'யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில்' வர்த்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
[ புதினப்பலகை ] சிறிலங்காவின் வடக்கு பகுதிக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை பலப்படுத்தும் பொருட்டு 'யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில்' என தலைப்பிடப்பட்டிருக்கும் அனைத்துலக யாழ்ப்பாண வர்த்தக கண்காட்சி 2010 ஏப்ரல் 18 முதல் 20 வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
இந்த வர்த்தக கண்காட்சியின் [Jaffna International Trade Fair 2010 - JITF] அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்திற்கான தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பல பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லங்கா கண்காட்சி மற்றும் மகாநாடு சேவைகளுக்கான தனியார் நிறுவனமும் சிறிலங்கா தொழில் வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன.
இந்த கண்காட்சியில் கட்டுமானம், உள்வடிவமைப்புக்கள், விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவு மற்றும் மது பானங்கள், பல விதமான உபகரணங்கள், விலையுயர்ந்த அழகு சாதன பொருட்கள், மின் மற்றும் மின் அசை பொருட்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற துணி வகைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள், கண்ணாடி சாமான்கள், கைவினைப் பொருட்கள், உடல்நலம் மற்றும் சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பொருட்கள், எழுத உதவும் பொருட்கள் போன்ற பல தரப்பட்ட வகைகள் கண்காட்சியில் இடம்பெறும்.
அமைதி ஏற்பட்டுள்ளதும் ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப் பட்டுள்ளதுமே கண்காட்சியில் அதிக படியான நிறுவனங்கள் பங்கேற்க காரணமாக அமைத்துள்ளது.
சிறிலங்காவில் நடத்தப்படும் வர்த்தக கண்காட்சிகளில் கல்வி கண்காட்சி முக்கியமான ஒன்றாகும். செப்டம்பர் 21 முதல் 22 வரை யாழ்ப்பாணத்தில் கல்வி கண்காட்சி நடைபெறும். இந்த இரண்டு நாள் கண்காட்சி மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புக்களை வழங்கும்.
இதற்கிடையே போர் நடைபெற்ற காலங்களில் முல்லைத்தீவில் தாங்கள் விட்டுச் சென்ற சொத்துகளை அடையாளம் காண்பதற்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தொழில் வர்த்தக கூட்டமைப்பின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அமைப்புக்கள் வடக்கு பகுதியின் ஆளுநர் ராணுவ தளபதி G. A. சந்திரசிறியிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலாகவே இந்த அழைப்பு அரசிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது மதிப்பு மிக்க சொத்துக்களை நிறுவங்களும் பொதுமக்களும் இப்பகுதிகளில் விட்டுச் சென்றனர். பாதுகாப்பு காரணங்களால் மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொள்ளாமல் வர்த்தக சமூகத்தினருக்கு மட்டும் தங்கள் சொத்துக்களை அடையாளம் காட்ட அரசு அனுமதித்துள்ளது.
ஓமந்தை வழியாக தங்கள் வர்த்தக பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்குமாறு தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்தனர். அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏ-9 நெடுஞ்சாலையை வர்த்தக சமூகத்தினர் பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளும் களையப்பட்டன.

