நல்வாழ்வுக்காய் ஏங்கும் இளம் தமிழ் சமுதாயம்: வழி செய்ய வேண்டியது சகல தரப்பினதும் கடமை
'வீரகேசரி', ஆசிரியர் தலையங்கம், நவம்பர் 28, 2009:
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பட்சை 2009 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வியாழனன்று வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றிய ஒரு இலட்சத்து 99 ஆயிரம் பரீட்சார்த்திகளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

இதேவேளை, உயிரியல் விஞ்ஞானப் பாடத்தில் தமிழ் மொழி மூலம் தோற்றிய கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூயைச் சேர்ந்த மாணவி மைதிலி சிவபாதசுந்தரம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூயைச் சேர்ந்த அன்டன் ஜோன் நிராஜ் என்ற மாணவன் பௌதிகவியலில் கூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களின் பெறுபேறுகள் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறே சிங்கள மொழி மூல மாணவர்களும் வெவ்வேறு துறைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளனர்.
தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களின் நிலையான மூலதனமாக கல்வியே இருந்து வருகின்றது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னரான காலகட்டத்தை எடுத்து நோக்கினால் இலங்கையில் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி மூல மாணவர்களே அதிகூடிய புள்ளியை பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழகங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டும் வந்தனர்.
அதேவேளை, வட பகுதியில் வீதிக்கு வீதி தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்து போயிருந்ததுடன் அதிகாலை நான்கு மணி தொடக்கம் நள்ளிரவு வரை மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலேயே தமது ழுமையான கவனத்தையும் செலுத்தி வந்தனர்.
இதன் காரணமாக, வீட்டுக்கு வீடு டாக்டர்கள், பொறியியலாளர்கள் என வட பகுதியில் நிறைந்துபோய் இருந்தனர்.
எனினும், துரதிருஷ்டவசமாக நாட்டின் நெருக்கடியும் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்த சூழலும் தமிழ் மொழி மூல மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பெரிதும் பாதித்தது எனக் கூறலாம்.
இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்றதுடன், படித்த மாணவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைமையே இன்று தோன்றியுள்ளது.
மேலும், யுத்த நடவடிக்கைகள் மும்முரமடைந்ததையடுத்து வட பகுதி மாணவர்களின் கல்வி முற்று முழுதாக செயலிழந்தது.படித்து பட்டம் பெற வேண்டிய மாணவர்கள் பலர் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தங்கள் கவனத்தை வேறு கோணங்களில் திசைதிருப்பினர்.
இதேவேளை, வடக்கில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளும் மாணவர்களின் கல்வியை மிக மோசமாக சீர்குலைத்தன. சாதாரணமாக, கற்றல் உபகரணங்களையோ, புத்தகங்களையோ கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.
அது மாத்திரமன்றி யுத்தத்தின் தாக்கம் மாணவர்களை உளவியல் ரீதியாகவும் மோசமாகப் பாதித்தது. மாணவர்கள் இடம்பெயர நேரிட்டதுடன் பாடசாலைகள் பலவும் செயலிழந்தன.
அத்துடன், ஆசிரியர்கள் இன்றி பாடசாலைகள் பல தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறான பின்னணியில் வட பகுதி மாணவர்களின் கல்வி முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக, மாணவர்கள் பலர் தமது கல்வியை சீராக தொடர டியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, இளம் வயதினர் தமது எதிர்காலம் குறித்து மிகுந்த ஏக்கங்களுக்கு மத்தியில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் இதர பகுதியிலுள்ள மாணவர்களுடன் ஒப்பிடுகையில், வட பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பின்னடைந்துள்ளதை காணலாம். இருந்தும்கூட, வட பகுதி மாணவர்கள் எவ்வாறேனும் படித்து முன்னேற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் காணப்படுகின்றனர்.
எனவே, யுத்தம் முடிவுக்கு வந்து நாட்டில் சகஜ நிலை நிலவி வரும் இந்தக் கட்டத்திலேனும் வட பகுதி மாணவர்கள் சுதந்திரமாக தங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்ற சூழலை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது.
விசேடமாக, உயர் வகுப்பு மாணவர்கள் பலர் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக கொழும்புக்கு வருவதற்கோ அன்றேல் வெளிமாவட்டங்களில் தங்கியிருந்து கல்வி கற்பதற்கோ அஞ்சியிருந்தனர்.
இதனால், அவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வியை மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலைமை நிலவுகின்றது. அத்துடன், நலன்புரி முகாம்களிலுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் மிகுந்த சவால்களை எதிர்நோக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனவே, இவற்றை கவனத்திற் கொண்டு வட பகுதி மாணவர்கள் எதிர்வரும் காலங்களிலேனும், எவ்வித இடையூறுமின்றி கல்வியைத் தொடர சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டுமென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

