« July 2009 | Main | September 2009 »

August 30, 2009

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

ண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் எங்கே மேனியும் எங்கே கால்கள் எங்கே மேனியும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆ..
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

ஆ...ஆ...ஆ...ஆ..
மணிகொண்ட சரம் ஒன்று அனல்கொண்டு வெடிக்கும்
அனல்கொண்டு வெடிக்கும் ஆ..ஆ..ஆ..ஆ..
மணிகொண்ட சரம் ஒன்று அனல்கொண்டு வெடிக்கும்
அனல்கொண்டு வெடிக்கும்
மலர்போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
மலர்போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
துணைகொள்ள அவன் இன்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கும் ஏனிந்த மயக்கம்?
ஆ..ஆ..ஆ..ஆ..

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
துணை கொள்ளும் மதயானை உயிர்கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்
ஆ..ஆ..ஆ..ஆ..

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே

kangal enge nenjamum enge - கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
Movie - karnan திரைப்படம்: கர்ணன்
Singer: P. Suseela பாடியவர்: P. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.s. Viswanathan, B. Ramamoorthy இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963

August 25, 2009

இக் காணொளி..."சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?"

ன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார்.

இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார். நன்றி: புதினம்

August 19, 2009

101 ஆவது நாளாக வெள்ளை மாளிகை பேரணி: உச்ச மக்கள் போராட்டம் என பிரபல அமெரிக்க அரசியல் ஏடு வர்ணனை

மெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வதிவிடச் செயலகமான - அமெரிக்கத் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள 'வெள்ளை மாளிகை' முன்பாக அமெரிக்க மற்றும் கனடிய தமிழர்களால் நடாத்தப்பட்டுவரும் பரப்புரைப் போராட்டம் நேற்று புதன்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்தது. இது ஒரு உச்ச குரல் மிக்க மக்கள் போராட்டம் என அமெரிக்காவின் அதியுயர் செல்வாக்கு மிக்க "பொலிற்ரிகோ.கொம்" என்ற அரசியல் இணைய ஏடு வர்ணித்துள்ளது.

அமெரிக்க இலங்கைத் தமிழ் சங்கத்தின் முன்முனைவோடு முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரைப் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (18.08.09) தனது 100 ஆவது நாளைக் கடந்து இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 
அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் கனடாவில் இருந்தும் வருகை தரும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டத்தில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்கின்றனர்.

சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களால் ஏற்கெனவே நேரடியான படுகொலைக்கு இலக்காகி, பின்பு இப்போது முட்கம்பி-வேலித் தடுப்பு வதைபுரி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இன அழிவுக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களை பாதுகாக்குமாறு அமெரிக்க அரச தலைவரைக் கோரும் அதே வேளையில் -
 
தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை நிறைவு செய்யும் விதமான ஒரு நிரந்தரத் தீர்வு உருவாக வழி செய்யுமாறும் அவரைக் கோரி இந்தப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படுகின்றது என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இதே சமயம் - இந்தப் பரப்புரைப் போராட்டம் பற்றி குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் மிகச் செல்வாக்குமிக்கதும், பிரபலமானதுமான 'பொலிற்ரிகோ.கொம்' (Politico.com) எனும் அரசியல் விவகார இணையத்தளம் -
 
அரச தலைவராக பராக் ஒபாமா பொறுப்பு ஏற்றதன் பின்னர் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் அவரது 'வெள்ளை மாளிகை' முன்றலில் நடைபெற்றுள்ளதாயினும் - அவற்றுள் நினைவில் நிலைத்து நிற்பதும், உயர்சக்தி வாய்ந்தததும், பலரது கவனத்தினை ஈர்த்துள்ளதும் - தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டம் தான் என தெரிவித்துள்ளது.

இந்தத் தொடர் பரப்புரைப் போராட்டத்தின் 100 ஆவது நாளாகிய ஓகஸ்ட் 18 அம் நாள் - வோசிங்டன் டி.சி.யின் அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல மட்டங்களிலும் நல் அபிமானம் பெற்ற 'பொலிற்ரிகோ' இணையத்தளத்தில் வெளியாகிய ஒரு செய்திக் கண்ணோட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
"தொடக்கத்தில் இருந்தே இந்தப் போராட்டக்காரர்கள் ஊதாசினப்படுத்திவிட முடியாத - மனதை உறைய வைக்கும் விதமான - தமது முழக்கங்கள் மூலமாக - அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளினதும், ஊடகவியலாளர்களினதும் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தார்கள்.
 
"அரச தலைவர் ஒபாமா, அரச தலைவர் ஒபாமா" ("Pres-i-dent Oba-ma! Pres-i-dent Oba-ma!") என பெண்களும் ஆண்களும் ஒலிபெருக்கி மூலமாக முழக்கமிட - அங்கு கூடியிருக்கும் 300 வரையிலான ஏனைய போராட்டக்காரார்கள் "இனப்படுகொலையை நிறுத்துங்கள்" ("Stop the genocide") என எதிரொலிக்கின்றார்கள். 
 
"ஆம், உங்களால் முடியும்; ஆம், உங்களால் முடியும்" என ஒபாமாவின் தேர்தல் பிரச்சார முழக்கத்தை சற்று மாற்றி அவர்கள் தொடர்ந்து முழங்குகின்றார்கள்.

தடுப்பு வதைபுரி முகாம்களில் ("concentration camps") அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாமல் தமது சொந்த இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படும் வரையில் நாம் இந்த இடத்தைவிட்டுப் போகப் போவதில்லை" என கனடாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண் தெரிவித்தார்.
 
"குழந்தைகள் பட்டினியால் மரணிக்கின்றார்கள். வயதானவர்கள் கூட தடுப்பு வதைபுரி முகாம்களில் மரணமடைகின்றார்கள்" எனவும் அவர் முறையிட்டார்.
 
 - என 'பொலிற்ரிக்கோ.கொம்' இணைய இதழின் அந்த செய்திக் கண்ணோட்டம் குறிப்பிட்டுள்ளது.
 
இந்தப் பரப்புரைப் போராட்டத்தின் ஒழுங்கமைப்புக் குழுவைச் சேர்ந்த நியூயோர்க்கைச் சேர்ந்த மருத்துவர் தயா தயாபரன் 'புதினம்' நிறுவனத்திடம் பேசும்போது -
 
"அரச தலைவர் ஒபாமாவுக்கு மட்டுமன்றி, எமது இனம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் மனிதார்ந்த பிரச்சினைகளை வெளிநாட்டவருக்குச் சொல்லுவதற்கு இந்தப் போராட்டம் ஒரு பெரும் களமாக அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் ஆகையால், "வெள்ளை மாளிகை" பகுதியைப் பார்வையிடுவதற்கு பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் நாளாந்தம் வந்து செல்கின்றனர். அந்த வெளிநாட்டு மக்களின் கவனத்தை எமது போராட்டம் மிகப் பிரமாண்டமான அளவுக்கு ஈர்த்து வருகின்றது. அந்த மக்களுக்கு எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகக் கொடுத்து வருகின்றோம்" என்று குறிப்பிட்டார்.

"இந்தப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாசக அட்டைகளையும், எமது உறவுகள் படும் அவலங்கள் தொடர்பான படங்களையும் வெளிநாட்டு மக்கள் மிகக் கரிசனையோடு பார்ப்பது மட்டுமல்லாது படம் பிடித்தும் செல்கின்றனர். வெள்ளை மாளிகையை விட்டுவிட்டு எமது போராட்டத்தைப் படம் பிடிப்பதிலேயே பலர் அக்கறை காட்டுகின்றார்கள்" என்று இந்தப் போராட்டத்தின் இன்னொரு ஒழுங்கமைப்பாளரான சரவணன் பவான் தெரிவித்தார்.
 
இந்தப் பரப்புரைப் போராளிகளுடன் நேரில் வந்து உரையாடும் பல வெளிநாட்டவர்கள், தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பாகவும் அவர்களின் அரசியல் போராட்டம் தொடர்பாகவும் விடயங்களையும் கேட்டு அறிந்து செல்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றது.

இன்னொரு ஒழுங்கமைப்பாளரான பாலன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கும்போது - "வோசிங்டன் டி.சி நகர காவல்துறையின் கணிப்பின்படி நளாந்தம் சராசரியாக 5 ஆயிரம் பேர் "வெள்ளை மாளிகை" பகுதியைப் பார்வையிட இங்கு வருகை தருகின்றார்கள். அதனால், எமது இந்த தொடர் போராட்டம் நிச்சயமான பலன்களைத் தருகின்றது. சில அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அழைத்து வந்து எமது இந்தப் போராட்டத்தையும் இங்கு நாம் தாங்கியுள்ள வாசக அட்டைகளையும் படங்களையும் அவர்களுக்குக் காட்டி - தமிழர் போராட்டத்தின் வரலாற்றையும் தமிழர் படும் அவலங்களையும் எடுத்து விளக்குவதனையும் நாம் அடிக்கடி காணமுடிகின்றது" என்று தெரிவித்தார்.
 
"வெறும் பார்வையாளர்களாக இங்கு நடப்பவற்றை அவதானிப்பதற்காக மட்டும் வரும் பல அமெரிக்க இளையோர்கள் - தமிழர் படும் அவலங்கள் பற்றிய தகவல்களை அறிந்த பின்னர் - தாமும் இந்தப் போராட்டத்தின் பங்காளிகளாகி - எமது கைகளில் இருக்கும் வாசக அட்டைகளை வாங்கி உயரப் பிடித்தபடி வெள்ளை மாளிகை நோக்கி "தமிழ் இன அழிப்பை நிறுத்துங்கள்" என்று முழக்கங்களை எழுப்பும் நிகழ்வு அடிக்கடி நடக்கின்றது" என இன்னொரு ஒழுங்கமைப்பாளரான சிவா நாதன் தெரிவித்தார்.
 
சில வெளிநாட்டு மக்கள் இந்தப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்வையிட்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் தமிழரின் அவலங்களைப் பற்றிக் கேட்டும் கண்கலங்கி அழுததனையும் 'புதினம்' செய்தியாளர் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளார்.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மக்கள் மாத்திரமன்றி - 'வெள்ளை மாளிகை' ஊடகச் சந்திப்புக்களுக்கு வருகைதரும்  வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கவனத்தையும் இந்தப் போராட்டம் மிகப் பெருமளவில் ஈர்த்து வருகின்றது.
 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்களை அணுகும் ஊடகவியலாளர்கள், அவர்களுடன் உரையாடி தமிழர்களது அரசியல் போராட்டம் தொடர்பான தகவல்களையும் கேட்டு அறிந்து சேகரித்து வருகின்றனர்.
 
"102 ஆவது நாளக இன்றும் தொடரும் இந்தப் பரப்புரைப் போராட்டத்தைப் பெருவெற்றியாக்கும் பொறுப்பு அமெரிக்கா மற்றும் கனடா வாழ்  தமிழர்களின் கைகளிலேயே உள்ளது" எனத் தெரிவித்த இதன் முதன்மை ஒழுங்கமைப்பாளரான மருத்துவர் தயாபரன் - மிகப் பெருமளவில் திரண்டுவந்து தொடர்ந்து கலந்துகொண்டு இந்தப் போராட்டத்தை வெற்றியடைய வைக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நன்றி: புதினம்

August 15, 2009

"தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதுவும் மகிந்த கொடுக்க மாட்டார்"

மிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன?

"இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட 14 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதால் பல பத்திரிகையாளர்கள் தொழிலை விட்டே ஓடிவிட்டார்கள். சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே வெளியாகின்றன. அதில் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை இருக்குமென யாருக்கும் தெரியாது."

கடைசிக் கட்ட சண்டையில் சிங்கள இராணுவம் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி போர் விதிமுறைகளை மீறியிருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறதே?

"உண்மைதான். இரண்டு தரப்புமே பல மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசக்கூடாது என்பது சர்வதேச போர் நெறிமுறை. ஆனால், சிங்கள இராணுவம் வவுனியா மருத்துவமனையில் குண்டுகளை வீசியிருப்பதை நான் அங்கு சென்றபோது கண்கூடாகவே பார்த்தேன். அதுவும் முள்ளிவாய்க்காலில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இறுதிக்கட்டப் போரில் இரண்டாயிரம் பேர் பலியாகியிருப்பார்கள் என்று அரசு சொன்னாலும் கூட உண்மையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர்  பலியாகியிருக்கிறார்கள். சில சிங்கள இராணுவ அதிகாரிகளிடம் பேசினே் "சுமார் 35 இராணுவ வீரர்கள் ஊனமுற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அனுராதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய இராணுவ மருத்துவமனைகளில் தங்க வைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். ஆனால், அவர்களையும் யாரும் சந்திக்க முடியாது. உண்மைகள் வெளிவந்து விடுமோ என்கிற பயம்தான் காரணம்."

போர் முடிந்துவிட்ட நிலையிலும் வவுனியா மக்களை முகாமிலேயே அரசு தங்க வைத்திருக்கிறதே, அங்கு வசதிகள் எப்படி? மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் நீங்கள் அங்கு சென்று பார்த்தீர்களா?

சற்று சிந்தித்தவர், "பாவம் தமிழர்கள்" என்று சோகத்தோடு கூறிவிட்டுத்தான் தொடர்ந்தார். "சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மெஜாரிட்டி பேர் கிரிமினல்களோ, போர்க்குற்றவாளிகளோ அல்ல. அப்பாவிகள். விசாரித்துவிட்டு அவர்களை ஊருக்கு அனுப்பிவிடவேண்டியதுதானே. ஆனால், அந்த முகாம்களுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. முகாம்களின் நிலைமையும் படு மோசம். ஆயிரம் பேருக்கு ஒரு மலசலகூடம்தான். அது போதாது என்று எங்களைப் போன்றவர்கள் சொன்னதால் எண்ணூறு பேருக்கு ஒரு மலசலகூடம் என மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு குடிக்கக் கூட சொற்ப தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. குளிப்பது என்றால் முறை வைத்துத்தான் குளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றால் அப்பா இன்றைக்குக் குளித்தால், அம்மா மூன்று நாட்களுக்குப் பிறகே குளிக்க முடியும். பசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் பவுடர் கிடையாது. இப்போதே இந்த நிலைமை என்றால், விரைவில் பருவ மழை தொடங்கி விடும். முகாம்களுக்குள் மழைநீர்  பெருக்கெடுக்கும்போது மக்களால் தங்க முடியாது. மழை பெய்கிறதே என்று எழுந்து ஓடினால் இராணுவம் சுட்டுவிடும் என்ற நிலைதான் என்கிறார்கள். நான் முகாம்களுக்குச் செல்லவில்லையென்றாலும் மருத்துவமனைக்குப் போனேன். அங்கிருந்தவர்களின் நிலைமை மிகவும் பரிதாபம். அங்குள்ள ஒரு தாயின் சோகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இராணுவம் குண்டு போட்டபோது தப்பிப்பதற்காக குடும்பத்தோடு ஓடியிருக்கிறார்கள். அப்போது ஒரு குண்டு வெடித்ததில் அந்த கர்ப்பிணித் தாயின் இடுப்புக்கு கீழ் சிதைந்து விட்டது. அப்போது அவர் மேல் பிணமாக விழுந்திருக்கிறாள், அவரது பத்து வயது மகள். அதன்பிறகே அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அதை வளர்க்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை. தற்போது முகாம்களில் இருந்த மூவாயிரம் முதியவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால் இளைஞர்களின் கதி அதோகதிதான். தீவிரவாதிகள் என்று இன்னொரு குரூப் (கருணா கோஷ்டி) அடையாளம் காட்டும் பட்சத்தில் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன ஆகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆக, பாவம் தமிழர்கள்.''

இந்த அவலத்தை மாற்ற முடியாதா?

"முடியும். அதுவும் வெளிநாடுகளிலிருந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தமிழர்களின் அவலம் மாறும். குறிப்பாக, இந்தியாவின் அழுத்தம் மட்டுமே நல்ல பலனைக் கொடுக்கும். அதிபர் ராஜபக்ச எனது நண்பர். அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். அவர் அதிபர் ஆவதற்கு முன்பு ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இருவரும் சேர்ந்துதான் கலந்து கொண்டோம். அவர் வேண்டுமானால் தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பார். உரிமைகள் கொடுக்க மாட்டார். தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்கப்போவதாக அவர் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது. எள்முனையளவு உரிமைகளைக் கூட அவர் தமிழர்களுக்குக் கொடுக்க மாட்டார். இப்படிச் சொல்வதன் மூலம் நானும் டார்கெட் பண்ணப்படலாம். இந்தியாவும், தமிழ்நாடும் 500 கோடி ரூபாய் நிதி, பலாலி விமான நிலையம் புதுப்பிப்பு என்பதெல்லாம் சரிதான். அதே சமயத்தில் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருக்குமே சொந்த வீடு இருக்கிறது. மீனவர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களில் யாருமே பிச்சைக்காரர்கள் அல்ல, வசதியாக வாழ்ந்தவர்கள். அவர்களையெல்லாம் 180 நாட்களுக்குள் சொந்த வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்று ராஜபக்ச சொன்னார். ஆனால், அதற்கான அறிகுறிகளே இல்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டு அழுத்தம் கொடுத்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது.''

பிரபாகரனின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

"சிங்கள இராணுவ அதிகாரிகளிடம் நான் பேசிய வரையில் அவர் இறந்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். ஆனால் எப்படி இறந்தார் என்று இராணுவம் வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லிக் குழப்புகிறது. தவிர, டி.வி.யில் யூனிஃபார்ம், அடையாள அட்டை சகிதம் காட்டியது அவரது உடல் அல்ல என்பதே பெரும்பாலான தமிழ் மற்றும் சிங்கள மக்களின் கருத்து. தமிழர்கள் அதிலும் குறிப்பாக, வயதானவர்கள் டி.வி.யில் அவரது உடலைக் காட்டும்போது பார்க்க கஷ்டப்பட்டு கண்ணீருடன் தலை குனிந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு 'வோர் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள 'மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் "அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல" என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்."

இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

"ராஜிவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசின் 13 ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்துவதே தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. அதாவது வடகிழக்குப் பகுதிகளில் பிராந்திய அரசு அமைக்கப்பட வேண்டுமென்பதே அச்சட்டப் பிரிவு. இதை ஜே.வி.பி, புத்த பிக்குகள் தவிர இலங்கையிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர்களின் தாய்நாடும் இதுவே. அவர்களும் மண்ணின் மைந்தர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டு அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும். இந்தியாவும், கருணாநிதியும் தமிழ் மக்கள் படும் பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தியா அளப்பரிய ஆதரவு கொடுத்து ராஜபக்சவை ஜனநாயகவாதியாக ஆக்க வேண்டுமே தவிர, சர்வாதிகாரியாக மாற்றி விடக்கூடாது."

காலம் காலமாய் வஞ்சிக்கப்பட்டதால்தான் தனித் தமிழ் ஈழக் கோரிக்கை வந்தது. இனிமேல் அது சாத்தியமா?

"முதலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவர்களது சொந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதோடு நின்று விடாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். ஈழப்பிரச்னைக்கு இலங்கையில் கூட்டாட்சி அமைவதே சரியான தீர்வாக இருக்கும் என நான் கருதுகிறேன்."

புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்க முடியுமா?

"முதலில் சொந்த வீடுகளில் மக்கள் வாழத்தொடங்கட்டும். மக்களிலிருந்துதானே தலைவர்கள் வரமுடியும். எப்போது தேர்தல் நடந்தாலும் விடுதலைப் புலிகள் மக்களை மிரட்டுகிறார்கள் என்று ஆட்சியாளர்கள் சொல்லி வந்தார்கள். இப்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்ட நிலையிலும் வவுனியாவை அவர்களின் ஆதரவுக் கட்சிதானே கைப்பற்றியிருக்கிறது."

தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நடப்பதாகச் சொல்கிறார்களே?

"இது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். சிறுபான்மை சமுதாயத்தின் அடையாளம் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிக்கும் முயற்சி இது. இதெல்லாம் சாத்தியமானால் எங்களைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் வேலை செய்யவே முடியாது." [நன்றி: புதினம்.கொம்]

August 09, 2009

பாவேந்தர் பாரதிதாசன்: "நல்-அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ, அல்லல் நீக்க மாட்டாயா?"

பாவேந்தர் பாரதிதாசன் பாட்டருவியிலிருந்து:

~ எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா பாடியிருப்பது "ஓர் இரவு" திரைப் படத்தில் ~

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? [துன்பம்]

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக்காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக்காட்ட மாட்டாயா?

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அருகி லாத போது - யாம்
அருகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?

புறமி தென்றும்நல் லகமி தென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டிஉனை ஈன்றஎம் உயிர்ச்
செல்வம் ஆக மாட்டாயா? - தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?

August 05, 2009

அமெரிக்காவில் சீனாவின் ஐ.நா. சபைக்கான ஆணையக அலுவலகம் முன்பாக தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்காவின் தமிழ் இன அழிப்புக்கு சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஆயுதம், நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை கண்டித்து அமெரிக்க, கனடிய தமிழர்களினால் ஓகஸ்ட் 3ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.   

இந்நிகழ்வு சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஆணையக அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

சிறிலங்கா - சீன கூட்டுறவு தமிழர் பாராம்பரிய பிரதேசங்களில் தமிழர் விகிதாசாரம் குறைவடையச் செய்யும் விதத்தில் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனைக் கண்டித்தும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகள் தாங்கியிருந்தனர்.

சீனாவுடன் சிறிலங்கா அரசு கூட்டு இணைந்த பிற்பாடு தெற்கு ஆசியாவில் ஏற்படுள்ள அனைத்துலக அரசியல் சதுரங்கம் பல கோடி டொலர் பெறுமதியான ஆயுத - படைத் தளபாடங்கள சிறிலங்காவுக்கு விற்பதற்கும் சீனாவுக்கு வழியமைத்தது.



பெரும் ஆயுத தளபாட கொள்முதலினால் வங்குரோத்து நிலவரத்தினை அண்மித்த சிறிலங்கா அந்நிய செலாவணி இருப்பை மீட்பதற்கு சமீபத்திய அனைத்துலக நாணய நிதி கடன் உதவி பாவிக்கப்படப் போவதனையும் கவனயீர்ப்பாளர்கள் பாதாகைகளில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கவனயீர்ப்பில் கலந்துகொண்ட ஒருவர் 'புதினம்' செய்தியாளருக்கு கருத்து தெரிவிக்கையில், "'லண்டன் ரைம்ஸ்', 'நியூயோர்க் ரைம்ஸ்' போன்ற பத்திரிகைகளின் சமீபத்திய ஆசிரியத் தலையங்கங்கள் சீனாவின் தலையீட்டினால் சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் இன்னும் அதிகப்படியாகவே மீள் ஊக்கம் பெறுவதனை சுட்டிக்காட்டியுள்ளதுடனும், இந்தியா குறிப்பாக தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சீன-சிறிலங்கா கூட்டு இணைவின் நெருக்கத்தினால் தெரிவித்து வரும் அதிருப்தி நிலைப்பாடுகளுடனும், கூடவே ஈழத் தமிழர்களும் தமக்கு இதனால் ஏற்பட்டுவரும் மிகப் பெரும் பாதிப்புக்களை பரப்புரை செய்து இணைந்து கொள்வதாயும் இக் கவனயீர்ப்பு அமைகின்றது" என தெரிவித்தார்.



தமிழ் இன அழிப்பில் சிறிலங்கா அரசுடன் கூட்டு இணந்து மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்காத சீனா போன்ற பேரரசும் பின் நிற்பது, நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் எனைய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ள நிலையே காணப்படுகின்றது எனவும், இந்நிலை இவ்வாறான சீன-சிறிலங்கா கூட்டு உறவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவனயீர்ப்புக்கள் மூலம் மாற்றப் படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கவனயீர்ப்பு பற்றி செய்தி வெளியிட்ட 'இன்னர் சிற்றி பிறஸ்', சீனா இக்கால கட்டத்தில் பல புது நட்புகள் பெற்றிருப்பினும், "சீனாவுக்கு இன்னொரு" பக்கமும் இருப்பதனையே தமிழர்கள் முன்னெடுத்த கண்டன நிகழ்வு காட்டி நிற்பதாகத் தெரிவித்திருந்தது.

இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு இக்கவனயீர்ப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. [நன்றி: புதினம்]

August 03, 2009

இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

ண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஓகஸ்ட் 1, நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார்.

பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரை:

இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார்.

August 01, 2009

முகாம் நிலவரம்: பி.பி.சி. தமிழோசை ஆகஸ்ட் 1

முகாம்களில் நிலைமை மோசமாகவே இருப்பதாக புகார்

[பி.பி.சி. தமிழோசையில் ஆகஸ்ட் 1 ஒலிபரப்பான செய்தி அறிக்கை - படங்கள்: drs. சரஜேவோ]

இலங்கையில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள, வவூனியா முகாம்களில் உள்ள சுகாதார நிலை தொடர்ந்து மோசமாகவே இருப்பதாக அந்த முகாம்வாசி ஒருவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால், முகாமுக்கு வெளியேயுள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதும் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த முகாம்கள் நிலை குறித்தும் அங்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த முகாம்களுக்குச் செல்ல செய்தியாளர்களுக்கு இலங்கை அரசு எளிதில் அனுமதி தருவதில்லை.

இந்நிலையில் முகாம்நிலை குறித்து பெண் ஒருவர் கூறியது குறித்தும், இதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அளித்த பதிலையும் இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம் [நன்றி: பி.பி.சி. தமிழோசை]