ஊற்று

தமிழர்கள் உரிமைகளை மீட்பதில் அக்கறை உண்டு-ஜெயலலிதா

"லங்கைத் தமிழர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களின் உரிமைகளையும் மீட்பதில் எனக்கு அக்கறை உண்டு'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

MJO0325.jpg

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா-படம்: Jerome.K

இது குறித்து, முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ச்சத்தீவை இலங்கை அரசு புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவது குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு, முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

அதில், கடந்த 1974-ல் சட்டப் பேரவையில் தான் முன்மொழிந்த தீர்மானத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அதைப் படித்துப் பார்த்தாலே ஏதோ சம்பிரதாயத்துக்காக, சமாதானத் தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போலத் தான் இருக்கிறது. இழந்த உரிமையை மீட்கக் கூடிய போராட்டத் தொனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல இல்லை.

மேலும், "கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக, மத்திய அரசிடம் இருந்து எந்த சூசகமான தகவலும் அரசுக்கு வரவில்லை' என்று அப்போது கருணாநிதி கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார் கருணாநிதி. அப்போது, "ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் இந்தியா கச்சத்தீவை விட்டுத் தரக் கூடாது என்ற கருத்து தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது' என்று கடந்த 1974-ல் சட்டப் பேரவையில் தீர்மானத்தின் மீது தான் பேசியதாக கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சில் இருந்தே, கச்சத் தீவை தாரை வார்க்க இந்தியா தயாராகி விட்டது என்பது முன்கூட்டியே கருணாநிதிக்கு தெரிந்திருப்பது தெளிவாகிறது.

நாடு தழுவிய போராட்டம்... 1974-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, இதை எதிர்த்து ஒரு நாடு தழுவிய போராட்டத்தை கருணாநிதி நடத்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், 1974-ல் ஒப்பந்தம் நிச்சயமாக ஏற்பட்டு இருக்காது.

கண்டும் காணாமல் இருப்பது, முதல்வர் கருணாநிதிக்கு கை வந்த கலை. எனவேதான், கச்சத்தீவை புனிதப் பகுதியாக இலங்கை அரசு அறிவிக்க இருப்பதை உடனடியாக மக்களின் கவனத்துக்கும், மத்திய அரசின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றேன்.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்குவது குறித்து கூறியவுடன், இந்தப் பிரச்னையில் மாநில அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்காது என்றார் கருணாநிதி.

கச்சத்தீவை தாரை வார்த்தது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஆகியன அவரது ஆட்சியில்தான்.

அனைத்துத் தமிழர்கள் மீதும்... இலங்கைத் தமிழர் மீதும், கச்சத்தீவு மீதும் ஏன் இவ்வளவு அக்கறை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்தாண்டு காலம் முதல்வராக பதவி வகித்தும், மிகப் பெரிய கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ள எனக்கு இலங்கைத் தமிழர்கள் உள்பட அனைத்துத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதிலும் அக்கறை உண்டு.

ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால்... இலங்கைத் தமிழர்களை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் அளிக்க உறுதுணையாக நான் இருந்தேனா?

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்ததைக் கண்டித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருந்தால், மத்திய அரசு கவிழ்ந்து இருக்கும். தமிழர்கள் அழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர்கள் மீது அந்த நாட்டு ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயம் கருணாநிதிதான். இதை யாராலும் மறுக்க முடியாது'' என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை