"மாவீரர் நாள் 2009": மகிமை இழக்காதிருக்குமா?
[புதினப்பலகை.கொம்] தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன. முன் எப்போதையும் விட இந்த ஆண்டின் மாவீரர் நாள் வெளிப்படையான பல காரணங்களுக்காக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. ஆனாலும் - உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த அண்டின் மாவீரர் நாள் தனது மகிமையையும் புனிதத்தன்மையையும் இழக்காதிருக்குமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுகின்றது.

தமிழ் பேசும் மக்களினது அரசியற் சுதந்திரத்திற்காகவும், தமிழர் தாயகத்தினது விடுதலைக்காகவும் கடந்த 35 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடி - தலைவர் வே. பிரபாகரன் உட்பட 35,000-ற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.
அதே வேளை - 60 ஆண்டு காலமாக சிறிலங்கா சிங்கள பெளத்த பேரினவாத அரசுகள் தமிழினம் மீது நடாத்திய இன அழிப்புப் போரில் - 150,000-ற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.
தமிழினத்தின் விடிவிற்காக தமது உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களையும், படுகொலைக்கு உள்ளான தமிழ் குடி மக்களையும் வணங்கி அஞ்சலி செய்வதற்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழீழம் மற்றும் தமிழகம் என தமிழர்கள் முதன்மையாக வாழும் தாயகப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் - பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்த், சுவிட்சலான்ட், ஸ்கோட்லான்ட், பெல்ஜியம், நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா, நியூசிலாந்த், தென்னாபிரிக்கா, மொறீஸியஸ், மலேசியா போன்ற தமிழர்கள் வெறிவாக வாழும் உலகின் ஏனைய நாடுகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
1989 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மாவீரர் நாள் - இந்த ஆண்டு 20 அவது மாவீரர் நாள் என்ற வகையிலும் சிறப்புப் பெறுகின்றது. இருந்தாலும் - கடந்த 19 அண்டு காலத்தை விட இந்த வருடத்தின் மாவீரர் நினைவு நிகழ்வுகள், அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒரு முற்றிலும் மாறுபட்ட அக மற்றும் புறச்சூழலில் இடம்பெறவுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கதாகும்.
மாவீரர் நாள் - 2009 நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஒரு புறத்தில் பெருமெடு்ப்பில் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் - தமிழ் மக்கள் மத்தியில் வேறு பல முக்கியமான கேள்விகளும் எழாமல் இல்லை.
இந்த ஆண்டு மே மாத இறுதிக் கட்டப் போர் வரை களத்தில் நின்று போராடி வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் தளபதிகள் மற்றும் போராளிகளின் விபரங்கள் உரிய முறையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுமா என்பது தெளிவாக இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி மூத்த தளபதிகளான பொட்டம்மான், தீபன், சூசை, பாணு, விதுஷா, ஜெயம், சொர்ணம், துர்க்கா, கடாபி போன்றவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட உயர் தளபதிகளும், ஆயிரக்கணக்கான போராளிகளும் - கடந்த ஆண்டு மாவீரர் நாளின் பின்னதாக வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.
இவர்களில் தளபதிகள் தீபன், கடாபி, விதுஷா மற்றும் துர்க்கா அகியோரது வீரச்சாவு அறிவித்தல்கள் மட்டும் - "பிரிகேடியர்' என்ற படையத் தர நிலையுடன் - ஏற்கெனவே அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டிருந்தன. ஏனையோரது வீரச்சாவு அறிவித்தல்கள் எதுவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் விடவும் அதியுயர் விடயமாக - உயர் முக்கியத்துவம் மிக்க விடயமாக - தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு பற்றிய விடயம் உள்ளது.
தலைவர் வே. பிரபாகரன் அவர்களது வீரச்சாவு பற்றிய அறிவித்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரபூர்வமாக விடுக்குமா, அவருக்கு உரிய முறையில் வீரவணக்கம் செலுத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த வருடத்தின் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படுமா போன்ற கேள்விகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் முதன்மையாக நிலவுகின்றன.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ்-செயற்பாட்டாளர் ஒருவர் புதினப்பலகை-யிடம் கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்:
"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உச்சச் சிறப்பம்சம் என்பது மாவீரர்களைப் போற்றிப் பூசிப்பதாகும். மாவீரர் துயிலுமில்லங்களை நிறுவி, அவர்களுக்கு நினைவாலங்களை எழுப்பி அவர்களைக் கடவுளுக்கு நிகராகப் பூசிக்கும் ஒரு வழக்கத்தை அந்த இயக்கத்தின் தலைவராக இருந்து வே. பிரபாகரன் அவர்களே ஏற்படுத்தினார். அதற்கும் மேலாக - ஒட்டு மொத்தமான தமிழ் இனத்தினதும் பாகுபாடுகள் அல்லாத ஒரே புனித நிகழ்வாக மாவீரர் நாளை அவர் உருவாக்கினார்.
இவ்வாறாக - மாவீரர் வணக்கம் என்பதை தமிழரது வரலாற்றில் ஒரு பண்பாட்டு மரபாகவே நிலைப்படுத்திய அந்தத் தலைவன் வீரச்சாவு அடைந்து மாவீரன் ஆகிவிட்ட பின்னர் அவரது படத்தை வைத்து ஒரு பூ இட்டு அஞ்சலி செலுத்த முடியாது இருப்பது ஒரு பெரும் வரலாற்றுத் துயரம்."
இதே வேளை - புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் "செயற் குழு" வட்டாரங்களுக்கு நெருக்கமான ஒரு ஐரோப்பியச் செயற்பாட்டாளர் ஒருவர் புதினப்பலகை-யிடம் கருத்துத் தெரிவிக்கும் போது -
"தலைவர் அவர்கள் இன்னும் உயிரோடு வாழ்கின்றார் என திடமாக நம்புகின்றவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் - தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பது உறுதியாகத் தெரிந்திருக்கும் பொறுப்பு வாய்ந்த இடங்களில் இருப்பவர்கள் கூட அவருக்கு அஞ்சலி செய்ய மறுக்கின்றார்கள்" என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, "உலக நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளையும், தொண்டர்களையும், தமிழ்-செயற்பாட்டாளர்களையும் வழி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களே - தலைவர் அவர்கள் உயிர் வாழ்வது போன்றதான தவறான தகவல்களை வழங்கி தமக்குக் கீழ் செயற்படுகின்றவர்களைப் பிழையான திசையில் அழைத்துச் செல்லுகின்றார்கள்" என்று கூறினார்.
சென்னையில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, "தமிழ் நாட்டிலிருக்கும் பெரும் தமிழுணர்வாளர்கள் கூட இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்" என்று குறிப்பிட்டார்.
"உலகத் தமிழ் சமுதாயத்தினது நன்மதிப்பைப் பெற்றிருக்கும் தமிழகத் தலைவர்கள் கூட - தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது தமக்கு உறுதியாகத் தெரியும் எனவும், அவர் விரைவில் வெளிச்சத்திற்கு வருவார் என்பது போலவும் தொடர்ந்து கூறிவருவது தமிழக மக்களை மட்டுமல்லாமல், அவர்கள் மீது மரியாதை வைத்து அவர்கள் சொல்லுவதை உண்மை என நம்புகின்ற உலகத் தமிழ் மக்களையும் குழுப்பத்தில் ஆழ்த்துகின்றது.
இதேவேளை - கொழும்பில் இருக்கும் முதன்மையான தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கினார்:
"தலைவர் பிரபாகரன் அவர்களது உடலையும் கைப்பற்றி, அவரது படங்களையும் வெளியிட்டிருந்தது சிறிலங்கா அரசு. இந்த நிலையில் - தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்னும் வாழ்கின்றார் என நாம் விடாப்பிடியாக வாதிடுவது - தமிழரது அறிவு நிலை பற்றி சிங்களவர்கள் ஏளனம் செய்யவே வழிவகுக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியிலேயே நாளைய "மாவீரர் நாள்" பொழுது தமிழர்களுக்கு விடியப் போகின்றது.
"மாவீரர்கள்" எல்லோரையும் பூசிக்கும் ஒரு புனித நாள் என்ற தனது மகிமையை இழக்காமல் - தலைவர் வே. பிரபாகரன் உட்பட - உண்மையிலேயே மாவீரர்கள் ஆகிவிட்ட எல்லோருக்குமே அஞ்சலி செய்யும் ஒரு உன்னத நாளாக நாளை காலை விடியுமா, அல்லது "மாவீரர் நாள்" என்பது இனிமேல் ஒரு வெறும் சடங்காக மட்டுமே கொண்டாடப்படப்போகின்ற ஒரு நிகழ்வாகத் தனது மகத்துவத்தை இழந்துவிடப் போகி்ன்றதா என்பதை காலம் தான் தெளிவுபடுத்தப் போகின்றது. [நன்றி: புதினப்பலகை.கொம்]

