« December 2009 | Main | February 2010 »

January 31, 2010

காணொலி: சத்தியவான், சாவித்திரி தெருக் கூத்து

வராத்திரி திரைப்படத்தில் இருந்து:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி குழுவினர்

January 27, 2010

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் ஆறாவது அதிபர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

[ புதினப்பலகை ]சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதாக அதிககாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை, 27 சனவரி 2010) மாலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 6,015,934 வாக்குகளும், சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதன்படி 57.88 வீத வாக்குளைப் பெற்ற மகிந்த ராஜபக்ச சுலபமான முறையில், வெற்றி பெற்றுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு 40.15 வீத வாக்குகளே கிடைத்தன.

நுவரெலிய, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சரத் பொன்சேகா அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய மாவட்டங்களில், மகிந்த ராஜபக்ஸவுக்கே பெருவாரியான வாக்குகள் கிடைத்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 90,394 வாக்குகள் வித்தியாசத்திலும், அம்பாறை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 6193 வாக்குகள் வித்தியாசத்திலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தார்.

அதேவேளை மகிந்த ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 284,210 வாக்குகள் வித்தியாசத்திலும், குறைந்தபட்சமாக பதுளையில் 38,744 வாக்குகள் வித்தியாசத்திலும் சரத் பொன்சேகாவைத் தோற்கடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களில் எவருமே 1 சதவீத வாக்குளைக் கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாமிடத்தைப் பெற்ற சிவாஜிலிங்கத்துக்கு 9662 வாக்குகளே கிடைத்தன.

ஏனைய இடதுசாரி வேட்பாளர்களான சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, விஜே டயஸ் போன்றோர் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்றனர்.

January 13, 2010

படத் திரட்டு: யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை

[ புதினப்பலகை ]2010 ஆம் ஆண்டின் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திலும் சூடுபிடித்துள்ளது.

OY2.jpg

சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 23ஆம் திகதி நல்லூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

OY1.jpg

மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன், துரைரட்ணசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

OY3.jpg

"இரத்தக் கறை": யாழ்ப்பாண மக்கள் அளித்த வாக்கு

OY4.jpg

தேர்தல் பரப்புரை: மலசலகூடச் சுவரில்...

OY5.jpg

தலைவனும் தொண்டனும்: நீதியைப் பார்க்க மறுத்தவர்கள்

OY6.jpg

தேர்தல் வாக்குறுதிகள்: போரினால் உடைக்கப்பட்ட ஒரு வீட்டின் சுவரில்...

OY7.jpg

தமிழர்களுக்கு அன்புக்கரம்: உடைக்கப்பட்டுவிட்ட ஒரு மாவீரர் நினைவிடத்தில்...

OY8.jpg

இனங்களிடையில் நல்லிணக்கம்: போரினால் உடைக்கப்பட்டுவிட்ட ஒரு கோவில் வளாகத்தில்...

இதே வேளையில், அரச அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து யாழ்ப்பாண ஊடகங்களுக்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பி வைத்துள்ள விளம்பரத்தில், இதுநாள் வரையும் "பாசிசப் புலிகள்" என்று அழைத்து வந்த அவர், இப்போது - முதன் முதலாக 'போராளிகள்' என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

அரச அதிபர் தேர்தலில் அவர் மகிந்த சார்பாக வெளியிட்டுள்ள வாக்குறுதிகளில் "போராளிகள் விடுதலை" என்ற வாக்குறுதியையும் வழங்கியுள்ளார்.

மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு இன்னமும் மங்கிப் போய் விடவில்லை என்பதாலேயே இவ்வாறு அவர் திடீர் குத்துக் கரணம் அடித்துள்ளார் என அரசியில் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளையில் - யாழ்ப்பாணப் பகுதியில் ராஜக்பக்சவின் பரப்புரைச் சுவரொட்டிகள் பலவற்றில், அவரதும் அவருக்கு ஆதரவளிக்கும் டக்ளஸ் தேவானந்தாவினதும் முகங்கள் இனந்தெரியாத ஆட்களினால் சிதைவுறுத்தப்பட்டுள்ளன. [ புதினப்பலகை ]

* படங்கள்: நன்றி - Indi.S, CaFFE

காணொலி: ஏர் பிடிக்கும் உழவனுக்கு ஏற்றம் தரும் தமிழர் திருநாள்

அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் !

January 12, 2010

இடம் பெயர்ந்த தமிழர் வாக்களிப்பதில் இடையூறுகள்

நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு

[ புதினப்பலகை ] ல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் புதிதாகச் சிறிலங்காவுக்குத் திரும்பியவர்களும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

tttc11o.jpg

'மாணிக்கம் பண்ணை" (Menik Farm) வவுனியா தடுப்பு முகாமில் கையடக்க தொலைபேசியில் உரையாடும் பெரியவர்-டிசம்பர் 23-ஏ.பி நிறுவன படம்

இரின் [Integrated Regional Information Networks - IRIN] எனப்படுவது - ஐ. நா.வின் மனிதார்ந்த விவகார ஒருங்கிணைப்புச் செயலகத்தின் [UN Office for Coordination of Humanitarian Affairs] ஒர் ஆய்வு நிறுவனமாகும்.

இரின் நிறுவன ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் இடம்பெற்ற போரை அடுத்து இடம் பெயர்ந்த 280,000 தமிழரில் சுமார் 170,000 பேர் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கிருப்போரும், சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் நீடிக்கிறது.

IRIN11B.jpg

கட்சி ஆதரவாளர்-ஐ. நா படம்

இது தொடர்பாக இரின் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வெளியிட்ட நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பின் [People's Action for Free and Fair Elections - PAFFREL] பிரதம நிறைவேற்று அதிகாரி றோகண ஹெற்றியாராச்சி - " இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த பலர் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை. வாக்காளர் அட்டைகளுக்காக சுமார் 35 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்." என்று கூறியுள்ளார்.

அதே வேளை, Campaign for Free and Fair Elections - CaFFE எனப்படும் மற்றொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று அதிகாரி யான கீர்த்தி தென்னக்கோன் "யார் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சிலர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர், அனால், அவர்கள் அண்மையில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அவர்களின் வாக்காளர் அட்டைகள் முகாம்களுக்கே அனுப்ப்பட்டுள்ளன. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களும் அங்கேயே அமைக்கப்படவுள்ளன. இது முக்கியமான ஒரு பிரச்சனையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

CaFFE அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களச் சந்தித்துத் தரவுகளைச் சேகரித்த போது,அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கனகராயன்குளத்தில குடியமர்த்தப்பட்ட 56 குடும்பங்களைச் சந்தித்த போது அவர்களில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்களே வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

வன்னியின் ஏனைய இடங்களிலும் இது போலவே சிறிய எண்ணிக்கையானோரே பதிவுசெய்துள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வேண்டுமானால் வாக்களிப்பு நிலையங்களுக்கும் அங்கிருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார் தென்னக்கோன்.

கடந்த 11ம் திகதி "மெனிக் பாம்" [மாணிக்கம் பண்ணை] முகாமுக்குச் சென்றிருந்த போது அங்கிருப்பவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலே உள்ளது.

தாம் பல படிவங்களை நிரப்பிக் கொடுதத்தாகவும் ஆனால் அதற்குப் பிறகு எந்தத் தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறினர்.

அங்கு டிசம்பர் மாதக் கடைசியில் 108,000 பேர் இருப்பதாக அரசாங்கத் தகவல் கூறுகிறது.

இரு தசாப்தப் போரினால் வன்னியில் வாக்காளர்கள் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

1989-இற்குப் பிறகு இங்க சரியான முறையில் வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்லும் போது வாக்களாராகப் பதிவு செய்யவில்லை என்று இலகுவாக மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 21மில்லியன் வாக்காளர்களில் 14 வீதமான தமிழர்கள் வாக்களிப்பில ஆர்வம் காட்டாதிருப்பது வாக்கு மோசடிகள் இடம்பெற வழிவகுக்கும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் PAFFREL அமைப்பின் அதிகாரி ஹெற்றியாராச்சி.

IRIN111A.jpg

பிரசார ஊர்தி-ஐ. நா படம்

அங்கு இன்னமும் பதற்றமான சூழலே உள்ளது என்று கூறும் PAFFREL அமைப்பு அந்தப் பகுதிகளில் அதிக அளவிலான உள்நாட்டு வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்தல் கண்காணிப்பிற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது.

பிரதான வேட்பாளர்களான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் வடக்கிலுள்ள தமிழர்களின் வாக்குகளிலேயே குறிவைத்துள்ளனர்.

அது தேர்தல் முடிவுகளில் முக்கியமானதாக அமையும் என்று கருதப்படுகிறது.

போர் முடிந்த பின்னர் நடைபெறும் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

"நெருக்கமான போட்டி எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழர்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால் - அவர்கள் சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ராஜபக்ச என இரண்டுபட்டு நிற்கிறார்கள் என்று கூறுகிறார் தேசிய சமாதானப் பேரவையின் [National Peace Council] பணிப்பாளரான ஜெகான் பெரேரா.

இரு பிரதான வேட்பாளர்களுமே ஆதரவு கோரிக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி - மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துள்ள சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதே வேளை - யாழப்பாணத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச - போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கை மீளக் கட்டியெழுப்பி மேம்படுத்தப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என இரின் நிறுவனத்தின் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

January 05, 2010

திரை இசை: சம்போ சிவ சம்போ

ம்போ சிவ சம்போ, சிவ சம்போ, சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ

மனித உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறு நாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன செய்ய நீ எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று
காலங்கள் போனாலோ தின்னாநே என்பார்கள்
மது உண்டு , பெண் உண்டு , சோறு உண்டு, சுகம் உண்டு,
மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு

ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ

லாராலலாரிற லாராலலாரிற லாராலலாரிற சிவ சம்போ
லாராலலாரிற லாராலலாரிற லாராலலாரிற சிவ சம்போ

திரைப்படம்: நினத்தாலே இனிக்கும்
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடி இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

January 01, 2010

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்

[புதினப்பார்வை, ஜனவரி 1, 2010] மிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது.

இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009.

VP0101.jpg

தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - பெரும் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.

குறிப்பாக - தமிழீழ மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் முடிவையும் - இன்னொரு காலத்தி்ன் தொடக்கத்தையும் அறிவித்துச் சென்றுள்ளது 2009.

பிரபாகரனியத்தின் முடிவை அறிவித்த ஆண்டென்றும் இதனைக் குறிக்கலாம்.

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டிற்கு பின்னான அரசியலில் ஈழத் தமிழர் மீதான ஆளுமை கொண்டவர்களாக சா.ஜே.வே.செல்வநாயகமும், வே.பிரபாகரனும் விளங்கினர்.

முதலாமவர் அமைதி வழியாகவும், இரண்டாமவர் ஆயுத வழியாகவும் தமிழ் பேசும் மக்கள் மீது அரசியல் ஆளுமை கொண்டு இயங்கினர்.

"தேசத் தந்தை" என சிறப்பிக்கப்பட்ட முதலாமவர் - "தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்ற வாக்குமூலத்துடன் அமைதி வழிப் போராட்டத்திற்கு முடிவுரையை எழுதிச் சென்றார்.

"தேசியத் தலைவர்" என சிறப்பிக்கப்பட்ட இரண்டாமவர் - மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாய்க்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமலேயே மறைந்து போனார்.

அவரின் ஆயுத ஆளுமையால் கட்டியெழுப்பப்பட்ட பிரபாகரனியமும் - உலகத் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கான ஒருவகைப் 'படிப்பினை' ஆகி - வரலாறாக ஆகிப்போனது.

மொத்தத்தில் - அவல வாழ்வும், அரசியல் வெற்றிடமும், சிந்தனைச் சிதைவும், ஆளுமைக் குலைவுமே மிகுதியாய் இருக்க - தலைமைத்துவமற்ற தமிழ்ச் சமூகம் ஒன்றையே இலங்கைத் தீவில் '2009' விட்டுச் சென்றுள்ளது.

உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் வடுவாகி - வரலாறு ஆகிச் சென்றுவிட்டது 2009.

அது எம்மைக் கடந்து சென்ற போது - எதிர்வரும் 2010 இல் எம் முன்னால் பல்வேறு சவால்களை மலைகளென முன்னிறுத்திவிட்டுள்ளது.

2009 வரையான நீண்ட பட்டறிவில் இருந்து எதை நாம் பெற்றுக்கொண்டோம் என்பதே இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான முன்நிபந்தனையாகும்.

கடந்த மே மாதத்தில் இருந்து இன்றுவரையான ஏழுமாத காலத்திலான எமது சமூக அசைவியக்கமானது எதிர்மறையானதாகவே அமைந்துள்ளது.

முன்நோக்கி நகர வேண்டிய சக்கரத்தைப் பின்நோக்கி நகர்த்தி தொடக்க புள்ளிக்கு மீளக் கொணர்வதையே ஒரு சாதனை போல நாம் கொண்டாடி வருகிறோம்.

'வட்டுக்கோட்டைப் பிரகடனம்', தாயகம் - தேசியம் - தன்னாட்சி, "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்", வலுச் சமநிலை - 'நடைமுறை அரசு' -- என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும்.

அதுவே 2010-இன் சவால்களை எதிர்கொள்ளும் வாயில்களையும் திறக்க வல்லது.

அதற்கான திறவுகோல்கள் - வெளிப்படைத்தன்மை, சூழ்ச்சித்திறன், அனைத்துலக இயங்குமுறை பற்றிய புரிதல், கூட்டுவேலைத்திட்டம் என்பவையாகும்.

இதனை முன்னெடுக்க அறிவும் - தெளிவும் - துணிவும் முக்கியமானவை.

புதினப்பலகை இதனையே முன்னெடுக்கும்.