இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசன் பற்றிய நினைவுகள்
6 ஆவது நினைவு தினம்
சி.சிவசேகரம்
இலங்கையின் அரசியல் வரலாற்றை எழுதுகின்ற எவரும் ஊழல், ஏமாற்று, நிதி மோசடி போன்ற குற்றச் செயல்கட்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவர்களுக்கென ஒரு அத்தியாயத்தை ஒதுக்கினால் அது பல பக்கங்களை கொண்டதாக இராது. அதிலும் அரசியல் நேர்மையை மேலதிகமான ஒரு தகுதியாக்கினால் பக்கங்கள் மேலும் குறையும். அவ்வாறான ஒரு அத்தியாயத்தை வாசிக்கிற எவரும் அது பெருமளவும் இடதுசாரி இயக்கத் தலைவர்களைப் பற்றியதாகவே இருப்பதாக முறைப்பட இடமுண்டு. எனினும், அந்த அத்தியாயத்தில் சம கால பாராளுமன்ற இடதுசாரிகளின் பெயர்கள் மிக அரிதாகவே இடம்பெற இயலும்.
தோழர் நா. சண்முகதாசனின் முக்கியத்துவம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் அவர் வழிநடத்தப்பட்டார் என்பது மட்டுமல்ல, இலங்கை அரசியலில் இடதுசாரி இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புறம் திட்டமிட்ட ஊடக இருட்டடிப்புக்கும் அதிகார நிறுவன ஓரங்கட்டலுக்கும் உட்பட்டது காரணமாக, அதன் பெறுமதியை இளைய தலைமுறையினர் அறியும் வாய்ப்பு மிகக் குறைவாகவேயுள்ளது. எனினும், இப்போது முதலாளியம் உலகளாவிய முறையில் எதிர் நோக்குகின்ற நெருக்கடி இடது சாரிச் சிந்தனையைப் பற்றியும் மாக்ஸியப் பொருளியல் பற்றியும் முதலாளிய நாடுகள் பலவற்றிலும் புதிய அக்கறையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் நெருக்கடியின் பாதிப்பு ஏலவே உணரப்பட்டாலும் வடக்கு, கிழக்கில் நடக்கிற போரின் மீதான கவனம் காரணமாக அதைப்பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி எவருமோ எல்லாருமோ பேசாமல் இருப்பதால் அது இல்லாமற் போய்விடாது. சில மாதங்களில், நிச்சயமாக இந்த ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை இந்த நாடு மிகுந்த வேதனையுடன் உணரும். எனினும், முதலாளிய பொருளாதார அவலம் தானாகவே எந்த நாட்டையும் சோசலிஷத்தை நோக்கியோ இடதுசாரிப் போக்கில் ஒரு புரட்சிகர மாற்றத்தை நோக்கியோ கொண்டு செல்ல அவசியமில்லை.
முதலாளியத்தால் மக்களின் கவனத்தை வேறு திசைகளில் திருப்ப இயலும். அது அவ்வாறு செய்வதிற் பன்முறை வெற்றி கண்டுமுள்ளது. 1940ற்கு முன்பிருந்து ஐரோப்பாவில் ஃபாஸிஸ ஆட்சிகள் ஏற்பட்டன. ஃபாஸிஸம் உலகளாவிய முறையில் ஒரு போருக்குக் காரணமாகியது. அதை விழுத்துவதில் சோவியத் யூனியனின் பங்கு முதன்மையானது. ஆனால், ஃபாஸிஸம் சாகவில்லை. முதலாளியம் அதை உயிரோடு வைத்திருக்கிறது. எல்லா நாடுகளிலும் ஃபாஸிஸத்தை தோற்றுவிக்கவும் மீள உயிர்ப்பிக்கவும் வலுப்படுத்தவும் தேவையான தீய சக்திகள் செயற்படுகின்றன. இந்துத்துவம், சிங்கள பௌத்தம், கிறிஸ்தவ அடிப்படை வாதம், முஸ்லிம் தீவிர வாதம் போன்ற அனைத்தினுள்ளும் ஃபாஸிஸத்தை உயிர்ப்பிக்க வேண்டிய மூலப் பொருட்கள் உள்ளன. குறுகிய தேசிய வாதம், பிரதேச வாதம் போன்றவற்றினூடும் ஃபாஸிஸம் செயற்பட இயலும். எனவேதான் இன்று மனித இனத்தின் விடுதலை மட்டுமன்றி, அதன் இருப்பும் இடது சாரி இயக்கத்தின் மீள் எழுச்சியின் மீது பெரிதும் தங்கியுள்ளது.
நமது நாடு முகம் கொடுக்கும் தேசிய இனப்பிரச்சினையும் அதன் உச்சக்கட்ட வடிவமான போரும் வெறுமனே இரண்டு தேசிய இனங்களிடையேயான மோதல் பற்றியன அல்ல. அவற்றினின்று பிரிக்க இயலாதனவாகவே ஏகாதிபத்திய உலகமயமாக்கலும் மக்களின் சனநாயக மனித உரிமை மறுப்புகளும் உள்ளன. ஊடகங்களும், சட்டமும் நீதித்துறையும் எதிர் நோக்குகின்ற சவால்களை எல்லாம் வேறுவேறாக நாம் பிரித்துப் பார்க்க இயலாது. இந்த நாடு எதிர் நோக்கி நிற்கும் பயங்கரமான பொருளாதார நெருக்கடி உலக முதலாளியத்தினதும் நாட்டின் பேரினவாத முதலாளியம் உருவாக்கிய தேசிய இனப் பிரச்சினையினதும் அதன் விளைவான ஆயுத மோதலினதும் காரணமானது. எனவே தான் தீர்வுகளை நாம் தனித்தனியேபெற இயலாது. ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமும் தனியே ஒரு பிரச்சினையைப் பேசலாம். ஒவ்வொரு நெருக்கடிக்கும் எதிரான நடவடிக்கையும் தனியே அந்த நெருக்கடி பற்றி கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், அவை ஒட்டு மொத்தமான பிரச்சினையை புறக்கணித்தும் பிரச்சினைகளிடையேயுள்ள பரஸ்பர உறவுகளைப் புறக்கணித்தும் செய்யப்படும் போது தம் வெற்றி வாய்ப்பை குறைத்துக் கொள்ளுகின்றன. அவை இந்த நாட்டை அழிக்கவும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்லவும் திட்டமிடுகின்றவர்களை வருமாறு வலிந்து அழைக்கிற குற்றத்திற்கு போராட்டங்களை நடத்துவோரை உடந்தையாளராக்குகின்றன. எனவே தான், நாட்டை எதிர் நோக்குகின்ற சமூக அரசியல் பொருளாதார நெருக்கடியையும் அதன் விளைவான சவால்களையும் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய சுரண்டலும் ஆதிக்கமும், பிராந்திய மேலாதிக்கம் என்பன தம்முள் முரண்பட்டு நிற்பதாக நினைத்தவர்கள் அவற்றிடையேயுள்ள முரண்பாடுகளைப் பாவித்து தமது போராட்டங்களை வெல்லலாம் என்று கனவு கண்டார்கள். இப்போது இலங்கை எதிர் நோக்குகின்ற பொருளாதார வீழ்ச்சியோடு சேர்த்து ஃபாஸிஸ ஒடுக்குமுறை சர்வாதிகார ஆட்சி அமையும் ஆபத்து மேலும் அதிகமாகியுள்ளது. அதை கண்டிப்பது போல கண்டித்துக் கொண்டே திரை மறைவில் ஆதரிக்கிற காரியத்தையே சர்வதேச சமூகமும் பிராந்திய மேலாதிக்க வல்லரசும் செய்து வந்துள்ளன. இனியும் செய்யப் போகின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்பது ஃபாஸிஸத்துக்கு இணக்கம் தெரிவிக்கிறதற்கான ஒரு கருவியாகிவிட்டதை உலகிற் பல்வேறு நாடுகளிற் கண்டுள்ளோம்.
எனவே, நாட்டின் முன்னுள்ள சவால்கள் தேசிய இனப் பிரச்சினை, இன ஒடுக்கல் யுத்தம், ஏகாதிபத்திய உலகமயமாக்கல், பிராந்திய மேலாதிக்கம், இலங்கையின் மீதான அந்நிய இராணுவ ஆதிக்கம், வேகமாக நெருங்கிவரும் பொருளாதார அவலம், ஃபாஸிஸ மிரட்டல் என்று பலப்பலவாகத் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொண்டு தீர்வுகளை காண்பதற்கு அவற்றுக்குக் காரணமான பிரதான முரண்பாடுகளை விளங்கிக் கொள்வோமானால் நமது போராட்டம் வலுப்பெறும். எதிரிகளை தனிமைப்படுத்த இயலுமாகும். மக்கள் ஒரு வலுவான வரலாற்றுச் சக்தியாக மேலெழுவர்.
இதுவரை உலக வரலாற்றில் தேசிய இன விடுதலை, ஃபாஸிஸ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பல்வேறு ஒடுக்கு முறைகட்கும் எதிரான போராட்டம், நாடுகளின் இறைமையைப் பேணல் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப கண்டு வருகின்றோம் என்றால் அந்த இடம் மாக்ஸிஸ லெனினியத்தால் வழிநடத்தப்படுகிற ஒரு கட்சியாகவோ விடுதலை இயக்கமாகவோ சோசலிஷ அரசாகவோ தான் இருக்க முடியும். எனவே, இன்று நமக்கு மிகவும் தேவைப்படுவது அத்தகைய நெறி பிறழாத மாக்ஸிய லெனினியச் சிந்தனையால் வழிநடத்தப்படும் ஒரு மக்கள் இயக்கமே. அதன் அடிப்படையிலேயே தோழர் சண்முகதாசனின் பங்களிப்பின் முக்கியத்தை இன்று முன்னெப்போதையும் விட அதிகமாக வலியுறுத்த வேண்டியுள்ளது.
தோழர் சண் இலங்கை இடது சாரி இயக்கத்தை உருவக்கிய முன்னோடிகளிலும் காலத்தாற் சிறிது பிற்பட்டவர். அவரது அரசியல் வருகையின் போது இலங்கை இடதுசாரி இயக்கம் ஏற்கனவே பிளவு பட்டுவிட்டது. இலங்கையின் இடது சாரி இயக்கத்தில் மட்டுமே ஸ்தாலினை எதிர்க்கிறதாகக் கூறி த்ரொத்ஸ்கியின் (ட்ரொட்ஸ்கி) வழியில் இடது சாரி இயக்கத்தின் பெரும்பான்மை சென்றது. அவர்கள் உண்மையில் எதிர்த்தது ஸ்தாலினை அல்ல லெனினையும் மாக்ஸிஸ லெனினியத்தையும் உலக கம்யூனிஸ இயக்கத்தையுமே என்று நிலை நாட்டிய கம்யூனிஸ்ட்டுகளில் சண் மிக முக்கியமானவர். சமசமாஜக் கட்சியில் இருந்த மிகவும் கற்றறிந்த தத்துவ ஆசிரியர்களால் சண்முகதாசனின் வாதங்களை எதிர்த்து முறியடிக்க இயலாத அளவுக்கு கட்டுக்கோப்பாகவும் தகவல்களின் அடிப்படையிலும் தர்க்க ரீதியாகவும் தோழர் சண் தனது வாதங்களை முன்வைக்க வல்லவராக இருந்தார்.
அவருடைய கட்சிச் செயற்பாடு அவரது அரசியல் ஆய்வு, தத்துவம், வாதத் திறன் என்று ஏட்டளவில் நிற்கவில்லை. ஊழியர்களோடு ஊழியராக அவர்களுடைய இன்னல் இடர்களிலும் பங்காளியாகச் சேர்ந்து உழைத்தார். அந்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே இலங்கையின் உடல் உழைப்பாளர்களை அதிகளவிற் கொண்ட தொழிற்சங்க அமைப்பாக இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் கட்டியெழுப்பப்பட்டது. இதை அவரது தனிப்பட்ட சாதனை என்றவகையில் அல்லது அவரோடு ஒன்றாக இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சித் தொண்டர்களுக்கும் தொழிலாளி வர்க்கத்தின் போராளி முன்னோடிகட்கும் உரிய ஒரு சாதனையில் அவரது மெச்சத்தக்க ஒரு பங்களிப்பு என்ற வகையிலேயே கூறுகின்றேன்.
கட்சியையும் தொழிற்சங்கத்தையும் கட்டியெழுப்பி அவற்றை பெரிய நிறுவனங்களாக்குவதுடன், ஒரு மாக்ஸிஸ லெனினியப் போராளியின் கடமை முடிந்து விடும் என்றால் அவருக்கும் ஆற்றல் மிக்க ஒரு கம்பனி நிர்வகிக்கும் இடையே அதிகம் வேறுபாடில்லை. கட்சியும் தொழிற்சங்கமும் தமது இறுதி இலக்குப் பற்றிய தெளிவுடனும் பற்றுறுதியுடனும் இருப்பதை உறுதிப்படுத்துவதாயின் அவற்றை கட்டியெழுப்புவதற்கான போராட்டங்கள் போன்று அவை திசை விலகாது கவனித்துக் கொள்வதற்கான போராட்டங்களும் கட்சிக்குள்ளும் தொழிற்சங்கத்திற்குள்ளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இடது சாரிக் கட்சிகளின் தொடக்க காலப் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிகள் அவற்றின் தலைமைப் பீடத்தில் இருந்தோரிடையே பாராளுமன்ற அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்கிற சபலத்துக்கு இடமளித்தது. 1956 ஆம் ஆண்டு பண்டார நாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றி, அக்கட்சித் தலைமைகளிடையே வெவ்வேறு விதமான சந்தர்ப்பவாத அரசியற் சிந்தனைகட்கும் தூண்டுகோலாக அமைந்தது. வெகுசனப் போராட்டங்களின் மூலம் நாட்டிற் புரட்சிகர அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவும் ஆயத்தமாக இல்லாமல் பாராளுமன்றத் தேர்தல் மூலமும் பெரும்பான்மைக் கட்சியாக அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பும் இல்லாமல் முதலாளியக் கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வரலாம் என்கிற எண்ணம் 1960களில் வலுப்பட்டது. இது சமசமாஜக் கட்சிக்குள்ளேயே முதலில் ஏற்பட்டது. எனினும், இவ்வாறான சிந்தனையை ஊக்குவிக்கிற விதமாக சர்வதேசக் கம்யூனிஸ இயக்கத்தில் 1963 64 ல் ஏற்பட்ட பிளவின் பின்பு சோவியத் கம்யூனிஸ்ற் கட்சித் தலைமை நடந்து கொண்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஒரு பிளவு ஏற்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட பிளவின் போது அது வெறும் உடைவாக மட்டுமன்றி கட்சியின் கிளைகளிலும் தொழிற்சங்க ஊழியர்கள் மத்தியிலும் பிளவிற்குக் காரணமான பிரச்சினைகள் கனதியாகவும் தீவிரமாகவும் விவாதிக்கப்பட்டன. தோழர் சண் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் தொழிற்சங்க இயக்கத்தினுள்ளும் அரசியலுக்கு வழங்கி வந்த முக்கியத்துவத்தின் பயனாக கம்யூனிஸ்ட் கட்சியின் உடைவின் போது கட்சியின் பெருமளவிலான உறுப்பினர்களும் தொழிற்சங்க நிறுவனத்தின் ஏகப் பெரும்பான்மையினரும் சண்முகதாசனின் தலைமையில் தமது அரசியல் தொழிற்சங்கப் பயணத்தைத் தொடர்ந்தனர். இது அரசியல் வேலையின் முக்கியத்தை உணர்த்தியது. அரசியல் விவாதங்கள் தலைமையில் உள்ளவர்கட்கும் நிபுணர்கட்கும் தத்துவவாதிகட்கும் மட்டுமன்றி கட்சியில் உள்ள எல்லாருக்கும் உரியனவும் அவசியமானவையும் என்பதை ஏற்றதன் விளைவானது.
திரிபு வாதிகளும் சமசமாஜிகளும் தமது சந்தர்ப்பவாத அரசியலின் விளைவாக 1966 ஜனவரியில் டட்லி செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஒரு பேரினவாத பேரணியிற் சென்ற போது அவர்களை மிக வன்மையாக விமர்சித்தவர் தோழர் சண். அது போலவே விஜேவீரவினதும் ஜே.வி.பி.யினரதும் அரசியல் மாக்ஸிஸ அரசியல் அல்ல என்றும் அது தொழிலாளி வர்க்க விரோதமானதும் பேரினவாதத் தன்மையுடையதும் என்றும் ஆணித்தரமாகச் சுட்டிக் காட்டியரும் அவரே.
இலங்கையில் நடந்த சமூகநீதிக்கான போராட்டங்களில் தனது போராட்ட இலக்கை முழுமையாக வென்ற ஒரே போராட்டம் தீண்டாமைக்கு எதிரான வெகுசன இயக்கத்தால் 1966 அக்டோபரில் முன் னெடுக்கப்ட்ட போராட்டமாகும். அதுவே இதுவரை நடந்த ஆயுத எழுச்சிகளிற் தோல்வியின்றி முடிந்த ஒரே எழுச்சியுமாகும். அதை இயலுமாக்குவதில் மாக்ஸிசம் லெனினியம் மாஓ சேதுங் சிந்தனையின் வழிகாட்டல் முதன்மையான பங்களித்தது.
மக்களை முதன்மைப்படுத்தல், பரந்துபட்ட ஐக்கியம், வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம் என்ற கருத்தாக்கங்களின் நடைமுறைப் பிரயோகமாக அப்போராட்டம் அமைந்தது. அதிலிருந்தே தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற பாதையை நிராகரித்துப் போராட்டப் பாதைக்கான ஊக்குவிப்பையும் பெற்றனர். எனினும், கற்க வேண்டிய முக்கியமான பாடங்களான மக்களை முதன்மைப் படுத்தலையும் பரந்துபட்ட ஐக்கியத்தையும் கற்கத் தவறிவிட்டனர். சுயசார்பிற்குப் பதிலாகப் பலர் அந்நிய ஆதரவை நாடினர். ஆயுதங்களை முதன்மைப்படுத்தி அரசியலைப் பின் தள்ளினர். அவற்றின் விளைவுகளை நாம் கடந்த முப்பதாண்டுகளாகக் கண்டு வருகிறோம்.
தோழர் சண்ணை விமர்சிக்கிறவர்களில் பலவகையினர் உள்ளனர். அவரது பங்களிப்புக்களது பெறுமதியை, அவற்றின் சரிபிழைகளை வரலாற்றில் வைத்து நோக்கிச் சீர்தூக்கி அவரை இலங்கையின் முக்கியமான ஒரு மாக்சியவாதியாக மதிப்போர் உள்ளனர். அவரை ஏற்காத போதும் அவரது நேர்மையையும் ஈடுபாட்டையும் செயலுறுதியையும் மெச்சுகிறவர்கள் இருக்கிறார்கள். அவரது கொள்ளைகளை எதிர்ப்பதற்காக அவர் மீது வலிந்துபிழை பிடித்துத் தனிப்பட்ட நிந்தனைகளில் இறங்குவோர் உள்ளனர். திசைதவறிப்போன மக்கள் விரோத முகாங்களில் ஒண்டிக் கிடந்து பயன்பட எதையும் செய்கிறவர்களை நிந்திப்பதையே தொழிலாகக் கொண்டவர்களுக்கும் சண் ஒரு இலக்காகவே இருந்து வருகிறார்.
இன்று நமக்கு வேண்டியவை என்ன? ஏகாதிபத்திய உலகமயமாதலை நாம் ஏற்கிறோமா? பேரினவாத ஒடுக்குமுறையையும் போரையும்நாம் ஏற்கிறோமா? தேசிய இனங்களிடையே நிரந்தரமான பகைமையை நாம் ஏற்கின்றோமா? சாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், பால் என்கிற அடிப்படைகளிலான ஒடுக்குமுறையை ஏற்கிறோமா? இல்லை என்பது தான் எங்கள் மறுமொழியாக இருந்தால், அவற்றை எல்லாம் எதிர்த்துப் போராட என்ன வழி என்ற கேள்விக்கு விடைகூற வேண்டும்.
தனியே பிரதேச அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ போராடி வெல்ல இயலுமா? அத்தகைய அணுகுமுறை என்ன விளைவைத் தரும்? அவ்வாறு எதையும் வெல்ல முடியாது என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
அந்நிய வல்லரசுகளை நம்ப இயலுமா? அரசியல் வழிகாட்டல் அற்ற வன்முறையை நம்ப இயலுமா? மக்கள் பெருமளவில் பங்குபற்றாத எந்தப்போராட்டத்தையும் நம்ப இயலுமா? இவ்வாறே பெருகிச் செல்கிற கேள்விகள் இறுதியில் ஒரு இடத்தில் வந்து ஒடுங்குகின்றன. அந்த இடந்தான் மக்கள் போராட்ட அரசியல் மார்க்கம். அதற்குள்ளே தான் பரந்துபட்ட ஐக்கியம், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம், வெகுசன அரசியல் போன்ற பலவும் உள்ளடங்குகின்றன.
நம்மை அந்த இடத்திற்கு வழிகாட்டியவர்களில் தோழர் சண்முகதாசன் மிக முக்கியமான ஒருவர். அதுவே அவரது அரசியல் முக்கியத்துவம். மாக்ஸியம் லெனினியம் மாஓ சேதுங் சிந்தனை என்ற இடத்தை வந்தடைய தோழர் சண் தனது அரசியல் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார். அந்தப் போராட்டப் பாதை வெறுமனே ஏட்டிற் படித்துக் கற்றதல்ல. ஒரு வாழ்நாட் கால அனுபவத்தின் வழியில் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டின் மூலம் கண்டறியப்பட்டது. அதைச் சமகால அனுபவங்களின் அடிப்படையில் மேலும் செழுமைப்படுத்தி மக்களிடையே சென்றடையச் செய்வதன் மூலமே இந்த நாட்டையும் சகல தேசிய இனங்களையும் ஒடுக்கப்பட்ட ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களையும் சுதந்திரமும் சுபீட்சமும் பெற்றவர்களாக்க இயலும்.
பாராளுமன்ற மூலமும் ஆயுதப் போராட்டத்தை அறவே நிராகரித்தும் மக்களால் விடுதலையையும் சோசலிஷத்தையும் வெல்ல முடியும் என்பது மாக்ஸிஸத்தைத் திரிப்பதாகும். எனவே, அந்த நிலைப்பாட்டை எடுத்தோர் திரிபுவாதிகள் என அழைக்கப்பட்டனர். தோழர் சண் திரிபு வாதத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுத்த கொள்கைப் போராட்டம் முன்பு ட்ரொட்ஸ்கியத்திற்கு எதிராக அவர் செய்ததை விட கடுமையான முயற்சியையும் உழைப்பையும் வேண்டி நின்றது. எனினும், அவரோடு நின்ற பல நல்ல தோழர்களது உதவியுடன் அவரால் திரிபு வாதிகளை விட வலுவான ஒரு கட்சிப் பிரிவை கட்டியெழுப்ப முடிந்தது. இந்த நிலையிலேயே திரிபு வாதிகளில் கேடுகெட்டவர்கள் சிலர் சண்முகதாசன் ஒரு தமிழர் என்று சுட்டிக் காட்டுகிற முறையில் பொது மேடைகளில் பேசினர். இதன் பின்பு ரஷ்யாவில் புலமைப் பரிசில் பெற்று அங்கிருந்து "வெளியேற்றப்பட்டு' இலங்கை திரும்பிய ரோஹண விஜேவீர மாக்ஸிய லெனினியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து அதற்குள்ளிருந்து தோழர் சண்ணுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகளில் இறங்கி 1966 இல் தனது வேடம் கலைந்ததும் வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் செய்த தீய காரியங்களின் விளைவாக கட்சியும் இடது சாரி இயக்கமும் மிக நட்டப்பட்டன. இலங்கையில் இடதுசாரி இயக்கத்தினுள் இனவாத நஞ்சைப் பரப்பியதில் விஜேவீரவின் பங்கு முக்கியமானது. அதிலிருந்து ஜே.வி.பி. மீள வில்லை. அது இனவாதக் கட்சியாகவே இருந்து வந்தது.

