ஊற்று

ஓ. எஸ். அருண்: ஆசை முகம் மறந்து போச்சே

காகவி சுப்பிரமணிய பாரதியாரின் "கண்ணன் என் காதலன்:"

வழங்குபவர்: ஓ. எஸ். அருண்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்லை;
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை