசமாஜிகள், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய பழைய இடதுசாரிகள் ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் தடவைகளை அதிகரிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இந்த இரண்டு கட்சிகளும் உத்தேச திருத்தங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தது. ஆக, மிஞ்சி இவர்கள் வாக்களிக்காமல் விடலாம். ஆக, மோசமாக எதிர்த்து வாக்களிக்கலாம்.
இந்த இடதுசாரி எதிர்ப்பு ஜனாதிபதியின் விருப்பத் தெரிவு ஒழுங்கில் சில மாற்றங்களை வேண்டி நின்றது. ஐந்து இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் முன்னால் கேள்விக் குறி காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி இதனை சமன்செய்ய வேறு இடம் தேட வேண்டியிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கவர்ந்திழுக்கும் சாத்தியம் ஆசைக்காட்டிற்று.
ஜனாதிபதி வேகமாக செயற்பட்டார். கண்டியில் எசல பெரஹர கொண்டாட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு அழைக்கப்பட்டார். அங்கு ஜனாதிபதி இல்லத்தில் நாட்டின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் மட்டும் கலந்துக் கொண்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
விளைந்த அரசியல்வாதியான ஜனாதிபதி ராஜபக்ஷ எதையும் மறைக்காமல் நேரே விடயத்துக்கு வந்தார். பெற்றுக்கொள்ள அவருக்கு வாக்குகள் தேவைப்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் வாக்குகள் இருந்தன. ரவூப் ஹக்கீமின் கட்சி அதை கொடுக்குமா?
ஹக்கீமும் குறைந்த ஆளில்லை. அவர் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக இதை செய்யாதுவிடின் ஜனாதிபதக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைத்து, தேவையான வாக்கை பெற்றுக்கொள்வதைவிட வேறு வழியில்லை. ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகிப் போகலாம்.
மறுபுறத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால் பாதகமான நிலைமையை ஒரு வாய்ப்பாக மாற்றக் கூடலாம். ஜனாதிபதிக்கு தேவைப்பட்டது யாப்பை திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையே. சாதாரண பெரும்பான்மை மட்டும் தேவைப்படும் ஒவ்வொரு சட்டமூலத்திற்கும் அவருக்கு வாக்குகள் தேவைப்படவில்லை. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தினுள் அமைச்சுக்களை கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உடைத்து அமைச்சர் பதவிகளை கொடுப்பதற்காக பிரிந்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசைகாட்டி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வது ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அமைச்சுப் பதவிகளை பலரும் கோரும் நிலைமையில் அமைச்சுப் பதவிகளை வழங்குவது சிக்கலான வேலையாகவும் காணப்பட்டது. ஜனாதிபதிக்கு தேவையாக இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான வாக்குகளே. ஒரு கட்சியை துண்டாடாமல் அதை எதிரணியிலிருந்து பெற முடியுமாயின் அது நல்லது.
நாடாளுமன்றத்தில் யாப்புத் திருத்தங்கள் கொண்டு வரும்போது எதிரணியில் இருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி முழுமையாக தீர்மானிக்குமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய வேண்டிய நிலைமை வராதிருப்பது சாத்தியமே. உத்தேச யாப்புத் திருத்தம் தன்னளவில், குறிப்பாக முஸ்லிம்களின் நலனையோ பொதுவாக சிறுபான்மையினரின் நலனையோ பாதிப்பதாக இல்லை. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதை எதிர்க்க வேண்டிய நியாயமான காரணம் இருக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யாப்பு தொடர்பான முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதில் மறைந்து காணப்படும் ஒரு நன்மையும் உண்டு. அண்மையில் மாறி மாறி வந்த தேர்தல்கள் இனரீதியான பிளவை தோற்றுவித்திருந்தன.
முஸ்லிம் வாக்குகள் பெருமளவில் ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக செலுத்தப்பட்டமை இனவழி முனைவாக்கம் பெற்ற நிலைமைக்கு வழிவகுத்திருந்தது.
யாப்புத் திருத்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு வாக்களிப்பது, இரு பக்கத்தவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை அதிகரித்து பெரும்பான்மை – சிறுபான்மை உறவுகள் மேம்பட வழிகோலக் கூடும்.
நிதி ஒதுக்கு
ஜனாதிபதிக்கு ஆதரவு கரம் நீட்டுவதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கக் கூடிய இன்னொரு நன்மை அபிவிருத்திக்கான வளங்கள், நிதிகள் கிடைக்கக் கூடியதாக இருப்பதாகும். பி.திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோருக்கு அவர்கள் தொகுதி, தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டது. அமைச்சுப் பதவிகள் தருவதாக கூறப்படவில்லை. திட்டங்களுக்காக வருடந்தோறும் 30-50 மில்லியன் வரையான நிதியை அரசாங்கம் கொடுக்க முடியும்.
இதனால் எதிரணியில் இருந்தாலும் கூட இவர்கள் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாகவிருக்கும். போதிய நிதி பெறுவதற்காக அரசாங்கத்தில் சேரும் தேவை இல்லாமல் செய்யப்படும்.
ஒருவரோடு ஒருவர் தனியாக பேசிய கூட்டம் நல்ல தொனியில் முடிந்தது.
கொழும்பு திரும்பிய ரவூப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களுடனும், நலன்விரும்பிகளுடனும் ஆலோசித்த பின்னர் அதியுயர் பீடம் என அழைக்கப்படும் உச்ச நிலை அதிகார அமைப்பின் கூட்டத்தை நடத்தினார். அங்கு விவாதமும் கலந்துரையாடலும் அதிகம் இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதியாக, கட்சி எதிரணியிலிருந்தவாறே வரப்போகும் திருத்தங்களை ஆதரிக்கும் என அதியுயர் பீடம் ஏகமனதாக தீர்மானித்தது.
ரவூப் ஹக்கீம் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும் மூன்று வேறு அமைச்சர் பதவிகளையும் கோரியதாகவும் ஆனால்,முஸ்லிம் அமைச்சர்களான அதாவுல்லா, றிசாட் பதியுதின், ஆகியோர் ரவூப் ஹக்கீமை உள்வாங்குவதை அனுமதிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் ஜனாதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வந்திருந்தன.
இதனை வன்மையாக மறுத்த ரவூப் ஹக்கீம், தான் ஜனாதிபதியால் மறுக்கப்படும் வகையில் இவ்வாரான எதையும் கேட்கவில்லை என கூறினார். பின்னர் ஊடகவியலாளருடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தகவல்களை மறுத்ததுடன் ஜனாதிபதி இந்த உண்மைக்கு சாட்சியாவார் என அறிவித்தது.
இந்த நேரத்தில் அரசாங்கத்துடன் சேரும் தேவையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருத்தில் எடுக்கும் பெறுமதியற்றதென தட்டிக்கழித்துவிட்டது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் சேருவதற்கு முன்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென கட்சியின் சிரேஷ்ட அங்கத்தினர்கள் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் சேருவதற்கான எழுந்தமானமான ஏற்பாடுகள் கருத்தில் எடுக்கப்பட்ட மாட்டாதென கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இருந்த நெருக்கடிகள் இருபகுதிக்கும் வெற்றி என்ற வகையில் முடிந்துள்ளதாக தெரிகிறது. அமைச்சர் பதவிகளை ஒதுக்காமல் யாப்பை திருத்துவதற்கு அவசியமான பெரும்பான்மையை பெறத் தேவையான வாக்குகளில் மேலும் எட்டை ஜனாதிபதி நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும், கட்சியின் ஒற்றுமையை பேணிக்கொள்ளும் அதே சமயம் எதிரணியில் இருந்தவாறே குறிப்பான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியையும் பெற்றுக்கொள்ளும்.
இந்த ஏற்பாடு குறித்து முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே எதிர்வரும் காலங்களில் பெரும் கருத்து முரண்பாடு ஏற்படலாம். அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழ் – முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் உருவாகிவரும் புரிந்துணர்வு பாதிக்கப்படலாம். அரசாங்கம் தற்போது கடைப்பிடிக்கும் தந்திரரோபாயத்தை மாற்றியமைத்து எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால் அல்லது சிறுபான்மை இனத்தவர்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டுவந்தால் நிலைமை மாறிப்போகும்.
முன்னைய நாடாளுமன்றத்தில் கட்சி பிளவு படுவதை தடுக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்தது. இந்த முறை கட்சி பிளவுபடுவதை தடுக்க இன்னொரு வழியாக எதிரணியில் இருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் இந்த சாமர்த்தியமான சுழியோட்டத்தினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமையை உறுதி செய்துவிட்டாரா அல்லது இது ஒரு தற்காலிக ஓய்வா என்பதை காலம்தான் கூறும். [நன்றி: தமிழ் மிரர்]
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)
04-09-2010 ஆம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.