ஊற்று

அன்பு சிவமென்றால் - ஜெயகாந்தன் கவிதைகள்...

~அன்பு சிவமென்றால்
அன்பினால் பெற்ற
துன்பம் சிவமாவதில்லையா?
பேரின்பம் பெரிய சிவம்;
சிற்றின்பம் சிறிய சிவம்!

JO1115H.jpg

ஜெயகாந்தன்

~நாலு வயதில் இருந்து - நான்
நடந்து வந்திருக்கேன்! - இப்போ
நடத்தை சரியில்லை என்கின்றார் - வயதோ
நாற்பதும் ஆகிறது!

~வேர்விட்டு விட்டது போல்
வேரிடம் போகாமல்
வீற்றிருக்கும் நல்விருட்சம்
பேரிட்டவர் இல்லை
பெற்றுவிட்டவர் இல்லை
ஆரிட்ட விதையோவிது அறியேனே!

~கொள்ளுவன கொள்ளுக
கொண்டபின் கொடுப்பவர் ஆகுக!
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின் தவமொன்றியறுக!
சொல்லுவன சொல்லுக
சொல்லாலே ஒரு சுடதனை ஏற்றுக!

~புரிந்தேன் என்பதும் புரியவில்லை என்பதும்
போடுகின்ற வெறுங் கூச்சல்!
அறிந்தேன் என்பதும் அறியேன் என்பதும்
அடக்கம் போன்றதோர் அகம்பாவம்!

~எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என வாழ்நாள் எல்லம் திருநாள்
மரணம் எனக்குக் கரிநாள்!

~அட்சய வயிறு படைத்தீரே! - ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! - அந்த
பிச்சையிட் டவனை பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! - என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?

~வாழ்வதன் முன்னம்நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
சோர்வுக்கு பின்னாலும் சுகித்திருப்பேன்
வித்துக்கு முன்னால் நான் விளைந்திருந்தேன்
விளைவுக்குப் பின்னாலும் வித்தாவேன்
முடிவுக்கு முன்னால்நான் முதலானேன்
முடிந்தாலும் முடிவுக்கோர் முதலாவேன்
அசைவுக்கு முன்னால் நான் அணுவானேன்
அணுபிளந் தாலும் பிளவுக்குள் அசைவானேன்!

- 'ஜெயகாந்தன் கவிதைகள்' புத்தகத்திலிருந்து.....

வெளியீடு: தொடுவானம் 190/அ5 - ஸ்ரீ சாய் நகர், தொழிற்பேட்டை, கோயமுத்தூர்- 641 021

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை