சிறிலங்கா அரச ஊடகங்கள் மீது அமெரிகத் தூதரகம் விசனம்
[ புதினப்பலகை ]
அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளைத் திரித்து வெளியிட்டிருப்பது எரிச்சலையும்- கவலையையும் தருவதாக சிறிலங்காவின் அரச ஊடகங்கள் மீது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சிறிலங்கா அரசுக்கோ அதிபருக்கோ எந்த வழியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை அவ்வாறு அமெரிக்கா முனைவதாகச் சொல்லப்படுவது ஓர் அடிப்படையற்ற குற்றசாட்டு என்று ஏற்கனவே அமெரிக்கா தெளிவுபடுத்தியிருந்தது.
ஆனால் - சிறிலங்கா அரச ஊடகங்கள் அடிப்படையற்றதும், எரிச்சலை ஏற்படுத்துவதுமான அந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அமெரிக்காவின் மறுப்புக் கருத்தை வெளியிடவில்லை.
அமெரிக்காவும் சிறிலங்காவும் நீண்ட கால நண்பர்கள். இந்த இரு தரப்பு உறவுகள் நீண்ட காலத்துக்குத் தொடர வேண்டும்.
சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தவும், மனித உரிமைகளும், குடியியல் உரிமைகளும் மதிக்கப்படும், ஒன்றுபட்ட ஜனநாயக சிறிலங்காவை உருவாக்குவதற்கும் அமெரிக்காவினால் தொடர்ந்தும் உதவ முடியும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

