« November 2009 | Main | January 2010 »

December 30, 2009

'அலைகள் வெள்ளி ஆடை போல'

மார்கழி கீதம்: கவிஞர் வாலி வடித்த, 'மாலையில் யாரோ மனதோடு பேச:'

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

December 28, 2009

'சிறிலங்கா ஆட்சியாளர்களை பாதுகாக்க இந்தியா முற்படுகின்றது'- கவிஞர் புலமைப்பித்தன்

[ புதினப்பலகை]சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு கடந்த 23ஆம் திகதி மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய புத்தகமே ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் டிசம்பர் 23 ஆம் திகதி, புதன் மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

பின்னர் அங்கு - சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அந்த உரைகளின் தொகுப்பு கீழே:

TNO1.JPG

அக்னி சுப்பிரமணியன்:

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் இதுவரை மக்கள் மத்தியில் சரிவரக் கொண்டு செல்லப்படாதது பெரிய தவறு.

இந்தப் புத்தகத்தில் 1956ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற 160 படுகொலைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு ஐந்து படுகொலைகளைப் பற்றிப் படித்தாலேயே ஈழத்தில் தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அந்த அளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், தன் வளத்தையும் 'அரசு' என்கிற அதிகாரத்தையும் பயன்படுத்திப் பிரபாகரனைப் பயங்கரவாதி என்று சொல்கிறது சிங்கள அரசு.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் பேராட்டத்தைப் "பயங்கரவாத"மாக அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டு சென்ற சிறிலங்கா அரசு, அதனைத் தனக்குச் சாதகமாக்கி வன்னியில் இருந்த மூன்று லட்சம் மக்கள் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

மனித வரலாற்றில் எந்த ஒரு இனமும் ஈழத் தமிழ் இனம் போன்று அவலங்களைச் சந்தித்ததில்லை.

மனித உரிமை மீறல்கள் என்றால் அவை சிறிலங்காவில் நடந்தவைகள் தான்.

கிடைசி மூன்று நாள் சண்டையின் போது - ஒரு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பிரதேசத்தினுள் வைத்து 3 லட்சம் மக்கள் மீது சரமாரியான குண்டுத் தாக்குதலை சிறிலங்கா அரசு நடத்தியிருக்கிறது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த இந்தப் படுகொலைகள் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை; 2008ஆம் ஆண்டு வரை இடம்பெற்றவை மட்டுமே பதியப்பட்டுள்ளன.

ஈழத்தில் நடந்த இந்த அத்து மீறல்களை, படுகொலைகளை வடக்கு – கிழக்கு மனித உரிமைகள் செயலகம் ஆவணப்படுத்தி இருந்தது.

இன்றைய நிலையில் அவர்கள் சிறிலங்காவில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.

செயலகத்தின் முக்கிய உறுப்பினர்களின் அனுமதி பெற்று ‘மனிதம்’ – மனித உரிமைகள் அமைப்பு இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறது; இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்.

இதுவரை இப்படியொரு ஆவணத்தைத் தமிழக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்காதது மிகப் பெரும் தவறு; இந்தப் புத்தகம் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். தமிழர்களிடம் மட்டுமல்ல; உலகின் எல்லாச் சமூகத்தினரிடமும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும்.

தற்போது ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படுகிறது. மொழி பெயர்ப்பாக அல்லாமல் இரு மொழிகளிலும் தனித் தனியே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிப்பது மட்டுமன்றி அதிலுள்ள செய்தியை ஒவ்வொரு தமிழனிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

TNO2.JPG

சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம் (பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர்):

கொசோவா, செச்சினியா போன்ற நாடுகளில் இனப் படுகொலைகள் நடந்தால் அதற்கு உலகம் முழுவதும் உடனடியாகக் குரல் கொடுக்கும்.

ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கும்.

மேற்கு நாடு ஒன்றில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றால் அது உடனடியாக அனைத்துலகத்தின் முன்பாகப் பொதுமைப்படுத்தப்படும்; மேற்குலக ஊடகங்கள் அவற்றைப் பெரிதாகப் பேசும்.

ஆனால், நமது விடயத்தில் நமது ஊடகங்கள் அவற்றைச் செய்வதில்லை; அப்படிச் செய்யும் திறமை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

ஐரோப்பிய நாடொன்றில் மிகச் சிறிய விபத்தாக இருந்தாலும் அது பெரிதாக்கப்படும். ஆனால், கீழை நாடுகளில் நடக்கும் பெரும் குற்றங்கள் கூடக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

கீழைத் தேசங்களில் நடக்கும் விடயங்கள் மேற்குலகின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால் தவிர அவை குறித்து மேற்கு கவனம் செலுத்துவதில்லை; ஐ.நா. சபை கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

சிறிலங்கா அரசு செய்த கொலைகளைப் பயங்கரவாதமாகவே நாம் பார்க்க வேண்டும்.

அந்தக் கொலைகளுக்குப் பொறுப்புக் கூறும் கடமை சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது; அதனை இந்த நூல் மேலும் வலியுறுத்துகிறது.

TNO3.JPG

ஓவியர் புகழேந்தி:

இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த ஆவணம்.

திட்டமிட்டு சிங்களம் மேற்கொண்ட படுகொலைகளை வரலாறாகப் பதிவு செய்துள்ளது இந்தப் புத்தகம்.

ஆனாலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை என்பதையும் புத்தகம் பதிவு செய்கிறது.

குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டோர் மற்றும் கொல்லப்பட்டுவி்ட்ட ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் உலகெங்கும் சிதறிச் சென்று விட்டமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு இந்த நூல் எப்போதோ வந்திருக்க வேண்டும்; ஆனால், எப்போதும் போல இப்போதும் தமிழகம் காலம் தாழ்த்தியே விழித்துக் கொண்டுள்ளது.

சொந்த வரலாறு மறக்கடிக்கப்பட்ட எந்த ஒரு இனத்தாலும் பேராட்டம் நடத்த முடியாது.

அந்தப் பழைய வரலாற்றை மறக்க விடாது செய்யும் பதிவாக இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துகிறது.

1956 முதல் படுகொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஈழத்தில் ஊர்களின் பெயர்கள் அந்தப் படுகொலைகளின் வழியாகவே தான் அறியப்படுகின்றன.

ஈழத்தில் நான் பயணம் செய்த போது ஒவ்வொரு இடத்திலும் படுகொலைகள் பற்றிய செய்திகளைக் கேட்க முடிந்தது.

அங்கு ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரக்கணக்கான கதைகள் புதைந்திருப்பதைக் காண முடியும்; அவர்கள் தமக்கு நடந்த கொடூரங்களைச் சொன்ன போது நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சுகிற அளவில் 2009 படுகொலைகள் நடந்துள்ளன; அதனையும் ஆவணப்படுத்த வேண்டும். அதையும் சேர்த்து வெளியிடும் போது தான் "தமிழினப் படுகொலைகள்" பற்றிய பதிவு முழுமை பெறும்.

வன்னியில் நடந்த இறுதிக் கட்டப் போரின் பின்னர் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசு சொன்னாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தை இந்த உலகம் பார்த்து நிற்கிறது.

"நீங்கள் புலம் பெயரக் காரணமானது எது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான தீர்வு எட்டப்படுவதை நீங்கள் ஒருபோதும் புறந்தள்ளி விடாதீர்கள்" என்று நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எழுபதுகளில் முடிவுக்கு வந்தது அறவழிப் போராட்டம்; 2009 ஆம் ஆண்டு ஆயுதப் பேராட்டம் முடிவுக்கு வந்தது; ஆனால், போராட்டங்கள் தொடங்கப்பட்டதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன.

இன்று - அந்தக் காரணங்கள் இன்னும் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கு அடையப்படும் வரை போராட்டம் தொடரும். அந்த மக்களுக்கு விடிவு வேண்டும். 50 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், விடை கிடைக்க வேண்டும்.

எனவே நிச்சயம் பேராட்டம் தொடரும்; அது வெற்றியும் பெறும்.
அந்தப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்கிற பொறுப்பு எம் எல்லோருக்குமே உள்ளது. அந்த வகையில்தான் இந்த நூல் வெளிவருகிறது.

TNO4.JPG

திருமதி கவிதா முரளிதரன் (ஊடகவியலாளர், ‘தி வீக்’ ஆங்கில வார ஏடு) :


ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு சிறிலங்கா மற்றும் இந்தியா நாடுகள் மட்டுமே பொறுப்பாளிகள் அல்ல; தமிழகமும் அதற்கு பொறுப்பாளி தான்.

அங்கு படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழகம் காத்திரமான எந்த எதிர்வினையும் ஆற்றாது இருந்தது.

எமது கைகளும் இரத்தம் படிந்து போய்த் தான் இருக்கின்றன. அந்தக் கறைகளை நம்மால் ஒருபோதுமே கழுவ முடியப் போவதில்லை; ஆனால், இனிமேலாவது எம் மீது இரத்தக் கறை படியாமல் இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

சிறிலங்காவில் போர் முடிந்து விட்டபோதும் அங்கு தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை இன்னும் தொடர்கிறது; போருக்குப் பின்னர் தான் ஊடகங்களின் மீது அங்கு கடும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வருட காலத்தி்ல் மட்டும் 15 ஊடகவியலாளர்கள் உயிர்ப் பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

இனியாவது எமது எதிர்ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கான கருவியாக இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இனியாவது எமது கைகளில் இரத்தக் கறைகள் படியாது பார்த்துக் கொள்வோம்.

TNO5.JPG

சட்டவாளர் பால் கனகராஜ் (தலைவர், சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பு):

இந்தப் புத்தகத்தை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்; 2009 படுகொலைகளையும் சேர்த்து அப்போது ஒரே புத்தகமாகக் கிடைத்திருக்கும்.

"தமிழினப் படுகொலைகள்" என்ற இந்தப் புத்தகத்தை வெளியிட்டது போன்றே, ‘தமிழினத் துரோகிகள்’ என்று ஒரு புத்தகத்தையும் ‘மனிதம்’ அமைப்பு வெயியிட வேண்டும்; அதற்கு இன்னும் அதிகம் வரவேற்புக் கிடைக்கும்.

இப்போது உள்ள நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செயற்படுவதே தேவையானது.

30 ஆண்டுகளாகத் தமது கைகளில் வைத்திருந்த ஒரு பொக்கிசத்தைத் தவறவிட்ட மக்களுக்கு நாம் எப்படி உதவப் போகிறோம்?

வதைபடும் அந்த மக்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

இன்றைய இளைஞர்களிடம் போராட்டக் குணம் இல்லை; அவர்கள் போராடுவதற்கு முன்வரவேண்டும்.

நாம் எல்லோரும் கூடிப் பேசி ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்யவது என்று முடிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது போன்று சிங்களத்திடம் இருந்து தமிழர்களும் விடுதலை பெறவேண்டும்; பெறுவார்கள்.

TNO6.JPG

புலவர் புலமைப்பித்தன்:

நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர் அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.

தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, ‘தம்பி’க்குத் தாராளமாகக் கைகொடுத்த தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளான இன்று - இந்தப் புத்தகத்தை அக்னி சுப்ரமணியன் வெளியிட்டுள்ளமை சிறப்பு.

இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள் தான் பெரும்பாலானவர்கள்.

வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை என்றார் பராதிதாசன். அந்த நிலையில்தான் நாமும் இப்போது இருக்கிறோம். தமிழினம் விரோதத்தால் வீழ்த்தப்படவில்லை; அது துரோகத்தால் வீழ்த்தப்பட்டது.

இதற்காக நாம் யாரைக் குற்றஞ்சாட்டுவது...? நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகள் தான். ராஜபக்சவுக்கு முன்னர் நம்மைத் தான் விசாரிக்க வேண்டும்.

நாம் இதுவரை மத மாற்றம் பற்றித் தான் கேள்விப் பட்டிருக்கிறோம்; இங்கு தமிழ் நாட்டில் ஒரு இன மாற்றமே நடைபெற்றுள்ளது. இங்கு தமிழன் தமிழனாக இல்லை.

ஒர் இனத்தையே அழித்த பின்னர் அந்த இனத்தின் மொழிக்கு என்ன விழா வேண்டி இருக்கிறது...? ஈழ நிலமே இரத்தத்தால் செம்மையாகிக் கிடக்கையில் செம்மொழிக்கு என்ன ஆராய்ச்சி வேண்டிக் கிடக்கிறது...?

உண்மையானவர்கள் இப்போது செய்ய வேண்டியது தமிழ் ஆராய்ச்சி இல்லை, தமிழன் பற்றிய ஆராய்ச்சி தான். தமிழன் ஏன் இப்படி இருக்கிறான் என்பது தான் செய்ய வேண்டிய ஆராய்ச்சி.

ஒரு இலட்சம் பேர் இறந்த பின்னால் சிறிலங்கா அரசு மட்டுமா அதற்குக் குற்றவாளி...? இந்திய அரசும் தான் குற்றவாளி. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவே அதிக குற்றவாளி.

தனித்துப் போராடிப் புலிகளை வெல்லும் திறன் இலங்கை இராணுவத்திற்கு இருக்கிறதா...? அந்தப் போரை முன்னெடுத்ததே இந்திய அரசுதான்.

புலிகள் அடியோடு இருக்கக்கூடாது; என்ன ஆயுதம் வேண்டுமானாலும் மக்கள் மீது பயன்படுத்துங்கள் என்று துணை நின்றது இந்தியா தான்.

ஒக்டோபர் மாதமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை விட்டு விலகி இருந்தால் டில்லியில் ஒர் அரசு இருந்திருக்குமா?

டில்லியில் ஒர் அரசு இல்லாது போயிருந்தால் ஈழத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்களா...?

அன்று தமது பதவிகளில் இருந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி மைய அரசை நீக்கி இருந்தால், இடைக்கால அரசு மட்டுமே இருந்திருக்கும்.

ஈழத்தில் ஒரு இலட்சம் பேர் அப்போது கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஓர் இடைக்கால அரசு அதற்கு ஆதரவு அளித்திருக்காது.

இப்போது நான் கேட்கிறேன், அந்த மைய அரசு தொடர்ந்தும் பதவியில் இருந்ததற்கு யார் பொறுப்பு...? அந்த மைய அரசை யார் முட்டுக் கொடுத்துத் தாங்கினார்களோ அவர்களே ஈழத்தில் நடந்த கொலைகள் அனைத்துக்கும் காரணம்.

இப்போது ஈழத்தில் எல்லோரையும் முடித்து விட்டோம் என்கிறது சிறிலங்கா அரசு; தொடங்கிய ஒன்று முடியும், முடிந்த ஒன்று தொடங்கும். ஈழம் விடுதலை பெறும். நான் உயிருடன் இருக்கும் போதே ஈழம் விடுதலை பெறும்.

ஒரு இலட்சம் பேரைக் காவு கொடுத்த ஈழப் போர் உலகமெங்கும் பரந்திருக்கிற தமிழர்களால் அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஈழத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொன்சேகா – ராஜபக்ச மோதலால் இந்த உலகுக்கு விரைவில் தெரியவரும். அப்போது அவர்கள் அனைத்துலக சமூகத்தின் விசாரணைகளின் முன்பாக நிறுத்தப்படுவார்கள்.

இந்த விசாரணைகளில் இருந்து சிறிலங்கா ஆட்சியாளர்களை இந்தியா பாதுகாக்க முற்படுகின்றது. ஆனால், இனியாவது இந்தியா திருந்த வேண்டும்; அதற்கு ஏற்ற வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும்.

தமிழீழத்தின் விடுதலை தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பானது. ஒன்றுபட்ட சிறிலங்காவால் இந்தியாவிற்கு ஒருபோதும் பாதுகாப்பு இல்லை.
இந்தியாவில் இருந்து நாம் (தமிழ்நாட்டுத் தமிழர்கள்) ‘விலகிச் செல்ல’ மாட்டோம்; ஆனால், இந்தியா எங்களை விலக்கி விடக்கூடாது.

நண்பர்களே கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்தியா எங்களை ‘விலக்கி’ விடக்கூடாது; இந்தியா உணர்ந்து செயற்பட வேண்டும்.

December 25, 2009

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும், கடல் தான் எங்கள் வீடு"

ருதூர் கோபாலன் இராமச்சந்திரன் - மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 22ஆவது நினைவு தினத்தினையொட்டி (24.12.2009) படகோட்டி திரைப்படத்தில் இருந்து பாடல், "தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்."

டிசம்பர் 26, 2004 ஆம் ஆண்டின் ஆழி பேரலையின் ஐந்தாண்டுப் பூர்த்தியில், இத் துயர நிகழ்வில் மரணித்த பல்லாயிரக்கணக்கிலான கடல் தொழிலில் தங்கி வாழந்த குடும்பத்தவர் துயர நிகழ்வுகளையும் இப் பாடல் வரிகள் நினவு கூருகின்றன.

லகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் - கவிஞர் வாலி

December 24, 2009

பெரியாரை மறப்போமா?

னிதராகப் பிறந்தோம்! ஆம் உண்மை!
ஆறறிவு உண்டென்று சொன்னார்கள்
ஆனால் பகுத்தறிவை இழந்தது தான் கொடுமை
ஜாதியென்றான் மதமென்றான் நம்பி
சாத்திரத்தில் அறிவிழந்தோம் உண்மை!
மூத்திரத்தைப் பசு மூத்திரத்தைப்
புனிதமென்றான் பார்ப்பான்!

TPO1224.jpg

தந்தை பெரியார் (செப் 17, 1879-டிசம்பர் 24, 1973)

ஆத்திரந்தான் கொள்ளாமல்
அறிவிழந்தோம் பகுத்தறிவிழந்தோம் கொடுமை!
படித்தவரும் பண்டிதரும் அறிவிழந்தார்
படிக்காத மேதையவர் வந்தார்
சுயமரியாதை வேண்டுமென்றார்
கல்லைத் தான் காட்டுகின்றார்
கடவுளெங்கே? கற்பனைதான்!
மனிதனாக வாழ்ந்துவிடு
சிந்தித்து செயல் படுவாய்
நரகமில்லை மோட்சமில்லை
நம்பாதே ஏமாற்று வேலைகளை
புரியாத வார்த்தையிலே
தெரியாத கடவுளுக்கு
பூசை என்ன காசெதற்கு?
புரிந்து கொண்டோம் தெளிவு பெற்றோம்
தன்மானச் சிங்கத்தின் கர்ச்சனையில்
நம் மானம் மீட்டெடுத்தோம்
மனிதராக வாழ்வு பெற்றோம்
மறப்போமா பெரியாரை?

DRIO1224.jpg

- சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன்

December 22, 2009

ஐ.நா. உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை இல்லை ?

[ புதினப்பலகை ]ஐ.நா. உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்:

புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயன்ற போது சிறிலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக அந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று ‘இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வி எழுப்பி உள்ளது.

BMVNTC1221o.jpg

செப் 22ஆம் திகதி ஐ.நா அலுவலகம் முன்பாக இடம் பெற்ற தமிழ் கவனயீர்ப்பு நிகழ்வின் போது தாங்கப்பட்டிருந்த பதாதைகளில் ஒன்று

புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்றால் அவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு சிறிலங்கா அரச தலைவரின் தலைவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச களத்தில் இருந்த படையின் கட்டளை அதிகாரிக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார் என்று முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று கூறி மறுத்திருந்தார்.

எனினும், அவரது குற்றச்சாட்டை அடுத்து குறிப்பிட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு – சட்டத்திற்குப் புறம்பான, எழுந்தமானமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு விசாரணையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசிடம் கேட்டிருக்கிறார்.

ஐ.நா. தம்மிடம் விளக்கம் கேட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா அரசு அது குறித்து நிதானமாகத்தான் பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் தலைவர்களை வெள்ளைக் கொடியுடன் சென்று சிறிலங்காப் படையினரிடம் சரணடையுமாறு சொன்ன சம்பவத்தில் ஐ.நா.வின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருக்கும் தொடர்புகள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது ஐ.நா.வின் உறுதிமொழியை வேண்டி நின்றார்கள் என்பதை அதன் பேச்சாளரும் உறுதிப்படுத்தி இருந்தார்.

அத்தகைய நிலையில், சம்பவம் குறித்து சிறிலங்கா அரசிடம் விளக்கம் கேட்டுள்ள ஐ.நா. விசாரணையாளர் ஏன் அது தொடர்பில் விஜய் நம்பியாரிடம் விளக்கம் கேட்கவோ விசாரணை நடத்தவோ இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளது ‘இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தி நிறுவனம்.

தொடர்புபட்ட முன்னைய செய்தி:

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பதையிட்டு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சட்டத்துக்குப் புறம்பான எழுந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

கடந்த வாரம் வெளியான சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோதாபய மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே வெள்ளைக்கொடிகளுடன் படையினரிடம் சரணடைவ வந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.

இது தொடர்பான செய்திகளை அரசாங்கம் மறுத்திருந்த போதிலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐ.நா. தற்போது கோரிக்கை விடுத்திருப்பது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவிலுள்ள சிறிலங்காவின் நிரந்திரப் பிரதிநிதி செனிவிரட்ணவுக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் அனுப்பிவைத்திருக்கின்றார்.

"சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சூழ்நிலைகளை 58 வது படையணியுடன் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்" என இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் இந்தப் படுகொலைகள் இடம்பெற்ற சூழ்நிலை தொடர்பாக சிறிலங்கா அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

December 19, 2009

ஓ. எஸ். அருண்: ஆசை முகம் மறந்து போச்சே

காகவி சுப்பிரமணிய பாரதியாரின் "கண்ணன் என் காதலன்:"

வழங்குபவர்: ஓ. எஸ். அருண்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்லை;
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?

December 13, 2009

வளமான மண்ணில் இருந்து வரண்ட நிலத்திற்கு

[புதினப்பலகை] ளமான தங்கள் பாரம்பரிய மண்ணிலிருந்து போரின் பெயரால் பிடுங்கி எடுக்கப்பட்ட கிழக்குத் தமிழர்கள் "மீள்குடியேற்றம்" என்ற பெயரில் தரிசு நிலங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றர்கள்.

1MO.jpg

சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு பகுதிகள் "அதியுயர் பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பின்பு - வளமான அந்த நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழ் மக்கள் - "நவரத்தினபுரம்" எனப் பெயரிடப்பட்டுள்ள தரிசு நிலம் ஒன்றில் குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.

வட பகுதியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இது அமைகின்றது.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடம் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதும் - அங்கிருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 6,000 பேர் இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் [Centre for Policy Alternatives - CPA] அண்மையில் நடத்திய ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த இந்த இடம்பெயர்ந்த மக்கள் 2 ஆண்டுகளாக இடைத் தங்கல் முகாம்களிலேயே நாட்களை ஓட்ட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கீழே உள்ள படங்கள் பன்னாட்டுத் தொண்டர் நிறுவனம் ஒன்றின் பணியாளர் டொக்டோறன்டஸ் சரஜேவோ அவர்களால் எடுக்கப்பட்டவையாகும்.

2MO.jpg

இந்த வரண்ட நிலத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் அங்கு தமது முதன்மைத் தொழிலான விவசாயத்தினை மேற்கொள்வதற்குச் சிக்கல்படுகின்றனர்.

3MO.jpg

"நவரத்தினபுரம்" மீள்குடியமர்வு மற்றும் அது தொடர்பான கட்டுமானப் பணிகள் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

4MO.jpg

மக்களின் விவசாய நிலங்களோடு அவர்களுக்கு நீர் வளத்தை வழங்கி வரும் குளங்களும் "அதியுயர் பாதுகாப்பு வலய"த்திற்குள் மாட்டிக் கொண்டுள்ளன.

5MO.jpg

"நவரத்தினபுரம்" மீள்குடியேற்றப் பகுதியில் தமது எதிர்காலம் பற்றிய பல கேள்விகளோடு தான் மக்கள் தமது நாட்களை ஓட்ட ஆரம்பித்துள்ளனர்.

6MO.jpg

தம்மைச் சூழ நடக்கும் சதியை உணர்ந்து அறிய முடியாத இளம் வயதில் "நவரத்தினபுரம்" பகுதியில் விளையாடும் குழந்தைகள்.

7MO.jpg

"நவரத்தினபுர"த்தைச் சேர்ந்த மக்கள் ஒரு விநாயகர் கோயில் கட்டிவருகிறார்கள்.

8MO.jpg

ஏதாவது முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதற்காக - "நவரத்தினபுரம்" மீள்குடியேற்றப் பகுதியில் பயிர்ச் செய்கைக்காக நிலம் தயார்ப்படுத்தப்படுகிறது.

9MO.jpg

நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கும் சிறுவர்கள்.

2007ஆம் ஆண்டு யூலை மாதம் கிழக்குப் பிரதேசம் முழுவதும் விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது.

அதன் பின்பு - அனல் மின் நிலையம் அமைப்பதற்காக சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதிகள் சிறிலங்கா அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அந்தப் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு விட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரத்தினசிங்கம் குற்றம் சாட்டுகின்றார்.

17.11.2009 ஆந் திகதி மீள் குடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் குறை நிரப்புப் பிரேரணை விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:

2006 ஏப்ரல் 25 ஆம் திகதியிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்குழல் எறிகணைத் தாக்குதல்களினால், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு, வெருகல் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இரவோடு இரவாக உடுத்த உடையுடன் வீடுவாசல்கள், உடைமைகள், தோட்டங்கள், வயல்கள், கால்நடைகளையும், உறவுகளையும் இழந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்தார்கள்.

இவர்கள் அனுபவித்த துன்ப துயரங்களை வார்த்தைகளினால் எடுத்துக் கூறமுடியாது. இரண்டு வருடங்களுக்குப் பின் மீள்குடியேற்றப்பட்ட போதும் நன்கு திட்டமிட்ட மீள்குடியேற்றமும், புனர்வாழ்வும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களினால் அரைகுறையாகத் திருத்தப்பட்ட வீடுகளில்தான் இன்றும் மக்கள் வாழ்கின்றனர்.

பலருக்கு இவ்வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. வைத்தியம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற வசதிகள் இன்றியும் வாழும் வாழ்க்கை தொடர்கின்றது. பாடசாலைகளும் திருத்தப்படவில்லை. தளபாடம், கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர்கள் வளங்கள் இன்றியும் பல பாடசாலைகள் நடைபெறுகின்றது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், நுண்கலை ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களின்றியே பல பாடசாலைகள் பெயரளவில் இயங்குகின்றன. கல்வி, பொருளாதாரத்தில் திட்டமிட்டு இப்பிரதேச மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மூதூர் கிழக்கு சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை, சம்புக்களி ஆகிய கிராமங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்தது. இக்கிராமங்களில் வாழ்ந்த சுமார் 2000 மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 7500 மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து பாரிய இராணுவ நடவடிக்கைகளினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இவர்கள் இடம்பெயர்ந்தபோது வீடுவாசல்கள் முற்றாக அழிக்கப்பட்டு தோட்டநிலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேணை ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும், பொது இடங்களிலும் வசதிகள் வாய்ப்புகள் இன்றி துன்பவாழ்கை வாழ்கின்றனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. விவசாயம் செய்தவர்களை தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு கிராமத்துக்கு அண்மையில் உள்ள சின்னக்குளம் என்ற இடத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு அம்மக்களின் விருப்பமின்றி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இப்பிரதேசம் குடியிருப்புக்கோ, பயிர்ச்செய்கைக்கோ அறவே பொருத்தமற்ற பிரதேசமாகும். அரிகற்கள் நிறைந்த களிநிலம். அத்துடன் 30 – 40 அடி ஆழத்துக்கு மேல் கிணறுகள் அமைத்தாலும் நீர் பெறுவது கஷ்டம்.

நிலத்துக்கு அடியில் நீர் ஊற்றும்மில்லை. ஏக்கர் கணக்கில் இருந்த வளமான நிலத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு வளமற்ற இடத்தில் 20 பேர்ச் காணியை ஒதுக்கியிருக்கும் தாராள மனப்பான்மையை எண்ணிப் பார்க்கின்றோம்.

மீன்பிடித் தொழில் செய்தவர்களுக்கும் இதே கதிதான். மூதூர் இறால்குழி, நாவலடி என்ற இடங்களுக்கு இடையில் உள்ள உப்பு நிலத்தில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுமுள்ளனர்.

மகாவலிகங்கை பெருக்கெடுக்கும் பொழுது 3 - 4 அடி நீர் வழிந்து கடலில் சேரும் பள்ளமான பிரதேசம். இங்கும் ஒரு குடும்பத்திற்கு 10 பேர்ச் காணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி, மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் செயற்பாடாகும்.

மூதூர் கிழக்கில் மக்கள் வாழ்ந்த வீட்டுக் காணிகள், தோட்ட நிலங்கள், வயல் காணிகள், குளங்கள், மேய்ச்சல் நிலங்கள் என 10000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உயர்பாதுகாப்பு வலயமாகவும், வர்த்தக வலயமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வாழ்ந்த மக்களை விரட்டியடிக்கப்படும் பொழுது அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த இராணுவ நடவடிக்கை “இங்கு வாழ்ந்த மக்களின் நன்மை கருதியே நடை பெறுகின்றது” என்று பகிரங்கமாக ஊடகங்களின் மூலம் கூறியிருந்தார்.

இக் கூற்றை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மெய்பிக்க வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்பாகும். இவ்வளவு கூடுதலான மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மக்கள் மீள்குடியேறமுடியாது உயர்பாதுகாப்பு வலயம், சுதந்திர வர்த்தகவலயம் என்று பிரகடனப்படுத்தியிருப்பது மூதூர் கிழக்கில்தான். அங்கு வாழ்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக தமிழர்கள் என்ற காரணத்தினாலா இத் தடை உத்தரவு?

கனடா நாடாளுமன்றத் தேர்தல் அரசியலுக்குள் நுழையும் தமிழ்ப்பெண்

[புதினப்பலகை] னடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.

கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

RSO1213.JPG

ராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

இந்த நிகழ்வில் கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) கலந்து சிறப்பித்ததுடன் ராதிகாவுக்கான ஆதரவு உரைகளையும் வழங்கியிருந்தனர்.

கனடாவில் உள்ள மூன்றாவது பெரிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ஈழத்தமிழரின் அரசியல் நியாயத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.

புலம்பெயர் நாடுகளில் வளரும் ஈழத்தமிழ் இளந்தலைமுறையினர் அரசியலில் ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஜனனி ஜனநாயகம் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளின் உள்ளுராட்சி தேர்தல்களில் ஈழததமிழர்கள் பங்கேற்று பலர் வெற்றிபெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

December 10, 2009

காணொலி: தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

டிசம்பர் 11, 2009: மகாகவி பாரதியாரின் 128 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதியார் பாடல் காணொலிகள்:

பொழுது புலர்ந்தது

சாகா வரம் அருள்வாய்

தோளிடை வன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம்

மங்கியதோர் நிலவினிலே

கூலி மிக கேட்பார் ~ வழங்குபவர்: ராஜ்குமார் பாரதி

December 07, 2009

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...

[புதினப்பலகை] ன்னைக் கொலை செய்ய முற்பட்ட ஒருவரைக் கச்சிதமாகப் பழி தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் - முட்கம்பி வேலியின் பின்னால் அந்தச் சமையல்காரருக்கு எதிர்பாராதவிதமாகக் கிடைத்தது.

அந்த வாய்ப்பு வந்த போது - சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட தடுப்பு முகாமில் 280,000 தமிழ் மக்களுடன் மக்களாக ஒரு கைதியாக அவர் இருந்தார்.

கடந்த மே மாதத்தில் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிச் சிறு நிலத் துண்டில் இருந்து அவர் தப்பி வந்த அந்த நாளின் நினைவுகள் இன்னமும் அவர் மனதில் ஒளிர்ந்துகொண்டு உள்ளன.

“மக்கள் ஒரு குழுவாகத் தப்பி ஓட முயற்சித்த போது - அவர்களில் 20 முதல் 30 வரையானோரைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள்; அந்த மக்கள் குழுவில் நானும் இருந்தேன்” என்று நினைவு கூருகின்றார் வி.சிவலிங்கம்.

கடந்த செவ்வாய்க் கிழமை (டிசெம்பர் 1, 2009) வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த கடைசித் தமிழ்க் கைதிகளில் ஒருவர் அவர்.

the_times_3O127.jpg

சண்முகர் ராஜா லூத்மேரி தனது குழந்தைகளுடன் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்; ஆனால், அவரது கணவர் புலிகள் இயக்க உறுப்பினர் என தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

[கட்டுரையை முழுமையாக வாசிக்க அழுத்தவும் ~ புதினப்பலகை]

December 04, 2009

பக்தியிசை: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்

ன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும்

Nallur124b.jpg

நல்லூர் கந்தன் படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

வெங்கலகுரலோன் சீர்காழி கோவிந்தராஜன்: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்

ன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலே போதும்
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்...சண்முகா...

உன்னிரு பதம் நினந்து
அன்புடன் தினம் பணிந்து....முருகா...முருகா
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா
வண்ண மயில் ஏறும் வடி வேல் அழகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலே போதும்...முருகா

Nallur124.jpg

நல்லூர் கந்தன் சப்பறம்-2005

TOM124.jpg

திருக்கோணேஸ்வரம்

December 02, 2009

தடுப்புமுகாம் மக்கள் நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

[புதினப்பலகை]முகாம்களிலிருந்து மக்களை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ள அனைத்துலக மன்னிப்புச் சபை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் நிபந்தனையற்ற முறையில் நிரந்தரமாக விடுவிக்குமாறு சிறிலங்காவைக் கோரியுள்ளது.

MFTC122O.jpg

வவுனியா தடுப்பு முகாமொன்றில் இருந்து வேளியே வரும் பொது மக்கள்-டிசம்பர் 1, 2009-ராய்ட்டர்ஸ் படம்

6 மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டுப் போர் முடிவடைந்த தறுவாயிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

120 000 மக்களை விடுவிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தபடி- அதனை நிபந்தனைகள் அற்ற முறையில் நிறைவேற்ற வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்காவுக்கான நிபுணர் (Amnesty International's expert on Sri Lanka) ஜோலாண்டா போஸ்ரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான சுயமுடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மன்னிப்புச் சபை சிறிலங்காவை வலியுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பின்படி; வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் அம்முகாம்களில் தங்கவோ, வேறு வசிப்பிடங்களைத் தேடவோ அல்லது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவோ அவர்களது சுயவிருப்பின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்குரிய தெரிவுச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனபோதும் முகாம்களை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ள மக்கள் மீது நிர்ப்பந்தங்கள் விதிக்கப்படுவதான தகவல்கள் எமக்குக்கு கிடைத்துள்ளன.

15 நாட்களுக்குள் மீண்டும் முகாம்களுக்கு திரும்புமாறு மக்கள் பணிக்கப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிய வந்திருக்கின்றது.

விடுவிக்கப்பட்ட மக்கள் விசாரணைகளுக்கும், பின்னர் கைதுகளுக்கும் உட்படுத்தப்படுதலாகாது. இடம்பெயர்ந்த மக்கள் நாட்டின் எப்பகுதிகளுக்குச் சென்றாலும் அவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா "மாணிக் பண்ணையிலிருந்து" விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்கள், எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் "தெருவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம்" தொடர்பாக தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலைச் சுட்டிக்காட்டிய மன்னிப்புச் சபை, ஏலவே விடுவிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து அதீத அக்கறை செலுத்தப்படவேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

முகாம்களிலுள்ள மக்களை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று முகாம் மக்களுக்கும் சுதந்திர நடமாட்டத்திற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதில் தொடர்ந்தும் தெளிவின்மையே நிலவுகின்றது.

சொந்த இடங்களுக்குத் திரும்பவுள்ள மக்கள்; தமது எதிர்காலம் தொடர்பான திட்டமிடலுக்கு ஏதுவான வகையில், அவ்விடங்களின் வாழ்தலுக்கு ஏதுவான நிலைமைகள் (living conditions) குறித்து தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

அவர்களுடைய அடிப்படை உரிமைகள், சட்ட உரிமைகள் மற்றும் காணமற் போன குடும்ப உறுப்பினர்களைத் தேடுவதற்குரிய நடைமுறை பற்றிய தகவல் அறிவுறுத்தல்கள் உரிய முறையில் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

December 01, 2009

"நடமாட்ட அனுமதி": உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்தில் எடுக்குமா?

[புதினப்பலகை] இன்று முதல் சுதந்திர நடமாட்ட அனுமதி; ஆனால், அனைத்து தடுப்பு முகாம் மக்களுக்கும் அல்லவாம்: உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்தில் எடுக்குமா?

வுனியா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், அந்த அனுமதி தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லா மக்களுக்கும் அல்லவாம்.

O121camp.jpg

அத்தோடு - வெளியே சென்று வர அனுமதிக்கப்படும் முகாம்களில் உள்ள தமிழர்கள் கூட, வெளியே செல்லுவதற்கு முன்னதாக தடுப்பு முகாம்களில் உள்ள படையினரின் பிரத்தியேகச் செயலகங்களில் அதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்ற பின்பே வெளியே செல்ல முடியும்.

தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டையைக் காண்பித்து இந்த அனுமதியைப் பெற முடியும் என்று சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹால்டீன் அறிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க - வவுனியாவில் உள்ள அனைத்து தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கும் வெளியே சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

அருணாசலம், கதிர்காமர், இராமநாதன் முகாம்கள் மற்றும் "மெனிக்பாம்" வலயம்-5, வலயம்-6 மறறும் வலயம்-6-ஈ முகாம்களில் உள்ளோர் மட்டுமே வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

"மெனிக்பாம்" முகாமின் ஏனைய வலயங்களில் இருப்போருக்கு இந்த அனுமதி வழங்கப்படாது.

அத்தோடு - தடுப்பு முகாம்களுக்கு வெளியே செல்வோர் தமது உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதானால் - அவர்களின் பெயர், முகவரிகளையும் அந்த பிரத்தியேக இராணுவச் செயலகத்தில் கொடுத்த பின்பே வெளியே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற முடியும்.

சிறிலங்கா அரச கணக்கின்படி வவுனியா தடுப்பு முகாம்களில் தற்போது 128,000 வரையானோர் இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க - இந்த "நடமாட்ட சுதந்திரம்" என்பது, எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் வாக்குப் பெறுவதைக் கருத்தில் கோண்டு மகிந்த ராஜபக்ச செய்யும் ஒரு சிறிய நடவடிக்கை மட்டுமே என்ற கருத்தும் பரவலாக உண்டு.

இதே வேளை - ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு "மீள்குடியேற்றம்" செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையை கருத்தில் கொண்டு - இந்த விடயத்தில் வெளிநாட்டுத் தமிழர் அமைப்புகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் உண்டு.

ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களுக்கும் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பப்பட்ட தமிழர்கள் வேறு விதமான - உயிர் அச்சுறுத்தலான - தொல்லைகளுக்குத் தொடர்ந்தும் உள்ளாகி வருவதாகத் தகவல்கள் வெளிவந்தபடி உள்ளன.

தொடர்ந்து கண்காணிக்கப்படுதல், அடிக்கடி மீள்-விசாரணைக்கு உட்படுத்தப்படுதல், மீள்-விசாரணைக்குப் பின் கைது செய்யப்படல், காணாமல் போகச் செய்தல் என்ற வகைகளில் - "விடுவிக்கப்பட்டு" மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறை ஆட்களின் தொடர்ச்சியான நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகி வருகின்றனர்.

அதே போல - இப்போதும் - வெளியே நடமாட அனுமதிக்கப்படும் மக்கள் உண்மையில் "சுதந்திரமான" நடமாட்டத்தை அனுபவிக்க முடியாத நிலையே காணப்படலாம்.

மேலும் - அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் கண் பார்வையில் உள்ள தடுப்பு முகாம்களுக்குள் இருக்கும் போது மக்களைத் தொடர்ந்து கைது செய்தால் - அது சிறீலங்கா மீது சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் என்ற நிலையும் உண்டு.

அதனால் - கட்டுப்பாடுகளை நீக்கி மக்களை வெளியே நடமாட அனுமதித்து விட்டு, வெளியில் வைத்து அவர்களை - விசாரணைகள் ஏதுமின்றி - "காணாமல் போக" செய்வதற்கான வாய்ப்புக்களும் உண்டு எனவும் சில அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதனால் - இந்த விடயங்களைத் தமது உடனடிக் கவனத்தில் எடுத்து - வெளிநாடுகளில் உள்ள தமிழர் அரசியல் செயற்பாட்டு அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

வெளியே சென்று வர அனுமதிக்கப்படுகின்ற இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு - தத்தமது நாட்டு அரசாங்க மட்டத்தினருடன் உலகத் தமிழ் அமைப்புக்கள் கருத்துக்களைப் பரிமாற வேண்டும் என்பது ஒரு பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

அதே வேளையில் - தற்காலிக "சுதந்திர நடமாட்டம்" அல்லாமல், மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குச் சென்று - எவ்வித கட்டப்பாடுகளோ அல்லது அச்சுறுத்தலோ இல்லாமல் - குடியேற அனுமதிக்கப்படுவதற்கான ஒரு சர்வதேச அழுத்தத்தை சிறிலங்காவின் மீது கொண்டுவருவதற்கும் உலகத் தமிழ் அமைப்புக்கள் உடன் முயல வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.