« January 2010 | Main | March 2010 »

February 26, 2010

கொதிப்பு அடைகின்றது யாழ்ப்பாண தேர்தல் களம்: 27 அணிகள் களத்தில்

[ புதினப்பலகை ] சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்தில் முன்னொரு போதும் இல்லாத வகையில் 15 அரசியல்கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 27 அணிகள் போட்டியில் குதித்துள்ளன.

ஒன்பது ஆசனங்களுக்காக இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 324 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிவடைந்தது.

இதையடுத்து 16 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 32 வேட்புமனுக்களையும் யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.

இதன் போது 4 சுயேட்சைக் குழுக்களினதும் சிறிலங்கா தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து 27 அணிகள் போட்டியில் நிற்பது உறுதிசெய்யப்பட்டது.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
* அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
* ஐ.தே.க.
* தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (சிவநேசதுரை சந்திரகாந்தன்)
* தமிழர் விடுதலைக் கூட்டணி (ஆனந்தசங்கரி)
* ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (மகிந்த ராஜபக்ச)
* சோசலிச சமத்துவக் கட்சி
* அனைவரும் மக்கள் அனைவரும் மன்னர்கள் கட்சி
* ஜனசெத பெரமுன
* ஈரோஸ்
* ஐக்கிய சோசலிசக் கட்சி
* இடது சாரி விடுதலை முன்னணி
* தேசிய ஜனநாயக கூட்டணி
* ஈ.பி.ஆர்.எல்.எவ்-பத்மநாபா அணி
* ஜனநாயக ஐக்கிய முன்னணி

என 15 அரசியல் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்களைக் களமிறங்கியுள்ளன.

இன்றைய தினம் - அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பிரபல பொருளியல் ஆசிரியர் வரதராஜன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கலாநிதி மனோகரன் கெனடி, தமிழ் ஆசிரியர் குழந்தைவேலு உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளை - தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலும், இடதுசாரி விடுதலை முன்னணி சிறிகாந்தாவின் தலைமையிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.-பத்மநாபா அணி சிறிதரன் தலைமையிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

ஈ.பி.டி.பி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் 8 ஈ.பி.டி.பி.யினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மூவரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டத்திலும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.

திருகோணமலை நகரசபைத் தலைவர் கௌரிமுகுந்தன் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

February 23, 2010

போர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்

[ புதினப்பலகை ]MSFO223.jpgபோர்க்காயங்கள் கொண்டோருக்கு மீள்சத்திரசிகிச்சை அவசியம்: எல்லைகளற்ற மருத்துவர் குழு

லங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவில்லை.

யுத்த காலத்தில் காயங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்:

IOO223.jpg

நோயாளர்களைப் பரிசோதித்துக்கொண்டிருந்த எல்லைகளற்ற மருத்துவர் குழு [MSF] இனது எலும்புசார் [Orthopedic] சத்திரசிகிச்சை நிபுணரான மருத்துவர் இங்ம ஒஸ்மர் [Dr. Inga Osmers] குறித்த ஒரு நோயாளியின் கட்டில் இருகே சென்று அவரது எக்ஸ்-ரேயினை அவதானித்தார். தசைக்குக் கீழே, எலும்புடன் ஒட்டியதாக ஓர் தகடு இருப்பது அதில் தெளிவாகத் தெரிந்தது.

“எக்ஸ்-ரேயில் எலும்பினது இரண்டு முனைகளும் பொருந்தாமல் பாரிய இடைவெளி இருப்பதையும் வெளித்தோலில் சிறிய ஓட்டை இருப்பதையும் நாம் அவதானித்தோம். குறுகிய வாயுள்ள புரையோடிய இதுபோன்ற புண்ணைப் 'Fistula' என அழைப்போம்” என அந்த சத்திரசிகிச்சை நிபுணர் விளக்கினார்.

இவ்வாறான காயம் இருப்பது, நோயளிக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. இந்தக் காயங்கள் பெரிதாக வெளியில் தெரியாவிட்டாலும் அல்லது வலியினை ஏற்படுத்தாதபோதும் நோயாளியினை அறியாமலே பெரும் பாதிப்பினை அது உள்ளே ஏற்படுத்திவிடும்.”

பொதுவாக போரின் போது ஏற்படும் காயங்களில், ஏதாவது சிறிது துண்டுகள் உடலினுள் தொடர்ந்தும் இருக்குமானால் அல்லது உடைந்த எலும்பின் கீழே தகடு வைத்துப் பொருத்தியிருந்தால் அந்த நோயாளர்களுக்கு அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது வழமையே.

இவ்வாறாக போர்க் காயங்களைக் கொண்டவர்கள் அதிகமானோர் இருப்பதும், அவர்களுக்குப் பொருத்தமான சூழலில் வேகமான சிகிச்சையளிப்பதற்கு சத்திரசிகிச்சைக்கான போதிய வளங்கள் இல்லாதிருப்பதும்; நோயாளிகள் மத்தியில் இதுபோன்ற தொற்றுக்கள் ஏற்படுவதை அதிகரித்துவிடும்.

குறித்த நோயாளியுடன் மருத்துவர் இங்ம ஒஸ்மர் உரையாடுகையில், “என்னால் செய்யக்கூடியது இதுதான். உங்கள் காயத்தினை வெட்டித் திறந்து, உடைந்த எலும்புகள் பொருந்துவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் தகட்டினை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக வெளிப்புறப் பொருத்திகளைப் [external fixator] பயன்படுத்தவேண்டும்.

இதற்காகப் பல வாரங்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கவேண்டிவரும். இரண்டாவது, தெரிவாக எலும்புகளைப் பொருத்துவதற்காக உள்ளே தகடு வைத்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் தொற்று குணமாகும் என்ற நம்பிக்கையில் அது குணமாகும் வரை தொடர்ந்தும் பிறபொருள் எதிரிகளைப் [Antibiotics] பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். எதனை நீங்கள் விரும்புகிறீர்கள் என யோசித்து முடிவெடுங்கள். வீட்டுக்கு எப்போது போகவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்.

அந்த நோயாளியிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கடந்த வாரங்களில் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தாங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே தங்கியிருந்தால் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாத நிலைமை தோன்றிவிடுமோ என ஆளுகு வினது பராமரிப்பிலுள்ள நோயாளர்கள் தங்களது கவலையினை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆதலினால் மருத்துவ ரீதியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய, நீண்ட நாட்கள் எடுக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டுமெனில், நேயாளர்களுடன் கலந்துரையாடாமல் மருத்துவப் பணியாளர்கள் இவற்றை மேற்கொள்வதில்லை.

தூய்மைத்தன்மை, காயம் தொற்று நீக்கப்பட்டிருப்பது மற்றும் முறையான பராமரிப்பு என்பனவே வேகமாகக் குணமடைவதை ஊக்குவிக்கும்.

18 வயதுடைய பெண் நோயாளியின் கட்டிலுடன் சாய்ந்து நின்றவாறு, அந்த இளம் பெண்ணின் காயத்தின் நிலையினை விளக்குகிறார் மருத்துவர் இங்ம. “கிருமித் தொற்றுக்குள்ளான தசை மற்றும் எலும்பின் சிறுபகுதி என்பற்றை வெட்டி அகற்றவேண்டும். அத்துடன் காலின் எலும்பினை நேர்த்தியாகப் பொருத்துவதற்கு வெளிப்புறப் பொருத்திகளைப் [external fixator] பயன்படுத்தவேண்டும்.

இதன்போது பரிசோதனைக்காக நாம் திசுக்களை எடுப்போம். இந்தப் பரிசோதனையின் பின்னர்தான் எந்தவகையான தொற்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற பிறபொருள் எதிரியினை [Antibiotics] நாம் தேர்ந்தெடுப்போம்.

கடந்த ஏப்பிரல் 20இல் காயமடைந்த இந்தப் பெண் மூன்று நாட்களின் பின்னர், இயங்கிக்கொண்டிருந்த ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

இங்கு அவரது காலைத் துண்டிப்பதற்கு மருத்துவர்கள் விரும்பியபோதும் அந்தப் பெண் நோயாளி விரும்பவில்லை. ஐந்து வாரங்களின் பின்னர் கால் சரியாகப் பொருந்தாத நிலையில் ஊன்றுகோலுடன் அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

காயம் ஏற்பட்ட இடத்தில் அவருக்குத் தொடர் வலி இருந்துகொண்டேயிருந்தது. நவம்பர் மாதத்தின் முதன்பகுதியில் இந்த வலி அதிகரிக்கவே மனிக் பாம் முகாமிலுள்ள மருத்துவமனைக்கு இந்த நோயாளி சென்றிருக்கிறார். சுகாதார அமைச்சினது மருத்துத்துவர்கள் இவரை 'MSF' மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்கள்.

காயத்திலிருந்து சீழ் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்தது. இதன் பின்னர் எக்ஸ்-கதிர் எடுத்தபோது, குறிப்பிட்ட பகுதியில் எலும்பும் அதனை அண்டிய தசையும் கிருமித்தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டது.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நோயாளர்களை இனங்காணல்:
:
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதுப்புக்குள்ளான தங்களது அவையங்களை எந்தவிதப் பிரச்சினையுமின்றிப் பயன்படுத்தலாம் என்ற உறுதிப்பாடு இல்லாமலேயே அதிகமான நோயாளர்கள் மீள்குடியேற்றத்தின்போது தங்களது ஊர்களுக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

“இதுபோல நூற்றுக்கணக்கான நோயாளர்களுக்கு மீளவும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது” என ஆளுகு இனது சத்திரசிகிச்சை நிபுணர் பற்றிக் ஹரல்ட் தெரிவிக்கிறார். இந்தச் சத்திரசிகிச்சைகள் அனைத்தையும் அவசர அவசரமாக மேற்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை. “எதிர்காலத்தில் அவர்களது சுகவாழ்வினை உறுதிப்படுத்துவதற்கே இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

எவ்வாறிருப்பினும், பாதிக்கப்பட்ட அவையவங்களின் செயற்றிறனை அதிகரிக்கும்நோக்கில் செய்யப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கு பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம்.

இவ்வாறாக நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பதற்கு முதலில் அந்த நோயாளி விருப்பம் தெரிவிக்கவேண்டும். அமான், ஜோர்தான் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ஈராக்கியர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் நாம் இதுபோன்ற அனுபவத்தினைப் பெற்றிருக்கிறோம்.

போரின் போது ஏற்படும் காயங்களுக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதில் 'MSF' தனது அனுபவத்தினை அதிகம் பெற்றிருக்கிறது” என அவர் தொடர்ந்தார்.

கை, கால் போன்ற பாதிக்கப்பட்ட அவையங்களின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பும்போது இதுபோன்ற சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை அதிகரிக்கும்.

இச்சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதால் அவையவங்களின் செயற்றிறன் அதிகரிக்கும் என்ற செய்தி, இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகிய பெருமளவான நோயாளர்கள் மருத்துவமனையினை நாடுவதை அதிகரிக்கும்.

புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி. வண்ணமதி.

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

February 22, 2010

உண்மையிலேயே உடைகின்றதா தமிழரின் தேசியத் தலைமை?

[புதினப்பலகை] ப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியான ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இவர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இவர்களுக்கு ஆசன ஒதுக்கீட்டை வழங்க கூட்டமைப்பின் தலைமை மறுத்துவிட்டதை அடுத்தே ஆளும் கட்சியில் இணைந்து தோ்தலில் போட்டியிட இவர்கள் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி, வன்னி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் எஸ்.கனகரத்னம் ஆகியோரே ஆளும் கட்சியில் இணைந்து பொதுத் தோ்தலில் போட்டியிடவுள்ளனர்.

தங்கேஸ்வரி மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிஷோர் சிவநாதன் வன்னித் தோ்தல் மாவட்டத்திலும், கனகரட்ணம் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்திலும் போட்டியிடவிருக்கின்றார்கள்.

இதே வேளையில் - கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா, பத்மினி சிதம்பரநாதன் மற்றும் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக தோ்தல் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அரசரப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் இன்று அல்லது நாளை இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதிதான் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் அடிப்படைகளாக இருந்த - தமிழர் தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர் தாயகம் ஆகிய கொள்கைகளில் இருந்து கூட்டமைப்பு தடம் மாறி விட்டதாகக் குறி்ப்பிட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா ஆகியோர் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். புதிய கட்சியின் தலைவராக சிறிகாந்தா செயற்படுவார் எனவும், செயலாளராக சிவாஜிலிங்கம் இயங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில உள்ள ஐந்து மாவட்டங்களிலும் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. ஏனைய 17 மாவட்டங்ளிலும் இடதுசாரி விடுதலை முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சிவாஜிலிங்கம் -

“தமிழ் மக்களைக் கொலை செய்ய துணை போன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியாவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியது. இது தொடர்பான எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தப் போரை ஆரம்பித்தது இந்தியா தான் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே கூறியிருந்தார்.

மாவிலாறு பிரச்சினையில் போர் தொடங்கிய தருணத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர்களால் சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியப் பிரதமரை சந்தித்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கவில்லை.

2007ஆம் ஆண்டில் சுமார் 15 வரையான வெளிநாடுகளுக்குச் சென்று போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் இந்தியாவுக்கு மட்டும் செல்லாதது ஏன்?

இந்திய பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டது. இவர்களும் அதில் விரும்பியே கலந்து கொண்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளை இங்கு கருத்து வெளியிட்ட சிறிகாந்தா -

“சோனியா அரசுக்கு விசுவாசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவர்கள் இருக்கக் கூடாது என்பதில் இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது” என்று குறிப்பட்டார்.

February 20, 2010

'பௌத்த பிக்குகளுக்கு சிறிலங்கா அரசு மிரட்டல்'

[புதினப்பலகை]சிறிலங்காவில் இருந்து தேரவாத பெளத்தத்தை அழித்தொழிக்க முயல்வதன் மூலமாக நாட்டின் அரசியலமைப்பை மீறி அரசு செயற்படுகின்றது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

நாட்டின் நான்கு முக்கிய பெளத்த மத பீடங்களில் முக்கிய பீடம் ஒன்றில் இருந்து பிரிந்து சென்று விடப் போவதாக பிக்குகள் குழு ஒன்று மகாநாயக்க தேர்களை மிரட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மல்வத்த பீடதிபதியான அதி வண. திப்பெட்டுவேவ சிறி சுமங்கல தேரருக்கு எதிராகவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ரணில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகாநாயக்க தேரர்களின் கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற முன்னணிப் பிக்குகள் சிலர், இல்லையேல் தாங்கள் பிரிந்து சென்று விடுவர் என்றும் எச்சரித்தனர்.

நாட்டின் அரசியலமைப்பின் மூலம் பெளத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசே இந்த மிரட்டல்களின் பின்னணியில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் கூறுகிறார்.

“மல்வத்த பீடத்திற்குச் சொந்தமான பெளத்த ஆலயங்களைப் பிரித்தெடுத்து மற்றொரு பீடத்துடன் சேர்த்துவிடப் போகிறார்கள் என்று மல்வத்த பீடத்தைச் சேர்ந்த முன்னணி பிக்குகள் சிலர் எச்சரித்துள்ளனர். அவர்களின் இந்த எச்சரிக்கை அரசின் தூண்டுதலின் கீழேயே செய்யப்பட்டது. மல்வத்தை பீடத்தை பிரித்து மற்றொரு பீடத்தை உருவாக்குவதென்பது அரசியலமைப்புக்கு முரணானது” என்றார் ரணில்.

பல்கலைக்கழக வேந்தர் பதவி உள்ளிட்ட எந்வொரு அரச பதவியிலும் இருப்பதற்கு குறிப்பிட்ட அந்தப் பிக்குகளுக்கு உரிமை இல்லை என்று ரணில் தெரிவித்தார்.

“சிறிலங்காவில் பெளத்த மதத்தை அழிக்கும் பாதையில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பிக்குகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கண்டியுடன் [மல்வத்த பீடம்] இணைந்து செயற்பட்டால் குண்டு போட்டு அழிக்கப்படுவார்கள் என்று பிக்குகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் கண்டிக்கிறோம்” என்கிறார் ரணில்.

நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய பிக்குமார்களை யார் மிரட்டினார்கள் என்பதை அறியும் உரிமை, பெளத்த மத பக்தர்களுக்கும் நாட்டின் குடிமக்களுக்கும் இருக்கிறது என்றும் அவர் கூறுகின்றார்.

இருந்தாலும், பெளத்த மதபீடங்களின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

பிக்குகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்துக் கவனம் செலுத்திய பின்னர் பெளத்த பீடாதிபதிகளே கூட்டத்தை ஒத்தி வைத்தார்கள் எனத் தெரிவித்தார் சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க.

எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் கூடிப் பேசி, அவரை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைப்பதற்காகவே மகாநாயக்கர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புபட்ட செய்தி:

அதிகார வேட்கையில் மிரட்டல்களுக்குள்ளாகும் பௌத்த பிக்குகள்

நவம்பர் 2009 இல் பர்மாவின் அதிபதி ஜெனரல் தான் ஷ்வே கொழும்பு வந்த போது இடம் பெற்ற ஆர்ப்பாட்டம். ஐக்கிய சோசலிச முன்னணி தலவரும், தொழிற்சங்க வாதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சிறிதுங்க ஜயசூரிய தலமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் - மகிந்த ராஜபக்ச மற்றும் பர்மா அதிபர் தான் ஷ்வே ஆகியோரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பல பௌத்த பிக்குகளை படு கொலை செய்த பர்மா அதிபருக்கு எதிராக இடம் பெற்ற இந்த நிகழ்வில் சிங்கள பௌத்த மதகுருமார் பங்கேற்பதனை தடுக்கவும் சிறிலங்கா அதிபர் மிரட்டல்கள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

February 19, 2010

சிறிலங்கா அரச ஊடகங்கள் மீது அமெரிகத் தூதரகம் விசனம்

[ புதினப்பலகை ]USESLO219.jpgஅமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளைத் திரித்து வெளியிட்டிருப்பது எரிச்சலையும்- கவலையையும் தருவதாக சிறிலங்காவின் அரச ஊடகங்கள் மீது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சிறிலங்கா அரசுக்கோ அதிபருக்கோ எந்த வழியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை அவ்வாறு அமெரிக்கா முனைவதாகச் சொல்லப்படுவது ஓர் அடிப்படையற்ற குற்றசாட்டு என்று ஏற்கனவே அமெரிக்கா தெளிவுபடுத்தியிருந்தது.

ஆனால் - சிறிலங்கா அரச ஊடகங்கள் அடிப்படையற்றதும், எரிச்சலை ஏற்படுத்துவதுமான அந்தக் குற்றச்சாட்டு தொடர்பான அமெரிக்காவின் மறுப்புக் கருத்தை வெளியிடவில்லை.

அமெரிக்காவும் சிறிலங்காவும் நீண்ட கால நண்பர்கள். இந்த இரு தரப்பு உறவுகள் நீண்ட காலத்துக்குத் தொடர வேண்டும்.

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தவும், மனித உரிமைகளும், குடியியல் உரிமைகளும் மதிக்கப்படும், ஒன்றுபட்ட ஜனநாயக சிறிலங்காவை உருவாக்குவதற்கும் அமெரிக்காவினால் தொடர்ந்தும் உதவ முடியும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

February 13, 2010

படக் கோவை: அன்பு பெருகப் பெருகத்தான், அமைதி அடையும் உலகமே

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஞாபகார்த்த கண்காட்சி, பெப்ரவரி 6ஆம் திததி கொழும்பு, தேசிய நுண் கலை மன்றத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மூத்த புதல்வரும், குடியுரிமை செயற்பாட்டாளருமாகிய மூன்றாம் மார்ட்டின் லூதர் கிங்கினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

O2141.JPG

நெஞ்சை நெகிழ்க்கும் ஆத்ம இராகம்

அன்பு

பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)

[ மேலும் பார்க்க, படிக்க, கேட்க ~ இங்கே அழுத்தவும் ]

February 10, 2010

காணொலி: சரத் பொன்சேகா கைது எதிர்ப்பு அறவழிப் போராட்டம் மீது தாக்குதல்

ரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலும், சிறிலங்காவின் வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் காவல் துறையினரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு-விகல்ப பொதுசன ஊடகவியல் தொடர்பு நிறுவனம் வழங்கும் காணொலி ~ சிங்களம், ஆங்கில மொழிகளில்

காவல் துறையினரின் பாதுகாப்புடனேயே ஆளும் கட்சியினர் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

February 08, 2010

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

[ புதினப்பலகை ]OSF28.jpgசிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -

“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.

இதனால் சமூகத்துக்குள் ஏற்படக் கூடிய பிளவுகளைச் சமாளிக்கின்ற பேராற்றல் சிறிலங்கா அரசுக்குத் தேவை. எந்த நடவடிக்கை எடுக்கும் போதும் மிகக் கவனத்துடன் நடக்கா விட்டால், அது சமூகத்துக்குள் காயங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.

“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலளர் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேரதல் சட்டங்கள் தனியே தேர்தல் காலத்துக்கு மட்டுமே உரியவையல்ல. அதற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே - சர்வதேச மன்னிப்புச் சபை, “இது தேர்தலுக்குப் பிந்திய அடக்குமறை” என்று கூறியிருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு எதிரணியைச் சிதைவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தேர்தலிலும் வெற்றியைப் பெற்ற பிறகு மகிந்த ராஜபக்ச மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணுகின்ற நிலைக்கு நாட்டை வழிநடத்த வேண்டும்.

ஆனால் மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ளும் தன்மை அங்கு மிகமிகக் குறைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் சரத் பொன்சேகா சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பதாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

February 07, 2010

இறுதி போர் நடந்த இடங்களை பார்வையிட்ட யாழ். ஆயர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

[ புதினப்பலகை ]RTTO27.jpgன்னியில் போர் நடந்து முடிந்த களத்தை முதன் முறையாக யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் பார்வையிட்டார்.

அது பற்றி கருத்து தெரிவிக்கையில் - மக்கள் தங்களது இழந்த போன வாழ்க்கையையும், வழிபாட்டிடங்களையும அந்த இடங்களில் மீண்டும் நிறுவுவது "தாங்கிக் கொள்ள முடியாத சுமை" என குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் வன்னி யுத்த களத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் நபர் ஆயரே.

பொது மக்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எவருக்கும் இதுவரை சிறிலங்கா அரசு அந்த யுத்த களப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற ஆயர் தேவாலய திருவிழாக்களின் போது ஆடம்பரமாய் செலவழிப்பதை நிறுத்திவிட்டு உடமைகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

விளம்பரப்படுத்தாமல் ஐன.29இல் போர் நடந்த இடங்களைச் சென்று பார்த்த அதிர்ச்சி இன்னமும் மாறா நிலையில், கிழக்கு கடற்கரை கத்தோலிக்க மீன்பிடிக் கிராமமான மாத்தளனில் தான் கண்டவற்றை விபரித்தார்.

எல்லா இடங்களிலும் அழிவு தான் தென்படுவதாகவும் அது தமது மக்களின் எதிர் காலத்தை அச்சுறுத்தியபடி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதிக் கட்டப் போரின் போது மாத்தளன் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயம் மற்றும் அங்கவீனம் அடைந்தனர்; மேலும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து ஓட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில், 17 பங்குக்குரிய 110 தேவாலயங்களும் 15 கத்தோலிக்க மதத் தொடர்பகங்களும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல, கிராமங்கள், வயல் நிலங்களும் கூட காடு பற்றிய நிலையில் உள்ளன.

'மக்கள் தங்கள் வாழ்வின் சேமிப்புகள் அனைத்தையும் இழந்து விட்டதால் மீண்டும் புனரமைத்தல் என்பது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாகி விட்டது' என ஆயர் மேலும் தெரிவித்தார்.

கடைசிப் போர் நடந்த இடங்களில் -

* வழிபாட்டிட கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
* வழிபாட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
* நெல் விளையும் களங்கள் புதர்களாகி விட்டன.
* ஆடு, மாடு முதலிய கால்நடைகள் அழிந்துவிட்டன.
* வீடுகள் அனைத்தும் கற்குவியல்களாக காட்சியளிக்கின்றன.
* எரிக்கப்பட்ட சிற்றுந்துகள், பேருந்துகள், மற்றும் உந்துருளிகளின் எச்சங்கள் குவிந்து காணப்படுகின்றன.

உணர்வுகளால் உந்தப்பட்ட ஆயர், மீண்டும் இந்த மக்களின் வாழ்க்கையை புனரமைக்க முடியுமா என ஆதங்கப்படுகின்றார்.

சிறிலங்காப் படையினரால், விவசாய கிராமங்களான மாங்குளம் , ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் ஆயர் கூட்டிச்செல்லப்பட்டார்.

சமய வழிபாட்டுத் துறை துணை அமைச்சரான பண்டு பண்டாரநயாக - அரசு சமீபத்தில் அறிவித்தபடி, மக்கள் அவரவர் இடத்திலேயே மீண்டும் குடியமர்த்தப்பட்டு சமய வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என்றும் அதற்கான புணரமைப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

யாழ்ப்பாண மறைமாவட்டம் தவிந்த - மன்னார் மறைமாவட்டத்திலும் 148 தேவாலயங்கள் கைவிடப்பட்டுள்ளது. அத்தோடு - போரைத் தவிர ஆழிப் பேரலை போன்றவற்றால் சேதமடைந்த தேவாலயங்கள் இன்னும் புதுப்பிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.