காணொளி: நாகூர் ஈ.எம். ஹனீபா வழங்கும் "தமிழுக்கு அமுதென்று பேர்"
பாவேந்தர் பாரதிதாசன் வடித்த ~ தமிழுக்கு அமுதென்று பேர் ~ பாடுபவர் கலைமாமணி நாகூர் ஈ.எம். ஹனீபா:
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! - பாவேந்தர் பாரதிதாசன்
நாகூர் ஈ.எம். ஹனீபா
இசைமுரசு, அருளிசை அரசு, கலைமாமணி முதலிய பட்டங்களைக் குவித்துள்ள ஈ.எம்.ஹனீபா இசுலாமிய மெல்லிசையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து வருகிறார். இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் முகவை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நாகூரே இளமை முதல் வாழிடமாக அமைந்து விட்டது. காரைக்கால் ஏ.எம்.தாவுது போன்றோர்களின் இசையரங்க நிகழ்ச்சிகளைக் கேட்டதனால் இளமை முதலே எழுச்சி பெற்றுப் பாடி வருகிறார். நுண்ணுணர்வும் கேள்வியறிவும் நிரம்பவுடைய இவருக்கு முறையான இசைப் பயிற்சி தேவைப் படவில்லை. 70 அகவைக்குப் பிறகும் இவருக்கே இயல்பான குரல் வளமும் தெளிவான தமிழ் ஒலிப்பும் சற்றும் குறையாமை வியப்புக்குரிய ஒன்று.
ஹாங்காக், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இசை மழை பொழிந்துள்ளது இவ்வின்னிசைக் கொண்டல். நாளும் இன்னிசையால் நபிகள் புகழையும், திருக் குர்ஆனையும், திராவிட இயக்கத்தையும் பரப்பி வரும் இவர்தம் இசையரங்குகள் பொதுக் கூட்டங்களிலும், இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மிகுதியாக இடம் பெறும். இவர் பாடலிலும் மரபுபிறழாத உருப்படிகள் உண்டு. மெல்லிசைப் பாடல்களும் கர்னாடக இசை மரபின் சாயல் மிகுந்தவையே.
கழகம் இட்ட கட்டளைப் படிக் கைத்தறித் துணியை விற்ற போதும், சிறைப் பறவையாய் வாழ்ந்த போதும் பாடும் பணியே பணியாய் இருந்தார்.
பேரறிஞர் அண்ணா , காயிதே மில்லத் ஆகியோர் விரும்பிக் கேட்ட பெருமையுடைய பாடல் இவருடையது. இவர்தம் 'இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' , 'அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா ' முதலிய பெயர் பெற்ற பாடல்கள் 500க்கு மேற்பட்ட இசைத் தட்டுகளிலும் ஒலிநாடக்களிலும் பதிவாகி தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இனிது ஒலித்து வருகின்றன. [நன்றி: முனைவர் இரா. திருமுருகன்
நன்றி: ஆபிதீன் வலைத்தளம்]

