ஊற்று

வடக்கு முஸ்லிம்கள் மீது காட்டப்படும் அக்கறை போதுமானதாக இல்லை-கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் உடன் நேர்காணல் : இப்பத் அஸா

கேள்வி: வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான உங்கள் கருத்து என்ன?

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் தேவை. அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். குடியமர்த்தப்பட வேண்டும். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நிம்மதியற்று ஒழுங்கற்ற வாழ்க்கை நடத்தும் இந்த மக்களது பிரச்சினையை சர்வதேச சமூகம் நிதானமாகப் பார்க்கவேண்டும். அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு வழங்க இலங்கை அரசாங்கம் நேர்மையான அக்கறையைக் காட்டவேண்டும். அரசாங்கம் அண்மைய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதில் காட்டும் அக்கறையினை வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாகவும் காட்ட வேண்டும். அரச தரப்பு முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் இது தொடர்பாக கூடுதலான அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

ARMIV828.jpg

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்

ஏனெனில் தற்பொழுது அரசாங்கம் மீள்குடியேற்றம் தொடர்பாக முன்னெ டுக்கும் நடவடிக்கையில் வடக்கு முஸ்லிம்க ளுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளதாகத் தெரியவருகின்றன. 1990 இல் வடபுலத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 75,000 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் புத்தளத்தை பிரதான தளமாகக் கொண்டு தொடர்ந்தும் முகாம் வாழ்க்கையினையே இன்றுவரை அனுபவித்து வருகிறார்கள். இவர்களது குடும்பங்கள் பன்மடங்கு பெருகியுள்ளன. அவர்கள் மீள திரும்புவதற்குரிய சாத்தியமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவைகள் உள்ளன. சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ற காணிப் பங்கீடு மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள், வீடு வாசல்கள், பாடசாலைகள், கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், அரச அலுவலகங்கள் உட்பட சகல கட்டிடங்களும் அழித்தொழிக் கப்பட்டு வெறும் காடுகளாகவே உள்ளன. இந்தச் சூழலில் ஏறக்குறைய 8000 பேர் வரையிலானவர்கள் தங்கள் உலர் உணவு அட்டைகளை இரத்து செய்து கொண்டு தங்களது சொந்தவூருக்கு மீளத் திரும்பியுள்ளதாக செய்திகள் உள்ளன.

இந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் போது தமது பிள்ளைகளின் எதிர்க்காலக் கல்வி குறித்து கடுமையாக யோசிக்கின்றார்கள். அவர்கள் அகதி வாழ்க்கை அனுபவித்தாலும் தற்பொழுது சீரான கல்வி வசதிகளுடன் உள்ளனர். அவர்களுடைய சொந்த இடங்களில் தற்பொழுது அவ்வசதி வாய்ப்புகள் எதுவுமே இல்லை. இது மிக அவசர அவசியமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என பெரும் அவாக் கொண்டவர்களாகவே அவர்கள் உள்ளனர். எனவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் தற்போது தேவையான அடிப்படை வசதிகளுடன் வாழும் இளம் தலைமுறையினருக்கு தம் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான விருப்பம் மிகக் குறைவாகக் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது விடயமாக சகலரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தம் பிரதேச மண் வளத்தின் பெறுமதியை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்குப் பொருத்தமான இடைக்கால ஏற்பாடுகளுடன் குடியமர்த் தப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி: இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு ரீதியிலான பிளவுகளின் காரணமாக பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசியல் ரீதியிலான பிளவும் இஸ்லாமிய இயக்கங்களினால் தோன்றும் பிளவும் பிரதேச ரீதியிலான சிந்தனைப் போக்கும் கொண்ட தோற்றப்பாடுகளின் மூலமாக பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் புரிந்துணர்வின்மையும் ஒற்றுமையின்மையுமேயாகும். முஸ்லிம்களின் அரசியல் ரீதியிலான பிளவு என்பது தேசிய ரீதியில் அடையாளம் காணக் கூடிய ஒன்று. தமிழ் -சிங்கள அரசியல்வாதிகள் தத்தமது சமுதாயத்திற்காக ஒன்றுபட்டு இயங்குகின்றார்கள்.

அதேபோன்று தத்தமது தேசிய நலனுக்காக இக் கட்சிக்காரர்கள் வேற்றுமைக்குள் ஒற்றுமைப்பட்டு செயற்படக் கூடிய நிலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை எந்த விடயங்களிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று பட்டுச் செயற்படும் சரித்திரம் கிடையாது. இது முஸ்லிம் அரசியலுக்கொரு சாபக்கேடு. பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்டு புதிய அணுகுமுறையுடன் செயற்படும் திறனும் விட்டுக் கொடுத்துச் செயற்படும் நல்ல மனப்பாங்கும் கொண்ட அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் சமய சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பல இயக்கங்கள்,அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவர்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இல்லாமையின் காரணமாக பிளவுகள் வளர்ந்து உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டதை நாம் அறிவோம். முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ சூழ்ச்சிகளும் சதித்திட்டங்களும் மேற்கொள்ள ப்படுகின்றன. இவ்வேளையில் காலத்தின் தேவையை உணர்ந்து செயற்படாமல் தேவையற்ற ஒன்றுக்காக அடித்துக் கொண்டு வேற்றுமைகளை வளர்க்கவே பிடிவாதமாக உள்ளார்கள்.

இந்த நிலை இவர்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்குமாயின் இலங்கை முஸ்லிம்கள் பாரிய பின்னடைவை எதிர் நோக்க வேண்டிவரும். எனவே இஸ்லாமியப் பணி செய்யும் அமைப்புகள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் பரஸ்பர நல்லெண்ணத்துடனும் நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடுடையவர்களாக உள்ளார்கள்.

இலங்கையில் எல்லாத் திக்குகளிலும் பரந்து வாழும் முஸ்லிம்களிடத்தில் பிரதேச ரீதியிலான சிந்தனைப் போக்கு காணப்டுகின்றது. இது வாழும் சூழலுக்கு ஏற்ப சில தனித்துவமான பண்புகளைக் கொண்டிருந்தாலும்கூட விட்டுக் கொடுப்பின்றி செயற்படுவதன் மூலம் பிரச்சினைகள் எழ ஆரம்பிக்கின்றன. தமது ஊர், தமது பிரதேசம் என்று வரையறை போட்டுக் கொண்டு சிந்திக்காமல் நாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பிரதேச, எல்லை வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது சமூகத்தின் வெற்றிக்கான வழி பிறக்கும்.

லாநிதி ஏ.ஆர். எம். இம்தியாஸ் அமெரிக்காவின் டெம்பல் பல்கலைக்கழகத்தில் இனத்துவம் தொடர்பான கற்கைத்துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு ஆங்கில நாளிதழ்களில் எழுதி வருகிறார். அத்துடன் சர்வதேச நாடுகளில் நடைபெறும் ஆய்வரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார். அத்துடன் அவ்வப்போது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலை தொடர்பாகவும் விமர்சன ரீதியான கண்ணோட்டங்களை முன்வைத்து வருகிறார். இவர் முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் `விடிவு' எனும் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியரும் தென்கிழக்கு ஆய்வு மையம் என்னும் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமாவர்.

கலாநிதி இம்தியாஸ் `விடிவெள்ளி'க்காக மின்னஞ்சல் மூலம் வழங்கிய சுருக்கமான நேர்காணல் இது.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை