ஊற்று

குமரன் பத்மநாதன் (கே.பி.) - டி.பி.எஸ்.ஜெயராஜ் செவ்வியின் தமிழ் வடிவம்

பாகம்-1 , பாகம்-2

மிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :

பாகம்-1

கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.

துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?

ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?

ப: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?

ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?

ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் 'வெரி சொரி மிஸ்டர் கே.பி'. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின், நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

ப: நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கே: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.

ப: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர். இலங்கை அதிகாரிகளால் நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன். அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்" என்பதுபோல் ஏதோ கூறினேன்.

கே: நீங்கள் குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?

ப: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன்.

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.

கே: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?

ப: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.

பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும் ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு "நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் " என்றார்.

நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும் அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.

கே: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?

ப: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.

இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.

நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்;கொள்ளப்படுகின்றன.

கே: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?

ப: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

கே: அது எப்படி?

ப: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கே: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?

ப: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கே: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக்கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

ப: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.

மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.

அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.

புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார்.

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கே: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?

ப: ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.

கே: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?

ப: அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

கே: அதன்பின் என்ன நடந்தது?

ப: நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

கே: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?

ப: அது இன்னொரு கதை. ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.

பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.

பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் 'இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்' என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன்.

அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன்.

கே: பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்), ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?

ப: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம்"'நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்" எனக் கூறினார்.

பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.

கே: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்;வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?

ப: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.

இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கே: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?

ப: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது.

கே: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக, பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ப: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில,; அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் 'இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன'; எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கே: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?

ப: அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் "உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?" என்று கேட்டாள்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். அவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். அவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.

கே: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?

ப: அது மற்றொரு நீண்ட கதை.

பாகம்-2

கேள்வி:- எப்படி நீங்கள் மீண்டும் திரும்பி வந்தீர்கள்? நீங்கள் இயக்கத்தில் எப்படி, ஏன் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் இறுதி நாட்களில் உங்கள் பாத்திரம் எவ்வாறு காணப்பட்டது?

பதில் :- நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில் இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்.

எல்.ரி.ரி.ஈ இலிருந்து விலக்கப்பட்ட ஒருவர் மீண்டும் சேர்க்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு என்றபடியால் நான் மீண்டும் இயக்கத்தில் இணைவேன் என நான் நினைவிக்கவில்லை. அத்துடன் சில சிரேஷ்ட எல்.ரி.ரி.ஈ தலைவர்கள் எனக்கு எதிராக எந்தளவு வேலை செய்தார்கள் என்பதையும் எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் எந்தளவு நச்சுக் கருத்துக்களை ஊன்றியிருந்தனர் என்பதையும் நான் அறிவேன்.

நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலைக் கொண்டு இருந்தேன்.

புலிகளின் கப்பல்கள் இலங்கை கடற்படையால் அழித்தொழிக்கப்பட்டு வந்தன. எல்.ரி.ரி.ஈ யின் ஆயுதங்களை விநியோகித்தவன் என்ற வகையில் கடலால் தொடர்ச்சியாக ஆயுத விநியோகம் நடப்பது எல்.ரி.ரி.ஈ ஐ பொறுத்தவரையில் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்படுவது மிக பாதகமான விடயம் என்பதை நான் உணர்ந்தேன்.

கேள்வி:- இது எவ்வாறு நடந்தது? இவ்வளவு அதிகமான புலிகளின் கப்பல்களை எதிர் கொண்டு அழிக்கும் அளவுக்கு இலங்கை கடற்படை வினைத்திறன் மிக்கதாக வந்தது எவ்வாறு?

பதில் :- பதவிக்கு வந்த பல்வேறு இலங்கை அரசாங்கங்களும் கடற்படையை கட்டியெழுப்புவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வந்தன. பல்வேறு நாடுகளும் மேலதிக புலனாய்வுத் தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்தன. எனவே போர்நிறுத்த காலத்தில் இலங்கை கடற்படை வினைத்திறனில் உயர் நிலையை அடைந்து கொண்டது. போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கடல்வழி போக்குவரத்துப்பற்றி தெளிவான நிபந்தனைகள் அல்லது விதிகள் காணப்படவில்லை. எனவே கடற்படையால் எல்.ரி.ரி.ஈ கப்பல்களின் நடமாட்டத்தை சுதந்திரமாக அவதானிக்க முடிந்தது.

கேள்வி:- எல்.ரி.ரி.ஈ இதை எதிர்பார்க்கவில்லையா?

பதில் :- பிரபாகரன் இதை எதிர்பார்த்தார். அவர் போரின் வெற்றித் தோல்வி கடலிலேயே இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என 2000 ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அவர் கடற்புலிகளை உச்ச அளவுக்கு வளர்த்து சவாலுக்கு முகம் கொடுக்க விரும்பினார். ஏன் என என்னால் கூறமுடியாது. ஆனால் அவர் பின்னால் இந்த திட்டத்தை மாற்றியிருந்தார் போலத் தெரிகின்றது. எல்.ரி.ரி.ஈ தரைப்படைப் போராளிகளை வளர்ப்பதிலும் வான்படையை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டது. பிரபாகரன் முதலில் விரும்பியது போல எல்.ரி.ரி.ஈ யின் கடல் வலுவை விருத்தியாக்கவில்லை.

மறுப்பக்கத்தில் இலங்கை கடற்படை பலமானதாகவும் உற்சாகம் மிக்கதாகவும் இருந்தது. இலங்கையின் கடற்பரப்பை சுற்றி அது பாதுகாப்பு அரணை அமைத்ததிலிருந்து கடற்படை தூர இடங்களுக்கும் சென்று எல்.ரி.ரி.ஈ கப்பல்களை கடலில் அழித்தொழித்தது.

எல்.ரி.ரி.ஈ கப்பல்களின் நடமாட்டம் பற்றிய புலனாய்வுத் தகவலகள் கடற்படையின் அதிகரித்த வினைத்திறன் என்பவற்றின் காரணமாக புலிகளின் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எதையும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார்.

கேள்வி. :- நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்த பின் இந்த நிலைமை மாறியதல்லவா? 2009 இன் முன்பகுதியிலும் 2008 இன் இறுதி பகுதியிலும் எல்.ரி.ரி.ஈ இரண்டு கப்பல்களை கொண்டு வர முடிந்தது என ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதற்கு நீங்களே காரணமென நம்பப்பட்டதே?

பதில் :- இல்லை. இதில் உண்மையில்லை. நான் எந்தக் கப்பலையும் அனுப்பவில்லை. உண்மையை சொன்னால் நான் அதற்கு முயற்சிக்கக்கூட இல்லை.

கேள்வி :- நீங்கள் கடல் விநியோகங்களை செய்வதற்காக இயக்கத்தில் மீண்டும் இணைந்ததாகவும் நீங்கள்தான் இரண்டு கப்பல்களை அனுப்பினீர்கள் எனவும் நான் எண்ணியிருந்தேன்?

பதில் :- நான் கடல்வழி விநியோகங்களை செய்வதற்காக மீண்டும் இணைய வேண்டும் என ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ விரும்பியதென்பது சரி. ஆனால் இது குறுகிய காலத்தில் சாத்தியமானதல்ல என விளக்கம் கூறினேன். நான் சண்டையை நிறுத்தவும் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் எல்.ரி.ரி.ஈ க்கு உதவுமுகமாகவே மீண்டும் இயக்கத்தில் இணைந்தேன். கடல்வழி விநியோகத்தை மீண்டும் தொடங்கவென மீண்டும் இயக்கத்தில் இணையவில்லை.

கேள்வி:- இதைப்பற்றி நாம் பேசும்முன் நான் உங்களிடம் பச்சையாகவே கேட்க விரும்புகின்றேன். உங்களை இழிவுப்படுத்த விரும்புபவர்களில் சிலர், கடற்படையினால் எல்.ரி.ரி.ஈ கப்பல்கள் அழிக்கப்பட்டதற்கு நீங்களே காரணம் என கூறுகின்றனர். ஆயுதத்தை வாங்குவதற்கு வழங்கப்பட்ட பணத்தை நீங்கள் கையாடிக் கொண்டு வெற்றுக் கப்பல்களை அனுப்பிவிட்டு இலங்கை அரசாங்கத்துக்கும் கடற்படைக்கும் தகவல் வழங்கி கப்பல்களை அழிக்கச் செய்தீர்கள் என தமிழ் ஊடகங்களில் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வந்ததை பார்த்திருக்கின்றேன்.

பதில் :- நீங்கள் கூறிய எனக்கு எதிரான பிரச்சாரங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த சதித்தனமான கருத்துக்கள் எங்கள் ஆட்களின் கற்பனைத் திறனை காட்டுகின்றன.

நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்றிலிருந்து கப்பல் விடயங்கள் எதிலும் நான் இருக்கவில்லை. பின்னர் 2002 டிசெம்பரில் வெளிநாட்டில் கொள்வனை செய்யும்பணி ( ஆயுதக் கொள்வனவு என்பதன் இடக்கரடக்கல்) என்னிடம் இருந்து எடு;க்கப்பட்டது. கே.பி.திணைக்களம் என அழைக்கப்பட்ட திணைக்களம் கலைக்கப்பட்டது.

இராணுவ தளபாட கொள்வனவும் கொண்டு செல்லலும் ஐயா என்பவராலும் இளங்குட்டுவன் என்பவராலும் கையாளப்பட்டன. எனக்கு எதுவுமே தெரியாது. கொள்வனவு எனது பொறுப்பில் இருக்கவில்லை. உண்மை நிலை இப்படி இருக்கும்போது அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான தகவல்கள் எனக்கு எங்கிருந்து வரும்?

கேள்வி:- கப்பல்களின் நகர்வுப் பற்றிய தகவல்களை தொடர்புடைய வேறு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களிடமிருந்து பெற்று அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியிருக்கலாம் தானே? கே.பி. திணைக்களத்தில் உங்களுக்கு செல்வாக்குள்ள யாரிடமிருந்தாவது தகவல் பெற்றிருக்கலாம் அல்லவா?

பதில் :- அறிவதற்கான தவிர்க்க முடியாத தேவை என்ற அடிப்படையிலேயே எல்.ரி.ரி.ஈ வேலை செய்கின்றது. ஒரு பிரிவு என்ன செய்கின்றது என இன்னொரு பிரிவுக்கு தெரியாது. எனவே ஒருவர் தொடர்புடைய சகல பிரிவுகளுடனும் தொடர்பு கொண்டாலன்றி பூரணமான தகவலை பெற முடியாது. கேபி திணைக்களத்தை பொறுத்தவரையில் சகலரும் அகற்றப்பட்டனர். அவர்கள் ஒன்றில் வேறு கடமைக்கு மாற்றப்பட்டனர். அல்லது வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விடயத்துடன் தொடர்புடைய எவரோடும் கதைப்பதை நான் நிறுத்தியிருந்தேன். அரிதாக பழைய நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் இந்த விடயங்கள் பற்றி நான் பேசுவதில்லை.

எனக்கு எல்.ரி.ரி.ஈ யின் மனப்பாங்கு நன்கு தெரியும். இந்த விடயங்களை நான் பேசப்போய் பின்னர் ஏதாவது விரும்பத்தகாதது நடந்துவிட்டால் அவர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குவர். எனவே எவரிடமிருந்தம் நான் இது தொடர்பான தகவல் பெற முயலவில்லை. எல்.ரி.ரி.ஈ எவ்வாறு வேலை செய்தது என்பது தெரியாதவர்களால் தான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. எல்.ரி.ரி.ஈ தலைவர் இருந்தப்போது இப்படியாக குற்றங்கள் கூறப்படவில்லை. என்மீது சந்தேகம் இருந்திருந்தால் எல்.ரி.ரி.ஈ என்னை மீண்டும் அணுகியிருக்காது அல்லது இணைந்தப்பின் வேறு பொறுப்பு வழங்கியிருக்காது.

கேள்வி:- ஆமாம் நாம் பேசிக்கொண்டிருந்த விடயத்தை விட்டு கொஞ்சம் விலகிவிட்டோம். தயவுசெய்து நீங்கள் எல்.ரி.ரி.ஈ யுடன் மீண்டும் இணைந்ததுப் பற்றிக் கூறுவீர்களா?

பதில் :- நான் முன்பு கூறியது போல கடல்வழி விநியோகங்கள் போய்ச் சேர முடியாது போனதால் எல்.ரி.ரி.ஈ. சிரமங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிந்தேன். நான் வெளியில் இருந்தால் எதுவும் செய்யமுடியவில்லை. பின்னர் 2008 இல் பின்பகுதியில் கடற்புலி தளபதி சூசையும் இராணுவத் தளபதி சொர்ணமும் என்னுடன் தொடர்பு கொண்டனர்.

அவர்கள் நிலைமை மோசமாக உள்ளதெனவும் கடல் வழி விநியோகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் விளக்கினர். அவர்கள் என்னால் மாத்திரமே கடல்வழி விநியோகத்தை உறுதி செய்ய முடியும் எனக் கூறி, இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து ஆயுதக் கொள்வனவுப் பொறுப்பு ஏற்கும்படி அழைத்தனர்.

நான் குழம்பிப்போனேன். எனக்கு கவலையாக இருந்தாலும் மீண்டும் போய்ச்சேர தயங்கினேன். நான் பல வருடங்கள் அமைதியான வாழ்வில் குடும்ப வாழ்வில் திளைத்திருந்தேன். அத்துடன் சர்வதேச நிலைமையையும் நான் அறிந்திருந்தேன். முன்னர் எல்.ரி.ரி.ஈ உலகளாவிய பயங்கரவாதிகளுக்கான கண்காணிப்பில் இருக்கவில்லை. அப்போது எம்மால் சந்தையில் விரும்பியதை கொள்வனவு செய்து இலங்கைக்கு கப்பலில் அனுப்ப முடிந்தது.

ஆனால் இப்போது செப்ரெம்பர் 11.2001 இல் பின் நிலைமை அவ்வளவு இலகுவாக காணப்படவில்லை. அவர்கள் எதிர்ப்பார்ப்பதை என்னால் செய்ய முடியுமா என்பதில் எனக்கும் சந்தேகமாக இருந்தது. அத்துடன் ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் தொடர்புகள் இழந்த நிலையில் காணப்பட்டேன். மீண்டும் தொடர்வதற்கு எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே நான் அவர்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை.

ஆனால் 2008 டிசெம்பர் 31 இல் எல்லாமே மாறிப்போனது.

கேள்வி:- அன்று என்ன நடந்தது?

பதில் :- பிரபாகரன் என்னை அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் இராணுவ நிலைமை பற்றி வெளிப்படையாக பேசினார். அவர் என்னை அழைத்தப் போது கிளிநொச்சி அரசாங்கப்படை வசமாகவில்லை. ஆனால் அவர் விரைவில் விரைவில் கிளிநொச்சி அரசப்டைகள் வசமாகும் என தெரிவித்தார் அவர். அதன் பின்னர் சண்டை ஏ - 9 வீதியின் கிழக்குக்கு நகரும் என்றார்.

எனினும் பிரபாகரன் எல்.ரி.ரி.ஈ கடற்கரையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பை நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதில் பிரபாகரன் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு காலம் போனாலும் அப்படி ஒரு பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியாது என்பதை அவர் அறிவித்திருந்தார். அவர் நான் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து மீண்டும் ஆயுதங்களை வாங்கி அனுப்ப வேண்டுமென விரும்பினார். பிரபாகரன் என்னிடம் நேரடியாக கேட்டப்போது என்னால் மறுக்க முடியவில்லை. நான் எல்.ரீ.ரீ.ஈ யில் சேர சம்மதித்தேன். ஆனால் எனது உடனடி நோக்கம் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதுதான் என்றும் ஆயுத விநியோகத்தை மீண்டும் தொடங்குவதல்ல என்றும் கூறினேன்.

கேள்வி:- ஏன் இதை கூறீனீர்கள? அவர் என்ன பதிலளித்தார்?

பதில் :- நான் சர்வதேச நிலைவரம் பாரிய மாற்றங்களை கண்டுள்ளது என விளக்கினேன். மேற்கு நாடுகள் பலவற்றுடன் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் இராணுவ தளபாட விற்பனை நடைபெறக்கூடிய சகல இடங்களிலும் மொய்த்துப்போய் இருந்தன. கப்பல்களின் நகர்வுகள் மிகக் கடுமையாக கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. முன்னர் போலன்றி கடல் வழி விநியோகத்தை தொடங்க அதிக முயற்சியும் தயாரிப்பும் அவசியமாகவிருந்தன. எனது கே.பி. வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறினேன். நானும் மிகவும் கூர்மையாக அவதானிக்கப்பட்டுக்கொண்டு இருந்தேன். எனவே நான் ஆயுதக் கொள்வனவை மீண்டும் செய்வதாயின் எனக்கு ஒளிந்து மறைந்து வேலை செய்ய வலையமைப்பை மீண்டும் அமைத்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது.

எனக்கு ஆகக் குறைந்த ஒரு வருடமாவது தேவைப்படும் என பிரபாகரனிடம் கூறினேன். அவர் மிகவும் தாமதமாகிப்போன விடயமாக இருக்கும் என கூறினார்.

அப்படியாயின் எல்.ரி.ரி.ஈ யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென நான் ஆலோசனை கூறினேன். முன்னர் 1989 இல் இந்திய இராணுவம் எல்.ரி.ரி.ஈ மீதான பிடியை இறுக்கிய போது பாலா அண்ணை மிகமுக்கிய பாத்திரம் வகித்து பிரேமதாச அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டை கொண்டு வந்தார். இதற்கு நான் எனது ஆதரவை வழங்கினேன். இப்போது பாலா அண்ணை இல்லை. நான் யுத்த நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்து எல்.ரி.ரி.ஈ.க்கு ஒரு ஓய்வை வழங்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என பிரபாகரன் கூறினார். தேவையானவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்து யுத்த நிறுத்தமொன்றை நான் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் விரும்பினார்.

அப்படியாயின் எனக்கு பொருத்தமான பதவி தரப்பட வேண்டும் என கூறினேன். அப்படியானால் தான் என்னால் எல்.ரி.ரி.ஈயை உத்தியோக பூர்வமாக என்னால் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் என்றும் எல்.ரி.ரி.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளிடமிருந்து எனக்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்றும் கூறினேன். பிரபாகரன் ஒப்புக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பிறந்தப்போது நான் மீண்டும் எல்.ரி.ரி.ஈயில் இணைந்திருந்தேன்.

கேள்வி:- ஆனால் நீங்கள் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுக்கவும் இணைப்பு செய்யவுமா எல்.ரி.ரி.ஈயில் மீண்டும் இணைந்தீர்கள்? எப்படி வேலையை மீண்டும் ஆரம்பித்தீர்கள்? வெளிநாட்டில் புலிகள் அமைப்பின் ஆதரவு உங்களுக்கு கிடைத்ததா?

பதில் :- எல்.ரி.ரி.ஈயின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். சர்வதேச முக்கியஸ்தர்களுடன் உறவாடி பேச்சு நடத்தி எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவது எனது பொறுப்பாக்கப்பட்டது. எனது முயற்சிக்கு வெளிநாட்டு கிளைகள் பூரணமாக ஆதரவளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

காஸ்ரோவும் நானும் நல்லுறவில் இல்லாதபடியால் அரசியல் பொறுப்பாளர் நடேசன் இந்ந விடயங்களில் எனக்கும் தலைவருக்கும் இடையில் இணைப்பாளராக இருந்தார். நடேசன் என்னுடன் தொடர்பான விடயங்களில் காஸ்ரோவுடன் இணைப்பாளராகச் செயற்பட்டார். ஆனால் விடயங்கள் இலகுவானதாக நடக்கவில்லை. நான் 2009 ஜனவரி முதல் வாரமே வேலை தொடங்கியப்போதும் எனது நியமனம் பற்றிய அறிவிப்பு தாமதமாகியது.

காஸ்ரோ வெளிநாடு நிளைகளுக்கு அறிவிக்க நீண்டகாலம் எடுத்தார். தமிழ்நெற்றும் இந்த அறிவிப்புக்களை செய்வதில் தாமதம் காட்டியது. நெடியவன் கட்டுப்பாட்டில் இருந்த வெளிநாட்டு ஊடகங்கள் என்னை இருட்டடிப்பு செய்தன. அரசியல் பிரிவு ஊடாகவும் நடேசன் ஊடாகவும் பொதுமக்களின் துன்பத்தை அழுத்திக்காட்டி யுத்த நிறுத்தமொன்றை கோரும் ஊர்வலங்களை ஒழுங்கு செய்ய வெளிநாட்டுக் கிளைகளை ஊக்குவித்தேன். நான் எல்.ரீ.ரீ.ஈ யின் அடையாளங்கள் எதுவுமின்றி ஊர்வலங்களை கட்சி சார்பில்லாத மனிதாபிமான செயற்பாடாக காட்டும்படி கூறியிருந்தேன்.

இவ்வாறு பல ஊர்வலங்கள் நடந்தன. இதனால் சாதகமான விளைவுகளும் எமக்கு கிடைத்தன. ஆனால் சில வாரங்களின் பின் ஊர்வலங்களில் புலிக் கொடிகளும் பிரபாகரனின் படங்களும் கொண்டு செல்லப்பட வேண்டுமென நெடியவன் ஊடாக காஸ்ரோ அறிவுறுத்தல்களை வழங்கினார். எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீக்க வேண்டும் எல்.ரி.ரி.ஈ என அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் வாசகங்கள் கொண்ட பதாதைகளும் ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்டன.

இதை நான் தடுக்க முற்பட்டப்போது நான் பிரபாகரனுக்கு எதிரானவனாக சித்தரிக்கப்பட்டேன். இந்த அரசியல் மடத்தனத்தின் விளைவாக மிகப்பெரிய ஊர்வலங்கள் இடம்பெற்றப்போதும் பலனற்றுப் போயின. ஏனெனில் இவை எல்.ரி.ரி.ஈ சார்பானதாகவும் மக்கள் சார்பற்றதாகவும் நோக்கப்பட்டது.

கேள்வி:- காஸ்ரோவின் ஆட்கள் உங்களுக்கு தடையாக இருந்த நிலைமையில் எல்.ரி.ரி.ஈ யின் சர்வதேச தொடர்புகள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உங்கள் கடமைகளை எவ்வாறு முன்னெடுத்தீர்கள்?

பதில் :- வெளிநாட்டு கிளைகள் எனது வேலையை கெடு;க்கும் வேலைகளை தொடங்கிய முறை மிக மோசமானது. அவர்கள் ஒத்துழைக்கவில்லை. எனக்கு போதிய நிதி தரப்படவில்லை. கிளைகளிலிருந்து நிதிபெற முயன்றப்போது அதுவும் மறுக்கப்பட்டது. எனவே நான் எனது சொந்தப்பணத்திலும் ஆதரவாளர்கள் எல்.ரி.ரி.ஈ உறவுகள் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட வகையில் பெற்ற பணத்திலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததது. இளைப்பாறிவிட்ட பழைய விசுவாசிகளின் ஆதரவுடன்தான் நான் ஊழியர்களையும் வலையமைப்பையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இந்த வகையானோர் எனக்கு மிகச் சிறந்த ஆதரவை நல்கி என்னோடு திரண்டனர்;.

கேள்வி:- அப்படியாயின் நீங்கள் ஏன் பிரபாகரனிடம் முறையிட்டு நிலைமையை சரிப்படுத்தவில்லை.

பதில் :- நான் அவருக்கு செய்திகளை அனுப்பினேன். ஆனால் 2009 இல் நிலைமை மாறிப்போய்விட்டிருந்தது. இராணுவம் விரைந்து முன்னேறி வந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. எனவே அவர் வெளியில் தென்பட முடியாது போயிற்று பிரபாகரனுடானான எனது முன்னைய தொடர்பு - இணைப்பான வேலு இல்லாது போனதால் தலைவருடன் தொடர்பு எடுத்தல் கஷ்டமாகப் போயிற்று. புதியவர்கள் இந்த விடயங்களில் வினைத்திறன் மிக்கவர்களாகவோ அல்லது உதவிபுரியக் கூடியவர்களாகவோ இருக்கவில்லை. காஸ்ரோ பற்றி முறையிட நடேசன் தயங்கினார். இருவரும் நல்ல நண்பர்கள்.

அத்துடன் சண்டை தீவிரமடைந்து வந்ததால் நான் இவ்விடயங்கள் தொடர்பில் பிரபாகரனை நெருக்கத் தயங்கினேன். பிரபாகரனால் கூட இந்த நிலைமையை மாற்றமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகமிருந்தது. வெளிநாடுகளில் காஸ்ரோ குழுவினர் பலமாக இருந்தனர். அவரது துனையாளரான நெடியவன் காரியங்களைக் கொண்டு செல்பவராக காணப்பட்டார். அவர்கள் காரியங்களை தடுக்க, கெடுக்க நன்கு அறிந்திருந்தனர்.

கேள்வி :- நான் ஒரு விடயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நேரடியான பதில் தருவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமாதான முயற்சி கால அவகாசம் பெறும் முயற்சியா? நீங்கள் ஒரு பக்கத்தில் யுத்த நிறுத்தத்துக்காக முயன்றுக்கொண்டு அதே சமயம் ஆயுதங்களை வாங்கி அனுப்ப முயன்றீர்களா?

பதில் :- எனது பதில் இல்லை என்பதே. எல்.ரி.ரி.ஈ தலைமையில் உள்ள மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. சிலர் இதை தந்திரமாக பயன்படுத்த யோசித்திருக்கலாம். ஆனால் நான் யுத்த நிறுத்தம் பற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தேன். நான் உண்மையிலேயே யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர முயன்றேன். ஏனெனில் சண்டை தொடர்ந்தால் எல்.ரி.ரி.ஈயின் அழிவாகவே அது இருக்கும் என நான் நம்பினேன் அது மட்டுமன்றி நான் மக்கள் பிரபாகரன் எனது ஏனைய தோழர்கள், இளம் போராளிகளின் உயிர்களை காப்பாற்ற விரும்பினேன்.

நான் சமாதானம் பேச முயன்று கொண்டு அதே சமயம் ஆயுதம் சேர்க்கும் சுத்துமாத்து விளையாட்டின் ஈடுபடவில்லை. நான் எனது பொறுப்பை, அது எதுவாயினும் அதை நேர்மையோடும் ஏமாற்று எதுவும் இன்றியும் செய்ய வேண்டுமென நம்புகின்றவன். நான் வெளியில் சமாதானத்துக்கு முயன்று கொண்டு அதே சமயம் இரகசியமாக ஆயுதம் அனுப்ப முயன்றால் அது நேர்மையீனம் ஆகும். 100 சத வீதம் சமாதானப் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும், வேறு எதற்கும் அல்ல.

இதை நீங்கள் இப்படியும் பார்க்கலாம். எனக்கு சமாதான முயற்சியில் உதவுகின்ற சர்வதேச முக்கியஸ்தர்களை நான் ஆயுதங்களை கப்பலில் அனுப்புகின்றேன் என அறிந்து கொண்டால் அல்லது எனது ஏமாற்று வேலை பிடிப்பட்டால் எனது நம்பகத்தன்மை இழக்கப்படிருக்கும். என் மீதான நம்பிக்கையும் எல்.ரி.ரி.ஈ யின் நோக்கமும் அழிக்கப்பட்டிருக்கும். நான் சுத்துமாத்து விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளேன் என கண்டுபிடிக்கப்பட்டால் இலங்கை அரசின் நிலைப்பாட்டை எண்ணிப்பாருங்கள். யுத்த நிறுத்துக்கான சந்தர்ப்பங்கள் அறவே அற்றுப்போயிருக்கும்.

கேள்வி:- நீங்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு முயன்றுக்கொண்டு இருக்கும்போது எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்களை கடத்த முயன்று கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் :- என்னால் கூற முடிவது என்னவென்றால் இப்படியான வேலையை நான் செய்யவுமில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை என்பதைத்தான் ஆயுதங்களை கொள்வனவு செய்வதும் கொண்டு வருவதும் கஷ்டமானபோது பிரபாகரன் இந்த கடமைகளை வேறு பிரிவுகளுக்கும் பகிர்ந்தளித்திருந்தார். ஆயுத கொள்வனவுக்கு ஐயா பொறுப்பாக இருந்தபோது பொட்டு அம்மான் கீழ் இருந்த புலனாய்வு பிரிவு காஸ்ரோவின் கீழ் இருந்த சர்வதேச விவகாரப்பிரிவு சூசையின் கீழ் இருந்த கடற்புலிகள் என்பவற்றிடமும் ஆயுத கொள்வனவு விவகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

செய்வதறியாத நிலையில் பிரபாகரன் இந்த முக்கியஸ்தர்கள் எல்லோரையும் ஒரு மேடையில் விட்டிருந்தார். ஆயினும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி :- பல சமையல்காரர்கள் சேர்ந்து சூப்பை கெடுத்த கதையாக இது உள்ளது. நீங்களே தொடர்ந்து பொறுப்பில் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில் :- ஆயுதம் வாங்குவது கடையில் சாமான் வாங்குவது போன்று அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த வேலையை உஷார்மிக்க ஆட்களிடம் கொடுத்ததனாலேயே ஐக்கிய அமெரிக்காஇ கனடா போன்ற நாடுகளில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

சூசை, சொர்ணம், பின்னர் பிரபாகரன் ஆகியோர் என்னிடம் பேசியபோது அவர்கள் கொள்வனவிலிருந்து என்னை அகற்றியது பிழை எனவும் நான் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் வந்திருக்காது என்றும் கூறினர்.

இதை கேட்க சந்தோஷமாக இருப்பினும் நிலைமை மாறிவிட்ட நிலையில் என்னால் வெற்றி பெற முடிந்திருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே. சக்திமிக்க நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் எமது நடவடிக்கைகளை அவதானிக்கின்ற நிலையில் இலங்கை கடற்படை செயற்றிரனில் அதிக முன்னேற்றம் கண்ட நிலையில் எனக்கும் தேவையான ஆயுதங்களை வழங்குவதும் கடத்துவதும் கஷ்டமாகவே இருந்திருக்கும்.

கேள்வி :- மீண்டும் உங்களைக் கேட்கிறேன். எல்.ரி.ரி.ஈ யை காப்பாற்ற மட்டுமா நீங்கள் யுத்த நிறுத்தத்திற்காக முயற்சித்ததீர்களா? அல்லது சமாதானத்துக்கான உங்கள் ஈடுபாடு ஆழமானதாக உண்மையில் நேர்மையாதாக இருந்ததா?

பதில் :- நீங்கள் இதை கேட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இதனால் எனது இதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி என்னால் மனந்திறந்து பேச முடிகின்றது. இது மெதுவான ஒரு தொடர்செயலாக இருந்தது. நான் எல்.ரி.ரி.ஈ யிலிருந்து வெளியேறி இருந்தப்போது அடையாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இதனால் பழைய விடயங்களை மீட்டுப் பார்க்கவும் அழமாக சிந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது அத்துடன் செப்டெம்பர் 2001 இல் பின் உலகம் மாறி வருவதை நான் அவதானித்தேன். முன்னர் ஒருவருக்கு பயங்கரவாதியாக இருப்பவர். இன்னொருவருக்கு சுதந்திர போராட்ட வீரானாக இருப்பான் என கூறப்பட்டது. இப்போது நல்ல பயங்கரவாதி கூடாத பயங்கரவாதி என இல்லையென்றம் கூறுகின்றனர். பயங்கரவாதி பயங்கரவாதிதான்.

மாறிவரும் சூழலில் எல்.ரி.ரி.ஈ போன்ற இயக்கத்தால் தொடர்ந்து போராடவோ அல்லது நிலைத்திருக்கவோ முடியாது என்பன நான் உணர்ந்துக்கொண்டேன். முழு உலகுமே எமக்கு எதிராக அணிதிரளும். அத்துடன் பல தசாப்தகால மோதலினால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சமாதானம் தேவைப்பட்டது.

எனவே நான் உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டும் என எண்ணினேன். நான் பிரபாகரனையும் இதை நம்ப வைக்க முயற்சித்தேன். அதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலில் யுத்த நிறுத்தம் தேவை என்றார். எனவே பேச்சுவார்த்தை மூலம் எய்தப்படும் சமாதானத்துக்கான முதற் படியாக, ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றுக்காக மனதார வேலை செய்யத் தொடங்கினேன்.

கேள்வி: ஆனால் நீங்கள் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தீர்களா? நீங்கள் எப்படியோ ஒரு தோற்கப்போகும் யுத்தத்தைத்தானே நடத்திக்கொண்டிருந்தீர்கள். காலங் கடந்த ஞானம் என்று பார்க்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அப்போது நான் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தேன். எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள், போராளிகள், சண்டையில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்ற எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி: மக்களை எல்.ரி.ரி.ஈ. விடுவிக்கச்செய்து அதன் மூலம் சாதாரண மக்களை காப்பாற்ற நீங்கள் முயற்சிக்கவில்லையா?

பதில்: . தொடக்கத்தில் நான் அதற்கு முயற்சித்தேன். அமெரிக்கர்கள் மக்களை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்வந்தனர். ஆனால் எல்.ரி.ரி.ஈ.யின் அதிகாரமிக்கோர் இதற்கு இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த மனப்பாங்கு மிகவும் துரதிஷ்டவசமானது. மனிதப் பண்பற்றதாகவும்கூட தோன்றலாம். இதை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்போது எல்.ரி.ரி.ஈ. தலைமைக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவர்கள் மக்களை விடுவித்திருந்தால் புலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருப்பர். அதன்பின் எல்லோரும் பூரணமாக அழிக்கப்பட்டிருப்பர்.

கேள்வி: மாவோ சேதுங்கின் கருத்துப்படி ஒரு கெரில்லாப் போராளி என்பவன் மக்கள் என்னும் சமுத்திரத்தில் நீந்தும் மீன் ஆவான். கடல் நீர் வடிக்கப்பட்டால் மீன் தத்தளித்துப்போகும். எனவே மீன் தண்ணீரை வைத்திருக்க விரும்பியது. அப்படித்தானே?

பதில்: உண்மைதான். இதனால்தான் ஒவ்வொருவரும் மக்கள், போராளிகள் ஆகிய யாவரும் காப்பாற்றப்படும் வகையில் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வர முயன்றேன். இப்போது யோசிக்கும்போது யுத்த நிறுத்தத்திற்கு முயற்சிப்பபதில் எல்.ரி.ரி.ஈ. தலைமை பிந்திப் போய்விட்டது என நான் நினைக்கின்றேன். 2008 இன் நடுப்பகுதியில் அதாவது சண்டை ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியில் நடந்தபோது முயற்சித்திருந்தால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் சாத்தியம் மிக அதிகமாக காணப்பட்டது.

ஆனால் பூநகரி, பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு என்பன வீழ்ச்சியடைந்தபோது அரசாங்கத்தின் வெற்றிக்கான வாய்ப்பு நிச்சயமாக இருந்தது. எல்லாமே மிக விரைவாக நடந்தன. அரசாங்கத்தின் பார்வையில் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு வருவது முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

கேள்வி: இந்த நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களால் சாதிக்க முடிந்தது என்ன?

பதில்: நான் அடிப்படையில் ஒரு வேலைக்காரன். பொறுப்பு ஒன்று தரப்பட்டால் ஏன் அதை செய்யாதிருப்பதற்குக் காரணம் காரணம் தேடுவதைவிட வேலை தொடங்குவதையே விரும்புவேன். அது மட்டுமன்றி இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. எனவே நான் எப்படியும் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்து மக்களையும் இயக்கத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்ற வேண்டியிருந்தது.

எனவே என்னிடமிருந்த அற்பசொற்ப நிதியுடன் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் நான் வேலை செய்யத் தொடங்கினேன். சர்வதேச அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகள், வௌ;வேறு நாடுகளின் அபிப்பிராயம் உருவாக்குவோர், உயர் ஐ.நா. உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்தினேன். இவர்களில் சிலருடன் நேரடியாக நான் பேசினேன். செல்வாக்கு மிக்கவர்கள் எனது சார்பில் வேறு சிலருடன் பேசினேன்.

மார்ச் 2009 இல் ஒரு வழி கண்டுவிட்டேன் என்றே எண்ணினேன். ஆனால் பிரபாகரன் இந்த ஏற்பாட்டை புறந்தள்ளிவிட்டார்.

கேள்வி: பிரபாகரன் மூன்று சொல்லில் நிராகரித்த Lock-off திட்டம் இதுதானே? தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள்?

பதில்: ஆம் அதுவே தான். என்னிடம் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு முயற்சி இருந்தது. குறித்த இடங்களில் பாதுகாப்பதாக வைப்பதன் மூலம் எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை களைய வேண்டும். இதற்கு பயன்படுத்திய சொல்தான் Lock-off. அதாவது, ஆயுதங்கள் குறிப்பாக கனரக ஆயுதங்கள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

இவை ஐ.நா. பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். இதன்பின் மோதல் தவிர்ப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் குறிப்பிட்ட சுடுகலன் பயன்படுத்தாத வலயங்களில் விடப்படுவர். நோர்வே அனுசரணையுடன் அசாங்கமும் எல்.ரி.ரி.ஈயும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 25 தொடக்கம் 50 வரையான உயர் தலைவர்கள் அவசியமாயின் குடும்பத்துடன் வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படுவர். நடுத்தர தலைவர்கள், போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். இவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய தண்டனை வழங்கப்படும்;. கீழ்மட்ட போராளிகள் பொதுமன்னிப்பு வழங்கப்படுவர்.

இந்தத் திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. தேவை எனில் அமெரிக்கா தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பத் தயாராக இருந்தது.

கேள்வி: இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்து வருவதாக இருந்ததா இருந்ததா?

பதில்: இது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது. என நான் நினைக்கவில்லை. அதேசமயம் இது உத்தியோகபூர்வமாகவன்றி வேறு வழியில் தெரியப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் முக்கியமான நபர் - பிரபாகரன் இதை நிராகரித்துவிட்டார்.

நான் இந்தத் திட்டத்தின் சுருக்கத்தை எழுதி பிரபாகரனின் அங்கீகாரத்திற்கு அனுப்பினேன். அவர் தொடருங்கள் என எனக் கூறியிருந்தால் அதை பூரணமாக நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கியிருப்பேன். ஆனால் விபரங்களை 16 பக்க ஆவணமாக தொலைநகலில் அனுப்பியபோது, அவர் 16 பக்க விடயத்தை மூன்றே மூன்று சொற்களால் மறுத்தார். 'இதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்பதுதான் அந்த மூன்று சொற்களும். எனவே நான் அதை கைவிட்டேன்.

கேள்வி: பிரபாகரன் ஒப்பபுக்கொண்டாலும் எல்.ரி.ரி.ஈ.யையும் அழித்தொழிக்கும் நிலையில் படைகள் காணப்பட்ட நிலையில் அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கும் என நீங்கள் நினைத்தீர்களா?

பதில்: எனக்குத் தெரியவில்லை. அநேகமாக அரசாங்கம் இதை ஏற்றிருக்காது. ஏனெனில் அது வெற்றியின் விளிம்பில் நின்று அதை இழக்க அரசாங்கம் விரும்பியிருக்காது. ஆனாலும் அந்தத் திட்டம் இறுதியாக்கப்பட்டு அரசாங்கத்திடம் கொடுக்கப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ. இருந்த நிலைமையில் பிரபாகரன் அதை ஏற்றிருக்க வேண்டும்.

கேள்வி: ஏன் பிரபாகரன் அதை ஏற்க மறுத்தார்?

பதில்: எனக்குத் தெரியாது. என்னால் ஊகிக்க மட்டுமே முடியும். இதை நினைக்கும் போது மனம் வேதனைப்படும். ஏனெனில் இன்று அவர் இல்லை. இந்த வாய்ப்பை ஏன் அவர் ஏற்கவில்லை என நான் எப்போதும் யோசிக்கத்தான் போகிறேன்.

கேள்வி: பிரபாகரனை காப்பாற்றும் உங்கள் முயற்சி அத்தோடு நிற்கவில்லை. அப்படித்தானே? ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் முயற்சி பற்றி கதை அடிபட்டதே?

கேள்வி:ஆம். அது வேறு ஒரு திட்டம். ஆனால் நெடியவன், அவரின் வெளிநாட்டு சகாக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் அது நிதர்சனமாகவில்லை. பிரபாகரன் குடும்பத்தவருக்கு நேர்ந்த கதியை நினைக்கும் போதெல்லாம் நான் கவலைப்படுவேன். அதன்பின் நெடியவனையும் அவரின் ஆட்களையும் மனதில் திட்டுவேன்.

கேள்வி: இது உங்களுக்கு மிகுந்த மன வேதனை தாரது எனில் பதில் சொல்லுங்கள். அப்போது என்ன நடந்தது என சொல்வது அவசியம் எனக் கருதுகிறீர்களா?

பதில்: அது வேதனையானது. ஆனால் அவ்விடயம் குறித்து எமது மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என நான் எண்ணுகிறேன். அதைப்பற்றி பேசுவது எனக்கு மன நிம்மதியளிக்கக் கூடும்.

2009 மே மாத முற்பகுதியில் என்ன நடந்ததென்றால், பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டார். அவர் என்னை கே.பி. மாமா என்றுதான் அழைப்பார். நிலைமை மிக மோசமாக மாறிவருவதாகவும் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும் எனவும் சார்ள்ஸ் கூறினார்.

கேள்வி: சார்ள்ஸின் நிலை என்ன?

பதில்: இல்லை. அவர், தான் தப்பிச்செல்ல எண்ணவில்லை. தான் இறுதிவரை சண்டையிட்டு தேவையானால் உயிரிழக்கவும் தயார் எனவும் சார்ள்ஸ் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிதான் அவர் கவலையடைந்தார்.

சார்ள்ஸுடன் பேசியபின் நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு திட்டம் குறித்து சிந்தித்தேன். கப்பல் ஒன்றைப் பெற்று அதை இலங்கைக் கடற்படைக்கு எட்டாத விதத்தில் சர்வதேச கடற்பரப்பில் தயாராக வைத்திருக்க விரும்பினேன். ஹெலிகொப்டர் ஒன்றை வாங்க விரும்பினேன். எல்.ரி.ரி.ஈ.யின் வான் படைப் பிரிவிலுள்ள பயற்சிபெற்ற விமானிகள் அதை வன்னிக்குக் கொண்டு சென்று அக்குடும்பத்தை கப்பலுக்கு கொண்டுவரவேண்டுமென விரும்பினேன். அதன்பின் மூன்று நாடுகளில் ஒன்றில் அவர்களைப் பாதுகாப்காப்பாக வைத்திருக்கும் திட்டம் என்னிடமிருந்தது.

கேள்வி: ஆனால் பிரபாகரன் அதை ஏற்றுக்கொண்டிருந்திருப்பாரா?

பதில்: அது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் திட்டத்தை வகுத்தபின் சார்ள்ஸுடன் தொடர்புகொண்டு அதைத் தெரிவித்தேன். அவரின் தந்தை அதை ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டேன். தான் பிரபாகரனை சம்மதிக்கச் செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். ஆனால் பிரபாகரன் அதற்கு சம்மதிக்காவிட்டால் நான் அவரின் தாயையும் தனது தம்பி தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார்.

பிரபாகரனை அறிந்திருந்ததால் அவர் ஒருபோதும் மற்றவர்களை விட்டுவிட்டு தான் குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயற்சிக்க மாட்டார் என நான் உணர்ந்தேன். ஆனால், இந்த ஹெலிகொப்டர் மூலம் அவரையும் வேறு சிலரையும் காடொன்றின் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் பின்னர் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரை வெளியேற்ற முடியும் எனவும் நான் எண்ணினேனன்.

கேள்வி: இறுதியில் என்ன நடந்தது? ஏன் இந்தத் திட்டம் மேற்கொண்டு செல்லப்படவில்லை.

பதில்: அது மிக துக்ககரமான கதை........

[தொடர்ச்சி ~ அடுத்த வாரம்]
நன்றி: தமிழ் மிரர்

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை