« June 2009 | Main | August 2009 »

July 26, 2009

திரை இசை: தாரணி மீதிலே பாடுங்க

Crow.jpg

ஜூலை 25, ஆடி மகோற்சவ தினத்தன்று காலை, பம்பலப்பிட்டி சம்மாங்கோட்டார் ஆலய முன்றலில்....

[ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க-1952 இல் வெளியாகிய 'பராசக்தி' திரைப் படப் பாடல்]

கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க

(கா கா கா)

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா

எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா

Sivaji.jpg

படம்: பராசக்தி
இசை: ஆர்.சுதர்சனம்
பாடல்: கலைஞர் கருணாநிதி
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

MK0726.jpg

July 16, 2009

காணொளி: கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று ஜூலை 16ஆம் திகதி, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பட்டம்மாள். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே.

பொதிகை தொலைக்காட்சியில் டி.கே.பட்டம்மாள், நித்யஸ்ரீ மகாதேவனுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி I

மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள்.

கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரிக்கு மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார் பட்டம்மாள்.

அன்றைக்கு இந்த மூவரும் சங்கீத பெண் மும்மூர்த்திகளாகப் போற்றப்பட்டார்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை முழுமையாகக் கற்றவர் பட்டம்மாள். பின்னாளில் முத்துசாமி தீ்க்ஷிதர், பாபநாசம் சிவன் ஆகிய மேதைகளின் பாடல்களை மேடைகள் தோறும் பிரபலமாக்கியதில் இவரது பங்களிப்பு அதிகம்.

பகுதி II

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் என உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியவர் பட்டம்மாள். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் 'ஹே ராம்' படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியுள்ளார் பட்டம்மாள்.

இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றவர் பட்டம்மாள். இவரது சகோதரர் டி.கே. ஜெயராமனும் மிகப்பெரிய கர்நாடக இசைக் கலைஞர்.

பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவருக்கு பேத்தி முறையாவார். [நன்றி: வீரகேசரி]

July 11, 2009

யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல்

சிறிலங்கா அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கின்றது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்கு தூதுவர்களாகச் செயற்படுகிறார்கள்? என 'தினமணி' நாளேடு சாடியுள்ளது.  

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களாலும் ஆட்டு மந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் இரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், இரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரே கூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செட்டிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத் நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை இராணுவத்தைவிடக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்திய இராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய இராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணிவெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும். இராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [நன்றி: புதினம்]

July 09, 2009

விஜய டி.ராஜேந்தரின் ஈழத்தின் கதை சொல்லும் கண்ணீர்ப் பாடல்

எழுதி இசை அமைத்துப் பாடுபவர் விஜய டி.ராஜேந்தர்:

July 03, 2009

காணொளி: மைக்கல் ஜக்சன் அஞ்சலி ~ 'உதய கீதம் பாடுவேன்'

தய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்

வியரசு வைரமுத்து பாடல், இசை: இசைஞானி இளையராஜா, பாடுபவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ~ anikartick73

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்

உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

பிள்ளை நாளை பார்க்குமே
எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே
அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில்
பூக்கும் வேளை காலையில்
அழுகின்ற உள்ளமே
வாழ்க வாழ்கவே

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

கண்ணே தீரும் சோதனை
இருகண்ணி்ல் என்ன வேதனை
கண்டேன் எந்தன் ஜீவனை
என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன்
உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே
வாழ்க வாழ்கவே

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்

உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே

உதய கீதம் பாடுவேன்
உதய கீதம் பாடுவேன்

Mjackson0703.jpg

[ஆகஸ்ட் 29, 1958 – ஜூன் 25, 2009]

பேராசிரியர் எலி விசெல் தமிழர்க்காய் குரல்

"சிறுபான்மை சமூகத்தினர் எப்பகுதியில் என்றாலும் அடக்குமுறைக்குள்ளாகும் போது, நாம் அவர்களுக்காக உரத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆதாரபூர்வமான தகவல்களின் பிரகாரம் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுகின்றனர். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்."

BOAMEW.jpg

[புச்சென்வால்ட் வதை முகாமில் மலர் அஞ்சலி செலுத்திய பிற்பாடு, ஜெர்மன் அதிபர் அஞ்செலா மேர்க்கல், ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேராசிரியர் எலி விசெல்]

இவ்வாறு 1986 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவரும் ஹிட்லரின் யூத இனப் படுகொலை தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவருமாகிய பேராசிரியர் எலி விசெல், ஜூன் மாதம் 30 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமாதனத்திற்கான பரிசை தெரியப்படுத்துகையில், நோர்வே நாட்டின் நோபல் தலமையகம் பேராசிரியர் எலி விசெலினை "மனிதத்தின் தூதுவர்" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் எலி விசெல் 40-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் நாள், அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, ஜேர்மன் அரச தலைவர் அஞ்செலா மேர்க்கல் ஆகியோர் சகிதம் தான் சிறை வைக்கப்பட்டிருந்த ஜேர்மனியில் வைமர் நகரில் உள்ள புச்சென்வால்ட் வதைமுகாமுக்கு பேராசிரியர் எலி விசெல் பயணம் செய்திருந்தார்.

அங்கு உரையாற்றிய பேராசிரியர் எலி விசெல், "இங்கு வருபவர்கள் துயர நினைவுகளை மீட்பது இதயங்களில் குரோத உணர்வினை விதைப்பதற்கல்ல. மாறாக எம்மை நாடுவோருக்காக கூட்டு ஒருமைப்பாட்டினை கொண்டு இயங்க அது வழியமைக்கின்றது,” எனத் தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் எலி விசெல், ஈழத் தமிழர் பற்றி கருத்து தெரிவித்துள்ளமையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்து வெளியிட மேலும் பல சுயாதீன அமைப்புக்கள் மற்றும் மனிதநேய ஆர்வலர்கள் முன் வரலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [நன்றி: புதினம்.கொம்]

மனித நேயத்திற்கான எலி விசெல் அறக்கட்டளை: http://www.eliewieselfoundation.org

செய்திகள் பக்கம்: http://www.eliewieselfoundation.org/inthenews.aspx