டீ.பி.எஸ் ஜெயராஜ்
கலைக்கப்பட்டுவிட்ட பாராளுமன்றத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அறியப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டமைப்புத்தான் சிறிலங்காவிலுள்ள தமிழ் அரசியல் குழுக்களுக்குள் அளவில் பெரியதாக இருந்தது. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இராஜவரோதயம் சம்பந்தன்
திருகோணமலையினைச் சேர்ந்த தலைசிறந்த அரசியலாளனான இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை (திகாமடுல்லை) ஆகிய தேர்தல் மாவட்டங்களில் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது.
குறிப்பிடத்தக்களவு இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவரும் கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மனோ கணேசனின் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஓர் எழுதப்படாத புரிந்துணர்வொன்று இருப்பதே இதற்கான காரணம்.
தவிர, தமிழர்களது வரலாற்று ரீதியான தாயக பூமியான வடக்குக் கிழக்கிலேயே கூட்டமைப்பு தனது கவனத்தினைக் குவிக்கவேண்டும் என்ற எண்ணம் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மத்தியில் காணப்படுகிறது.
சிறிலங்காவில் தமிழர்களது அரசியலைப் பொறுத்தவரையில் இந்தவருடம் இடம்பெறப்போகும் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து அதேநேரம் தமிழர்கள் தொடர்பான விடங்களையும் தாமே கட்டுப்படுத்தி வந்தார்கள். இதன் விளைவாக, கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழர்களது தேர்தல்சார் அரசியல் முதன்மையான ஒன்றாக விளங்கவில்லை.
தமிழர்களது ஏக பிரதிநிதிகள் தாங்களே எனக் கூறிவந்த விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவிலிருந்து தற்போது இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைத் தீவிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம், ஆனால் புலிவாதம் தந்த விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. நீண்ட நெடுங் காலமாக துன்பத்தினைச் சுமந்து நிற்கும் தமிழ்ச் சமூகத்திற்குச் சீர்செய்யவே முடியாத தீங்கினை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். தனது செயற்பாட்டாளர்கள், அனுதாபிகள், மற்றும் உதவியாளர்களுடன் இணைந்தே பிரபாகரன் இந்த இழிசெயலைப் புரிந்திருக்கிறார்.
போரின் மத்தியில் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்ட இந்தத் தமிழர்களால் நீண்டுசெல்லும் இருண்ட குகையின் முடிவில்கூட வெளிச்சத்தினைக் காணமுடியவில்லை.
இந்தப் புறநிலையில், இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாதர்த்தமாகச் செயற்படும், நீடித்து நிலைக்கக்கூடிய தமிழ் அரசியல் சக்தி உதயமாவது மிகவும் அவசியமானது.
தமிழர்களின் குரல்
தமிழர்களது துன்ப துயரங்களைப் போக்குவதோடு, ஒன்றிணைந்த இலங்கைக்குள் அவர்களது சட்டரீதியான அபிலாசைகளை பெற்றுக்கொடுக்கும் முனைப்புக்கள் நிறைவேற்றப்படாத ஒரு பணியாகவே இதுநாள் வரையும் இருந்திருக்கிறது. இச்சூழமைவில், தமிழர்களது அபிலாசைகளை வென்றெடுப்பதோடு அவர்களது துன்ப துயரங்களைப் போக்குவதற்கு ஏற்ப நம்பத்தகுந்த ஓர் ‘குரல்’ இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியமானது. சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் இந்தக் குரல் வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் உதறித் தள்ளியதாக இருக்கவேண்டும்.
கலைக்கப்பட்டுவிட்ட பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 ஆசனங்களைக் கொண்டிருந்ததது. இதன் அடிப்படையில், தமிழர்களுக்குத் தற்போதுள்ள ஒரேயொரு பொருத்தமான தெரிவு கூட்டமைப்பாகத்தான் இருக்கமுடியும். 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெற்றதைப்போல, 22 ஆசனங்களைப் பெறமுடியாவிட்டாலும் இம்முறை கூட்டமைப்பு சிறந்த எண்ணிக்கையுடைய ஆசனங்களை வெல்லும். இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள அளவுக்கு மீறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடனும் கூட்டமைப்பு கடுமையாகப் போட்டியிடவேண்டிவரும்.
பெரும்பான்மைச் சிங்களர்வர்களையே பெரிதும் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சனநாயக மக்கள் முன்னணி போற்ற ‘தேசியக்’ கட்சிகளைத் தவிர, வேறுபல சிறுபான்மை மற்றும் பிராந்தியக் கட்சிகளும் வடக்குக் கிழக்கில் போட்டியிடுகின்றன. வடக்குக் கிழக்கில் மாத்திரம் தனித்துவமாகப் போட்டியிடும் குறித்த இந்தக் கட்சிகளின் கொள்கைகளை அவதானித்தால் அவை அரசுக்கு எதிரானதாகவோ அல்லது அரசுக்கு ஆதரவான கட்சிகளாகவோதான் இருக்கின்றன. அரசுடன் இணைந்து செயற்படும் கட்சிகள் என்றும் விடுதலைப் புலிகளுக்காகப் பரிந்து பேசும் கட்சிகள் என்றும் இவற்றை நாம் வகைப்படுத்தலாம்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிக அதிகாரங்களைத் தனதாக்கிச் செயற்படாத, தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அணிதான் மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் அவசியமானது. ஆட்சியாளர்களின் ஏவலாளர்களாக மாறிவிடாது, தமிழ்ச் சமூகம் இழந்துவிட்ட உரிமைகளை மீளவும் பெறும்வகையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடனும் பொறுப்புடனும் இந்த அணி செயற்படவேண்டும்.
விடுதலைப் புலிகளின் ஆதரவு அல்லது தனிஈழ ஆதரவுச் சக்திகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளாத அதேநேரம் தமிழர்களது இன ரீதியான அடையாளத்திற்காகப் பாடுபடும் ஒரு அணியாக இது இருக்கவேண்டும். ஒட்டுமொத்தத் தமிழர்களது ஆதரவினையும் தனதாக்குவதோடு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஆதரவினையும் இந்த அணியால்
பெறக்கூடியதாக இருக்கவேண்டும்.
கூட்டமைப்பின் கடந்த காலம்
இதுபோன்றதொரு சூழமைவில் தற்போதுள்ள தெரிவுகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் பொருத்தமான தெரிவாக அமையும். ஆனால், நிலைமைகள் நாம் நினைப்பதுபோல் இலகுவானதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்து வந்த பாதை சீர்கேடானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவுமே இருக்கிறது. பச்சையாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகளின் அடிமை போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கிறது. “ஏகாதிபத்தியத்தின் ஓடும் நாய்கள்" தொடர்பாக ஒரு முறை மாவோசேதுங் குறிப்பிட்டிருந்தார். அதேபோலவே புலிகளின் ஆதிக்கவெறியின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் தங்களைத் தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக வரித்துக்கொண்டார்கள் எனின் தமிழர்களுக்குள்ள ஏக மாற்றுத் தெரிவாக ஈழமக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தன்னைக் காட்டிக்கொண்டார். கடந்த காலத்தில், “விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர்களே இவர்கள்” என கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அலாதிப் பிரியம்.
2004 தொடக்கம் 2010 வரைக்குமான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களை ஐந்து வகையாக நாம் வகைப்படுத்தலாம். இந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களுள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் அரசியல் கட்சிகளின் உறுப்பினராக இல்லாதவர்களும் அங்கம் வகித்தார்கள். தேர்தலில் யார் போட்டியிடவேண்டும் எந்தத் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதை விடுதலைப் புலிகளே தீர்மானத்தார்கள். 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பெருமெடுப்பிலான பிரச்சாரங்களைப் புலிகள் மேற்கொண்டதோடு வாக்கு மோசடியிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது, வடக்குக் கிழக்குப் பகுதியில் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் இடம்பெறவில்லை எனக் கூறி ஐரோப்பிய ஒன்றிம் அறிக்கை விடுத்தமையினால்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட பெரு வெற்றி அதன் பிரகாசத்தை இழந்துநின்றது எனலாம். இதனை வைத்துக்கொண்டு, கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்ற அனைவருமே வாக்கு மோசடியில் ஈடுபட்டார்கள் என அர்த்தப்படுத்திவிட முடியாது. ஆனால், வாக்கு மோசடியால் மாத்திரம் வெற்றிபெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்புக்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆதரவோ அல்லது பக்கபலமோ இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அது 12 தொடக்கம் 14 வரையான ஆசனங்களையே பெற்றிருக்கும். இந்தத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்று கூட்டமைப்பினர் பெரு வெற்றியினைப் பெறுவதற்கு புலிகள் என்ற காரணி முதன்மையான அம்சமாக விளங்கியது. எவ்வாறிருந்தும் பதவியைத் தக்கவைப்பதற்கான ஒரு முனைப்பாகவே அமைந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களின் குரலாக ஒலிப்பதற்குப் பதிலாக விடுதலைப் புலிகளின் ‘குரலாகவே’ பார்க்கப்பட்டும் சித்தரிக்கப்பட்டும் வந்தது. சர்வதேச உலகத்தினதும் சிறிலங்காவினதும் பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான நம்பகத்தன்மை பூச்சியமாகவே இருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்பெயினாகத்தான் இருக்கும் எனச் சிலர் எண்ணினர் (சின்பெயின் - அயர்லாந்து விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவு). தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதிப் பேச்சுக்களில் முதன்மையான பங்கினை வகிக்கும் என வேறு சிலர் எண்ணினார்கள். ஆரம்பத்திலேயே அமைதிப் பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு தொடர்பாக விடுதலைப்புலிகள் வரையறுத்துவிட்டதால் அவ்வாறெதுவும் நடைபெறவில்லை.
மேலும், அமைதிப் பேச்சுக்களின் போதும் இதர முனைப்புக்களின் போதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளே இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. சனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமையினால் தனக்குக் கிடைத்த அதிகாரத்தினை புலிகளுக்குத் தாரைவார்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட்டு அதன் சுகபோகங்ளை அனுபவித்தார்கள். ஸ்ரான்லி போல்ட் வின் அவர்களின் வார்த்தையில் கூறுவதானால், “வரலாற்றில் பொறுப்புக்களின்றிய அதிகாரம் விபச்சாரியின் தனியுரிமை ஆகும்”.
அரசியல் அடிமைத்தனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தங்களது அரசியல் அடிமைகளாக்கிய விடுதலைப் புலிகள் கூட்டமைப்பினைத் தாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை அனைவரும் அறியும்படி செய்தார்கள். அடிக்கடி கிளிநொச்சிக்கு அழைக்கப்படும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவுப் பொறுப்பாளராகச் செயற்பட்ட சுப்பு பரமு தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்குவார். தங்களது தேவை கருதி விடுதலைப் புலிகளால் ஒழுங்குசெய்யப்படும் இந்தக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்களும் புலிகளாகி, பிரபாகரனதும் புலிகளதும் புகழ் பாடுவர்.
பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலை பரிதாபத்திக்குரியதாக இருக்கும். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்மந்தனைத் தவிர, அதன் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றில் ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தரப்பினைத் தூண்டுகின்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கீழ்த்தரமான முறையில் நடந்துகொள்வார்கள்.
அதேபோல, தொடர்புடைய இராசதந்திரச் சமூகத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்புணர்சியோடும் ஏளனத்தோhடும் நோக்கினார்கள். இராததந்திர சமூகத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கள் பெயரளவிலேயே இடம்பெற்றதே தவிர, அவை ஆக்கப+ர்வமானதாக இருந்ததில்லை. கூட்டமைப்பின் தூதுக்குழுக்கள் புதுடில்லிக்கான விஜயத்தினை அடிக்கடி மேற்கொண்டு வந்தபோதும் இங்கு இடம்பெற்ற சந்திப்புக்கள் வேண்டா வெறுப்புடன்தான் இடம்பெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளுடன் இணைந்த ஒரு அலகு என்றே பார்க்கப்பட்டது. தனியான உரையாடல்களின் போது, தமக்கு ஏற்பட்டிருக்கும் கையறு நிலை தொடர்பான தங்களது துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் சம்பந்தன் போன்றவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவேனும் பரிவிரக்கம் இருப்பதாகத் தெரிகிறது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 22 ஆசனங்களை வைத்திருந்த கூட்டமைப்பினால் சிறிலங்காவிலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோ ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்கமுடியவில்லை.
பதிலாக, பாராளுமன்றத்திற்கு வருகைதந்து தமக்கான ஊதியத்தைப் பெறுவதோடு புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுவரும் பல்வேறுபட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களுக்குச் செவ்விகளை வழங்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய பணியாக இருந்தது. கூட்டமைப்பின் குறித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில் தங்கியிருக்கும் அதேநேரம் ஏனையோர் கொழும்பிலோ அல்லது இந்தியாவிலோ அல்லது மேற்கு நாடுகளிலோ தங்கியிருந்தார்கள். இந்த 22 பேரையும் பாராளுமன்றம் அனுப்பிய வடக்கக் கிழக்கைச் சேர்ந்த அந்த நாதியற்ற அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடியது கிடையாது. இது வருந்துதற்குரிய ஒரு நிகழ்வாகும். தமிழ் மக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மாற்றான் தாய்ப் பிள்ளைபோல பாராமுகமாகச் செயற்பட்டுவருகிறது எனக் குற்றம் கூறும் கூட்டமைப்பினர், விடுதலை என்ற பெயரால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் நசுக்கப்பட்டமை தொடர்பாக வாய் திறப்பதற்குத் துணிந்ததில்லை.
கடுமையான வரி விதிப்பு முதல் கொடூரமான கட்டாய ஆட்திரட்டல் வரை அனைத்து வகையான அட்டூளியங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கண்களையும் காதுகளையும் இறுகப் பொத்தியவாறு வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள்.
ஒஸ்லோவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் மூலம் நாட்டினது இனப் பிணக்கிற்கு நீடித்து நிலைக்கக்கூடிய நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பொன்னான வாய்ப்பினை விடுதலைப் புலிகள் இல்லாது செய்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யாமல் வெறும் பார்வையாளராக மௌனம் காத்தது.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் புறக்கணிப்பினை விடுதலைப் புலிகள் வலிந்து ஏற்படுத்துவதற்கு கூட்டமைப்புத் துணை போனமையினால் மகிந்த ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறினார். மாவிலாறில் நடந்த சம்பவங்கள் போன்ற தாக்குதல் சம்பவங்களை விடுதலைப் புலிகள் தனது ‘மக்கள்படை’ யினைக் கொண்டு அரங்கேற்றி இலங்கைத் தீவில் மீண்டு போர் மூழுவதற்கான அடித்தளத்தினை இட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய் திறக்கவில்லை.
போர் மீண்டும் மூண்டபோது விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த நிலங்களை விட்டு, அங்கிருந்த மக்களையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு பின்வாங்கினார்கள். இந்த நிலையில், சிறிலங்கா அரச படைகளால் தொடராக மேற்கொள்ளப்படும் வான் வழித் தாக்குதல்களாலும் எறிகணைத் தாக்குதல்களாலும் பொதுமக்கள் தங்களது உயிர்களையும், உடமைகளையும், அவையவங்களையும் சொத்துக்களையும் இழக்கிறார்கள் எனக்கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால், போர் இடம்பெறும் பகுதிகளுக்குள் கட்டாயத்தின் பெயரில் மக்களை வைத்திருக்காமல் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என விடுதலைப் புலிகளை நோக்கி கோருவதற்கு கூட்டமைப்புத் தவறிவிட்டது.
இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகள் அடிக்குமேல் அடிவாங்கி, என்னசெய்வதெனத் தெரியாதிருந்த வேளையிலும் சர்வதேச சமூகம் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என கூட்டமைப்பு வாதிட்டது. ஆனால், தங்களையும் தங்களது குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரத் துடித்த மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதியுங்கள் என கூட்டமைப்பு புலிகளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தங்களது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோட முனைந்த பொதுமக்களை விடுதலைப் புலிகள் மறித்துப் பிடித்துச் சித்திரவதை செய்து தடுப்பில்வைத்துக் கொலைசெய்தார்கள். இந்த அநியாகத்தைக்கூட கூட்டமைப்புத் தட்டிக் கேட்கவில்லை.
வெட்கம் கெட்ட கைக்கூலிகள்
மேற்குறித்த இந்தக் காரணங்களால் விடுதலைப் புலிகளின் வெட்கம்கெட்ட கைக்கூலிகளாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அனைவரும் கருதினார்கள். சர்வதேச மட்டத்திலும் தேசிய ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரியளவு மதிப்பேதும் இருக்கவில்லை. குறித்த சில நாடுகளில் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகிறார்கள் என்ற காரணத்துக்காக கனடா உள்ளிட்ட சில நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நுழைவு அனுமதியினை (விசா) நிராகரித்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளிடம் தன்னை அடமானம் வைத்தமையினால் அது அதிக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டது என்னவோ உண்மைதான். ஆனால், கூட்டமைப்பு இவ்வாறு தன்னை அடமானம் வைத்தது எத்துணை ஆபத்தானது என்பது குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தெரியவந்தது.
மட்டக்களப்பு நகரிலுள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற விசேட பூசையில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கிங்ஸலி சுவாம்பிள்ளையிடம் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அதேபோல தனது உத்தியோகப+ர்வ வாகனத்தில் கொழும்பு நகர வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மல்லாவிப் பகுதியில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சின்னையா சிவனேசன் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு அரியநேந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யனுடன் சேர்ந்து வெலிக்கந்தைப் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமகாராஜா யாழ்ப்பாணக் குடாநாட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுபோலவே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கான உயிரச்சுறுத்தல்கள் அதிகரிக்க, அவர்கள் வன்னிக்குச் சென்று புகலிடம் தேடினர். வேறுசிலர் கொழும்பிலுள்ள தங்களது உத்தியோகபூர்வ வதிவிடங்களுக்கு உள்ளேயே முடங்கிக்கொண்டார்கள். வேறு சிலரோ, கொழும்பிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தங்கியிருந்ததோடு பாராமன்றத்தில் தமது வரவினைப் பதிவதற்கு இடைக்கிடையே கொழும்புக்குச் சென்றுவருவார்கள். இன்னும் சிலர், புலம்பெயர்வாழ் தமிழர்கள் ஒழுங்குசெய்யும் செயற்பாடுகளில் அடிக்கடி சென்று பங்கெடுப்பார்கள்.
பாராளுமன்றதத் தேர்தல் 2010ஆம் வந்தது!
“சோ மந்திரகாளி” எனக்கூறி சில மந்திரவாதிகள் சிலர் மந்திரக்கோலை அசைத்ததைப் போல, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீரென நாடு திருப்பினர். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் என்றாலே நெருப்பினை உமிழ்ந்து எரிந்து வழிந்த கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்குத் திரும்புமிடத்துத் தமக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் என மகிந்த அரசாங்கத்துடன் மறைமுக ஒபந்தங்களைச் செய்துகொண்டார்கள். மீண்டுமொருமுறை பாராளுமன்றம் செல்வதற்குத் “தயாராகவும், முழுவிருப்பத்துடனும், திறனுடனும்" இருக்கும் இவர்கள் பாராளுமன்றம் சென்று மக்களுக்குச் “சேவை" செய்யப் போகிறார்களாம்.
துயர்நிறைந்த வரலாறு
இதுபோன்ற துயர்நிறைந்த வரலாற்றினைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையிழந்த நிலையில் துயருற்றிருக்கிறது. இந்தப் புறநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் புரிந்த தவறுக்காக வருந்தாது, சீர்திருத்தங்களை விரும்பாது இருக்குமெனில், தமிழ் மக்களின் பகுத்தறிவுள்ள தேர்வாக ஒருபோதும் கூட்டமைப்பு இருக்காது.
ஆனால், சனநாயக முறையின் கீழ் எந்தக் குறைகளுமற்ற, எந்தத் தவறையும் இழைக்காத சிறந்த அல்லது சாலப்பொருத்தமான ஒருவரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, இருப்பவர்களில் எவர் சிறந்தவரோ அவரைத்தான் எங்களால் தேர்ந்தெடுக்க முடியும். சிறந்த கட்சி அல்லது சிறந்த வேட்பாளர் என நாம் எவருக்கும் வாக்களிப்பதில்லை. இருக்கும் பிசாசுகளில் எந்தப் பிசாசு சிறந்ததோ அதனையே தேர்ந்தெடுக்கிறோம்.
விடுதலைப் புலிகளின் கரங்களில் சிக்கி பெருந்துயருக்கு முகம்கொடுத்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் புலிகள் தொடர்பான எந்தவிதமான தவறான எண்ணமும் அவர்களிடத்தில் இல்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சங்கடம் தரும் சம்பவங்களையும் தமிழ் மக்கள் மனம்பொறுத்து ஜீரணித்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது என்பதையும் தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகளாக இருக்கவில்லை. அரசியல் நம்பகத்தன்மையினையும் நற்சான்றினையும் பெற்றிருக்கும் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் மக்கள் ஆதரவினைத் தமதாக்கும் திறன் கொண்டவர்கள். நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலானது வடக்குக் கிழக்கில் சுதந்திரமாகவும் நீதியானதாகவும் நடைபெறுமெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைத் தனதாக்கும். (ஆனால் தேர்தலானது அவ்வாறு சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுமா என்பதே மிகப்பெரும் வினாவாகும்)
மேலும், தமிழ்ச் சமூகம் மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தில் நிற்கிறது என்பதை அரசியல் தெளிவுபெற்ற தமிழர்கள் விளங்கிக்கொள்கிறார்கள். இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்தாலும், நாட்டினது தமிழ் மக்களின் சட்ட ரீதியான அரசியல் கரிசனைகளைத் தீர்த்துவைப்பதில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போதியளவு முனைப்புக்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. பெருமளவான மக்களின் இடம்பெயர்வு மற்றும் தடுத்துவைப்பு போன்ற போரின் துன்பியல் விளைவுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில், வினைத்திறன் கொண்ட ஓர் அரசியல் தலைமையினைத் தமிழர்கள் பெறுவது மிகவும் முக்கியமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, வரலாறு என்ற குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட வலுவிழந்து நலிவடைந்த ஓர் சக்தியல்ல என்பதைக் காட்டும் இரண்டு விடயங்கள் அண்மையில் நடைபெற்றிருக்கின்றன.
யாழ்ப்பான மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பத்தகு வெற்றியினைப் பெற்றிருப்பது முதலாவது அம்சம். நடந்துமுடிந்த அரசுத் தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகத் 'தமிழர்கள்” பெருவாரியாக வாக்களித்தமை இரண்டவது அம்சம். குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்காமல் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை இங்கு குறிப்பித்தக்கது.
இதுபோன்ற நம்பிக்கைதரும் மாற்றங்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆக்கப+ர்வமான கருத்துக்கள் என்பவற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் புதிய நம்பிக்கையுடனும் திடத்துடனும் இருக்கிறது.
மூன்று 'S’ களின் கூட்டு
சம்பந்தன், சேனாதிராஜா மற்றும் சுரேஸ் (பிரேமச்சந்திரன்) என்ற மூன்று ‘ளு’ களைக் கொண்ட கூட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தலைமை தாங்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மீள வடிவமைப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும், புதுப்பிப்பதிலும் இந்த முக்கூட்டுத் தலைமை துணிவுடனும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட்டு வருகிறது. கூட்டமைப்பினை அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற, கட்சிக்குள் இருந்த குப்பை கூழங்கள் அகற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வி மான்கள், பாடசாலை அதிபர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஏனைய வல்லுனர்கள் எனப் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.
இடர்சூழ்ந்த வேளையிலும் மக்களுடன் தொடர்ந்தும் தங்கியிருந்தவர்களுக்கு கட்சியில் முதன்மையான இடம் வழங்கப்பட்டது. அதேநேரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆதரவு என்ற தனது முன்னைய வரலாற்றைப் படிப்படியாகக் கைவிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அவதாரம் எடுப்பதாகவே தெரிகிறது. யதார்த்தத்துடன் கூடிய நெகிழ்வுப் போக்குடன் செயற்படும் அதேநேரம் தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு அமைப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தோற்றமளிக்கிறது.
தமிழ் மக்களின் பரந்துபட்ட ஆதரவினைத் தனதாக்கும் அதேநேரம் கூட்டமைப்பானது தனக்கிருந்த புலிச்சாயத்தினைக் கழுவித் தன்னைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். விவேகம்கொண்ட நாட்டினது அரசியல் சமூகத்தினதும் இந்தியாவினதும் மேற்கு நாடுகளதும் சட்டரீதியான அங்கீகரத்தினைப் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது இதுபோன்ற நிலைமாற்றத்திற்கான ஒரு ஆரம்பத்தினை இடம்பெறப்போகும் பொதுத் தேர்தல் ஏற்படுத்திக்கொடுக்கும். அத்துடன், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுக்கும் கூட்டமைப்பின் தலைமை இதுபோன்ற ஓர் நிலைமாற்றம் நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது.
ஆனால், அரசியல் என்பது நிலைமாறிக்கொண்டிருக்கும் ஒரு அம்சம். ஆரம்பத் திட்டம் எதுவோ அதன்படி அரசியல் ஒருபோதும் பயணிப்பதில்லை. அரசியலின் தன்மை இதுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் புதுப்பிக்கும் இந்த முக்கூட்டுத் தலைமையின் முயற்சி, தவிர்க்க முடியதாத சில வலிகளைத் தந்திருக்கிறது.
நிலைமையினை மதிப்பிடுவதற்கான அடிப்படைத் தத்துவம் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகித்த பங்கு மற்றும் பணிதான் எனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாகச் சிதறுண்டு விட்டது. கூட்டமைப்பின் ஒற்றுமைப்பண்பு எவ்வாறு சிதைந்துபோனது!
கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இம்முறையும் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்குகிறார்கள். வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். வேறு சிலரோ அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். சிலர், இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
ஏனைய சில கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எந்தக் கட்சியிலும் வழங்கப்படவில்லை. சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார முன்னெடுப்புக்களுக்குத் தங்களின் முனைப்பான ஆதரவினை வழங்கிவரும் அதேநேரம் ஏனையோர் ; கூட்டமைப்பின் தற்போதைய தலைமையினை எதிர்க்கிறார்கள். வேறு சிலரோ தேர்தல் முனைப்புக்களில் அக்கறை செலுத்தாமல் தாமும் தம்பாடும் என இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இவ்வாறு பிளவுபட்டுச் சிதறுண்டு கிடக்கிறது? விடுதலைப் புலிகள் என்ற தரப்பு அரங்கில் இல்லாதமையே இதற்கான காரணம். வேறுபட்ட கருத்துக்களையும் எண்ணங்களையும் கொண்ட தமிழ்த் தலைமைகள் புலிகளின் கட்டளையினாலேயே (அல்லது ஆயுதம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓரணியில் இணைந்து நின்றனர். அரங்கில் விடுதலைப் புலிகள் இல்லாதமையினால் கூட்டமைப்பின் மத்தியில் வெடிப்புகள் தோன்றி அது விரிவடைந்துசெல்கிறது. இவ்வாறக கூட்டமைப்புச் சிதறுண்டு போவதற்கான சரியான விளக்கம் இதுவாகத்தான் இருக்கமுடியும். ஆனால், கூட்டமைப்பின் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சிக்கல் நிறைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நீரின் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நீரோட்டம், நீரடி நீரொட்டம் மற்றும் நீர்ச்சுழி ஆகியவற்றைச் சரியாக விளங்கிக்கொள்வதற்கு கூட்டமைப்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக ஆராய்வது அவசியமானது. பெரும்பாலானவர்கள் எண்ணுவதைப் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் உருவாக்கவில்லை. விடுதலைப் புலிகளின் எச்சரிக்கையுடன் கூடிய மறைமுக ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தானாகவே உருவாகியிருந்தது. இதன் பின்னர்தான் புலிகள் கூட்டமைப்பினைத் தம்வசப்படுத்தித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
10 ஒக்ரோபர் 2000 தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூர்விகம் கிழக்கிலேயே தோன்றியது. 10 ஒக்ரோபர் 2000இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான் இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு உருவாவதற்கு வழிசெய்தது. வடக்குக் கிழக்கு மாகாணங்களினது தேர்தல் முடிவுகள் தமிழர்கள் மத்தியில், குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியிருந்தது.
அரசியல் ரீதியிலான புறத்தூண்டுதல்களுக்கு இலகுவில் உள்ளாகக்கூடிய மாவட்டமான திருகோணமலையிலிருந்து எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றம் செல்லவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் பாராளுமன்றம் சென்றனர். அப்போது ஆட்சியிலிருந்த மக்கள் முன்னணியின் வேட்பாளரான தமிழர் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றார். ஈழ மக்கள் சுதந்திரக் கட்சியன் ஆதரவுடன் தேர்தலில் நின்ற
சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் அம்பாறையில் ஆசனத்தைக் கைப்பற்றினார்.
ஆறு ஆசனங்களைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில் இரு சிங்களவர்களும் (ஒருவர் மக்கள் முன்னணி மற்றையவர் ஐக்கிய தேசியக் கட்சி) ஒரு முஸ்லீமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ரெலோவிலிருந்து மூன்று தமிழர்களும் புளொட் அமைப்பிலிருந்து இன்னொரு தமிழரும் பாராளுமன்றம் சென்றனர்.
ஒன்பது ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் ஒரு போணஸ் ஆசனம் உள்ளடங்கலாக நான்கு ஆசனங்களை ஈ.பி.டீ.பி பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்று ஆசனங்களை வென்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைத் தனதாக்கியது. 48 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி குடாநாட்டில் ஒரு ஆசனத்தைப் பெற்றது. பொன்னம்பலம் ராமநாதனது மருமகன் சுப்பையாப்பிள்ளை நடேசன் 1952ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தியாகராசா மகேஸ்வரன் வெற்றிபெற்றார்.
தேசியப் பட்டியல் ஆசனத்தினைப் பெறும் வகையில் எந்தவொரு தமிழ்க் கட்சியும் போதிய ஆசனங்களைப் பெறவில்லை. 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தமிழர்களது பாராளுமன்றப் பிரநிநிதிதித்தும் பெரிதும் குறைவடைந்திருந்தது. சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தேசியக் கட்சிகளும், அரசாங்கத்துடன் இணைந்துநின்ற ஈ.பி.டீ.பி போன்ற தமிழ்க் கட்சிகளும் இந்தத் தேர்தலில் திறம்படச் செயற்பட்டிருந்தன.
மக்களைக் கவரும் வகையிலான அரசியல் செயல்திட்டங்கள் சிறுபான்மைத் தமிழ்க் கட்சிகளிடத்தே இல்லாதமையினாலும் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமையினாலுமே தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பெருந்தோல்வி ஏற்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகம்
தமிழ்க் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்துநின்ற இந்த நிலைமையின் கவனிக்கப்படவேண்டிய தன்மை தமிழர்கள் தனித்துவமாக வாழும் வடக்கினை விட, அனைத்து இன மக்களும் வாழும் கிழக்கிலேயே அதிகம் உணரப்பட்டது. குறித்த இந்த நிலைமையினை ஆராயும் வகையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யபட்டிருந்தது. டெய்லி மிறர் பத்திரிகையின் பத்தியாளரான தராகி எனப்படும் தர்மலிங்கம் சிவராம் இந்கத் கருத்தரங்கைத் தலைமையேற்று நடாத்தியிருந்தார். கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், சமூகப் பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்தக் கருத்தமர்வில் கலந்துகொண்டனர்.
தமிழர்களது வாக்குகள் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக தொடர்புடைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரேகுடையின் கீழ் அணி திரளவேண்டும் என்ற தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதுபோற்ற ஓர் குடை அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படவேண்டும் என்ற கருத்தும் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டமைப்பினை அமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் அனுமதி பெறப்படும் என்றும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் இந்த முயற்சியினை நடைமுறைப்படுத்துவதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மூன்று பிரதான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. முதலாவதாக, இதுபோன்ற கூட்டமைப்பினை அமைப்பதற்கு விடுதலைப் புலிகளின் அனுமதியினைப் பெறுவது மற்றும் அந்த அமைப்புக்கு ஆதவு வழங்குவது. இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யாது அவர்களுக்குப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகவே கருதப்பட்டது. பதிலாக, விடுதலைப் புலிகளை ஒப்புயர்வற்ற ஒன்றாகத் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக்கொள்வதோடு அமைதிப் பேச்சுக்களின் போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகளே இருக்கிறார்கள் என ஓப்புதல் அளிக்கவேண்டும்.
[ இக் கட்டுரை Tamil National Alliance enters critical third phase-1 இன் தமிழ் வடிவம் ] ~ தமிழாக்கியவர் தி. வண்ணமதி ~