ஊற்று

போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்

[ புதினப்பலகை ]MSFO223.jpgபோர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்: எல்லைகளற்ற மருத்துவர் குழு

லங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவில்லை.

யுத்த காலத்தில் காயங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்:

IOO223.jpg

நோயாளர்களைப் பரிசோதித்துக்கொண்டிருந்த எல்லைகளற்ற மருத்துவர் குழு [MSF] இனது எலும்புசார் [Orthopedic] சத்திரசிகிச்சை நிபுணரான மருத்துவர் இங்ம ஒஸ்மர் [Dr. Inga Osmers] குறித்த ஒரு நோயாளியின் கட்டில் இருகே சென்று அவரது எக்ஸ்-ரேயினை அவதானித்தார். தசைக்குக் கீழே, எலும்புடன் ஒட்டியதாக ஓர் தகடு இருப்பது அதில் தெளிவாகத் தெரிந்தது.

“எக்ஸ்-ரேயில் எலும்பினது இரண்டு முனைகளும் பொருந்தாமல் பாரிய இடைவெளி இருப்பதையும் வெளித்தோலில் சிறிய ஓட்டை இருப்பதையும் நாம் அவதானித்தோம். குறுகிய வாயுள்ள புரையோடிய இதுபோன்ற புண்ணைப் 'Fistula' என அழைப்போம்” என அந்த சத்திரசிகிச்சை நிபுணர் விளக்கினார்.

இவ்வாறான காயம் இருப்பது, நோயளிக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. இந்தக் காயங்கள் பெரிதாக வெளியில் தெரியாவிட்டாலும் அல்லது வலியினை ஏற்படுத்தாதபோதும் நோயாளியினை அறியாமலே பெரும் பாதிப்பினை அது உள்ளே ஏற்படுத்திவிடும்.”

பொதுவாக போரின் போது ஏற்படும் காயங்களில், ஏதாவது சிறிது துண்டுகள் உடலினுள் தொடர்ந்தும் இருக்குமானால் அல்லது உடைந்த எலும்பின் கீழே தகடு வைத்துப் பொருத்தியிருந்தால் அந்த நோயாளர்களுக்கு அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது வழமையே.

இவ்வாறாக போர்க் காயங்களைக் கொண்டவர்கள் அதிகமானோர் இருப்பதும், அவர்களுக்குப் பொருத்தமான சூழலில் வேகமான சிகிச்சையளிப்பதற்கு சத்திரசிகிச்சைக்கான போதிய வளங்கள் இல்லாதிருப்பதும்; நோயாளிகள் மத்தியில் இதுபோன்ற தொற்றுக்கள் ஏற்படுவதை அதிகரித்துவிடும்.

குறித்த நோயாளியுடன் மருத்துவர் இங்ம ஒஸ்மர் உரையாடுகையில், “என்னால் செய்யக்கூடியது இதுதான். உங்கள் காயத்தினை வெட்டித் திறந்து, உடைந்த எலும்புகள் பொருந்துவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் தகட்டினை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வெளிப்புறப் பொருத்திகளைப் [external fixator] பயன்படுத்தவேண்டும்.

இதற்காகப் பல வாரங்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டிவரும். இரண்டாவது, தெரிவாக எலும்புகளைப் பொருத்துவதற்காக உள்ளே தகடு வைத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் தொற்று குணமாகும் என்ற நம்பிக்கையில் அது குணமாகும் வரை தொடர்ந்தும் பிறபொருள் எதிரிகளைப் [Antibiotics] பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். எதனை நீங்கள் விரும்புகிறீர்கள் என யோசித்து முடிவெடுங்கள். வீட்டுக்கு எப்போது போகவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்.

அந்த நோயாளியிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடந்த வாரங்களில் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தாங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே தங்கியிருந்தால் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாத நிலைமை தோன்றிவிடுமோ என ஆளுகு வினது பராமரிப்பிலுள்ள நோயாளர்கள் தங்களது கவலையினை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆதலினால் மருத்துவ ரீதியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய, நீண்ட நாட்கள் எடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டுமெனில், நேயாளர்களுடன் கலந்துரையாடாமல் மருத்துவப் பணியாளர்கள் இவற்றை மேற்கொள்வதில்லை.

தூய்மைத்தன்மை, காயம் தொற்று நீக்கப்பட்டிருப்பது மற்றும் முறையான பராமரிப்பு என்பனவே வேகமாகக் குணமடைவதை ஊக்குவிக்கும்.

18 வயதுடைய பெண் நோயாளியின் கட்டிலுடன் சாய்ந்து நின்றவாறு, அந்த இளம் பெண்ணின் காயத்தின் நிலையினை விளக்குகிறார் மருத்துவர் இங்ம. “கிருமித் தொற்றுக்குள்ளான தசை மற்றும் எலும்பின் சிறுபகுதி என்பற்றை வெட்டி அகற்றவேண்டும். அத்துடன் காலின் எலும்பினை நேர்த்தியாகப் பொருத்துவதற்கு வெளிப்புறப் பொருத்திகளைப் [external fixator] பயன்படுத்தவேண்டும்.

இதன்போது பரிசோதனைக்காக நாம் திசுக்களை எடுப்போம். இந்தப் பரிசோதனையின் பின்னர்தான் எந்தவகையான தொற்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற பிறபொருள் எதிரியினை [Antibiotics] நாம் தேர்ந்தெடுப்போம்.

கடந்த ஏப்பிரல் 20இல் காயமடைந்த இந்தப் பெண் மூன்று நாட்களின் பின்னர், இயங்கிக்கொண்டிருந்த ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

இங்கு அவரது காலைத் துண்டிப்பதற்கு மருத்துவர்கள் விரும்பியபோதும் அந்தப் பெண் நோயாளி விரும்பவில்லை. ஐந்து வாரங்களின் பின்னர் கால் சரியாகப் பொருந்தாத நிலையில் ஊன்றுகோலுடன் அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

காயம் ஏற்பட்ட இடத்தில் அவருக்குத் தொடர் வலி இருந்துகொண்டேயிருந்தது. நவம்பர் மாதத்தின் முதன்பகுதியில் இந்த வலி அதிகரிக்கவே மனிக் பாம் முகாமிலுள்ள மருத்துவமனைக்கு இந்த நோயாளி சென்றிருக்கிறார். சுகாதார அமைச்சினது மருத்துத்துவர்கள் இவரை 'MSF' மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள்.

காயத்திலிருந்து சீழ் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்தது. இதன் பின்னர் எக்ஸ்-கதிர் எடுத்தபோது, குறிப்பிட்ட பகுதியில் எலும்பும் அதனை அண்டிய தசையும் கிருமித்தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நோயாளர்களை இனங்காணல்:
:
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதுப்புக்குள்ளான தங்களது அவையங்களை எந்தவிதப் பிரச்சினையுமின்றிப் பயன்படுத்தலாம் என்ற உறுதிப்பாடு இல்லாமலேயே அதிகமான நோயாளர்கள் மீள்குடியேற்றத்தின்போது தங்களது ஊர்களுக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

“இதுபோல நூற்றுக்கணக்கான நோயாளர்களுக்கு மீளவும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது” என ஆளுகு இனது சத்திரசிகிச்சை நிபுணர் பற்றிக் ஹரல்ட் தெரிவிக்கிறார். இந்தச் சத்திரசிகிச்சைகள் அனைத்தையும் அவசர அவசரமாக மேற்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை. “எதிர்காலத்தில் அவர்களது சுகவாழ்வினை உறுதிப்படுத்துவதற்கே இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட அவையவங்களின் செயற்றிறனை அதிகரிக்கும்நோக்கில் செய்யப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கு பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம்.

இவ்வாறாக நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பதற்கு முதலில் அந்த நோயாளி விருப்பம் தெரிவிக்கவேண்டும். அமான், ஜோர்தான் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ஈராக்கியர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் நாம் இதுபோன்ற அனுபவத்தினைப் பெற்றிருக்கிறோம்.

போரின் போது ஏற்படும் காயங்களுக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் 'MSF' தனது அனுபவத்தினை அதிகம் பெற்றிருக்கிறது” என அவர் தொடர்ந்தார்.

கை, கால் போன்ற பாதிக்கப்பட்ட அவையங்களின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பும்போது இதுபோன்ற சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை அதிகரிக்கும்.

இச்சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதால் அவையவங்களின் செயற்றிறன் அதிகரிக்கும் என்ற செய்தி, இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகிய பெருமளவான நோயாளர்கள் மருத்துவமனையினை நாடுவதை அதிகரிக்கும்.

புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை