« May 2009 | Main | July 2009 »

June 30, 2009

ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் மனித உரிமைகள் அமைப்புக்கள் வேண்டுதல்

சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையம்: ஒபாமாவுக்கு மனித உரிமை அமைப்புக்கள் முறையீடு:

லங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

 

  

 

இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க செயல் இயக்குநர் லாறி கோக்ஸ்

த கார்டர் நிலையத்தின் மனித உரிமை பிரிவு இயக்குநர் கறீன் றையன்

சுதந்திர இல்லம் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெனிபர் வின்ட்சர்

அனைத்துலக மனித உரிமை குழுவின் தலைவர் றொபேர்ட் அர்சனால்ட்

மனித உரிமை மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பெலிஸ் டி.கேர்

மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங் டொனாக்கே

ஆகியோர் இது தொடர்பாக விரிவான மனு ஒன்றை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு அண்மையில் அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவின் விவரம்:

இலங்கையில் நடைபெற்ற போரில் இறுதிக் கட்டமான கடந்த டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பெருமளவிலானோர் இடம்பெயரும் நிலை எற்பட்டது. இலங்கையில் போரை நிறுத்தும்படி பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், நீங்கள் (ஒபாமா) உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் வலியுறுத்திய போதிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நம்பத்தகுந்த விபரங்களின் அடிப்படையில் லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்', 'லி மோன்டே' போன்ற நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க அனைத்துலக சமுதாயம் தவறிவிட்டதால், எந்தவொரு நாடும் இறையாண்மை என்ற பெயரில் அதன் சொந்த மக்களையே படுகொலை செய்யும்போது, அதைத் தடுக்க உலக சமுதாயம் எதையும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் போரில் பிழைத்த தமிழ் மக்களை பாதுகாக்கவும், தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கவும் உலக சமுதாயத்தை திரட்டும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உலகில் உள்ள நாடுகள் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் தங்கள் நாட்டு மக்கள் மீதே அடக்குமுறைகளை ஏவிவிட ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான் இலங்கை இனப்பிரச்சினையில் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமாகிறது.

அகதிகள் முகாம்களில் அவதிகள்

இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு தடையில்லாமல் மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டால்தான் அவர்கள் வாழ்வதற்கும், இறப்பதற்கும் வேறுபாடு இருக்கும். ஆனால், அகதிகள் முகாம்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் சென்று உதவிகளை வழங்க சிறிலங்கா அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி செயற்பட்டு வரும் பல்வேறு மனித உரிமைகளின் சார்பில் கடந்த மே 26 ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனித உரிமை ஆர்வலர் மெக்தலினா செபுல்வேதா, இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறிலங்கா அரசு அடைத்து வைத்திருக்கிறது.

இதனால் அவர்களை சிறிலங்கா அரசு கட்டாய சிறையில் அடைத்திருக்கிறதோ என்ற கவலை எழுகிறது. இவர்களில் பலர் இந்த முகாமுக்கு வருவதற்கு முன்பு போர்ப் பகுதியில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வந்தனர். இப்போதுள்ள முகாம்களிலும் ஏராளமான மக்கள் பட்டினியாலும், சத்துக் குறைவாலும் உயிரிழந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இலங்கை அகதிகள் முகாம்களில் தமிழ் மக்கள் கடத்தப்படுதல், கொடுமைப்படுத்தப்படுதல், படுகொலை செய்யப்படுதல், அவமதிக்கப்படுதல், துணை ஆயுதக்குழுக்களுக்கு தேர்வு செய்யப்படுதல், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இலங்கை போர்ப் பகுதியில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான மக்களே உள்ளனர் என்று திரும்பத் திரும்ப கூறி உலக சமுதாயத்தை சிறிலங்கா அரசு ஏமாற்றி வந்தது. போர்ப் பகுதியில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் கூறிய போதிலும் அதை சிறிலங்கா அரசு மறுத்து வந்தது. ஆனால் இப்போது போர்ப் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தது உறுதியாகி விட்டது.

அனைத்துலக விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டியதற்கான தேவை

இலங்கையில் நடைபெற்ற போரின் போது அரசு படைகளும், விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனித நேய விதிகளை பலமுறை மீறியதற்கான ஆதாரங்களை மனித உரிமை அமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

சிறிலங்கா அரசு திரும்பத் திரும்ப மறுத்த போதிலும், அந்நாட்டின் படைகள் அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதிகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகளை வீசித் தாக்கியதும், பாதுகாப்பு வலய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள 30-க்கும் அதிகமான மருத்துவமனைகளை தாக்கி அழித்ததும் உறுதியாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகளும் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதன் மூலம் விதிகளை மீறிவிட்டனர். போர்ப் பகுதியில் சிங்களப் படைகளின் தாக்குதல் குறித்தும், பொதுமக்களின் இறப்பு குறித்தும் வெளியுலகங்களின் ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் விரிவாக விளக்கிய மூன்று மருத்துவர்கள், சிறிலங்கா அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களுக்கு மருத்துவம் அளிக்கும் தங்களின் கடமையை செய்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மருத்துவ நடுநிலை தன்மையின் விதிகளை மீறிய செயலாகும்.

போர்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறிலங்கா அரசு போதிய அளவு நிவாரண உதவிகளை அனுப்பாததும், உதவி அமைப்புகள் இடர் உதவிகளை வழங்க அனுமதி மறுத்ததும் அங்குள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசு இதுவரை நடத்திய விசாரணைகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

பல்லாயிரக்கணக்கானோர் கட்டாயமாக கடத்தப்படுவது சட்டத்திற்கு எதிரான வகையில் கொல்லப்படுவது போன்றவை குறித்த வழக்குகள் மலை போல் குவிந்துள்ளன. தொடரும் பயங்கரங்கள் என்ற பெயரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் பிறகும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக அரச தலைவரின் விசாரணை ஆணையம் என்பது போன்ற பல அமைப்புக்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட போதிலும் அதனால் பெரிய அளவில் பயன்கள் ஏற்படவில்லை.

எனவே இலங்கையில் அண்மையில் நடைபெற்ற போருடன் தொடர்புடைய போர்க் குற்றங்கள், சட்ட விரோத தடுப்புக்காவல் போன்ற குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும்படி உலக நாடுகளுக்கு நீங்கள் வெளிப்படையாக அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் போர் நடந்த பகுதிகள் மற்றும் அகதிகள் முகாம்களுக்கு செல்லவும் அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசவும் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது உட்பட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. [நன்றி: புதினம்]

June 27, 2009

காணொளி: கவிஞர் வாலி வடித்த "மூன்று கொடிகளின் வதிவிடம்"

'பூவா தலையா' திரைப்படத்தில்:

துரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

VaaliOotru.jpgகாஞ்சித்தலைவன் கோயில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனி சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ

மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
புதுவை நகரில் புரட்சி கவியின் குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

மதுரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே - கவிஞர் வாலி

June 23, 2009

காணொளி: ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசன் 82ஆவது பிறந்த தினம்

ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசனின் 82ஆவது பிறந்த தினம்:

"ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்:"

KKO0624.jpgநெஞ்சில் ஓர் ஆலையம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:

(ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம் ஆ..ஆ..ஆ..ஆலயம் )

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்.. தீபம் ஏற்றும் ஆலயம்

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ் கண்ணன் தமிழக நாளிதழ் தினமணியில் எழுதியுள்ள நினைவு கட்டுரை:

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே...

"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட - அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன
தாம் விளையாட'

மொழித்திறன், செவித்திறன் அற்ற ஓர் ஆணும் பெண்ணும் மணந்து கொள்கின்றனர். ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இதைவிட சிறப்பாகவும் துல்லியமாகவும் ஒரு திரைப்படப் பாடலில் பதிவு செய்ய இயலுமா?

மற்றொரு திரைப்படத்தில், தான் காதலித்த பெண் மற்றொருவனை மணந்துகொண்டு அந்தக் கணவனுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். அந்தக் கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவனான அந்தக் காதலனுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்தச் சூழ்நிலைக்கு ஒரு பாடல்:

"வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!'

தமது எழுதுகோலால் திரைவானில் நவரசங்களையும் அனாயாசமாக அள்ளித் தெளித்த அற்புத மேதை கவியரசர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகளே இவை.

எந்தவொரு உணர்ச்சியையும் பேசாது அவரது பேனா விட்டு வைக்கவில்லை. மனித வாழ்வில் நிகழும் எந்தவொரு சம்பவத்திற்கும் அவரது ஏதாவது ஒரு பாடல் பொருந்திப் போவதை நாம் காணலாம்.

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே!'

இப்படிப்பட்ட இலக்கிய நயம் கமழும் நல்ல தமிழ் வரிகளை ஒரு திரைப்படப் பாடலின் பல்லவியாக அமைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

இப்பாடல் ஈட்டிய பெருவெற்றி, திரைப்படப் பாடல்களை எளிமை என்கிற பெயரில் மலினப்படுத்திக் கொண்டிருந்த பல மாய்மாலக்காரர்களின் வாயை அடைத்தது.

அதுபோலவே தனது பாடலின் முதல் வரியிலேயே ரசிகனின் மனதைச் சுண்டியிழுப்பதில் வல்லவர் கண்ணதாசன்"

"பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே'

"சொன்னது நீதானா?'

"நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?'

"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்
என்னாவது?'

"ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்?'

"ஒருநாள் போதுமா?'

"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்'

"ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாய்?

"எங்கிருந்தாலும் வாழ்க!'

என்று கூறிக்கொண்டே போகலாம்.

மேலும் ஒரு பாடலில் முதல் மூன்று வரிகளை ஒரே மாதிரி அமைத்துவிட்டு நான்காவது வரியில் எதிர்பாராத ஒரு திருப்பத்தைத் தருவதும் இவர் வழக்கம்.

"கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
கையழகு பார்த்தால் பூ எதற்கு?
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு?'

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?'

"ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

"கூடிவந்த மேகமென்று கூந்தலைத் தொட்டார் - வண்
குவளைபோல மலர்ந்ததென்று கண்களைத் தொட்டார்
ஓடிவந்த கனிகளென்று இதழ்களைத் தொட்டார் - தொட்டால்
ஒடியுமென்று இடையை மட்டும் தொடாமல் விட்டார்!

பல்வேறு புராண, இதிகாச இலக்கியங்களை கவிஞர் ஆழ்ந்து அறிந்திருந்ததனால் இவரது ஒருசில பாடல்களில் அதிலும் ஓரிரு வரிகளில் மட்டும் அந்தப் பாதிப்பு துவக்கமாகத் தெரியும்.

"காலங்களில் அவள் வசந்தம்' (பகவத்கீதை)

"தோள் கண்டேன் தோளே கண்டேன்' (கம்பர்)

"நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை' (கம்பர்)

"அன்றொரு நாள் இதே நிலவில்' (பாரி மகளிர்)

"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி' (சித்தர்கள்)

"உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே' (குறள்)

"கண்வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்' (கம்பர்)

மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே(கம்பர்)

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' (வள்ளலார்)

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (அருணகிரிநாதர்)

சொல்லடி அபிராமி (பாரதி)

உன் கண்ணில் நீர் வழிந்தால் (பாரதி)

வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க (கலிங்கத்துப் பரணி)
இப்படி ஏராளம்.

ஆனால் அந்த ஓரிரு வரிகளைத் தொடர்ந்து அப்பாடலை கவிஞர் கட்டமைக்கும் விதம் அபாரம்.

உதாரணமாக "உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலின் சரணத்தில் வரும்

"பேருக்கு பிள்ளையுண்டு - பேசும்
பேச்சுக்கு சொந்தம் உண்டு - என்
தேவையை யாரறிவார்? உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறியும்!'
என்கிற வரிகள் கல் மனதையும் கரையச் செய்யுமே.

அதுபோலவே "நலந்தானா' பாடலின் சரணத்தில் வரும்
"கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யாரறிவார்?

என்ற வரிகளும் மிகவும் வியந்து ரசிக்கத் தக்கவை.

ஒரு திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நேரில் பார்க்காமலே காதல் கொள்கின்றனர்.
நாயகியைத் தேடி வரும் நாயகன் நாயகியின் தோழியை நாயகி என நினைத்துப் பழக, தோழியும் அவனை விரும்புகிறாள். அப்போது நாயகி தோழியைப் பார்த்து பாடும் ஒரு பாடலில்,

"கடலும் வானும் உள்ளவரை - தென்றல்
காற்று நடந்து செல்லும்வரை
வளர்க உந்தன் பள்ளியறை - நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை!'
என்று எழுதியிருப்பார். இதனை எப்படி வெறும் திரைப்படப் பாடல் என்று ஒதுக்க முடியும்?

"இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!'
என்றும்

"எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்தது
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்தது'
என்றும் பெரிய தத்துவங்களை எளிமையாக கூறி ரசிக்க வைப்பார் கண்ணதாசன்.

கல்லூரி வாழ்வின் பிரிவு நிலை பாடலான

"பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே'
பாடல் ஒலிக்காத கல்லூரிகள் இன்றுவரை இல்லை.

அதிலும் அப்பாடலின் சரணத்தில் வரும்

"எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ?'

போன்ற வரிகளே கண்ணதாசனை தனித்துவம்மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகின்றன.

ஒரு படத்தில்,

"நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!'

என்று எழுதியவர் வேறொரு படத்தில்

"மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று!'

எல்லாவித உணர்ச்சிகளையும் சித்திரிப்பதில் கண்ணதாசன் வல்லவர். ஆயினும் அவரது காதல் தோல்வி பாடல்களே அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது என்று கூறுவது மிகையன்று.

"நினைக்கத் தெரிந்த மனமே - உனக்கு
மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே - உனக்கு
விலகத் தெரியாதா?'

"எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது.'

"உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை'

'எங்கிருந்தாலும் வாழ்க - உன்
இதயம் அமைதியில் வாழ்க'

"கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்'

இப்படிப் பலப்பல.

காதலில் தோல்வியுற்று கையறு நிலையில் கலங்கி நிற்கும் நம் இளைஞனின் மனக்குமுறலை கவிஞர் ஒரு படத்தில் பாடலாக வடித்திருப்பதை காண்போம்.

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?

என்று தொடங்கும் அந்தப் பாடல் பல ஊர்களின் பெயரை தன் நிலையோடு ஒப்பிட்டுக் கூறிவிட்டு இறுதியில்,

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டுவிட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா!
மேலூரு போவதற்கும்
வேளைவர வில்லையடா!
என்று முடியும்.

மானுட வாழ்வின் சாரத்தை மையாக்கி திரைப்படப் பாடல்களை உருவாக்கிய அந்த மகத்தான கவிஞனை வெறும் திரைப்படப் பாடலாசிரியர் என்று கூறி தமிழுலகம் ஒருபோதும் ஒதுக்காது; ஒதுக்கவும் இயலாது.

['அவர்கள்' திரைப்படப் பாடல்]

ஏனெனில் "கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!'

June 22, 2009

"பிரபாகரன் ஓர் விடுதலையின் அடையாளம்"-பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

ழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பாக சென்னை சைதாபேட்டையில் 07-06-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.

பகுதி-1:

பகுதி-2:

June 20, 2009

'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: "பொறக்கும் போது பொறந்த குணம், போகப் போக மாறுது"

திரை இசை:

பாடலை எழுதியவர்: பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957

றாம் திணை இணயத்தளத்தில் தெ. மதுசூதனன், "'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" பற்றி எழுதியுள்ளது:

PK0620.jpg

'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதை எளிமையும், இனிமையும், புதுமையும் கொண்டு நவீன கவிதையாயிற்று. இதனால் தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டு புதிய களங்களில் பயனிக்க வழி ஏற்பட்டது. இந்த வழியைப் பின்பற்றி தமிழ்க்கவிதையை எழுதியவர்கள் 'பாரதி பரம்பரையினர்' என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ்க் கவிதை மரபின் செழுமைக்கும் வளத்துக்கும் காரணமாயிருந்த இந்தப் பரம்பரையில் பாரதிதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருமே தனித்தன்மை மிக்க கவிஞர்கள். சமுதாயத்தின் மறுமலர்ச்சி சீர்திருத்த சமத்துவச் சிந்தனையின் அடிச்சரடாகவே இவர்களது கவிதைகள் அமைந்திருக்கின்றன.

29 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் தான் எழுதிய பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான் காடு எனும் சிற்றூரில் அருணாசலக்கவிராயருக்கும் விசாலாட்சிக்கும் நான்காம் குழந்தையாக 13.4.1930 இல் பிறந்தார். இவரது தந்தையார் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால், அவர் பிள்ளைகளான கணபதி சுந்தரமும், கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டார்கள்.

கல்யாணசுந்தரம் ஆரம்பக்கல்வியை அண்ணன் கணபதி சுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்பு முடிந்துவிட்டது. காரணம் திண்ணைப் பள்ளிக்கூடம் சென்று படிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. தன் அண்ணனிடம் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார். அண்ணனும் கல்யாணசுந்தரம் மீது அளவற்ற அன்பு கொண்டவர்.

பாடல் பாடுவதிலும் கல்யாணசுந்தரம் ஈடுபாடு காட்டினார். நாடகம் திரைப்படம் பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். கற்பனை ஆற்றலும் இயற்கை ரசனையும் கல்யாணசுந்தரத்தை இயல்பாகவே கவிதை புனைய வைத்தன. 1946 இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.

'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன். அதுதான் இது.

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள். பாடல் இலக்கணங்கள் அறியாத நேரம் அது. எல்லோரும் இரசித்ததிலிருந்து ஓகோ இப்படித்தான் பாடல் எழுத வேண்டும் போலிருக்கிறது என்று சிந்தித்த நான் அன்று முதல் சுவையான நிகழ்ச்சிகள், பறவை இனங்கள், அழகிய காட்சிகள், அறிஞர்கள், மடையர்கள் இன்னும் மாடுகள், ஆடுகள், நாய்கள் எல்லாவற்றையும் பற்றி வேடிக்கையாகப் பாடுவதுண்டு''

இவ்வாறு தனது ஆரம்ப காலபாடல் இயற்றும் பின்புலத்தை அவரை கூறியுள்ளார். தான் வாழ்ந்த காலத்து சமுதாயத்து மக்களின் போக்குகளைக் கூர்மையாக அவதானித்தார்.

திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையும் சீர்திருத்தக் கருத்துக்களும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தன. இதன் தாக்கம் பல்வேறு இளந்தலைமுறையினரையும் பாதித்தது. பட்டுக்கோட்டையில் மிகத்தீவிரமாக பகுத்தறிவுக் கொள்கை பரவிக் கொண்டிருந்தது. இந்தத் தாக்கம் கல்யாணசுந்தரத்தையும் பாதித்தது. அவரது சிந்தனையும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதி மதபேத உணர்வுகளுக்கு எதிராகவும் திரட்சி பெற்றது. அவரது பாடல்கள் சமுதாய சீர்திருத்தம் வேண்டி மக்கள் எழுச்சிப் பாடல்களாக மலர்ந்தன.

பட்டுக்கோட்டைமண், கம்யூனிச கட்சியினரால் செல்வாக்கு மிக்க பிரதேசமாக மாறியது. பல்வேறு போராட்டங்கள் இங்கு வெடித்தன. கல்யாணசுந்தரத்தின் ஆளுமையும் கவிப்புலமையும் மேலும் மேலும் புத்துணர்வு பெற்றது. மக்களிடையே செல்வாக்குமிக்க கவிஞராக அடையாளம் காணப்பட்டார்.

திரைப்படத்துறையில் திறமையைக் காட்ட கல்யாணசுந்தரமும் அவரது அண்ணனும் சென்னை சென்றார்கள். ஆனால் அவர்களால் அங்கு தாக்குப் பிடிக்கமுடியவில்லை. ஊர் திரும்பினார்கள். திரைப்பட ஆர்வம் கவிஞரை விட்டுவிலகவில்லை. சிறிது காலம் சக்தி கிருஷ்ணசாமி நாடகக்குழுவில் சேர்ந்து கொண்டார். சில நாடகங்களில் நடித்தும் வந்தார்.

பாரதிதாசனோடு நட்பு ஏற்பட்டது. பலமுறை இருவரும் சந்தித்து உரையாடி வந்தனர். பாட்டுத்திறனை வளர்க்க பாரதிதாசன் துணையாக இருந்தார். திரைப்படத் துறைக்குள் நுழைவதற்குக்கூட உதவி செய்தார். 1950களில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். முதன்முதலாக 'படித்த பெண்' (1951) என்னும் படத்திற்கு எழுதினார். ஆனால் முதலில் வெளிவந்த படம் 'மகேஸ்வரி'.

அக்காலத்தில் கவிஞர்கள் காமு.ஷெரீஃப், மருதகாசி போன்றவர்கள் பாடல் எழுதும் திரைப்படத்துறையில் பட்டுக்கோட்டையாரும் நுழைந்து தனக்கென்று தனி முத்திரையை பதித்தார்.

ஊனுருக ஏழைகளின்
உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் - காம்
உயர்வாய் மதிக்குதடா - என்றும்

படம்: இரத்தினபுரி இளவரசி 1959

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா - நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா
வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்
படிச்சிட்டு வாரேண்டா - சிலர்
படிக்க மறந்தது நெறைய இருக்குப்
படிச்சிட்டு வாரேண்டா

படம்: கண்திறந்தது, 1959

''நான் நாடகங்களுக்கென்றும் சினிமாவுக்கென்றும் எழுதியுள்ள பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு காரணத்துடன் பிறந்ததாக இருக்கும். ஒரு சிறு சான்று: 'பனகல் பார்க்' என்று சென்னை தியாகராய நகரில் ஒரு பூங்கா உள்ளது. அதில் நான் சிந்தனை செய்வதற்கென்றே போய் உட்காருவேன். ஒருநாள் 'சக்கரவர்த்தி திருமகளில்' பாடல் ஒன்று எழுதத் கேட்டிருந்தபடியால் பொதுவாகவும் எல்லோரும் பாடலின் கருத்தில் அங்கம் வகிப்பவர்களாகவும் பாடல் அமைந்தால் நல்லது என்று நான் சிந்திக்கும்வேளையில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர், 'அவன் குணம் அப்படி; இவன் குணம் இப்படி; அதுக்கு ஆரென்ன செய்யுறது' என்று அவர்களுக்குள் எழுந்த வார்த்தைகள் என் செவிகளில் விழவே 'ஆமாம் மனிதனின் குணம் எப்பொழுது மாறுகிறதுட. இருந்த குணம் எப்பொழுது பிரிந்து போகிறது. மீண்டும் மனிதனிடம் எப்போது சேருகிறது என்று ஆராய்ச்சி பண்ணியவாறே 'உமா பிக்சர்சு'க்கு சென்று மாடியில் அமர்ந்தேன். பூனை ஒன்று என் பக்கத்தில் நின்றது. உறங்குகையில் பானைகளை உருட்டுவது பூனைக்குணம் என்று தொகையறா ஒன்றை ஆரம்பித்தேன்.

உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957

இவ்வாறு கவிஞரின் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நிகழ்வுகள் உண்டு. அவற்றை உள்வாங்கி அறிவுபூர்வமாக சிந்தனையைத் தொடுக்கும் வகையில் பாட்டு எழுதும் போக்கைத் தொடர்ந்து வந்தார். பாடலை தானே இசையுடன் பாட எத்தனிப்பார். பாடிப் பார்ப்பார். அப்போதுதான் பாடலின் முழுமையை தீர்மானமாக்குவார். கல்யாண சுந்தரம் முழுக்க முழுக்க இசைப்பாடல்களையே பாடியுள்ளார். இவரது பாடல்களில் இசையும் கவிதையும் ஒத்த சிறப்பு பெற்று கேட்பவர்களை உளக்கிளர்ச்சிக்குத் தூண்டும் சக்தி கொண்டவையாக உள்ளன.

ஒருமுறை இடதுசாரி சிந்தனையாளர்களான பா. ஜீவானந்தமும் கே. முத்தையாவும் கவிஞர் வீட்டில் சந்தித்தனர். அப்போது தான் எழுதிய புதிய பாடல் ஒன்றை படித்துக் காட்டினார். பாடும்பொழுது சில வரிகளை விட்டுவிட்டார். 'இடையில் இன்னும் சில வரிகள் இருக்கு கொஞ்சம் பொறுங்கோ' என்று கூறி வீட்டின் உள்ளே சென்றார். நோட்டுப் புத்தகத்தை எடுத்து வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். அவர் கையில் எடுத்து வந்தது தாம்பாளம்!.

கவிஞர் அதை வைத்துக் கொண்டு தாளம் போட ஆரம்பித்தார். சிறிது நேரம் தாம்பாளத்தில் தாளத்தை எழுப்பி அந்த இசையுடன் பாடலை மீண்டும் பாடினார். மறந்து போன வரிகள் நினைவுக்கு வந்தன. கவிஞர் உணர்ச்சிப் பெருக்குடன் தாளவேகத்தில் பாடலைப் பாடி முடித்தார்.

'தாளமும் இசையும் சேரும் போது கருத்தாழமிக்க அவரது கிராமிய இசைச் சொற்கள் கவிதைகளாகப் பிரவாகமெடுத்ததைக் காண முடிந்தது' என்று இந்த நிகழ்வைக் குறித்து கே. முத்தையா பதிவு செய்துள்ளார். ஆக கல்யாணசுந்தரத்தின் கவிதையும் இசையும் மக்கள் வாழ்வில் இருந்து பிறக்கும் உயிர்ப்புத்தன்மையுடன் கூடிய படைப்பு என்பது புலனாகிறது. அதுதான் கல்யாண சுந்தரத்தின் சிறப்பு. மக்கள் கவிஞருக்குரிய தகுதிக்கும் இலக்கணத்துக்கும் அவர் எழுதியுள்ள பாடல்கள் சான்று.

''எந்தப் புலவர் பேரவையும் எந்தப் பல்கலைக்கழகமும், எந்தத் தமிழ்த் தெய்வமும் பட்டுக்கோட்டைக்கு மக்கள் கவிஞர் என்று பட்டம் சூட்டவில்லை. மக்கள் மன்றமே அவருக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை மனமார வழங்கிற்று.''

பட்டுக்கோட்டை இயற்கை எய்திய ஓராண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக ப.ஜீவானந்தம் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். பட்டுக்கோட்டையின் தனித்தன்மை என்ன என்பதைத் துல்லியப்படுத்தியிருக்கும் இவரது கட்டுரை, பட்டுக்கோட்டை பற்றிய மதிப்பீட்டுக்கும் ஆய்வுக்கும் வெளிச்சம் காட்டும் வயைில் உள்ளது. திரைக்கவிஞர் என்ற பொத்தாம் பொதுவான மதிப்பீட்டுக்கு அப்பால் கவிஞரின் ஆளுமைகளை சமூக அரசியல் பார்வைகளை விரிவாக நோக்குவதற்கான தர்க்க அறிவுப்பின்புலத்தையும் இந்தக் கட்டுரை கொடுத்தது.

கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவர் வாழ்ந்த ஆண்டுகள் மிகக் குறுகியது. (மறைவு: 8-10-1959) ஆனாலும் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.

திரைப்படத்துறையினுள் நுழைந்தாலும் தனது தனித்தன்மை கெடாது திரைப்பட ஊடகத்துக்கும் கவிதைக்குமுள்ள தொடர்பின் தன்மையை தெளிவாகப் புரிந்து சாதனை நிகழ்த்திய ஓர் முன்னோடியாகவே தமிழில் வாழ்ந்துள்ளார்.

காணொளி: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து இந்திய மனித உரிமைகள் ஆர்வலர் V. சுரேஷ்

பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (The People's Union for Civil Liberties - PUCL) அமைப்பின் தலைவர் திரு. V. சுரேஷ், சென்னை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு இலங்கையில் தமிழர் நிலவரம், மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வழங்கிய செவ்வி:

பகுதி I:

பகுதி II:

தொடர்புபட்ட பொது உரிமைகளுக்கான மக்கள் (PUCL) ஒன்றிய ஆங்கில அறிக்கை:

PUCL India initiatives on the SL conflict and petition to the UN

June 18, 2009

வவுனியாவிற்கு இடம் பெயர்ந்தோரின் குடும்ப ஒருங்கிணைப்பு பற்றிய கொழும்பு வானொலி செய்தி

கொழும்பு, தமிழ் செய்தி ஒலிபரப்புக்களில் அண்மையில் ஒலிபரப்பாகிய செய்திக்குறிப்பு:


[mp3 ஒலிப் பதிவினை கேட்பதற்கு அழுத்தவும்]

[இன்டர் நியூசின் லைப் லைன் நிகழ்ச்சியினால் தயாரிக்கப்பட்டு, சூரியன் எப்.எம், ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளில் ஒலிபரப்பாகிவை]

~ Produced by INTERNEWS Sri Lanka for their programme, 'Lifeline' and aired on SLBC and Sooriyan FM ~

IDP camp - Pulmoddai 143

[திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை நலன் புரி முகாம் - படத் தொகுப்பு]

கவிஞர் தாமரையின் "அறப் பாடல்" ஒலி வடிவம்: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

விஞர் தாமரை வழங்கும் "அறப் பாடல்": கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ~

[mp3 ஒலிப் பதிவினை கேட்ப்பதற்கு இங்கே அழுத்தவும்]

Thamari_0618.jpg

கவிஞர் தமாரை

ஏ மிலேச்ச நாடே..!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுக்கிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை நடக்க விட்டவர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில் விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

அலை பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
..................................................

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

June 15, 2009

"நாடுகடந்த தமிழீழ அரசமைப்பு ஸ்ரீலங்கா கடும் போக்காளர் கரங்களை வலுவாக்கும்"-டி.பி.எஸ்.ஜெயராஜ்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்போவதாக அறிவிப்பு:

ற்காலிக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்யப்போவதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இலங்கை ஆய்வாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ஜூன் 15ஆம் திகதி பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய கருத்துக்கள்: [mp3 ஒலிப்பதிவினை கேட்பதற்கு அழுத்தவும்]

இதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா வாழ் சட்டத்தரணியான விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையிலான செயற் குழு மேற்கொள்ளும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தக் குழுவுக்கான ஆதரவை வழங்குமாறு அனைத்துலக தமிழர் அமைப்புக்களை அவர் கேட்டிருக்கிறார்.

ஜனநாயக ரீதியில் அமைக்கப்படவுள்ள இந்த அரசாங்கம் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் என்றும், அதேவேளை, இலங்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், உள்நாட்டுக்கான செயற்திட்டங்களை மேற்கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரு செயற்பாடுகளிலும் ஒரு இணைவு இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தமிழக அகதிமுகாம்களிலுள்ள ஈழத் தமிழ் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் உதவி

மிழகத்தின் அகதி முகாம்களில் துன்பப்படும் ஈழத் தமிழர்களின் குழந்தைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் கல்வி உதவி வழங்குவதை கடமையாகக் கொண்டுள்ளதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

Sivakumar0615.jpgநடிகர் சிவகுமார், தனது 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைகள் மற்றும் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறார்.

இம்முறை 30ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவரது புத்திரர்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 30 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் கல்வி மேம்பாட்டுக்காக இயங்கும் சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ரூ.6 லட்சம் உதவித் தொகையையும் வழங்கினார் சிவகுமார்.

நிகழ்ச்சியில் சிவகுமார் பேசுகையில்,

சிவகுமார் அறக்கட்டளை 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகள் நான் அந்த அறக்கட்டளையை நடத்தி என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணிகள் செய்தேன். பின்னர் என் மகன் சூர்யா அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, என்னைவிட சிறப்பாகச் செய்து வருகிறார்.

அவர்தான் உதவித் தொகையை ரூ.10000-ஆக உயர்த்தினார். ஆண்டுதோறும் உதவி பெறும் மாணவர் எண்ணிக்கையையும் உயர்த்தி வருகிறார்.

நான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டுப் படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலையே காணப்படுகிறது.

இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்"என்றார். [நன்றி: வீரகேசரி]

June 13, 2009

தாயக பரணி: "காலை விடிந்ததென்று பாடு...சங்க காலம் திரும்பியது ஆடு..."

[ஆழக் கடல் எங்கும் சோழ மகராஜன்~நெஞ்சின் கீதம்]

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
வேங்கை கடல் வீரர் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
இன்னல் இனி மேலும் இல்லை
புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
பூமி தனிலேது தொல்லை
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தம்பி
எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
பகையை முடிப்பானே பொங்கி
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்
வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

June 11, 2009

கொழும்பு~தமிழ் செய்தி ஒலிபரப்புக்களில் அண்மையில் ஒலிபரப்பாகிய செய்திக்குறிப்புக்கள்

ஜூன் 11, 2009:

MFOO0611.jpg

[வவுனியா-மெனிக் பாம் நலன்புரி நிலையம்-படம்: ஐ.நா]

சிறார் போஷாக்கு

மாணவர் உளவியல்

கண்ணி வெடியகற்றல்

புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு-க.வேதாரணியம்

நலன் புரி நிலையத்தில் பாவனை பொருட்கள்

[இன்டர் நியூசின் லைப் லைன் நிகழ்ச்சியினால் தயாரிக்கப்பட்டு, சூரியன் எப்.எம், ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளில் ஒலிபரப்பாகிவை]

~ Produced by INTERNEWS Sri Lanka for their programme, 'Lifeline' and aired on SLBC and Sooriyan FM ~

June 09, 2009

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர்- 3!

தி.வழுதி

து நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.   

சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.
 
வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது.
 
கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம்.
 
எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம்.
 
எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார்.
 
'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார்.
 
தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார்.
 
அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது.
 
விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.
 
விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.
 
விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.
 
ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
 
தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...
 
அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...
 
அல்லது - வெளிநாட்டுப் பணயங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...
 
அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...
 
அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..
 
அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..
 
எனக்கு எதுவும் தெரியாது.
 
ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.
 
தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார்.
 
வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.
 
உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.
 
அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.
 
மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.

ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக்குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார்.
 
எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடிகுண்டு அங்கியை - துப்பாக்கி குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு - களத்தில் அவர் மடிந்திருக்கின்றார்.
 
மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார்.
 
தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.

முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் -
 
இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு.
 
பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.
 
'தமிழீழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.
 
விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.
 
தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் போரிக்கையைப் பலப்படுத்தி -
 
எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -

பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.
 
பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.
 
ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து  தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
 
சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார்.
 
அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார்.
 
தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும்.
 
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.
 
அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.

அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.


தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா

அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட.
 
அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம்.
 
அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட.
 
தேசத் தந்தை எஸ். ஜே.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது.
 
தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது.
 
ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.
 
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை.
 
மிகக் கொடூரமான இன அழிப்புப் போருக்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை.
 
பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.
 
அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - 30 ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.
 
அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'
 
தி.வழுதி

உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

[நன்றி: புதினம்.கொம்]