சிறிலங்கா புலனாய்வுத் துறை கசியவிட்ட சொந்த-தயாரிப்பு கொலைப் பட்டியல்
[ புதினப்பலகை ] சிறிலங்கா புலனாய்வுத் துறை கசியவிட்ட சொந்த-தயாரிப்பு கொலைப் பட்டியல்: சர்ச்சையும் மறுப்பும்
சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தயாரிக்கப்பட்டு கசிய விடப்பட்டிருக்கும் கொலைப் பட்டியல் ஒன்று, தமிழ் மற்றும் சிங்கள சமூக சேவையாளர்களையும், ஊடகத் துறையினரையும் உள்ளடக்கியதாக 35 பேரின் பெயர்களைக் கொண்டிருக்கின்றது.
அந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆட்களும் - சிறிலங்கா புலனாய்வுத் துறையால் அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைவாகப் புள்ளிகள் கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தாமே தயாரித்த ஒரு கொலைப் பட்டியலைத் தாமே கசியவிட்டதன் மூலம் - அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஆட்களை அச்சுறுத்தி, அடிபணிய வைக்க சிறிலங்கா அரசு முனைவதாகப் பரவலாக நம்பப்படுகின்றது.
அதே வேளையில் - அவ்வாறான ஒரு கொலைப் பட்டியலைத் தாம் தயாரிக்கவில்லை எனவும், அப்படி ஏதாவது இருந்தால் அதனை வெளியிடுமாறும சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது.
ஊடக சுதந்திரத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களான - சர்வதேச மன்னிப்புச் சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச ஊடகவியலாளர் பேரவை [The International Federation of Journalists - IFJ] என்பன தனித்தனியாக வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத் துறையால் தயாரிக்கப்பட்ட கொலைப் பட்டியல் [hit list] தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக - குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு, சர்வதேச ஊடகவியலாளர் பேரவை அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பிரச்சாரகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கும் இந்த அமைப்பு, அரசாங்கப் புலனாய்வுத் துறையினாலேயே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
சிறிலங்காவின் சட்டப்படி புலனாய்வு அமைப்புக்கள் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குக் கீழேயே வருவதால், அது தொடர்பான விசாரணைகளை நடத்துமாறும், குறிப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இந்த அமைப்பு குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
புலனாய்வுத் துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்தக் கொலைப் பட்டியலை கொழும்பிலுள்ள வெளிநாட்டத் தூதரகங்கள் பலவும் பெற்றிருக்கின்றன.
இதே வேளையில் - இவ்வாறான ஒரு கொலைப் பட்டியல் இருந்தால், அவ்வாறான பட்டியல் ஒன்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதனைப் பகிரங்கமாக வெளியிடுமாறு சிறிலங்கா அரசாங்கம் இன்று சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கடந்த நான்கு வருட காலமாகவே சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட உலக அமைப்புக்கள் பலவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுவருகின்றன எனவும் குற்றஞ்சாட்டினார்.
"சிறிலங்காவில் பயங்கரவாதத்தை நாம் முறியடித்துள்ளோம். அதனைச் செய்வதற்கான சக்தி எம்மிடம் இருந்துள்ளது. பல அமைப்புக்கள் இதனால் அடிபட்டுப் போயுள்ளன. அவ்வாறான அமைப்புக்களில் ஒன்று தான் சர்வதேச மன்னிப்புச் சபை" எனவும் குறிப்பிட்ட அமைச்சர் ரம்புக்வெல, "அவ்வாறான கொலைப் பட்டியல் ஒன்று அவர்களிடம் இருந்தால் அதனை வெளியிடுமாறு அவர்களுக்கு நாம் பகிரங்கமாகச் சவால் விடுக்கின்றோம்" எனவும் தெரிவித்தார்.
கடந்த வருடங்களில் அரசாங்கம் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுக்களை நடத்தியிருந்த போதிலும், அந்த அமைப்பு பாராபட்சமாகவே செயற்படுகின்றது எனவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தயாரிக்கப்பட்ட இந்தக் கொலைப் பட்டியல் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபை, இதில் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என 35 பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
குறிப்பாக - மனித உரிமைச் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயர் உட்பட, உதயன் மற்றும் சுடரொளி ஏடுகளின் ஆசிரியர் நடேசபி்ள்ளை வித்தியாதரனின் பெயரும் இந்தப் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளதாகப் புதினப்பலகை அறிகின்றது.

