அமெரிக்காவில் சீனாவின் ஐ.நா. சபைக்கான ஆணையக அலுவலகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
சிறிலங்காவின் தமிழ் இன அழிப்புக்கு சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஆயுதம், நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை கண்டித்து அமெரிக்க, கனடிய தமிழர்களினால் ஓகஸ்ட் 3ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வு சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஆணையக அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
சிறிலங்கா - சீன கூட்டுறவு தமிழர் பாராம்பரிய பிரதேசங்களில் தமிழர் விகிதாசாரம் குறைவடையச் செய்யும் விதத்தில் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனைக் கண்டித்தும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகள் தாங்கியிருந்தனர்.
சீனாவுடன் சிறிலங்கா அரசு கூட்டு இணைந்த பிற்பாடு தெற்கு ஆசியாவில் ஏற்படுள்ள அனைத்துலக அரசியல் சதுரங்கம் பல கோடி டொலர் பெறுமதியான ஆயுத - படைத் தளபாடங்கள சிறிலங்காவுக்கு விற்பதற்கும் சீனாவுக்கு வழியமைத்தது.


பெரும் ஆயுத தளபாட கொள்முதலினால் வங்குரோத்து நிலவரத்தினை அண்மித்த சிறிலங்கா அந்நிய செலாவணி இருப்பை மீட்பதற்கு சமீபத்திய அனைத்துலக நாணய நிதி கடன் உதவி பாவிக்கப்படப் போவதனையும் கவனயீர்ப்பாளர்கள் பாதாகைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கவனயீர்ப்பில் கலந்துகொண்ட ஒருவர் 'புதினம்' செய்தியாளருக்கு கருத்து தெரிவிக்கையில், "'லண்டன் ரைம்ஸ்', 'நியூயோர்க் ரைம்ஸ்' போன்ற பத்திரிகைகளின் சமீபத்திய ஆசிரியத் தலையங்கங்கள் சீனாவின் தலையீட்டினால் சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் இன்னும் அதிகப்படியாகவே மீள் ஊக்கம் பெறுவதனை சுட்டிக்காட்டியுள்ளதுடனும், இந்தியா குறிப்பாக தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சீன-சிறிலங்கா கூட்டு இணைவின் நெருக்கத்தினால் தெரிவித்து வரும் அதிருப்தி நிலைப்பாடுகளுடனும், கூடவே ஈழத் தமிழர்களும் தமக்கு இதனால் ஏற்பட்டுவரும் மிகப் பெரும் பாதிப்புக்களை பரப்புரை செய்து இணைந்து கொள்வதாயும் இக் கவனயீர்ப்பு அமைகின்றது" என தெரிவித்தார்.


தமிழ் இன அழிப்பில் சிறிலங்கா அரசுடன் கூட்டு இணந்து மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்காத சீனா போன்ற பேரரசும் பின் நிற்பது, நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் எனைய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ள நிலையே காணப்படுகின்றது எனவும், இந்நிலை இவ்வாறான சீன-சிறிலங்கா கூட்டு உறவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவனயீர்ப்புக்கள் மூலம் மாற்றப் படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கவனயீர்ப்பு பற்றி செய்தி வெளியிட்ட 'இன்னர் சிற்றி பிறஸ்', சீனா இக்கால கட்டத்தில் பல புது நட்புகள் பெற்றிருப்பினும், "சீனாவுக்கு இன்னொரு" பக்கமும் இருப்பதனையே தமிழர்கள் முன்னெடுத்த கண்டன நிகழ்வு காட்டி நிற்பதாகத் தெரிவித்திருந்தது.
இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு இக்கவனயீர்ப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. [நன்றி: புதினம்]

