« November 2008 | Main | January 2009 »

December 31, 2008

காணொளி: "நாளாந்தம் எம் தேச வாசலில் ஏறிச் சுடரும் சூரிய தேவே"

புதுவை இரத்தினதுரை கவிதை: "பரிதித் தேவனே...பாரளும் ஐயனே..."

"பொறி கக்கும் பெரிய கடவுளே, சுடர் விளக்கான சூரியப் பெருமானே...."

நாளாந்தம் எம் தேச வாசலில்
ஏறிச் சுடரும் சூரிய தேவே
வீரியம் அடங்காத வேகரே
வைகறைப் பொழுதில்
உன் முன் வரிசைகட்டி
நிமிர்ந்து எழுந்து நிற்கின்றோம்

உய்யும் வழியுரைக்கும் வெய்யோனே
உன் திருமுக ஜொலிப்பில்
பலம் கொண்ட சேனையாய்
இந்தோ அணி வகுத்துள்ளோம்
அசையா மனம் அருளும் ஆதவனே
சோதனைகள் எமைச் சூழ்ந்த வேளையில்
ஒன்றாகக் கூடி உறுதி எடுக்கின்றோம்

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் எழுக
எம்பக்கமாய்
ஒளி பரவும் இக் காலைப் பொழுதில்
கைகளை உயர்த்திச் சபதம் எடுக்கின்றோம்
கதிரவனே, வெளிச்சம் நல்கும் வேந்தே
எம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் பொய்யில்லை
எந்தப் புனைவும் இல்லை
எம் தலைவனைப் போல ஒளிரும் தகைவுடைய
உண்மைககளால் நிறைந்தன எம் மொழிகள்

பரிதித் தெய்வமே
பாரளும் ஐயனே.
வழி கடந்த பயணத் திசையில் நீ காண
வெகு தூரம் கடந்து வந்தோம்
சோர்விலாதிருந்தது எம் நடை பயணம்
ஏர் கொண்டு இடறிய தடைகளைத் தாண்டி
புயலை எதிர்த்து முன்னேறினோம்
கருவேலம் பற்றையின் முட்கள் கீறவும்
வழியெங்கும் கரு நாகங்கள் சீறவும்
இடையிடையே காட்டாறுகளையும்
கடந்துமல்லவா நடந்தது எம் பயணம்
ஆயினும் எத்தனை கம்பீர நடையிருந்தது
வியர்த்து ஒழுக விளங்கின எம் மேனி
உரத்துப் பாடியபடி
ஊர் மனைக்குள் ஆடிய படி
புளுதி கிளம்ப நடந்தது எம் பேரணி
காட்டு வழிகளிலும்
களனி வரம்புகளிலும்
அலையெட்டும் கடல் மடியிலும்
எம் பயணம் இருந்தது

தலைவனே தலைப் பயணியாய்
தளபதிகள் அருகெனவாய்
வியாக்கிரக சேனை விரைந்தது
வழியெங்கும் மக்கள் வெள்ளம்
சமுத்திர சங்கமமாய் கலந்தது

என்னே வீரிய அழகென வியந்தது உலகு
நெடுங் காலத்தின் பின்னே
தமிழனை மீண்டும் கணக்கிலெடுத்தது வரலாறு
மேலிருந்தவாறு நீயும் பார்த்தாய்
ஆல விசம் தரித்த அக்கினி குஞ்சுகளின்
தோளை தடவி வாழ்த்துரைத்தாய் சூரியனே

அஞ்சற்க என்ற உன் அசரீரி வார்த்தையில்
எம் குஞ்சுகள் புதிய பலம் பெற்றன
கூறு பட்டிருந்த தேசம் ஒன்றாய் குவிந்து
எல்லைகளை வகுத்துக் கொண்டது
பேதமற்ற பெருமிதத்தில் புன்னகைத்தபடி
அட்ட திக்குகள் எங்கள் கையில் என்றானது

அச்சமுற்ற அடக்குமுறை அரசு பதறியது
இனியும் போரென்று தொடருவாயானல்
தீவு இரண்டாவது திண்ணம் என
முண்டு கொடுக்கும் சக்திகள்
அவர்களை முன்னெச்சரிக்கை செய்தன

அடக்கு முறையாளர்களுக்கு இருப்பது ஒற்றை வழியல்ல
பல வழிகளை திறப்பதில் அவர்கள் கில்லாடிகள்
எடுத்ததை போடுவதிலும்
போடுவதை எடுப்பதிலும்
கூச்சம் அவர்களுக்கு இருப்பதில்லை

குரல் வளையை நெரித்துக் கொல்வார்கள்
முடியாது போனால்
முத்தமிடுவது போல
மூச்சுத் திணற வைப்பார்கள்

ஆதிக்க சக்திகள் பேதி கொடுத்ததும்
அடக்கு முறை அரசு அஸ்த்திரத்தை மாற்றியது
போராயுதத்தை கீழே போட்டு விட்டு
பேச்சுவார்த்தையை கையில் எடுத்தது

மீண்டும் ஒரு நாடகத்திற்கு அரங்கு திறந்தது
சமாதானம் என்பது நாடகத்தின் நாமம்
நியாயமான தீர்வென்பது அரங்கில் பாடும் பாடல்
தக்க தருணம் இதுவென கணித்து
ஓடி வந்தது உலகம்

வீதி செப்பனிட ஒருவன்
வீடு கட்டித் தர இன்னொருவன்
குளாய் கிணறு வெட்ட ஒருவன்
குளிக்ககூசு கட்ட மற்றொரொருவரென
பல் நிற மேனியரால் நிறைந்தன எம் தெருக்கள்

ஒப்பனையிட்ட கூத்தாடிகளின் பள பளப்பில்
ஊர் முகம் கொஞ்சம் உரு மாறிப் போனது
தார் வீதியும்
கூரைத் தகரமும்
அகதிகளுக்குரிய பிளாஸ்டிக் பண்டமும்
எலும்புத் துண்டுகள் எண்டெறியாமல்
வீர நிலம் விளையாடுகிறது
எனினும் உலை முகத்து தீயாய் உள்ளெரிகிறது
இன்றும் விடுதலை நெருப்பு

பொறி கக்கும் பெரிய கடவுளே
சுடர் விளக்கான சூரியப் பெருமானே.
நேற்று வரை எதிர் காலக் கனவு சுமந்து நடந்தன
ஈழ நாம்பனும் நாகுகளும்
சிரித்தபடி போன சின்னப் பூக்கள்
விடுதலைக்கான நெருப்பில் வெந்தன

திட்டுத் திட்டாக எம் தேசமெல்லாம்
கொட்டுண்டு கிடக்கின்றன உயிர்க்குலைகள்
பகை எழுந்த களங்களில் எதிர் கொண்டு மோதி
கையிருந்து தவறிப்போயினர் எம் பிள்ளைகள்

இத்தனைக்குப் பின்னரும்
இத்தனை விலை கொடுப்புக்குப் பின்னரும்
முதுகு வளைந்து மண்டியுடுமா எம் வம்சம்
தருவதை தருக
எடுத்துக் கொள்வோம் என
சமாதானப் பல்லக்கில் ஏறச் சம்மதப் படுமா

ஊரில் இருந்து கலைத்த நாட்களின் நினைவுகள்
அத்தனை சுலபமாய் மனதில் இருந்து அழிந்து போகுமா
எம் முற்றத்திலும்
தலை வாசலிலும்
ஒன்றாகக் கிடந்த உதிரக் கொடிகள்
எட்டாத் தொலைவென்றாகியதேன்
கண்டங்கள் எல்லாவற்றிலும் கரை ஒதுங்கி
பிரிவெண்ணிக் கண்ணீர் வடிக்கின்றனவே
எப்படி இவை எல்லாவற்றையும் மறந்து சுலபமாக சமரசப்பட முடியும்

ஈழத் தமிழனுக்கு இரண்டு வழியில்லை
ஒற்றை வழியே உண்டு

போராடி பெறுகின்ற தாயகமே அது

சூரிய தேவே

உன் முன் நின்று உறுதி எடுக்கின்றோம்
தன் நிலமை மாறா தலைவனின் வழியில்

இனியும் எம் பயணம் தொடரும்
இலக்கு எம் கையில் எட்டும் வரையும்
இனியும் எம் பயணம் தொடரும்
இலக்கு எம் கையில் எட்டும் வரையும்

காணொளி: குறளமுதம் ~ "அகர முதல எழுத்தெல்லாம்"

கர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

[திருவள்ளுவரின் முதல் குறள் - கடவுள் வாழ்த்து - பாடுபவர் சீர்காழி கோவிந்தராஜன்]

December 30, 2008

காணொளி: விடுதலைப் புலி போராளிகள் கௌரவிப்பு - டிசம்பர் 28ம் திகதிய நிகழ்வு

மிழீழ தேசிய தொலைக்காட்சியில் 29-12-08 அன்று ஒளிபரப்பான செய்திகளிலிருந்து:

களமுனையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் பாவலன் தலைமையில் இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரை சமர் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்ற, மாவீரர் ஈகச்சுடரை கட்டளைத் தளபதி கேணல் பானு ஏற்றினார்.

காணொளி: ஏழரை கோடி தமிழர்களின் கோரிக்கை இதுவே-பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்

லங்கையில் தமிழர்கள் ஒவ்வொரு விநாடியும் கொல்லப்படுகின்றனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாது போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

[தேனிசை செல்லப்பா வழங்கும் ~ மொழியால் தமிழன் இனத்தால் தமிழன் - மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி; மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் இத்தொலைக்காட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது]

தமிழக முதலமைச்சர் போர் நிறுத்தம் கோரி விடுத்த கோரிக்கை தனிப்பட்ட ஒருவரின் வேண்டு கோள் அல்ல; ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள் இது. இதை இந்திய பேரரசு அலட்சியப்படுத்தக் கூடாது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கோரிக்கை தொடர்பாக, இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழ் வீரகேசரியில் டிசம்பர் 30ஆம் திகதி, செவ்வாய் கிழமை வெளியான செய்தி வருமாறு:

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்புகிறேன் என்ற பிரதமரின் வாக்குறுதி ஒரு மாதகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் தமிழினப் படுகொலையினை தடுத்துநிறுத்த வேண்டிய பாரிய கடமை இந்தியப் பேரரசுக்குண்டு. எனவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டில் மட்டும் 700 வான் படைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 10 போர்ப் படை விமானங்கள் பறந்து போய்த் தாக்கியிருக்கின்றன.

ஒவ்வொரு போர் விமானமும் 4, 5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் சில குண்டுகள் ஒரு தொன் அளவுக்கும் வேறு சில குண்டுகள் 500 கிலோ அளவுக்கும் எடை உள்ளவை. இப்படி இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஓர் நேர்காணலில் விபரித்திருக்கிறார்.இரண்டு பகை நாடுகளுக்கு இடையே நடைபெறுகின்ற சண்டையில் கூட பயன்படுத்தக் கூடாது என்று சர்வதேச சமூகம் தடை செய்துள்ள கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை இலங்கைப் போர்ப்படை விமானங்கள் வீசி, மனித இனத்துக்கு எதிரான பெரும் குற்றத்தை இழைத்திருக்கின்றன.

பிரதமர் வாக்குறுதி கிடப்பில்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் இலங்கை அரசு, உலகம் இதுவரையில் கண்டிராத மிகப் பெரிய இன அழிப்பு பயங்கரவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்தியாவை நோக்கி உரிமையோடு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டப் பேரவையில் இரண்டு முறை தீர்மானம், பல முறை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம், எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து சண்டையை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.

வெளியுறவுத் துறை அமைச்சரை கொழும்புக்கு அனுப்புகிறேன் என்று பிரதமர் அளித்த வாக்குறுதி ஏறக்குறைய ஒரு மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

கருணாநிதியின் கண்கலங்கும் பேச்சு

பிரதமர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத அவகாசத்தைப் பயன்படுத்தி சிங்கள இனவெறி அரசு நாள்தோறும், தமிழர்களை வேகமாகக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டு தமிழர்கள் எல்லோரும் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வேதனைத் துடிப்பின் எதிரொலிதான், முதலமைச்சர் கருணாநிதியின் கண் கலங்கும் பேச்சு. நாம் விரும்புகின்ற அளவுக்கு நாம் படுகின்ற வேதனையைத் துடைக்கின்ற அளவுக்கு வேகமாக முடிவெடுக்காமல் இந்திய பேரரசு தாமதிக்கின்ற காரணத்தினால் ஒவ்வொரு விநாடியும் ஒரு தமிழனின் பிணம் இலங்கையில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அதைத் தடுத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டில்லியை நோக்கி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்திய அரசு அலட்சியப்படுத்தக்கூடாது

இது தனிப்பட்ட ஒருவரின் வேண்டு கோள் அல்ல, முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள் இது. இதை இந்திய பேரரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

அப்படி அலட்சியப்படுத்தினால், இனியும் தாமதப்படுத்தினால் தமிழர்களின் உணர்வுகளை அவர்கள் மதிக்கவில்லை, தமிழர்களை மதிக்கவில்லை, அலட்சியப்படுத்துகிறார்கள் என்று தான் தமிழர்கள் அனைவரும் கருதுவார்கள்.

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய மிகப் பெரிய கடமை இந்திய பேரரசுக்கு இருக்கிறது என்பதை உரிமையோடு வலியுறுத்துகிறோம்.

பிரணாப் முகர்ஜியை அனுப்ப வேண்டும்

இதில் தமிழர்கள் எல்லோரும் விரும்புகின்ற அளவுக்கு அவசரம் கூட வேண்டாம்.

மெதுவாக நடவடிக்கை எடுத்திருந்தாலே இந்நேரம் இலங்கையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அது நடைபெற்றிருந்தால் குறைந்த பட்சம் கடந்த ஒரு மாத காலத்தில் செத்து மடிந்த இலங்கைத் தமிழர்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

இந்திய பேரரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை மேற்கொண்டு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்குக் காரணமான சண்டையை நிறுத்த வேண்டும்.

இதற்கு உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப வேண்டும். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி சண்டையை நிறுத்தும்படி எச்சரித்து அதனை செயலில் சாதித்து வர வேண்டும். இதுவே இங்குள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஏக்கமாகும்.

December 29, 2008

தமிழக பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்: இலங்கையில் தமிழர்கள் எதிர் கொள்ளும் ஆள்கடத்தல்கள்

சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய தமிழக பத்திரிகையாளர் திருமதி. கவிதா முரளிதரன், "த வீக்" டிசம்பர் 28ஆம் திகதிய இதழில், தொடரும் ஆள் கடத்தல்கள் பற்றியும், இடம் பெயர்ந்தோர் பேரவலங்கள் குறித்தும் பின்வருமாறு எழுதியுள்ளார்:

வம்பர் 23ஆம் திகதியன்று எங்கள் வெள்ளை வான், மட்டக்களப்பிற்கு அருகாமையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமமாகிய சாய்ந்தமருதில் தரித்த போது, அங்கு வசித்தவர்கள் எம்மை அச்சத்துடன் நோக்கினர். அப் பகுதியனை சேர்ந்த நண்பர் என்னை "சென்னையில் இருந்து வந்துள்ள ஊடகவியலாளர்" என அறிமுகம் செய்து வைத்தார்.

KM1214AB.jpgஇலங்கை வாழ் தமிழருக்கு வெள்ளை வான் என்பது, நான்கு சக்கரத்தில் தேடி வரும் ஒர் சாவு மணி ஆகும். "வெள்ளை வான்கள் தமிழரை கடத்துவதற்கு, குறிப்பாக தமிழ் இளையோரினைக் கடத்துவதற்கு பாவிக்கப்பட்டுள்ளது", எனக் கூறினார் நண்பர்.

மதுரா குணசிங்கம்

இவ்வாறானதொரு வானிலேயே, கடந்த ஜூனில் கொழும்பைச் சேர்ந்த மதுரா குணசிங்கம் கடத்தப்பட்டார். "எனது மகன், என்னுடைய மூத்த மகள் கலாநாயகியுடன் தங்கியிருந்தவர். நான் தட்டாத கதவுகள் இல்லை அவரைத் தேடி...கடவுளுக்குத் தெரியும் அவருக்கு என்ன நடந்தது என்று," தெரிவித்தார் மதுராவின் தாயாராகிய 60 வயது நிரம்பிய கிளிநொச்சியை சேர்ந்த வேலாயுதம் புஷ்பவல்லி.

வவுனியாவில் வசிக்கும் மதுராவின் மற்றொரு சகோதரி சிவபாதம், "எனது சகோதரனுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை. அவர் சாரதித் தொழில் புரிபவர். அவர் புலிகளுடன் தொடர்புபட்டவர் என்று எண்ணி கடத்தப்பட்டிருக்கலாம். தயவு செய்து அவரை எங்களிடம் மீளவும் தாருங்கள்", என கைகளை மடக்கி வைத்திருந்தவாறே தெரிவித்தார்.

கடத்தப்பட்டவுடன் குடும்பத்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் எனினும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. "சகல வழிகளிலும் தேடியுள்ளோம். சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மனித உரிமைகள் அமைபுக்கள்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை மூன்று தடவைகள் சந்தித்துவிட்டோம். எனது மகனை யார், ஏன் கடத்தினார்கள் என்று தெரியவில்லை," என அங்கலாய்த்தார் புஷ்பவல்லி. வயதாகி இளைத்திருந்தாலும் அவர் மகனைத் தேடும் முயற்சியில் இருந்து அவர் பின் வாங்கவில்லை. "அவர் உயிருடன் இருக்கிறார், திரும்பி வருவார்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

புஷ்பராஜா கிருஷ்ணகுமார்

ஜெயந்தி கிருஷ்ணனின் கணவர் 34 வயது நிரம்பிய புஷ்பராஜா கிருஷ்ணகுமார் ஜூன் மாதம் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டார். "வெள்ளை நிற வானில் அவரின் கடைக்கு வந்தவர்கள் சிலர் அவரை கூட்டிச் சென்றனர்", என்கிறார் 2 வயது பாலகன் விகேஷிற்குத் தாயான ஜெயந்தி; "குடும்ப செலவுக்காக கடையினை விற்று விட்டேன், என் கணவர் திரும்பாவிடின், எனது பிள்ளையுடன் பிச்சை தான் எடுக்க வேண்டும்," என அஞ்சுகின்றார் ஜெயந்தி.

முகுந்தா சிவகுணரத்தினம்

முகுந்தா சிவகுணரத்தினம், (33) கடந்த ஜூனில் கைது செய்யப்பட்ட தருணத்தில், கனடாவிலுள்ள தனது மனைவியுடன் இணைவதற்கு இறுதி ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தவர். முகுந்தாவின் தாயார் செல்வஜோதியோ, மகனின் விதி இப்படியாகிப் போனதற்கு தானும் உடந்தையாகிப் போனேனோ என வருந்துகின்றார். "லண்டனில் இருந்த முகுந்தா, கனடாவில் வசிக்கும் தனது மனைவியுடன் இணைவதற்கு இங்கு வந்து பதிவு செய்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்தார். இச் சமயம் அவரை கொம்பியூட்டர் தொடர்பான பயிற்சியேதும் பெறும்படி நான் தான் ஊக்குவித்தேன். கொம்பியூட்டர் கல்வி நிலையத்தில் வைத்தே அவர் கடத்தப்பட்டார்" என வருத்தம் தெரிவித்தார். தன்னை பொலிஸாரே பிடித்துச் செல்வதாக முகுந்தா தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். செல்வஜோதியும் அவரின் மகள் தர்ஷனியும் பொலிஸாரை அணுகிய போது அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது என்று விட்டனர். மேலும் தர்ஷனி "இதை இராணுவம் தான் செய்தது. ஏனெனில் பிற்பாடு விசாரணை என்று இரு தடவைகள் எங்கள் வீட்டிற்கு விசேட அதிரடிப் படையினர் வந்தார்கள்", என்று சுட்டிக்காட்டினார்.

முகுந்தாவிற்கு நடந்த கொடுமை பற்றித் தெரியாத கனடிய உயர் ஸ்தானிகராலயம், சமீபத்தில் கனடா செல்வதற்கான மருத்துவ பரிசோதனை வேண்டப்படுவது குறித்து கடித மூலம் தொடர்பு கொண்டிருந்தது. "கடிதத்தினை கண்டு முகுந்தா மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்" எனத் தெரிவித்தார் செல்வஜோதி. தனது மகன் ஒரு தவறும் செய்யாதவர் என்பதற்கு சான்றாக, கனடா செல்வதற்கு தேவையான பொலிஸ்-பாதுகாப்பு பிரிவினரின் "ஆட்சேபணை இல்லை" என்ற அத்தாட்சி பத்திரம் தன் வசம் உள்ளதாகவும் முகுந்தாவின் அன்னை தெரிவித்தார். "மகனின் நடத்தையில் எவ்வித குறைபாடும் இல்லை. மிகவும் எளிமையான குணாம்சம் பொருந்தியவர். அவரை எவர், ஏன் எம்மிடம் இருந்து பறித்தனர்?" என்று வினவினார் செல்வஜோதி.

ரொபின்சன்

இதயராணிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக கடத்தப்பட்ட தனது மகன் ரொபின்சன், காலி நகருக்கு அண்மையில் உள்ள பூசா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது திடமாக தெரியும். "அவர் மீது எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நான் அவரை போய் சந்திக்கவும் அரச அனுமதி இல்லை. அங்கு அவர் வீணேயிருப்பது மட்டுமே தெரியும்," என்கிறார் இதயராணி.

இராணுவ அனுசரணை

மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும், கொழும்பு பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோ கணேசன் தமிழருக்கெதிரான மனித உரிம மீறல்கள் விடயங்களை தடம் பதிப்பவர். இராணுவத்தின் அனுசரணையுடனேயே கடத்தல்கள் இடம் பெறுவதாக மனோ கணேசன் கூறுகிறார். "கையடக்க தொலைபேசியில், விடுதலைப் புலி போராளி என அரசாங்கத்தினால் சந்தேகிக்கப்படும் எவரினதும் இலக்கம் வைத்திருப்போர் எவாராயினும், கைதாகலாம், அவர் கடத்தப்படுவார் அல்லது கொல்லப்பட்டு விடுவார்," என்கிறார் மனோ கணேசன் எம்.பி.

MT1229.jpg

[அக்டோபர் 27ஆம் திகதி, கனடாவின் "நஷனல் போஸ்ட்" பத்திரிகையின் இலங்கையில் காணாமல் போகும் தமிழர்கள் பற்றிய கட்டுரையில், பிரசுரிக்கப்பட்ட படத்தில் - மாலினி தம்பிபிள்ளை; இவரின் கணவர் ஸ்ரீதரன் சுப்பிரமணியம், செப்டம்பர் 2008 இல் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமற் போனதாக "நஷனல் போஸ்ட்" தெரிவித்திருந்தது.]

2005 இல் யுத்த நிறுத்தம் இலங்கையில் முடிவுக்கு வந்த பிற்பாடு, சுமார் 3,000 பேர் கடத்தப் பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன; இவற்றில் 300 வரையிலான கடத்தல்கள் தலை நகர் கொழும்பில் இடம் பெற்றுள்ளன.

மனிதப் பேரவலம்

தமிழ் மக்கள் நிதமும் கொலை, கடத்தல் பயத்துடன் வாழ்கின்றனர். தமது சொந்த இடங்களிலேயே பதிவு செய்யவேண்டிய கட்டாயத்திலும், பிறந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்தோராயும் வாழ வேண்டிய பேரவலத்திலும் வாழ்கின்றனர் தமிழர்கள். கடந்த ஐந்து வருடங்களினுள் கொழும்பு வந்த அனைத்து தமிழரும் பொலிஸில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"அவர்கள் எல்லத் தமிழரும் ஒரு பயங்கரவாதி என்றே நினைக்கின்றனர். எம் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதனையே இது காட்டுகிறது," என ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் முருகன் தெரிவித்தார்.

பொது மக்கள் போரினால் பாதிக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறினாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலேயே இன்னும் தங்கியுள்ளனர்.

கிழக்கு "விடுதலை" அடைந்து விட்டது என்று அரசாங்கம் கூறினாலும், தமது முன்னைய இருப்பிடங்களுக்குத் திரும்பவியாலத வண்ணம் "அதி உயர் பாதுகாப்பு வலையங்கள்" அமைக்கப்பட்டுள்ளதாக பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு யுத்த முனையில் உள்ள இடம் பெயர்ந்தோர் நிலவரம் இதனை விட கவலைக்கிடமானது.

நான் வட மாகாணத்திற்கு செல்ல எடுத்த முயற்சிகள் கை கூடவில்லை. சட்டத்தரணியாகவுள்ள எனது சிநேகிதி, இலங்கை கடவுச் சீட்டு வைத்திருப்போருக்கு அனுமதி பெறுவது இலகு எனத் தெரிவித்தார். அண்மையில் பிரித்தானியா கடவுச் சீட்டு வைத்திருந்த தம்பதியனருக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், இலங்கை கடவுச் சீட்டு மட்டும் வைத்திருந்த அவர்தம் புதல்விக்கு அனுமதி வழங்கப்பட்டதனை சுட்டிகாட்டினார். "உங்களுக்கு இடர் நேர்ந்தால், உங்கள் நாட்டு அரசாங்கங்கள் கேள்வி எழுப்புவார்கள். நாங்கள் இங்குள்ள தமிழர்கள் நாயைப் போல் சுடப் பட்டாலும், ஒருவரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள்", என விசனம் தெரிவித்தார்.

அமைதி நிலவும் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிலும் வன்செயல்கள் இல்லாமல் இல்லை. "யுத்த காலத்தினை விட, சமாதானம், யுத்த நிறுத்தம் ஆகிய காலங்களிலேயே அதிகளவு துன்பங்களுக்கு ஆளாகிறோம்," என்கிறார் மட்டக்களப்பை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா.

தொடர்பு பட்ட செய்தி: தமிழகப் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்: " ஈழத்தமிழர்களை ஏமாற்றுகின்றோமா?"

December 28, 2008

தொல். திருமாவளவன்: "ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து அனுதாபப்படுகிறேன்"

"புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில் புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்,'' இவ்வாறு தமிழக ஏடு ஜூனியர் விகடனுக்கு தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.

தொல். திருமாவளவன் கைது செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் 'அரசியல் குரல்கள்' வலுவடைவது குறித்தே, ஜூனியர் விகடன் டிசம்பர் 28ஆம் திகதிய இதழில் திருமாவுடனான உரையாடலைப் பிரசுரித்துள்ளது:

1228TT.jpg''திருமாவைக் கைது செய்!'' -லேசுபாசாகக் கிளம்பிய குரல்கள் இப்போது ஒருமித்து... வலுவாகி தமிழக அரசின் தலையைக் காயவைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி கடைக்கோடி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை சிறுத்தை திருமாவுக்கு எதிராக சீற்றத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸாரை அமைதிப்படுத்தும்விதமாக, திருமா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரப்புக்கிளம்பியிருக்கிறது. ஆனால் திருமாவோ, வருகிற 26-ம் தேதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தது. உடனே முதல்வர் கருணாநிதியை நேரில் போய்ச் சந்தித்த திருமா, மாநாட்டுக்கான தடையை உடைத்து உரிய அனுமதியைப் பெற்று வந்தார். முதல்வர் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்த சில நிமிஷங்களில் அவரைச் சந்தித்தோம்.

சமீபத்தில் அவரை மையமாக வைத்து கிளம்பிய அத்தனை சர்ச்சைகளுக்கும் பதிலளிக்கும் விதமாக விழிகள் சிவக்க நம்மிடம் பேசினார் திருமாவளவன்.

''காங்கிரஸை அமைதிப்படுத்தும் நோக்கில்தான் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு திடீரென தமிழக அரசு தடை போட்டதாகச் சொல்கிறார்களே?''

''நான்குமுறை திட்டமிட்டும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழாவையும் தமிழீழ அங்கீகார மாநாட்டையும் நடத்த முடியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நாங்கள் நடத்த முயன்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபோது, போலீஸார் வீணான அச்சத்தைப் பரப்பி வேறு தேதியில் நடத்திக் கொள்ளச் சொன்னார்கள். அனைத்தையும் தாண்டி வருகிற 26-ம் தேதி மாநாடு நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தடை போடப்பட்டது. எங்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் வளர்ந்து விட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இந்தத் தடை. அதனால்தான், உடனடியாக முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்தேன். 'ஈழ மண்ணின் விடிவுக்காக தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கையைப் பிரகடனப்படுத்துகிற மாநாடுதானே தவிர, இந்திய இறையாண்மையை மீறுகிற காரியங்கள் மாநாட்டில் துளியளவும் இடம்பெறாது' என உறுதிபடச் சொன்னேன். முதல்வரும் எங்களின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு மாநாட்டுக்கு சம்மதம் தெரிவித்தார். தமிழீழ அங்கீகார மாநாட்டை வியக்கத்தக்க அளவில் நடத்திக் காட்டுவோம்.''

''சத்திய மூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தி மோசமான அரசியல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துவிட்டார்' என 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் மீது பாய்ந்திருக் கிறார்களே?'''

''காங்கிரஸ் மீதும், அக்கட்சியின் தலைவர்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். பெருந்தலைவர் காமராஜரின் படத்தை எங்கள் இயக்கத்தின் அத்தனை ஆவணங்களிலும் பிரசுரித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல தலித் மக்களுக்கு உரிய, உயரிய அங்கீகாரங்களைக் கொடுத்து அப்போதே அழகு பார்த்திருக்கிறது காங்கிரஸ். கக்கன், பி.ஆர்.பரமேஸ்வரன், பெரியவர் இளையபெருமாள் என காங்கிரஸால் கௌரவிக்கப்பட்ட தலித் தலைவர்கள் எத்தனையோ பேர். ஆனால், இன்றைக்கு இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எங்களைப் பற்றி சகிக்க முடியாத அவதூறுகளைப் பரப்புகிறார்கள். உண்மையிலேயே நடந்ததைச் சொல்கிறேன்... சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரே எங்கள் இயக்கத்தின் தொழிற்சங்கத்துக்கான பெயர்ப் பலகை ஒன்று இருந்தது. அந்த இடத்தில் பேனர் கட்டிக் கொண்டிருந்த எங்கள் இயக்கத்தினரை, காங்கிரஸைச் சேர்ந்த சில பிரமுகர்கள் கேவலமாகப் பேசி இருக்கிறார்கள். என்னையும் கேட்கவே கூசுகின்ற வார்த்தைகளால் ஏசியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் கைகலப்பு நடந்திருக்கிறது.

எங்களை அடித்தவர்களை எங்களவர்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். ஏசியவர்களைத் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். மற்றபடி, சத்திய மூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எங்கள் இயக்கத்தினருக்கும் சம்பந்தமே இல்லை. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே தங்கபாலு, ஜி.கே.வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், சுதர்சனம் உள்ளிட்ட பல தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்கள் இயக்கத்தவர்கள் யாரும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகவில்லை என்ற உண்மை நிலவரத்தைத் தெளிவுபடுத்தினேன். அதையும் தாண்டி எங்களைச் சம்பந்தப்படுத்தி ஆவேசம் பாடினார்கள். தொண்டர்களைத் தூண்டிவிட்டு, அரசியல் நடத்தும் வழக்கம் எங்கள் இயக்கத்துக்குக் கிடையாது. அநாகரிகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் அள்ளிவீசும் சாக்கடைகள் எங்களை ஒருபோதும் சலனப்படுத்தாது.''

''தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உங்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே..?''

''மறைந்த காங்கிரஸ் தலைவரான மூப்பனாரால், 'ஜனநாயக சக்திகள்' என வர்ணிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆனால், இன்றைக்கு அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்டப்பஞ்சாயத்து செய்பவனாக என்னைச் சித்திரித்துப் பேசுகிறார். இளங்கோவன், தங்கபாலு கோஷ்டியினர்தான் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் என்னையும் என் இயக்கத்தையும் களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது இவர்களால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?''

''உங்களால் முதல்வர் கருணாநிதி ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், கூட்டணியைவிட்டு நீங்கள் விரைவிலேயே வெளியேற்றப்படலாம் எனவும் பேசப்படுகிறதே?''

''ஈழ மண்ணின் விடியலை முன்னிறுத்தி நாங்கள் புதிதாக ஒன்றும் பேசவில்லை. ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் கருத்தைத்தான் எங்கள் இயக்கத்தின் சார்பாக முழங்குகிறோம். அதனால் ஈழ விவகாரத்தில் நாங்கள் எழுப்பும் குரல் ஒருபோதும் முதல்வருக்கு தலைவலியைக் கொடுக்காது. அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் தமிழீழ அங்கீகாரத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால், 'தமிழீழம் உருவாவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' எனச் சொல்லிவிட்டு, வருகிற தேர்தலை தைரியமாக அவர்களால் எதிர்கொள்ள முடியுமா? தமிழீழத்தை எதிர்க்க, தமிழக மக்களை ஏய்க்க, இந்தக் கட்சிகளால் எள்ளளவும் முடியாது. புலிகளை எதிர்ப்பதாக முழங்குவ தெல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான். நாங்கள் தமிழீழ அங்கீகாரத்தை வலுவாக முழங்குவோம். யாருக்கும் பாரமாகவோ, சங்கடசக்தியாகவோ ஒருபோதும் தொடுக்கிக்கொண்டு இருக்க மாட்டோம். கலைஞர் எங்களின் திடத்தையும் நேர்மையையும் ஒருபோதும் நெருக்கடியாக நினைக்க மாட்டார்!''

''காங்கிரஸ் தலைவர்களின் பிரஷரால் நீங்கள் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்களே?''

''என்னைக் கைது செய்யச் சொல்லி ஆவேசம் காட்டுவதெல்லாம் 'மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த, கதைதான்!' இறையாண்மையை மீறி நான் பேசியதாக ஆதாரமும் இல்லை; அடிப்படையும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், என்னைக் குறிவைத்துகாங்கிரஸார் செயல்படவில்லை. அவர்களின் குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதுதான். அவர்களின் நெருக்கடி திருவிளையாடல்களுக்கு நான் பகடைக் காயாக அகப்பட்டிருக்கிறேன். என்னை வைத்து தி.மு.க. அரசை சீண்டிப் பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுக்கு அவர்களே புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தவறான கருத்துகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, என் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார்கள். அன்னை சோனியா சொல்படி இவர்கள் செயல்படுகிறார்களா இல்லை 'அம்மா'வின் இயக்குதல்படி செயல்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இப்போது கம்யூனிஸ்ட் இடம் வகிக்கிறது. அதனால் காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடவும் வாய்ப்பு குறைவுதான்.

இதைவைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து பலவீனமாக்க அ.தி.மு.க. திட்டம் போடுகிறது. இதற்கேற்றாற்போல் காங்கிரஸ் தலைவர் கள் எங்களை மையமாக வைத்து தி.மு.க. அரசுக்கு குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் பொறுமைக்கும் நிதானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது. ஈழ விவகாரத்தில் இறையாண்மையை மீற மாட்டேன் என உறுதி கொடுத்துவிட்டேன். சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட விவகாரத்திலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இந்த உண்மைகள் தெரிந்தும், கைதுக்கு வலியுறுத் தும் காங்கிரஸ் தலைவர்கள் 'விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது' என கலைஞரை வற்புறுத்துவதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக அறிவித்தால், நாங்களும் வெளியேறத் தயார்.

கைது நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார். சட்டத்துக்கு உட்பட்டு, என் மீது நடவடிக்கைகள் பாயுமானால் அதனை எதிர்கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அதற்காக தி.மு.க. உடனான இணக் கத்தையோ பாசத்தையோ உடைத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் மீது ஆத்திரப்பட மாட்டோம். தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறவும் மாட்டோம்.''

''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''

''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும், அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்... அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும். புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். 'எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில் புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''

-விழிகளில் ஜிவுஜிவுப்பு குறையாமல் விடை கொடுக்கிறார் திருமா!

December 27, 2008

பிரபாகரன்: "கிளிநொச்சி மோதல்கள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது"

"கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது," என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.

லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் இப் பேட்டி, விடுதலைப் புலிகள் தலைவரினால் அல்ல, தன்னாலேயே வழங்கப்பட்டது என, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்ததாக, டிசம்பர் 29ஆம் திகதி வெளியான செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

செவ்வியின் தமிழ் வடிவத்தின் ஒரு பகுதியனை, கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி வார வெளியீடின் டிசம்பர் 28ஆம் திகதிய இதழ் பிரசுரித்துள்ளது:

VP1228.jpg "உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?'' என கேட் கப்பட்டபோது "இவை அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய் யான பிரசாரங்கள் மாத்திரமே. நாம் ஒரு போதும் எமது மண்ணைவிட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற் காக இறுதிவரை போராடுவோம்'' என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் வயதாகிவருகிறீர்கள்.

ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும்.

எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ வயது எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார்.

கிளிநொச்சியை சில தினங்களில் இராணு வம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து தொடர்பாக பதிலளிக்கையில் "எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம். நாம் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய இராணுவமாக செயற்பட முடியாது என இலங்கை அரசு பெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மன்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம்.

தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது. எவ்வாறெனினும் கடந்த சில நாட்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது'' எனக் கூறியுள்ளார்.

உங்கள் பயங்கரவாத செயற்பாடுகளை விரும்பாததால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அனைத்தையும் உங்களால் தோற்கடிக்க முடியாது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்கை வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்வது மற்றும் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளாகுமா என சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்கள் உட்பட முழு சர்வதேச சமூகத்தையும் நாம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கத்தன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியமை குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் அத்தேர்தலை பகிஷ்கரித்தீர்கள் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மக்கள் தாமாகவே தேர்தலை பகிஷ்கரித்தனர். மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். மக்கள் தேர்தலை பகிரஷ்கரித்தமை தொடர்பாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது விடுதலைப் போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

புலிகள் பலமிழந்துவிட்டதாக சர்வதேஊடகங்களும் கூறுவது குறித்து கேட்கப்பட்டபோது நாம் பலமிழந்து விடவில்லை.

எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதிலளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரியவரும் என பதிலளித்துள்ளார்.

லக்பிம நியூசில் வெளியான: People are moving to safer areas... to protect themselves....

இந்திய வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி தி.மு.க மீண்டும் தீர்மானம்

இன்று டிசம்பர் 27 ஆம் திகதி நடந்த திமுக பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும்.

DMK1227.jpg

[சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 10-வது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி. உடன், (இடமிருந்து) கட்சியின் புதிய பொருளாளர் மு.க. ஸ்டாலின், 8-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட க. அன்பழகன்-படம்: தினமணி.கொம்]

இதையடுத்து பொதுக் குழுவில் தன்னை கட்சியின் தலைவராக 10வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை நமக்குள்ளது. இலங்கை தமிழர்கள் பச்சைக் குழந்தைகளோடு பரிதாபமான நிலையில் நடுத்தெருவிலே நின்று கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக வன்முறை வழியிலே, பலாத்கார வழியிலே, நாட்டுக்கு விரோதமான வழியிலே, தேசத்துக்கு பகையான வழியிலே செல்ல நாம் விரும்பவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவு நாம் ஏற்றுக்கொள்ளும் முடிவாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு நாம் விரும்பும் அவசரத்துக்கு வேகமாக முடிவு செய்யாமல் இன்னும் இன்னும் இன்னும் தாமதம் செய்து வருவதால் அதன் ஒவ்வொரு நிமிடமும் அங்கே ஒரு தமிழனின் பிணம் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பொதுக் குழுவின் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இது விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும்.

அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறியிருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன்.

இந்தக் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

December 25, 2008

கேலிச் சித்திரம்: "பாரு பாரு இந்தா பாரு..."

ன்று, 26.12.2008 ஆம் திகதி, கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழ், வீரகேசரியில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரம்:

Virakesari.jpg

December 24, 2008

காணொளி: அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

னுராதா ஸ்ரீராம் பாடுவது, கவியரசு வைரமுத்துவின் பாடல்வரிகள் ~ இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்:

ன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)

மின்சார கனவு திரைப் படத்தில் இப் பாடல் இடம் பெற்றது.

December 23, 2008

காணொளி: டிசம்பர் 24 எம்.ஜி.ஆரின் 21ஆவது நினைவு தினம்

லங்கையிலும் உலகெங்கினும், தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களை ஆளாத் துயரில் ஆழ்த்தி, மீளாத் துயர் சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமரராகிய தினம் 1987 ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் திகதி.

புரட்சித் தலைவர் நினைவாக இப் பாடல்:

[உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ....அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ]

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை

ஆடி வா
ஆடி வா
ஆடி வா

ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா

இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
(ஆடி வா )

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
(ஆடி வா )

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
(ஆடி வா )

MGR1224.jpg

1967 இல் மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த அரச கட்டளை திரைப் படத்தில் இடம் பெற்ற இப் பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி, இசை: திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன், பாடியவர்: ரி.எம்.சௌந்தரராஜன்.

December 21, 2008

திரை இசை காணொளி: "தில்லை அம்பல நடராஜா"

ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - சொற்ப காலமே இவ்வுலகில் வாழ்ந்தாலும் முத்தான அரிய படைப்புக்களை தந்த கவிஞர்.

இவர் இயற்றிய "தில்லை அம்பல நடராஜா," 1957 இல் வெளிவந்த சௌபாக்கியவதி திரைப்படத்தில் இடம்பெற்ற கேட்க கேட்க திகட்டாத கீதம்:

சிவனுக்குகந்த இம் மார்கழித் திங்களில், இலங்கை ஆலய படங்களை உள்ளடக்கிய திரை இசை காணொளி ~ "தில்லை அம்பல நடராஜா"

பாடல் வரிகள்:

ங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா (தில்லை)

எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை)

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா (தில்லை) - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி
இசை: பெண்ட்யால நாகேஸ்வரராவ்
வெளிவந்த வருடம்: 1957

ஏப்ரல் 13, 1930 இல் பிறந்த கல்யாணசுந்தரம் தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அக்டோபர் 8, 1959 இல் மறைந்தார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாரம் கொழும்பு செல்வார் என கனிமொழி நம்பிக்கை

KM1220.jpg
ந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நத்தார் பண்டிகை வாரத்தில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கவிஞரும் இந்திய மாநிலங் களவை உறுப்பினருமான கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் மேலும் இனப்பிரச்சினைக் கான தீர்வு முயற்சிகள் வலிமையாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த செவ்வியில் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை இலங்கைப் பிரச்சினையிலும் காட்டுகிறார்கள். சகல பிரச்சினைகளையும் போலவே இதையும் அரசியல் ஆக்குகிறார்கள். இலங்கைப் பிரச்னையையும் வாக்கு வங்கியாக மாற்றும் முயற்சியாக சிலர் பார்க்கிறார்கள்.

ஒரு இனமே அழிக்கப்படும் கொடுமையை அரசியலாக்கும் தன்மையால்தான் இப்பிரச்சினையில் இன்னும் முன்னேற்றம் கிடைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் மேலும் வலிமையாக இருந்திருக்கும்.

இலங்கை விவகாரத்தில் தி.மு.க. எப்போதும் துணிந்து செயற்படுவதில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் அடியோடு மறுக்கிறேன். தி.மு.க. இதைவிட என்ன செய்ய முடியும்?

இலங்கை விவகாரத்தால் நிறைய இழப்புகளைச் சந்தித்தது தி.மு.க. தான். நாம் சொல்வதைக் கேட்கும் ஒரு மத்திய அரசு கிடைத்திருக்கிறது. அத்தகையதொரு அரசு கவிழும் சூழலை உருவாக்குவதால் யாருக்கு என்ன பயன் கிடைத்துவிடும்?

தி.மு.க. பற்றி குறை சொல்லும் வீரர்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் எங்கே போனார்கள்?

தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டில்லி சென்று நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்திருக்கிறோம். இதன் அடிப்படையில் நிச்சயமாக இவ்வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

December 19, 2008

ஒரு நேர உணவையேனும் வயிறார உண்ண முடியாத நிலையில் வட பகுதி மக்கள்

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வடபகுதியில் தோன்றியுள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் பணப்புழக்கமின்மை காரணமாக ஒரு வேளை உணவையேனும் வயிறார உண்ணமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் இலங்கையின் வட பகுதி மக்கள், இந்த நெருக்கடியைப் போக்கும் வகையில் சாத்தியமான அளவு விரைவாக உணவுப் பொருட்களை அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகின்றனர்.

இது குறித்து, கொழும்பிலிருந்து வெளி வரும் முதன்மை தமிழ் தினசரி வீரகேசரி, டிசம்பர் 20ஆம் திகதி எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கம்:

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதால் இடம்பெயர்ந்து கொட்டில்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகியுள்ளனர். காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக வீட்டின் கூரைகள் சேதமடைந்திருப்பாகவும் இதனால் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் பேரவலங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு நகரப்பகுதிகளில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள குடாக்கடலில் நீர் பெருகி வீதி இருக்கும் இடம் தெரியாமல் மூடிக்கிடப்பதால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து மழைக்கு மத்தியிலும் மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடிச்செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டமக்கள் பாதுகாப்பான பொது இடங்களில் தங்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ளம் பாயும் வீதி ஊடாக பயணம் செய்ய வேண்டாமென பாதுகாப்பின் நிமித்தம் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர். "மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல' வன்னி மக்களின் நிலைமை மோசமாகிச்செல்வதையே காணமுடிகின்றது.

இராணுவ நடவடிக்கை காரணமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் மக்கள், தற்பொழுது இயற்கையின் சீற்றம் காரணமாக பேரவலங்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகி யுள்ளது. இந்நிலையில் வெள்ளம் வடிந்தாலும் தொற்றுநோயின் அபாயம் அதனைத் தொடர்வதாகவே இருக்கும். வன்னிப்பிரதேச மக்களைப் பொறுத்தமட்டில் அடுத்தடுத்து பல்வேறு துயரங்களைச் சந்தித்தவாறே இருந்து வருகின்றனர்.

இதேவேளை, மழை வெள்ளம் காரணமாக உணவுப் பொருட்களைப் பெறுவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்ல முடியாத நிலைமையே காணப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏலவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் உணவுப் பற்றாக்குறையால் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மேலும் சீர்குலையுமானால் மக்களின் துயரங்கள் இரட்டிப்பாகவே இருக்கும்.

இதேவேளை, வடபகுதி மக்களின் விளைநிலங்கள் பயிர்ச்செய்கைகள் யாவும் கடும் மழைவெள்ளம், காற்று காரணமாக முற்றாக சீரழிந்துள்ளதாகவும் இதனால் மரக்கறி வகைகள், உப உணவுப்பொருட்கள் என்பனவற்றின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ள தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரணமாக ஒரு கிலோ கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் என்பன 1000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், இவற்றைக் கண்ணால் கூட காண்பது பெரும் அரிதாக இருப்பதாக மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். இதனால், வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். யாழ். குடாநாட்டில் அண்மையில் பெய்த பெரும் மழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக வாழை, புகையிலை, வெங்காயம், மரக்கறிப் பயிர் என்பவை அழிவடைந்து போயுள்ளதுடன் அவற்றை மீள் பயிரிட முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அனைத்துப்பொருட்களின் விலைவாசிகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளன.

P1220.jpg
இந்நிலையில் உருளைக்கிழங்கு, சீனி, என்பனவற்றுக்கு குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் ஐந்து அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட குடும்பமொன்றுக்கு ஒருகிலோ வீதம் சீனியும், உருளைக்கிழங்கும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோழி முட்டையொன்று 27 ரூபாவாகவும் கோழி இறைச்சி கிலோ 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர். முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வடபகுதியில் தோன்றியுள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் பணப்புழக்கமின்மை காரணமாக ஒரு வேளை உணவையேனும் வயிறார உண்ணமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் இப்பிரதேச மக்கள், இந்த நெருக்கடியைப் போக்கும் வகையில் சாத்தியமான அளவு விரைவாக உணவுப் பொருட்களை அனுப்பிவைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகின்றனர்.

சகல வழிகளிலும் நொந்துபோயுள்ள வடபகுதி மக்களின் துயர் துடைக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும் என்பதை மனிதாபிமானத்துடன் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

December 18, 2008

திரை இசை காணொளி: 'கடவுள் இருக்கின்றார் - அது உன், கண்ணுக்குத் தெரிகின்றதா?'

னந்த ஜோதி திரைப் படத்தில் ~ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ~ ரி.எம். சௌந்தரராஜன் பாடுவது, கவிஞர் கண்ணதாசன் வரிகளை:

கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றார் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் - எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் - இசையின்
உருவம் வருகின்றதா?

உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் - அவன்தன்
போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா - உலகில்
தருமம் அழிந்ததுண்டா - இதை
சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா -

தேடியும் கிடைக்காது - நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது - நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!

December 16, 2008

'பத்திரிகை என்ற பாணங்களை வீசிய பாரதி'

விதைகளின் நடுவே, அரசியல் உணர்வையும், தமிழார்வத்தையும் வளர்க்க மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 'வீசிய பத்திரிகை பாணங்கள்' பற்றி, ஏ.அ. மலர்விழி, தமிழக நாளேடு தினமணியில் "பாரதியும் உரைநடையும்!", என்று தலைப்பிடப்பிட்டு எழுதியுள்ளார்:

Bharathi1216.jpg

சுப்பிரமணிய பாரதியார் ((டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

பாட்டுப் பாடும் புலவன் என்று மட்டுமே அறியப்படும் சுப்பிரமணிய பாரதியின் பத்திரிகை பக்கங்கள் இன்னும் பலராலும் புரட்டப்படாததாகவே உள்ளது. பல பத்திரிகைகளில் அவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் அரசியல் உணர்வையும், தமிழார்வத்தையும் பரப்பப் பயன்பட்டன என்ற உண்மையை, அவரது கவிதைகளின் தாக்கம் மறைத்து விடுகிறது என்று சொல்ல வேண்டும்.

1904-ம் ஆண்டு இறுதி முதல் 1921-ம் ஆண்டு வரை பத்திரிகையைத் தனது படைக்கலனாய் பாரதியார் பயன்படுத்தி வந்துள்ளார். ஆரம்பத்தில் சுதேசமித்திரனின் ஆசிரியர் குழுவில் சேர்ந்த பாரதி, அங்கு பணியாற்றிக் கொண்டே 1905-ல் "சக்ரவர்த்தினி" என்ற மாத இதழிலும் அவர் ஆசிரியராக இருந்தார் என்று தெரிகிறது.

1906 முதல் 1910 வரை அவர் நடத்திய "இந்தியா' சுதந்திர உணர்வைப் பாமரரிடையே பரப்புவதில் செய்த சேவை மகத்தானது. அப்பத்திரிகைக்கு, தமக்கே உரிய பாணியில் சந்தா விகிதங்களை நிர்ணயித்தார் பாரதியார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அரசாங்கத்தாருக்கு ரூ. 50, ஜமீன்தார்களுக்கும், ராஜாக்களுக்கும் ரூ. 30, மாதம் ரூ. 200-க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ. 15, மற்றவர்களுக்கு ரூ. 3 என்று சந்தா நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்படி அவரவர் நிலைமைக்கு ஏற்ப சந்தா நிர்ணயித்த முதல் பத்திரிகை ஆசிரியர் உலகிலேயே பாரதியாராகத்தான் இருக்கும்.

கேலிச் சித்திரங்கள் மூலம் கருத்துகளைப் பதிய வைக்கும் உத்தியை அன்றே பாரதியார் "இந்தியா" பத்திரிகையில் பயன்படுத்தி உள்ளார். பெரும்பாலும் சித்திரங்களை மட்டுமே கொண்ட "சித்திராவளி" என்ற பத்திரிகையை வெளியிட அவர் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

"விஜயா" என்ற நாளிதழின் ஆசிரியர் பொறுப்பையும் சிறிது காலம் அவர் ஏற்றிருந்தார். அரவிந்தர் நடத்திய "கர்மயோகின்" என்ற ஆங்கிலப் பதிப்பின் தமிழ் பதிப்பாக "கர்மயோகி" என்ற பத்திரிகையை 1909-ம் ஆண்டில் வெளியிட்டார். "பாலபாரத" என்ற ஆங்கில மாத இதழுக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார் என்ற செய்தி பலரை வியப்பில் ஆழ்த்தும்.

1909-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி "இந்தியா" இதழில் "தேசபக்தி" என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பது அவரது தேசபக்தி எத்தகையது என்பதற்கு எடுத்துக்காட்டு. "துருவன், பிரகலாதன் முதலியோர் விஷ்ணுவிடத்தில் செலுத்திய பக்தியை நாம் சொந்த தேசத்தினிடத்தில் செலுத்த வேண்டும் என்று நமது பத்திரிகையில் பலமுறை எழுதியிருக்கிறோம்'' என்பதை நினைவூட்டுவதாய் தொடங்குகிறது அந்தத் தலையங்கம்.

மேலும் பாரத தேசத்து ஜனங்களுக்குத் தொண்டு செய்வதை விட சிறந்த மதம் வேறு கிடையாது என்று சுவாமி விவேகானந்தர் அருளிச் செய்ததை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறியுள்ளார் அவர்.

கொள்கை ஒன்றாய் இருப்பினும், கருத்து மாறுபாடுகளால் கட்சியில் பாகுபாடுகள் உருவாகி, விடுதலை வீரர்கள் அணியில் விரிசல் ஏற்பட்டு, பிணக்கும், பூசலும் வலுப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தை 1920-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதிய கட்டுரை வலியுறுத்துகிறது. ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதும், பழிதூற்றுவதும் மிகக்கொடிய வழக்கங்களென்று வன்மையாக சாடியுள்ளார்.

திலகர்மீது அசாத்திய பக்தியும் மரியாதையும் பாரதிக்கு உண்டு. ஆனாலும் திலகரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத கோகலே, காந்தி போன்ற மிதவாதிகளையும் பாரதி போற்றினார். அவரைப் பொருத்தவரை தீவிரவாதம், மிதவாதம் என்கிற வேறுபாடு எல்லாம் கிடையாது. தேசியவாதம்தான் அவருக்குத் தெரியும். தேசப்பற்றும் சுதந்திர வேட்கையும் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவருக்குப் பிடிக்கும். அவர்களை பாரதியார் போற்றுவார்.

பாரதியாரின் அரசியல் விமர்சனங்கள் கடுமையாகவும், சூடாகவும் அமைந்திருந்தன. நாட்டு நடப்பை விமர்சிக்கையில் சொந்த நட்பு பற்றி அவர் கவலைப்படவில்லை. இதனால் அவரது படைப்புகளைப் பிரசுரிக்கப் பலரும் பயந்தனர். முன்வரவில்லை. பாரதியாரின் பாடல்களை வெளியிடப் பலரும் தயங்கிய நேரத்தில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவற்றில் மூன்றை வெளியிட்டு, பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்பத் தாமே முன்வந்தார்.

இந்நிலையில் 1909-ம் ஆண்டு புதிய சீர்திருத்தங்களை வரவேற்று கிருஷ்ணசாமி ஐயர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவியை ஏற்றது தேசத் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கட்டத்தில் தமது "விஜயா" நாளிதழில், 1909-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, "எதிர்க்கிறாயா, துணை செய்கிறாயா?" என்ற தலைப்பில் பாரதி எழுதிய தலையங்கம் அவசியம் ஏற்படும்போது, நண்பராகவே இருந்தாலும் அவர் எவ்வளவு கடுமையாகவும் காரமாகவும் எழுதக்கூடியவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சென்னைவாசிகளின் நிதானமும், விபின் சந்திரபாலரின் சந்நிதானமும் என்ற தலைப்பில் 1907-ம் ஆண்டு மே மாதம் அவர் எழுதிய கட்டுரை ஒன்று, அவருடைய வேகத்தையும், நாட்டில் அன்றிருந்த கொதிப்பையும் துடிப்புடன் சித்திரிக்கிறது. தாதாபாய் நௌரோஜி, ஜீவதசை மாறி ஆத்மதசை அடைந்து விட்டது குறித்து 1917-ம் ஆண்டு ஜூலையில் அவர் எழுதிய கட்டுரையில், "இதய வேதனையும், இலட்சிய உறுதியும் இழைந்து நிற்கின்றன. நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் - அதற்கு மரணம் இல்லை" என்று நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

"கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே, நாளில் மறப்பாரடி'' என்று எந்த நடிப்புச் சுதேசிகளைப் பற்றி பாட்டிலே பாடிப் பரிதாபப்பட்டாரோ, அந்த சிறுமைக் கூட்டத்தினரை நகையாலே சுட்டு, சொல்லாலே சாம்பலாக்குகிறார் "ஞானரதம்'" என்ற தொடர் கட்டுரையின் ஒரு பகுதியில்.

சொல்லிலே மிஞ்சி, செயலுக்கு அஞ்சி, தொண்டு என்று தொண்டை கிழியக் கத்திவிட்டு சொந்த முயற்சி என்றால் சுண்டு விரலை அசைக்கவும் சித்தமில்லாது ஓடும் போலிகளைப் போல் அல்லாமல், நம் உழைப்பை நாட்டுக்குக் காணிக்கையாக்க அழைத்தவர் பாரதி.

பாரதியாரின் தமிழ் உரைநடை உணர்ச்சிமிக்க, உயிருள்ள நடை. ஒரு நேரம் அமைதியும் அடக்கமும் குடிகொண்டிருக்கும். மற்றொரு நேரம் ஆத்திரமும் ஆவேசமும் ஆர்ப்பரிக்கும். சில சமயம் இனிமையும் எழிலும் தவழும். பல சமயங்களில் எள்ளலும் துள்ளலும் சிந்திச் சிதறும். பெரும்பாலும் நேருக்கு நேர் உரையாடுவது போன்ற எண்ணம் அவரது நடையில் தொனிக்கும். நடையின் எளிமை, கருத்தின் நியாயத்தை மக்களின் மனதில் வேரூன்றச் செய்தது.

பாரதியாரின் உரைநடைக்கு அவரது தலையங்கங்கள் கட்டியம் கூறுகின்றன. இன்றைக்கு இருப்பதுபோல, தொலைக்காட்சிகள், செய்திப் பத்திரிகைகள், ஊடகங்கள், கணினிகள், தொலைபேசி மற்றும் கைபேசி வசதிகள் என்று எதுவுமே இல்லாதகாலத்தில், உலக நாடுகளைப் பற்றி, அந்த நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகள் பற்றித் தனது தலையங்கங்களில் தெள்ளத் தெளிவாகத் தனது கருத்துகளை சுப்பிரமணிய பாரதியால் எப்படி எடுத்துரைக்க முடிந்தது? இதையெல்லாம் அவர் எப்படித் தெரிந்து வைத்திருந்தார்? வியப்பில் சமைகிறோம்.

பெல்ஜியம், பிரான்ஸ், ரஷியா, பிஜித் தீவு என்று அவரது கவிதைகள் மட்டுமல்ல, கட்டுரைகளும் தலையங்கங்களும் சர்வதேசப் பார்வையுடன், தெளிந்த சிந்தனையுடன் இருப்பதைக் காண முடிகிறது. அவரது உரைநடையில் காட்டாற்று வெள்ளத்தின் வேகமும், புயற்காற்றின் சீற்றமும் ஒருங்கே காணப்பட்டன என்பதில் பாரதி ஆராய்ச்சியாளர்களுக்கு இருவேறு கருத்து கிடையாது.

தலையங்கத்தைத் தவிர "சக்ரவர்த்தினி", "இந்தியா" என்று தான் ஆசிரியராக இருந்த எல்லா பத்திரிகைகளிலும், ஒவ்வோர் இதழிலும் தனது படைப்புகள் ஒன்றிரண்டாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வார் பாரதி. அதேநேரத்தில் பெரும்பகுதி பக்கங்களைத் தானே ஆக்கிரமித்துக் கொண்டுவிடாமல், ஏனைய எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நாடகம், பாடல் முதலியவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

"சக்ரவர்த்தினி" பத்திரிகையில் "துளசிபாய் சரித்திரம்' என்கிற சரித்திரம் தழுவிய நெடுங்கதையை "ஷெல்லிதாஸ்" என்கிற புனைப்பெயரில் பாரதியார் எழுதி இருக்கிறார். துளசிபாய் என்கிற ராஜபுத்ரவம்சப் பெண்மணிக்கும், அப்பாஸ்கான் என்கிற முஸ்லிம் வீரனுக்கும் இடையே மலர்ந்த காதல் பற்றிய கதை இது.

"சக்ரவர்த்தினி" பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பாரதி பத்திரிகை இதழ்களில் புத்தக விமர்சனம் மற்றும் "பொது வர்த்தமானங்கள்' என்ற தலைப்பில் செய்திக் குறிப்புகள் ஆகியவற்றையும் தனது பெயரைக் குறிப்பிடாமல் எழுதி வந்திருக்கிறார். "சக்ரவர்த்தினி' இதழோ, "சுதேசமித்திரன்" பத்திரிகையோ சுப்பிரமணிய பாரதிக்கு அளிக்காத சுதந்திரத்தை ஒத்த கருத்தினரான அவரது நண்பர்கள் நடத்திய, "இந்தியா" பத்திரிகை அளித்தது. அதில் பாரதியார் தான் விரும்பியவண்ணம், விரும்பியதை எல்லாம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

பாரதி "இந்தியா' பத்திரிகையில் தனது புரட்சிகரமான கருத்துகள், திட்டங்கள், வேட்கைகள் முதலியவற்றை மிகுந்த ராஜதந்திரத்துடனும், சாதுர்யமாகவும், பூடகமாகவும் எழுதி அவற்றை வாசகர்களுக்குக் குறிப்பால் உணர்த்தும் நேர்த்தி அவரது எழுதுகோலின் மேன்மைக்கு எடுத்துக்காட்டு.

அற உபதேசம் முதல் ஆராய்ச்சி முடிவுரை, அரசியல் விமர்சனம் முதல் அறிவியல் விளக்கம் வரை, புராண இதிகாசம் முதல் புரட்சி இலக்கியம் வரை, வேதாந்த சித்தாந்தம் முதல் வெளிநாட்டுத் தத்துவங்கள் வரை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தார் பாரதி. அவரது மொழியில் கூறினால், அவரது கட்டுரைகள் பாரத தேசத்தாரின் அகத்தில் தழல்வீசி எரிந்து வந்த தேசபக்தப் பெருங்கனலின் பொறிகளைப் பரப்பின. அவரது நடை தமிழுக்கு ஆக்கமும், தேசியத்துக்கு ஊக்கமும் தேடித் தந்தது.

பணபலம் அதிகமின்றி, மனபலத்தையும் உணர்ச்சி வளத்தையும், எழுத்து வேகத்தையும் மட்டுமே நம்பி, வசதிகள் அதிகம் இல்லாத அந்தக் கால கட்டத்திலேயே, ஆள்வோரின் ஆத்திரத்திற்கும், அடக்குமுறைக்கும் ஆளாகும் ஆபத்தை பொருட்படுத்தாது பத்திரிகை என்ற பாணங்களை வீசிய பாரதியாரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேறு யார் உண்டு?

[இலங்கை, யாழ்ப்பாணம் - நல்லூரில் சுப்பிரமணிய பாரதியார் சிலை ~ படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரழியும் சுகாதர நிலைமகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 இலட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலைவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர்.

2 இலட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இம்மக்களுக்கு பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்த நிலையில் இயங்குகின்றன. ஆறு மருத்துவமனைகள் ஏனைய மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நலத்துறை நிலையங்களுடன் இணைந்து இயங்குகின்றன.

பொது மருத்துவமனை பகுதியாக தருமபுரம் மருத்துவமனையுடனும் விசுவமடு மகாவித்தியாலயத்திலும் இயங்குகின்றது. நகரில் உள்ள பொது மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு இயங்குகின்றது.

இடம்பெயர்ந்த நிலையில் மூன்று சுகாதார மருத்துவ அதிகாரி செயலகங்கள் இயங்குகின்றன.

தொடரும் போரினால் மக்கள் பெரும் அவலங்களையும் இடர்களையும் சந்திக்கின்றனர். வன்னியில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இடம்பெயர்ந்து ஏற்ற இடங்கள் இன்றி அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

SC1215.jpg

173 பாடசாலைகள் தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்து கொட்டில்களிலும் மரங்களின் கீழும் இயங்குகின்றன. இடம்பெயர்ந்த மாணவர்களில் 9 ஆயிரத்து 556 பேர் பாடசாலைகளுக்கு வரவில்லை.

ஏழு உதவி அரச அதிபர் அலுவலகங்கள் தமது இடங்களில் அலுவலகங்களை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளன.

மன்னாரில் 02, முல்லைத்தீவில் 02, வவுனியாவில் 01, கிளிநொச்சியில் 02 உதவி அரச அதிபர் செயலகங்கள் இடம்பெயர்ந்து விட்டன.

பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளன. அண்மைய மழை காரணமாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்ட நிலங்களில் 163.2 மில்லியன் ரூபா பெறுமதியான பயிர்கள் அழிந்துள்ளன.

பல நூற்றுக்கணக்கில் மக்கள் தொழில்களை இழந்துள்ளனர். அவர்கள் குறைந்த அளவு நிவாரணத்தில் தங்கியுள்ளனர். அரிசி ஓரளவு இருந்தாலும் மரக்கறிகளுக்கு கடல் உணவுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிபொருட்கள் தட்டுப்பாட்டால் மக்களுக்கான பொதுப் போக்குவரத்துகள் போதாமையாக உள்ளன.

இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதமானவர்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை. கிணறுகளும் சுத்தமற்ற நிலைமை காணப்படுகின்றது. பொதுக்கிணறுகளுக்கு குளோரின் போடும் நடவடிக்கை நடைபெறுகின்றது.

அத்துடன், மாற்றுவலுக் கொண்டவர்களை பராமரிக்கும், முதியவர்களை பராமரிக்கும் 10 நிறுவனங்கள் இருப்பிடம், மலசல கூட வசதிகள், ஊட்ட உணவுகள், அவர்களுக்கான சிறப்புத்தேவைகள் இல்லாத நிலையில் பெரும் அன்றாட வாழ்வில் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன.

கல்லாறு மக்கள் குடியிருப்புகள் மீது இரவு வேளை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஒருவர் இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

ஐந்து வயது சிறுவன் வலுவிழந்துள்ளான்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 2,100 பேர் உடலுறுப்புகளை இழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் மலேரியா பாதிப்பு தொடங்கியுள்ளது.

2008 இல் 44 பேர் மலேரியா பாதிப்புக்குட்பட்டுள்ளனர். மழை வெள்ளம் நுளம்புப் பெருக்கத்தை அதிகமாக்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் தருமபுரம் மருத்துவமனையில் நான்கு பேரின் இறந்த சடலங்கள் கொண்டு வரப்பட்டன. 23 பேர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டனர். பாம்புக்கடிக்கு இலக்காகி 86 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்காக காத்திருக்கும் மருந்துப் பொருட்கள்

இந்த ஆண்டின் 4 ஆவது காலாண்டுக்கான மருந்துப்பொருட்கள் வவுனியாவில் இருக்கின்றன. இவை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

அனுமதி கிடைத்தால் தான் அவற்றை கொண்டு வரமுடியும். இதற்கான வேண்டுகை இரண்டு மாதங்களின் முன்கொடுக்கப்பட்ட போதும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

மூன்று மாதங்களாக உயிர்காப்பு ஒட்சிசன் கொள்கலன் உருளைகள் அனுமதிக்கப்படவில்லை. சில நெருக்கடியான நோயாளர்கள் ஒட்சிசன் இன்மையால் இறந்திருக்கின்றனர்.

மலேரியாவை தடுக்க முன்நடவடிக்கை செய்யப்பட தேவையான பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இவை அனுமதிக்கப்படவில்லை. அவரசமாக ஒட்சிசன் உள்ளிட்ட அவசிய மருந்துகள் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும், எரிபொருட்கள் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், மருத்துவமனை மின்பிறப்பாக்கிகள், நோயாளர் காவூர்திகள் இயங்க முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், ஊட்ட உணவளிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. மாவட்டத்தில் பொதுவாக மக்களிடமே குருதிச்சோகை, ஊட்டமின்மை காரணமான நோய்கள் அதிகரித்துள்ளன.

15 வீதத்துக்கும் அதிகமான கருவுற்ற தாய்மார் குருதிச்சோகைப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். 5 வீதமானோர் குருதிச்சோகைப் பாதிப்புக்கு அதிகம் உட்பட்டுள்ளனர். ஊட்ட உணவுப்பாதிப்பால் அதிகம் சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் கடந்த மாதம் ஆறு கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 41 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 280 பிறப்புகளும் 11 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன என்றார் த.சத்தியமூர்த்தி.

December 15, 2008

காணொளி: மார்கழித் திங்களில் பெருக்கெடுக்கும் திருப்பாவை

"மாதங்களில் நான் மார்கழி" என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பறைகொட்டிய இந்த மார்கழித் திங்களில், சங்கத் தமிழ்மாலையான "திருப்பாவை'' இல்லங்களிலும், உள்ளங்களிலும் பக்தி இசை வெள்ளமாக பெருக்கெடுக்கும்.

[டாக்டர் எம்.எல். வசந்தகுமாரி வழங்கும் 'வங்க கடல் கடைந்த' திருப்பாவை ~ தாய்லந்து நாட்டின், பாங்கொக் விமான நிலயத்தில், பால் கடல் கடைந்த திருமால் காட்சி படங்களுடன்]
___________________________________________________

ங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப்பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
___________________________________________________

"மாதங்களில் நான் மார்கழி" என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பறைகொட்டிய இந்த மார்கழித் திங்களில், பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலையான "திருப்பாவை'' இல்லங்களிலும், உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும்படி யான அரிய திருப்பணியை "அரியக்குடி" ராமானுஜ ஐயங்கார், செய்தது குறித்து, 93 அகவையுடைய நீலம், டிசம்பர் 15 ஆம் திகதி தமிழக நாளேடு தினமணியில் எழுதியுள்ளார்.

அரியக்குடி ராமானுஜ அய்யங்காரைத் தமிழில் சாகித்யங்களைப் பாட வைத்தவர், "நீலம்" என்கிற பெயரில் அறியப்பட்ட நீலமேகம். சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் உதவியாசிரியராக வேலைக்கு அமர்ந்து 13 ஆண்டுகள் சங்கீத உலகுக்கு இவர் ஆற்றியுள்ள தொண்டு வரலாற்றுச் சிறப்புடையது:

இசை அரங்கேறிய (ஆண்டாள்) திருப்பாவை:

"மாதங்களில் நான் மார்கழி" என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பறைகொட்டிய இந்த மார்கழித் திங்களில், பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலையான "திருப்பாவை'' முப்பது பாசுரங்கள் பக்தர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பக்தி இசை வெள்ளமாக பெருக்கெடுக்கும்படி யான அரிய திருப்பணியைச் செய்து வைத்தவர் காயகசிகாமணி "அரியக்குடி" ராமானுஜ ஐயங்கார்.

அப்பாசுரங்களுக்கு மெட்டமைத்து கச்சேரிகளில் பாடிப் பிரபலமாக்க வேண்டும் என்று "அரியக்குடி" யை வேண்டி வந்தேன்.

அவற்றைக் கச்சேரிகளில் அரங்கேற்றி பிரபல முறச் செய்வது எளிதல்ல; சிரமமான காரி யம். கவர்ச்சியாக எடுபடுமா என்பது சந்தேக மாக இருக்கிறது என்று கூறி என் வேண்டு கோளை அவர் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தார்.

இப்படிப்பட்ட சமயத்தில் ஸ்ரீகாஞ்சி காம கோடி பெரியவாளை "அரியக்குடி" சந்திக்கும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீம ஹாஸ்வாமிகள் "அரியக்குடி" யிடம் உரையா டும்போது "திருப்பாவை' போன்ற தமிழில் பக்தி பாவம் நிறைந்த பாடல்களைக் கச்சேரிகளில் பாடிப் பிரபலமாக்க வேண்டிய அவ சியத்தை வற்புறுத்தினார். அரியக்குடி அதை உடனே ஏற்றுச் செயல்படுத்தத் தொடங்கினார்.

அப்போது "அரியக்குடி" யிடம் அவரது சிஷ்ய திலகமான வித்வான் கே.வி. நாராயண ஸ்வாமி குருகுலவாசம் செய்து கொண்டிருந்தார். "திருப்பாவை" பாசுர பிரசுரத் திட்டம் வெற்றி பெறுவதற்கு இவர் செய்த பேருதவி இப்படி அப்படி என்று சொல்லி முடியாது.

சுதேசமித்திரன் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்த நான் அரியக்குடிக்கு இதில் உதவி செய்தேன். அவர் என்னிடம் முதலில், "திருப்பாவை முதல் ஐந்து பாசுரங்களையும் கனராகங்களிலே அதாவது நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ, ஆகிய ராகங்களில் வர்ண மெட்டுப் போட்டுடலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

"உடனே ஆரம்பிச்சுடலாம். நான் ஒவ்வொரு பாசுரத்துக்கும் ரொம்ப சுருக்க மாக விளக்கக் குறிப்பு எழுதி, கூடவே அப்பா டலுக்கு பொருத்தமான சித்திரம் ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறினேன்.

கொடுத்த வாக்கின்படி "அரியக்குடி" தமது சீடர் நாராயணஸ்வாமியிடம் ஒவ்வொரு பாசுரத்துக்கும் பொருத்தமான ராகங்களில் வர்ண மெட்டுப் போட்டு, ஸ்வரப்படுத்தி என் னிடம் பிரசுரத்துக்குக் கொடுக்கப் பணித்தார்.

புழக்கத்திலே உள்ள, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ராகங்களில் மெட்டமைத்து, "அரியக்குடி' அளித்த பாசுரங்களை, தெளிவாக, ஸ்வர சாகித்தியங்களோடு கே.வி.என் எனக்குக் கிடைக்கச் செய்து வந்தார்.

கே.வி.என். இல்லாத இரண்டொரு சந்தர்ப் பங்களில் நான் கும்பகோணம் சென்று "ராமானுஜ விலாஸ்" என்ற "அரியக்குடி" யின் ஜாகைக்கு போய், ஓரிரு பாசுரங்களுக்கு மெட்டமைத்து ஸ்வரப்படுத்தி அவர் சொன் னதை எழுதி வந்து பிரசுரித்தேன்.

முப்பது பாசுரங்களும் மெட்டுப் போடப் பட்டு கச்சிதமானவுடன் திருவல்லிக்கேணி, ஆண்டாள் ஆவிர்பவித்த ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் "அரியக்குடி" மெட்ட மைத்த "திருப்பாவை" சமர்ப்பணமாயிற்று.

அடுத்தபடியாக அருணாசலக் கவியின் ராமநாடகப் பாடல்களுக்கும், குலசேகர ஆழ் வாரின் ராமாயணப் பாசுரங்களுக்கும் மெட்டுப் போட்டு பிரசுரத்துக்குத் தர வேண்டினேன்.

"வேணும் ஸ்ரீராகவசகாயம்'' எனத் தாம் வரையும் ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும் கையொப்பமிடும் வழக்கம் கொண்ட "அரியக்குடி", ராமன் என்ற பெயர் சொன்ன மாத்திரத் திலேயே எனக்கு ஒப்புதல் வாக்கு தந்து விட்டார்!

இவையாவும் தமிழிசைக்கு "அரியக்குடி" தேடி வைத்த பொக்கிஷம்! - நீலம்

___________________________________________________

A Translation of 'Vanga kadal kadaintha':

Just like the gopikas (சேயிழையார்), with moon (திங்கள்) like beauty (திருமுகத்து), obtained salvation, by surrendering (சென்று இரைஞ்சி) to the Lord, who churned (கடைந்த) the ocean (வங்க கடல்) of milk, Sri Andal (கோதை) wearing fresh (பை) lotus flowers (கமலம்), who was born in beautiful (அணி) Sri Villiputhoor (புதுவை), as the daughter of the Brahmin priest (பட்டர்பிரான்) Peria aazhwaar, presents this. Those who recite (இப்பரிசுரைப்பான்) these thirty (முப்பதும்) literary (சங்கத்) Tamil (தமிழ்) garlands (மாலை), daily without fail (தப்பாமே), will obtain the grace (திருவருள்) and derive pleasures (இன்புறுவர்) from God (திருமால்), who has beautiful (செங்) eyes (கண் ) and shoulders (தோள்) which can stretch (வரை) between two pairs (ஈரிரண்டு) of mountains (மால்), who is accompanied by the beautiful (திருமுகத்து) Laxmi (செல்வ).

___________________________________________________

Just like the gopikas, with moon like beauty, obtained salvation,
by surrendering to the Lord, who churned the ocean of milk,
Sri Andal wearing fresh lotus flowers , who was born in beautiful Sri Villiputhoor,
as the daughter of the Brahmin priest Peria aazhwaar, presents this.
Those who recite these thirty literary Tamil garlands, daily without fail,
will obtain the grace and derive pleasures from God, who has beautiful eyes and shoulders
which can stretch between two pairs of mountains,
who is accompanied by the beautiful Laxmi. [translation by Mudumbai Kirshnasvami Srinivasan]

December 14, 2008

தமிழகப் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்: " ஈழத்தமிழர்களை ஏமாற்றுகின்றோமா? "

ஈழத்தமிழர்கள் மீதான தமிழ்நாட்டில் அழுத்தம் நிச்சியம் போதாது. தமிழர்களைக் கொல்லாதே என்று மட்டும்தான் தமிழகத்தில் குரல் எழுப்பப்படுகிறதே தவிர, அங்கு நிலவும் உண்மையைக் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

KM1214A.jpg

கவிதா முரளிதரன்: "குண்டுமழையில் உயிர், உடைமை, வாழ்ந்த மண் எல்லாவற்ளையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு சிறிய ஆறுதாக, போர் நிறுத்தத்தைக் கூட கொண்டு வர எம்மால் முடியவில்லையே. நாம் இருக்கின்றோம், தோள் கொடுப்போம் என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகின்றோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரிய வருத்தமாக இருக்கிறது."

அங்கு நேரில் சென்று பார்த்தால்தான் அந்த மக்களின் - மண்ணின் காயத்தின் உண்மை வெளிப்பாடு தெரியவரும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் மக்கள் தினம் தினம் அனுவிக்கும் கொடுமையை எழுத்தில் வடிக்க முடியாது.

யுத்தம் நடக்காத பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பேசவே பயப்படுகிறார்கள். அவர்களின் துயரக் கதைகளை கண்டும், கேட்டும் அறிந்து எனது இதயமே கனத்துப்போயிற்று!

என்று கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை சென்று சென்னை திரும்பிய த வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் திருமதி. கவிதா முரளிதரன், கொழும்பு தமிழ் தினசரி தினக்குரலின் தமிழக செய்தியாளர் கே.ஜி. மகாதேவாவிற்கு அளித்த நேர்காணலில் கவலை தெரிவித்துள்ளார்.

நேர் காணல் பின்வருமாறு:

கேள்வி: பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த நீங்கள் எங்கெல்லாம் செல்லத் திட்டமிட்டீர்கள்? போனீர்கள்? யாரை பார்த்தீர்கள்?

பதில்: குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னிப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்காதது பெரும் கவலை அளித்தது. மட்டக்களப்பு சென்று சில இடங்களைப் பார்த்தேன். அரசியல்வாதிகளில் மனோகனேசன், சுரேஷ் பிரேச்சந்திரன். கருணா. டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைச் சந்தித்தேன். பேசவே பயப்படும் மக்களைக் கண்டது, அவர்களைப் பேச வைத்து நான் அறிந்தது எல்லாமே கவலை தரும் கண்ணீர்க் கதைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் மனம் நிறைந்த பயத்துடன்தான் காணப்பட்டனர். வெள்ளை வான், தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவது, காணாமற்போவது குறித்து அந்த இளைஞர்களின் பெற்றோர் வடிக்கும் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்! வெள்ளை வானில் அரசுதான் கடத்துகிறது என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். போர் இல்லாவிட்டாலும், நிம்மதியாக வாழமுடியவில்லையே. தினம் செத்துப்பிழைப்பதே எங்கள் வாழ்க்கையாகி விட்டது என்று அவர்கள் என்னிடம் கூறியது, இதயத்தையே காயப்படுத்தி விட்டது.

கேள்வி: அந்தப் பெற்றோரின் பொதுவான குற்றச்சாட்டு எப்படி இருந்தது?

பதில்: கடத்தப்பட்ட அல்லது காணாமற்போன தமிழ் இளைஞர்களின் பெற்றோரை திரு. மனோ கனேசன் மூலமாக சந்தித்தேன். வெள்ளை வானில் வந்தவர்கள் மகனைக் கடத்;திச் சென்றனர். நாங்கள் கதறி அழுதபோது கூட அவர்கள் இரக்கப்படவில்லை. அரசு ஆதரவாளரிடம் முறையிட்டால், இரண்டு, மூன்று மாதம் செல்லும். சிலவேளை, போர் முடிந்ததும் ஒப்படைக்கபடலாம்… என்று பதிலளிக்கின்றனர். சில இளைஞர்கள் இப்படி காணாமல் போய் ஆறு மாதங்களாகி விட்டன. இப்படி சித்திரவதை செய்வதை விட சுட்டுக் கொன்றுவிடலாம் என்று மனமுருகியதை, என்னால் பொறுமையுடன் சகிக்க முடியவில்லை. நான் மட்டக்களப்பில் இருந்த போதே, கொலை, கடத்தல் சம்பவங்கள் நடந்தன. தமிழ் இளைஞர்களின் பெற்றோர், செய்வதறியாது இருக்கின்றனர். இளைஞர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு.

கேள்வி: ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழக மக்கள் எழுப்பும் குரல் - ஆதரவு பற்றி அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: தமிழகத்தின் ஓட்டுமொத்த ஆதரவுக்குரல் அந்த மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும், சமரசத்துக்கான அழுத்தம் - நிர்ப்பந்;தம் போதாது என்பதே எனது கருத்து. அந்த மக்களும் அமைதியை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். தமிழ் மக்களைக் கொல்லாதே என்று மட்டுமே தமிழகம் குரல் எழுப்பினாலும், அது வெறும் பத்திரிகைச் செய்தியாக வெளி வருகிறதே தவிர இலங்கை அரசின் செயற்பாடுகளைத் திசை திருப்புவதாக இல்லை. இலங்கை தமிழ் மக்களின் துயர்துடைக்க, மத்திய அரசு மீதான தமிழ் நாட்டின் அழுத்தம் கடுமையாகவும், வேகமாகவும் இருக்கவேண்டுமென்று அம்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

கேள்வி: கொழும்பில் வாழும் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்?

பதில் : பீதியுடன்தான் காணப்படுகிறார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவிதமான மன அழுத்தம் தெரிகிறது. வாழ்க்கையே தொலைந்துவிட்ட மாதிரி நடமாடுகிறார்கள்.

கேள்வி: உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்?

பதில்: கொழும்பிலிருக்கும்போது, ஒரு இடத்துக்கு ஆட்டோவில் போனேன். ஆட்டோக்காரர் தமிழர். நான் இறங்கி, பணத்தை நீட்டியதும் அந்த ஆட்டோக்காரர் வாங்க மறுத்து விட்டார்;. காரணத்தைக் கேட்டதும், செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரைக் காப்பாற்ற தமிழகமே திரண்டெழுந்திருக்கையில், இந்த மாதிரியாவது நாங்கள் நன்றி கூற வேண்டாமா…? என்று ஆட்டோக்காரர் சொன்னது, இதயத்தையே சுட்டது.

இன்னுமொரு சம்பவம்: யாழ்ப்பாணம் செல்வதற்கு நான் பக்ரப் பிரயத்தனம் மேற்கொண்டதை அவதானித்த ஒருவர், உங்களிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் யாழ் மட்டுமல்ல, இலங்கையில் எந்தப் பகுதிக்கும் போகலாம். ஆனால் உங்களிடம் இருப்பது இந்திய பாஸ்போர்ட். அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.

ஏன் என்று வினவிய போது அவர் கொடுத்த விளக்கம், எங்களைச் சுட்டால் அதுபற்றிக் கேட்க யாரும் இல்லை. ஆனால் உங்களைச் சுட்டால், இந்திய நாடு தட்டிக் கேட்கும்! எனக்குப் புல்லரித்தது. இதற்கமைய ஒரு சம்பவமும் என் கண் முன்பாக நடந்தது. அப்பா, அம்மா, மகள் என்று ஒரு குடும்பம். அப்பா, அம்மாவிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தது. மகளிடம் இலங்கை பாஸ்போர்ட் உறவினர்களைச் சந்திக்க யாழ்ப்பாணம் போக வேண்டும். எவ்வளவோ முயற்சித்தும், பிரிட்டிஷ் (வெளிநாட்டு) பாஸ்போர்ட் இருந்த ஒரே காரணத்தினால் பெற்றோர் யாழ். செல்ல அனுமதிக்கப்படவில்லை. மகள் மட்டும் போய்த் திரும்பியுள்ளார்.

கேள்வி: உங்கள் மனநிலையைப் பாதித்த விஷயம்?

பதில்: பாதித்த என்று கூறுவதைவிட, பாதித்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். இலங்கை எமது அண்டை நாடு மட்டுமல்ல. தொப்புள் கொடி உறவு உள்ள மக்களைக் கொண்ட நாடு. அந்த மக்கள் தினம் தினம் செத்துப்பிழைக்கும் கொடுமையை தூக்கி எறிய தமிழ்நாடு என்ன செய்கிறது என்று என்னையே நான் கேட்கத் தோணுகிறது. முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் நேசக் கரத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் எதிர்பார்ப்பில், எத்தனை சதவிகித உதவியை நாம் செய்து விட்டோம். குண்டுமழையில் உயிர், உடைமை, வாழ்ந்த மண் எல்லாவற்ளையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு சிறிய ஆறுதாக, போர் நிறுத்தத்தைக் கூட கொண்டு வர எம்மால் முடியவில்லையே. நாம் இருக்கின்றோம், தோள் கொடுப்போம் என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகின்றோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரிய வருத்தமாக இருக்கிறது.

கேள்வி: உங்கள் (த வீக்) பத்திரிகையில், ஈழத்திலிருந்து வந்துள்ள அகதிகள், அகதி முகாம்கள் பற்றி விபரமாக எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் ஒரு தனி ஈடுபாடு தெரிகிறது. இதற்கு காரணங்கள் உண்டா?

பதில்: இலங்கை அரசியலில் எனக்கு தனி ஆர்வம் உண்டு. நான் வெளிநாடொன்றுக்குச் சென்ற போது, இடையே கால்பதி;த்த முதல்நாடு இலங்கை தான். தவிர, மக்களின் விருந்தோம்பல் மிகவும் பிடித்திருக்கிறது. ஈழப்பிரச்சையில் இப்பொழுது நான் செய்த விசயம் மிகவும் பலனளிக்கும் வகையில் தொடர் எழுதவிருக்கிறேன். ஏற்கனவே விடுதலைப்புலிகள் அரசியல் பொறுப்பாளர் நடேசனிடமும் பேட்டி எடுத்திருக்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை இங்கிருந்து பார்ப்பதைவிட, அங்கு சென்று நேரில் அறிந்து உதவுவதுதான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். அப்பொழுதுதான் அவர்களின் வலியும், உண்மையும் புரியும்.

கேள்வி: இந்த வகையில், பத்திரிகையாளர் என்ற ரீதியில் உங்களுக்கு ஏதாவது யோசனை தெரிகிறதா?

பதில்: இலங்கை தமிழ் மக்களின் அவலங்களை நேரில் கண்டறிய அரசின் அனுமதியுடன் பத்திரிகையாளர் குழுவொன்றை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பது இந்த பொது அமைப்பின் வாயிலாக உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு அமைப்போ அல்லது அரசியல் அமைப்போ என்றில்லாமல், நடுநிலையாளர்களைக் கொண்ட பத்திரிகையாளர் குழுவொன்று அங்கு செல்ல வேண்டும். இதனை அரசே அனுப்பி வைக்கலாம். இந்தக் கருத்தை எனது இலங்கை பயணக் கட்டுரையில் நிச்சயம் வலியுறுத்துவேன் என்று கூறினார் திருமதி. கவிதா முரளிதரன்.

த வீக் இல் அண்மையில் கவிதா முரளிதரன் எழுதிய: Mauling the Tigers by Kavitha Muralidharan

December 13, 2008

"இலங்கை அரசினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பாடதிருப்பதற்கு தமிழக உணர்வலைகள் தொடர வேண்டும்"

"தீர்வை தராமல் எங்களை ஏமாற்றி இராணுவ ரீதியாக இப்பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என அரசாங்கம் நினைத்தால் அதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது," என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி வார வெளியீட்டின் இன்று டிசம்பர் 14ஆம் திகதிய இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு திரு. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப் படையிலான தீர்வு அமைந்தால் பரிசீலிக்கத் தயார் எனவும் தெரிவிக்கும் திரு. இரா. சம்பந்தன், பல மட்டங்களிலிருந்தும் போரினை முடிவிற்கு கொண்டு வர கோரிக்கை வைக்கும் அனைத்து தமிழகத்தினரும் இது விடயத்தில் இலங்கை அரசின் போக்கை தெரிந்தவர்களாகவே தமது நடவடிக்ககளை உச்சக் கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாயும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் தொடர்வது இலங்கையில் அரசினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பாடது இருப்பதற்கு உதவக்கூடியது எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

RS1213B.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அரசியல் தீர்வு உருவாகினால் விடுதலைப்புலிகளும் அதில் பங்கு கொள்ளலாம் என்று தெரிவித்த அவர், ஆயுதங்களைக் கீழே வைப்பதற்கு காலம் நேரம் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன வீரகேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வியின் முழு விபரம் வருமாறு;

வீரகேசரிக்காக ~ நேர் காணல்: கா. பொன் மலர்; படப் பிடிப்பு: எம். எஸ். சலீம்:

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டே தீர்வை முன் வைப்போம் என அரசாங்கம் கூறுகிறது. விடுதலைப் புலிகளின்றி முழுமையான தீர்வை காண்பது சாத்தியமா?

பதில்: அரசாங்கத்தின் கருத்தை முற்று முழுதாக நிராகரிக்கிறோம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றுவரை இந்த அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக உண்மையாக நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை. உதாரணமாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் சர்வகட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கப்பட்ட ஆலோசனைகள் தற்போது குப்பையில் போடப்பட்டுள்ளன.

சில கட்சிகள் அந்த ஆலோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபடியால் இடைக்கால நிர்வாகம், இடைக்கால ஒழுங்கு என அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்கின்ற 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தை உண்மையிலேயே சர்வகட்சி மாநாடு சிபாரிசு செய்யவில்லை. அது ஜனாதிபதியால் சர்வகட்சி மாநாட்டு தலைவர் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயம்.

அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக பார்க்கும் பொழுது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து அவர்கள் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள் ளக்கூடிய ஒரு நியாயமான நிரந்தரத் தீர்வை முன் வைப்பதற்கு அவர்கள் தாயாராக இல்லை.

அந்த உண்மையான எண்ணம், விருப்பம், சிந்தனை அவர்களுக்கு இல்லை என்பதுதான் எங்களுடைய முடிவு. அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி விட்டு அரசியல் தீர்வை வைப்போம் என்று கூறுவதை தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மற்றது, அரசாங்கம் பிரதேசங்களை கைப்பற்றினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக இலகுவாக ஓரம் கட்டலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்.

ஆகவே இது சாத்தியமான விடயம் அல்ல.

RS1213A.jpg

கேள்வி: தமிழ் நாட்டின் தற்போதைய எழுச்சியை இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுடும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழ் நாட்டு மக்கள் இந்த அரசாங்கம் சமாதானமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு இந்த நாட்டில் ஒரு முறையான அரசியல் அந்தஸ்தை வழங்காது என்பதை அவர்கள் நன்கு உணர்கிறார்கள். இரண்டாவது விடயம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுடைய பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்ப்பதற்கு கடும் முயற்சியுடனேயே இந்த யுத்தத்தை நடத்துகின்றது. உண்மையிலேயே தற்போது இலங்கையில் நடைபெறுவது ஒரு இனப்படுகொலை என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே தமிழ்நாட்டில் இவ்விதமான எழுச்சி ஏற்பட்டு பல மட்டங்களில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகவிய லாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் நடிகர்கள் என பல மட்டங்களில் போராட்டங்கள் இன்று மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. இவர்களது நோக்கம் இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நல்லதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே.

நாங்கள் இந்த நாட்டினுடைய பூர்வீக குடி மக்கள். நாங்களும் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களைப் போல மிகவும் நீண்ட காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றோம்.

நாங்கள் ஒரு காலத்தில் எங்கள் பிரதேசங்களை ஆட்சி செய்தோம். நாங்கள் அன்னியர்கள் அல்ல. எங்களுடைய ஆட்சி இல்லாமல் போனது, இழந்தது அந்நிய நாடுகளிடம் வெவ்வேறாக இருந்த இலங்கைப் பிரதேசங்களை ஒன்றாக இணைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

இது 1833 ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஆகவே நாங்கள் கூறுகின்றோம், நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் நாங்கள் பெரும்பான்மையாக மிகக்கூடிய பெரும்பான்மையாக ஒரு கால கட்டத்தில் இருந்தோம். அந்த பிரதேசங்களில் எங்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம். அது ஒருமித்த நாட்டுக்குள் இருக்கலாம். அதனை நாங்கள் உதாசினம் செய்யவில்லை. ஏனெனில் இன்று சர்வதேச சமூகம், நாடுகள் பிரிவதை விரும்பவில்லை.

இந்தியா கூட விரும்பவில்லை. ஆகவே உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் எமக்கொரு தீர்வை தருவதற்கு அரசாங்கம் முன்வந்தால், அதனை நாங்கள் பரிசீலித்து ஏற்கலாம். அவ்விதமான ஒரு தீர்வை தராமல் எங்களை ஏமாற்றி இராணுவ ரீதியாக இப்பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என அரசாங்கம் நினைத்தால் அதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்விதமாக ஒரு நிகழ்வு ஏற்படுமாக இருந்தால் தமிழ்நாட்டில் தற்போது உருவாகி இருக்கின்ற நிலைமை தொடர வேண்டும். தொடரும் என்பதே எங்களுடைய கருத்து.

கேள்வி: 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியமற்றது என கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கிறது?

பதில்: 13 ஆவது அரசியல் சாசன திருத்த சட்டத்தின்படியான தீர்வை ஒரு போதும் ஏற்க முடியாது என்பது எங்களுடைய நெடுங்கால கருத்து. அந்த சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே அது விடயம் தொடர்பாக காலஞ்சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருந்தோம். இன்று உலகத்தில் பல நாடுகளில் பலவிதமான அரசியல் முறைமைகள் உள்ளன. உதாரணமாக, கனடாவில் வெவ்வேறான மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு கலாசாரங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கிறார்கள்.

அங்கே அந்த மக்களுடைய தனித்துவத்தை அங்கீகரித்து, மொழி உரிமையை அங்கீகரித்து அந்த மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்து ஒரு அரசியல் முறைமை அரசியல் சாசனம் உள்ளது.

இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பின்னர் அரசியல் சாசனம் உருவாகி இருந்தாலும் கூட ஒரு அரசியல் சாசனம் இருக்கின்றது. இப்படி பலவிதமான உதாரணங்கள் உலகத்தில் இருக்கின்றபோது அவை அனைத்தையும் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு, ஒரு முழுமையான முறையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அடிப்படையில் கிள்ளித் தருவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு விசுவாசமாக செயற்படாமல் நாங்கள் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று கூறுவதற்காக தமிழர்களுக்கு எதனையும் கிள்ளித் தந்து இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்று அரசு நினைக்கக் கூடாது. அது ஒரு போதும் நடைபெறாது. நடைபெற முடியாது.

கேள்வி: தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் நீங்களும் நினைப்பது போல சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வை தருவார்களா?

பதில்: அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்று தருவதில் உடன்பட வேண்டும். சர்வதேச சமூகம், விசேடமாக இந்தியா அவர்களை ஒத்துவர செய்ய வேண்டும். சர்வதேச மரபுகளை எந்த நாடும் முழுமையாக உதாசீனம் செய்ய முடியாது. இந்த நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென்றால், இந்த பிராந்தியத்தில் சமாதானம் நிலவ வேண்டுமென்றால் மக்களுக்கு நீதி நியாயத்தின் அடிப்படையில் ஆட்சி வசதி அமைய வேண்டும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. இலங்øகயிலே தமிழர்களுக்கு ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை கொடுப்பதற்கு இலங்கை அரசு மறுக்கின்றபோது சமாதானம் சீர்குலைகிறது. சமாதானம் சீர்குலைகிறது. சமாதானம் இன்மை, அமைதி இன்மை இலங்கையில் மாத்திரம் ஏற்படவில்லை. பிராந்தியத்தில் ஏற்படலாம்.

இதனை ஒரு உதாரணமாக வைத்து உலகத்தின் பல பகுதிகளில் ஏற்படலாம். இன்று தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இலங்கை நிலைமையின் காரணமாகவே.

எனவே இந்த வியாதி நிலைமை வேறு இடங்களுக்கும் பரவலாம். இலங்கையை உதாரணமாகக் கொண்டு வேறு நாடுகளிலும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம். ஆகையால் இவ்விதமாக சமாதானத்தை, அமைதியை குழப்புவதற்காக யாரும் பிடிவாதமாக இருந்தால் நியாயமான முறையில் அவ்விடயத்தில் சர்வதேச ச?கம் தலையிட்டு அதை தீர்க்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது.

சுயநிர்ணய உரிமை என்பது மக்களுடைய பிறப்புரிமை, மக்களுடைய மனித உரிமை.

அதனை எவரும் மறுக்க முடியாது. எனவே சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் போது அது விடயம் தொடர்பாக சர்வதேச ச?கம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருக்க முடியாது.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை பற்றி உங்கள் கருத்து?

பதில்: அது பற்றி தெளிவாக எதுவும் தெரியாது. ஆனால் எங்களுடைய சில எம்.பி.க்கள் அவர்களுடைய வெளிநாட்டு விஜயங்களின் போது அவர்கள் தங்களுடைய பேச்சுக்களில் கூறிய சில கருத்துக்களை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தினுடைய பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க முயல்வதாக நாங்கள் அறிகிறோம். அது பற்றி முழுமையான விபரங்கள் எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய எம்.பி. மார்கள் அப்படி தவறாக பேசி இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய கருத்துக்களை துணிவாக, தெளிவாக கூறி இருக்கலாம்.

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒன்றையும் கொடுக்க முடியாது. இங்கு இனப்பிரச்சினை இல்லை. எதற்கு அரசியல் தீர்வு?'' என்று ஜே.வி.பி., ஹெல உறுமய, தேசிய சுதந்திர ?ன்னணி போன்ற கட்சிகள் பேசுகின்றபொழுது, இவற்றை அரசாங்கம் பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்கும்பொழுது, ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வ மாக செயற்படாதபோது, தமிழ் மக்களை பிர திநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் உலக நாடுகளில் தங்களுடைய கருத்துக்களை கூறும்பொழுது, இதனடிப்ப டையில் இவ்வாறான நிலைமைகள் தொடரு மாக இருந்தால் அதனுடைய விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை பற்றி அவர்கள் சில கருத்துக்களை கூறி இருக்கலாம். அதனடிப்படையில் பேசி இருக்கலாம். அது அவர்களுடைய பேச்சு சுதந்திரம். ஆகவே அவர்கள் பொம்மைகள் அல்ல. எனவே இவை நீதிமன்றங்களில் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள்.

உரிய காலத்தில் அது விடயம் தொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ அதனை நாம் செய்வோம்.

கேள்வி: தனி நபர் கருத்து சுதந்திரம் உள்ள போது தமிழீழம் பற்றி பேசுவது தவறென கூறுவது ச?யா?

பதில்: இது தவறானது. நாங்கள் நாட்டு சட்டத்தை மீறக்கூடாது. அதனை நாங்கள் மறக்கவில்லை. அதே சமயத்தில் உண்மையை பேசுவதற்கு தயங்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டு சட்டம் உண்மையை பேசுவதற்கு தடை விதிப்பதாய் எவரும் கூற ?டியாது. இலங்கையில் தமிழருடைய பிரச்சினை தொடர்பாக பிரச்சினையே இல்லை என கூறுவதற்கு பகிரங்கமாக குரல் எழுப்புகின்ற பொழுது அது ஏன் பிழை, அவ்வாறான நிலை தொடர்ந்தால் விளைவு எவ்வாறானதாக இருக்கும் என்று பேசுவதை குற்றமென கருத முடியாது.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. க்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக வதந்திகள் பரவிவி வருகிறதே இது உண்மையா?

பதில்: அவ்விதமானதொரு கலந்துரையாடலோ சிந்தனையோ எங்கள் மத்தியில் தற்போதைக்கு இல்லை.

கேள்வி: அரசாங்கம் தமிழ் மக்களை விடுவிப்பதாக கூறி மக்களை ?காம்களில் வைத்து ள்ளதே, இது பற்றி உங்கள் கருத்து?

பதில்: மக்களை விடுவிக்கின்றது என்ற கருத்துத் தொடர்பாக நான் மிக தெளிவாக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கின்றேன். சர்வதேச ச?கம் கூட சமீபத்திய அறிக்கைகளில் இது விடயம் தொடர்பாக தமது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். இது ஒரு போலி நாடகம். மக் களை விடுவிப்பதென்றால் அதன் அர்த்தம் மக்களை கொலை செய்வது, மக்களை காயப்படுத்துவது, மக்களின் சொத்துக்களை அழிப்பது, மக்களை குடிபெயரச் செய்வது மக்களை நிர்க்கதியாக்குவது, மக்கள் உணவின்றி உடையின்றி, இருப்பிடமின்றி, மரங்களின் கீழ் வாழ்வது இதுதானா விடுதலை. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஐப்பசி மாதம் 26 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்று ஒரு வாக்குறுதியை கொடுத்தார். தாங்கள் யுத்தத்தை நடத்துகின்ற பொழுது தமிழ் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாமல் யுத்தத்தை முன்னெடுப்போம் என்று. ஆனால் அவர் திரும்பி வந்த பின்னர் தொடர்ச்சியாக விமான குண்டுத் தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்கள், ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது யுத்தமல்ல இனப்படுகொலை.

கேள்வி: வன்னி மக்கள் சோமாலியர்களைப் போல அல்லல்படுவதாக ஐ.நா. அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளமை குறித்த உண்மை நிலவரம் என்ன?

பதில்: அங்கு மக்களுடைய நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது. ஒரு விதமான வசதிகளுமில்லை. மலசல கூடங்களோ, சுத்தமான குடிநீரோ இல்லை. உணவுத் தட்டுப்பாடு உள்ளது. வதிவிட வசதிகள் எதுவுமில்லை. வதிவிட வசதிகளை ஏற்படுத்துவதற்கு எடுத்து செல்லும் பொருட்களைகூட புலிகள் தங்களுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் எனக்கூறி இராணுவம் தடை செய்கிறது. இவ்வாறான நிலைமையில் மக்கள் மர நிழல்களில் வாழ்கின்றார்கள். மக்கள் சாக்குகளை பிரித்து மர கொப்புகளில் கட்டி அந்த நிழலில் வாழ்கிறார்கள்.

இது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் கூட தமது அறிக்கைகளில் தெரிவித்து இருக்கின்றன. எனவே அம்மக்களுடைய நிலைமை மிக மோசமாகவே உள்ளது.

கேள்வி: இந்திய பிரதமருக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தள்ளிக் கொண்டே போகிறது. இதன் காரணம் என்ன? அச்சந்திப்பு எப்போது நடைபெறும்?

பதில்: இந்தியப் பிரதமர் சார்க் மாநாடுக்கு இலங்கை வந்திருந்தபோது, அவரை நாங்கள் சந்தித்தோம். அது ஒரு நல்ல சந்திப்பு. நீண்ட நேரம் இல்லாவிட்டாலும் எங்களுடைய கருத்துக்களை அவருக்கு தெளிவாக கூறுவதற்கு அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. அவரும் எங்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அதற்கு முன்பதாக அவரை நாங்கள் புதுடில்லியில் சந்தித்தோம். அதன் பின்னர் அவரே எம்மிடம் கூறினார், நாங்கள் மறுபடி புதுடில்லியில் சந்திப்போம் என்று. அந்த கொள்கை கைவிடப்படவில்லை. பல்வேறு காரணங்கள் நிமித்தம் சந்திப்பு பின்போடப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் அணு ஒப்பந்தம் சம்பந்தமான சர்ச்சை. இப்படி தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களால் சந்திப்பு இடம்பெறவில்லை. அது இடம்பெறும்.

கேள்வி: பிரணாப் முகர்ஜியின் வருகையால் யுத்த நிறுத்தம் சாத்தியமாகுமா? இவ்விஜயத்தில் என்ன பயன் கிட்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: அது விடயம் தொடர்பாக கருத்துகள் கூற நான் தயாராக இல்லை. ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன். தமிழீழம் மீது தற்போது நடைபெறுகின்ற இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டுமாக இருந்தால் யுத்தம் தொடரக்கூடாது. அதை நாங்கள் தெளிவாக கூறுகிறோம். வன்னியில் தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கின்ற துன்பங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால் யுத்தம் தொடர முடியாது. யுத்தம் தொடருமாக இருந்தால் இனப்படுகொலை தொடரும். அதனை நாங்கள் தெளிவாக திட்டவட்டமாக கூறுவோம். ஆகவே இலங்கை அரசாங்கம் எவ்விதமான முடிவை எடுக்குமென கூற முடியாது.

அவர்கள் எடுக்கின்ற முடிவுகளால் மேலும் பல விளைவுகள் ஏற்படலாம்.

கேள்வி: சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்க்க வேண்டும் என பேசப்படுகிறதே. த.தே. கூட்டமைமப்பு அதில் பங்குபற்ற உத்தேசித்துள்ளதா? பங்குபற்ற வாய்ப்புள்ளதா?

பதில்: சர்வகட்சி மாநாட்டுக்கு இன்றுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. ஜனாதிபதி சிங்கள தரப்பில் ஒரு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பேன் என முடிவு எடுத்துள்ளார். அது எமக்கு நன்கு தெரியும். எங்களுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. ஆனால் சர்வகட்சி மாநாடு தற்போது ஒரு பிணம். ஒரு உயிரில்லா உடல். அதன் ?லம் எதுவும் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஒரு பிணத்திற்கு உயிர் கொடுப்பதற்காகவும் அரசாங்கத்தினுடைய இயலாமையை அவர்களுடைய பிடிவாதத்தில் இருந்து அவர்களை மீட்பதற்காகவும் சர்வகட்சி மாநாட்டில் ஒரு போதும் பங்குபற்ற மாட்டோம். எங்களுக்கு நன்கு தெரியும்.

இன்று அது உயிரிழந்து, வலுவிழந்து போயிருக்கின்ற ஒரு அமைப்பு. பிறகேன் அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். கொன்றவர்கள் அரசாங்க தரப்பினர். இவ்விதமான சூழ்நிலையில் நாங்கள் அதில் பங்குபற்றுவது அர்த்தமற்ற ஒரு விடயம். எங்களுடைய சுயமரியாதைக்கு மாறான ஒரு விடயமாக இருக்கும். எனவே அந்த நிலைக்கு நாங்கள் ஒரு போதும் ஆளாக மாட்டோம்.

கேள்வி: புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தாலே பேச்சுவார்த்தை என அரசாங்கம் கூறுவது குறித்து?

பதில்: ஆயுதம் கீழே வைப்பது என்பது ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படும்போது நடைபெறுகின்ற ஒரு விடயம்தான். அது ஒரு புது விடயம் அல்ல. ஆனால் ஆயுதம் எப்போது கீழே வைக்கப்பட வேண்டும், என்ன சூழ்நிலையில் கீழே வைக்கப்பட வேண்டும் என்பது வேறொரு விடயம். உதாரணமாக, அயர்லாந்தில் புரட்சி செய்தவர்கள் ஆயுதங்களை கீழே வைத்தார்கள். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு தீர்வு ஏற்பட்டு அந்த தீர்வை அந்த நாட்டு மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரித்து அந்த தீர்வை அமுல்படுத்துவதற்கு ஒழுங்குகள் செய்த பிறகு, பயங்கரவாதம் சம்பந்தமாக இருந்த ஒழுங்குகளில் மாற்றம் வந்த பின்னர் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே வைப்பார்கள். சமாதானம் ஏற்பட ஆயுதங்கள் கீழே வைக்கப்பட வேண்டும் என்பது உண்மை. அதனை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ஆயுதங்கள் எப்போது கீழே வைக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி.

ஆயுதங்களை கீழே வைக்க ஒரு காலம், நேரம் உருவாக வேண்டும். அரசு பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல், ஆயுதங்களை கீழே வைக்கும்படிகேட்பது தங்களுடைய வசதிக்காக கேட்பதே தவிர, பிரச்சினையை தீர்ப்பதற்காக ?ன்வைக்கின்ற ஒரு கோ?க்கை அல்ல. ஆகவே இவ்விடயம் தொடர்பாக புலிகள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும்.

கேள்வி: அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த முடியும் என அமெ?க்க தூதுவர் அடிக்கடிடி கூறி வருகிறார். இதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?

பதில்: புலிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு உருவாகினால் எல்லோரும் அதில் பங்குபற்றி கொள்ளலாம். புலிகளும் பங்குபற்றி கொள்ளலாம்.

அவ்விதமானதொரு தீர்வு ஏற்படாத காரணத்தின் நிமித்தம்தான் புலிகள் உருவாகினார்கள்.

மிதவவாத தலைவர்களின் காலத்தில் அவ்விதமானதொரு தீர்வு ஏற்பட்டிருந்தால் புலிகள் உருவாகி இருக்க மாட்டார்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கை அரசுக்கு முடியுமென்றால் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

காணொளி: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 11ஆம் திகதி திருக்கார்த்திகையை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று.

December 12, 2008

காணொளி:ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது; 'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு'

சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுபெற தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் ஏ ஆர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக அளவிலான இந்த விருது ஹாலிவுட் திரையுலகத்தால் வழங்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் திரைப்பட இயக்குநர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம் டாக் மில்லியனைர் (Slumdog Millionaire) என்ற திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருதுகளில் ஒன்றாக சிறந்த இசை அமைப்புக்கான விருதினை ஏ ஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

ARH1213.jpg

தங்கத் தமிழ் மகன் சிறப்பை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, 1994 இல் வெளியாகிய 'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு' பாடலை கேட்டு வாழ்த்திடுவோம்:

ங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனி தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டி சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கர்ப்பனைக்கில்லை கட்டுப்பாடு

மெட்டுப்போடு ..

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

நாம் கட்டும் பாட்டு இவன் தட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனை நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலை போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாடு

மெட்டுப்போடு ..

இனி கண்ணீர் வேண்டாம்
எங்கள் கானங்கள் கேட்டுக்காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க

நம் பூமி மேலே ஒரு பார்வை கொள்க
நம் இயற்க்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப்போல் வெற்றி கொள்க

மெட்டுப்போடு - பாடல்: கவியரசு வைரமுத்து

[ஏர்.ஆர். ரஹ்மானுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுஜாதா, ஹரிகரன்~ நேரடி இசை நிகழ்வொன்றிலிருந்து]

December 11, 2008

வன்னி மனித பேரவலத்தினை சோமாலியா நிலவரத்துக்கு ஒப்பீடு

"சோமாலிய மக்களைப் போன்று உணவு மற்றும் உறையுள் இன்றி, வன்னியில் மக்கள் அல்லல்படுகின்றனர்," என உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த ஜோன் கெம்பல் தெரிவித்திருப்பதனை சுட்டிக்காட்டி, உடனடி போர் நிறுத்தம், நிரந்தர தீர்வு என்பன இன்றைய தருணத்தில் முக்கியமானவை என வலியுறுத்தி, இன்று டிசம்பர் 12ஆம் திகதி, கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழ் வீரகேசரி, பின்வருமாறு ஆசிரியத் தலையங்கம் எழுதியுள்ளது:

IDP1211.jpg

[வெள்ளப் பாதிப்புக்களினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இந்த மக்கள், சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவிகள் மற்றும் உணவு நிவாரணங்களை எதிர்பார்ப்பதாக ஜோன் கெம்பல் தெரிவித்துள்ளார்]

பொருட்களின் விலையேற்றம், யுத்த நடவடிக்கைகள், இயற்கையின் சீற்றம் என்பன பாதிக்கப்பட்ட மக்களையே தொடர்ந்தும் பாதிப்புக்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்குவதாக அமைந்துள்ளன.

யுத்த நடவடிக்கைகள் காரணமாக வன்னியில் அப்பாவிப் பொது மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து அன்றாடம் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

உணவு மற்றும் மருந்து வகைகளுக்கான பற்றாக்குறை, அடிப்படை வசதிகளைப் பெறமுடியாத நிலைமைகளே அவர்கள் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடி என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென இந்தியா அண்மையில் பெருந்தொகை நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது.

அரசாங்கமும் வழமையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றது. எவ்வாறாயினும், போக்குவரத்து நெருக்கடிகளினால் இவை தாமதமடைவதுடன், இடம்பெயர்ந்து ஆங்காங்கே தங்கியுள்ளவர்களைச் சென்றடைய காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வன்னியில் மக்கள் சோமாலியர்களைப் போன்று உணவு மற்றும் உறையுள் இன்றி அல்லல்படுகின்றனர் என ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளது.

சோமாலிய மக்களைப் போன்று உணவு மற்றும் உறையுள் இன்றி, வன்னியில் மக்கள் அல்லல்படுகின்றனர் என உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த ஜோன் கெம்பல் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மழை, வெள்ளம் காரணமாக தருமபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புக்களினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் இந்த மக்கள், சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் உதவிகள் மற்றும் உணவு நிவாரணங்களை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியில் சுமார் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக மழை வெள்ளம் ஏற்பட்டாலேயே மக்கள் நிர்க்கதியாவதுடன், பல்வேறு வகையான கஷ்டங்களுக்கும் ஆளாகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், நஷ்டஈடு வழங்கவும் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுப்பது வழக்க மாகும். இந்நிலையில், வன்னிப் பகுதியைப் பொறுத்த மட்டில் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வகையான கஷ்டங்கள், நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே தங்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். ஏலவே போதுமான உணவு, மருத்துவ வசதியின்மை, போக்குவரத்துச் சீர்குலைவு, யுத்த நெருக்கடிகள், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட போதிய வசதி வாய்ப்புக்களின்மை போன்ற பிரச்சினைகளால் பெரிதும் நொந்து போயிருந்தனர்.

இவ்வாறானதோர் பின்னணியில், மோதல்கள் விஸ்வரூபமடைந்து பாரிய அளவிலான உள்ளக இடம்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளமை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இதேவேளை, தொடரும் மழையும் வெள்ளப் பெருக் கும் நிம்மதியாக ஓரிடத்தில் தங்கமுடியாத சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலைமைகளில் குழந்தைகள் தொடக்கம் வயோதிபர்கள் வரை பலதரப்பட்டவர்களும் மிகுந்த அவலங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மனிதாபிமான ரீதியில் அகதிகளான மக்களின் பிரச்சினைகளை அணுக நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது. குறிப்பாக, தொற்று நோய்களால் அகதி மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அனைத்துக்கும் மத்தியில் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறு அகதி வாழ்க்கை வாழ்வது என்ற ஏக்கங்களுடனேயே மக்கள் காணப்படுகின்றனர். தத்தமது சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ்ந்த மக்களே இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வன்னி போர் முனையில் அமைதி ஏற்பட்டால் மாத்திரமே மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று சகஜ வாழ்க்கை வாழக் கூடியதாக இருக்கும். போர் நடவடிக்கைகள் காரணமாக அப்பாவிப் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள அனைத்தையும் இழப்பதும் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைவதுமாகவே காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தொடரும் மோதல்களினால் உயிரழிவுகளும், மக்களின் அவலங்களுமே மோசமாக அதிகரித்துச் செல்கின்றன. கடந்த 3 தசாப்த காலமாக இதனையே அனுபவ ரீதியாக காணக்கூடியதாகவுள்ளது.

இதன் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுச் செல்கின்றது. அத்துடன், அடுத்த வருடம் தொடக்கம் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உயிரழிவுகளுக்கும், பொருளாதார விரயங்களுக்கும் வழிகோலும் இந்த அநாவசியப் போரை நிறுத்தி அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்க அரசாங்கம் சாத்தியமான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

December 10, 2008

பாரதியாரின் 127ஆவது பிறந்த நாளுக்கு காணொளி: "ஆசை முகம் மறந்து போச்சே"

ன்று டிசம்பர் 11ம் திகதி, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 127ஆவது பிறந்த தினம்.

[பிறந்த நாளை கொண்டாடிட, பிரியா சகோதரிகள் வழங்கும் அவர் எழுதிய "ஆசை முகம் மறந்து போச்சே" பாடல்]

ஆசை முகம் மறந்து போச்சே:

சை முகம் மறந்து போச்சே - இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழிதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி

(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி

(ஆசை)

முதல்வர் கருணாநிதி: "யார் யாரெல்லாம் தமிழர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்"

ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழக தலைவர்களை விமர்சனம் செய்தது தொடர்பாக தமிழகமெங்கும் எழுந்துள்ள கண்டனங்கள் குறித்து, முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிடும் போது "யார் யாரெல்லாம் தமிழர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று டிசம்பர் 11ம் திகதி, புதன்கிழமை நடைபெற்ற வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் அங்கு பேசியபோதே இவ்வாறு தெரிவித்ததாக தமிழக நாளேடு தினமணி பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது:

இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா "சண்டே அப்சர்வர்' இதழுக்கு அளித்த பேட்டியில் "தமிழக அரசியல் தலைவர்கள் அரசியல் கோமாளிகள். விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் பணம் பெறுகின்றனர். விடுதலைப் புலிகளை விரட்டிவிட்டால் அவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை இந்த அரசியல் கோமாளிகள் இழந்துவிடுவார்கள்'' என்று அடாவடித்தனமாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் படித்துவிட்டு தமிழக தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யார் யாரெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்ற பட்டியல் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில் ஒரு முக்கிய கட்சியின் பெயர் இல்லை.

"நாம் தமிழர்' என்று இங்கே இரண்டு மூன்று முறை குறிப்பிட்ட திருமாவளவன் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்பதால் கண்டனம் தெரிவித்தோர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறது. தமிழர் அல்லாதவர்களுடைய பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. இந்த ரகசியத்தை, சூட்சமத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடநாட்டு மன்னர்களான கனகனும், விஜயனும் தமிழ்நாட்டு மன்னர்களை இகழ்ந்தார்கள் என்பதற்காக சேரன் செங்குட்டுவன் போர்தொடுத்து இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்து தெற்கே கண்ணகிக்கு சிலை வைத்தான் என்கிறது சிலப்பதிகாரம்.

சேரன் செங்குட்டுவன் ஆர்த்தெழுந்து கனகனையும், விஜயனையும் தோற்கடித்ததற்கு தமிழர் என்ற உணர்வு தான் காரணம் என்றார் கருணாநிதி.

December 08, 2008

தமிழக முதல்வர்: ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதியின் கூற்று கடும் கண்டனத்துக்குரியது

மிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகள் என ஸ்ரீ லங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால், அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: இலங்கை இராணுவத் தளபதி தமிழக அரசின் தலைவர்களைக் கோமாளிகள் என்று கூறியிருக்கிறாரே?

பதில்: அப்படி இலங்கை தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாது. அப்படி விமர்சித்திருந்தால் அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

கேள்வி: இதை நீங்கள் பிரதமர் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்: இலங்கை இராணுவத் தளபதி கூறியது பத்திரிகைகளில் வந்துள்ளது. ராமதாஸ் கூறிய கருத்தும் இந்நேரம் பிரதமருக்குத் தெரிந்திருக்கும்.

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரணாப் முகர்ஜி எப்போது செல்கிறார்?

பதில்: இன்னும் தேதி குறிப்பிடவில்லை.

கேள்வி: போர் நிறுத்தம் செய்ய இந்தியா வற்புறுத்தாது என இலங்கை அமைச்சர் கூறியிருக்கிறாரே?

பதில்: சர்வ கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இலங்கைக்குச் சென்று நமது கோரிக்கையான போர் நிறுத்தத்தை வலியுறுத்தவும் இந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்யவும் இலங்கைக்கு செல்ல வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கேட்டுக் கொண்டோம். அதைப் பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்

December 07, 2008

காணொளி: மெல்பேர்ன் நகரில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மாவீரர் தின நிகழ்வு உரை

வுஸ்திரேலியா மெல்பேர்னில் மாவீரர் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை, நவம்பர் 28ஆம் திகதியன்று வன்ரேனா ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது.

மெல்பேர்ன் நகரில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மாவீரர் தின நிகழ்வு உரை:

[பகுதி 1]

[பகுதி 2]

[பகுதி 3]

[பகுதி 4]

[பகுதி 5]

[இறுதி பகுதி]

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தனது 45 நிமிட சிறப்புரையில், ஈழத்தமிழரிற்கும் தாய் தமிழக மக்களிற்கும் இருக்கின்ற நெருங்கிய உறவுகளையும், அதனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியையும், எப்போதும் ஈழத்தமிழரிற்கு ஆதரவான செயற்பாடுகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தமிழீழ தனிநாடே தமிழரின் மானத்தையும் பாதுகாப்பையும் அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பையும உறுதிசெய்யக்கூடியது என்றாகியுள்ளது என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விரிவாக தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

காணொளி ~ இப்படிக்கு ரோஸ்: புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் உரையாடல்

கதியாக இன்னொரு நாட்டிற்கு போவதன் வலி என்ன? தமிழகத்தின் விஜய் டி. வி யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி:

பகுதி I

இவ் ஒளிபரப்பின் பகுதிகள் II, III:

பகுதி II

பகுதி III

December 06, 2008

பிரணாப் முகர்ஜி விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான பலன் வேண்டி வலியுறுத்தல்

ஸ்ரீ லங்கா அரசு எதிர் காலத்தில் சீனா அல்லது பாகிஸ்தான் பக்கம் சாய்வதற்கே ஏது நிலைகள் கூட்டுதலாயுள்ளன. இலங்கைத் தமிழர்களே இந்தியாவின் உண்மை நண்பர்கள், எனச் சுட்டிக் காட்டி டிசம்பர் 7ஆம் திகதியன்று ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது கொழும்பிலிருந்து வெளி வரும் இலங்கையின் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் விஜயமானது, மனிதப் பேரவலத்தினை காணும் தமிழ் மக்களினது துன்ப துயரங்கள் நிவர்த்தி, சுய நிர்ணய உரிமை அபிலாஷைகள் தீர்வு என்பனவற்றிற்கு ஆக்க பூர்வமாக அமைய வேண்டும் என வலியுறுத்தியே வீரகேசரி ஞாயிறு பதிப்பு மேற் கண்டவாறு தெரிவித்து ஆசிரியத் தலையங்கம் எழுதியுள்ளது.

இந்திராகாந்தி அம்மையாரைத் தவிர்த்து ஏனைய இந்தியத் தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் ஸ்ரீ லங்கா அரசினை நம்பி தமிழ் மக்களுக்கு மோசம் செய்து விட்டனர், எனவும் வீர்கேசரி சுட்டிக் காட்டியுள்ளது.

Vira126.jpg

"பிரணாப் முகர்ஜியின் விஜயம் சாதிக்கப் போவது என்ன?" என்று தலைப்பிடப்பட்ட வீரகேசரி ஆசிரியத் தலையங்கம் வருமாறு:

லங்கையில் தமிழ் மக்கள் படும் துன்ப, துயரங்கள் குறித்து தமிழக மக்களைத் தவிர்த்து வேறு எவரும் பெரிதாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்திய மத்திய அரசு ஒப்புக்காக பாதிக்கப்படும் தமிழர்கள் குறித்து அறிக்கை விடுவதுடனும் பேசுவதுடனும் அமைதி அடைந்து வருகின்றது.

சர்வதேச சமூகம் வன்னியில் பெரும் மனிதப் பேரழிவு நடைபெறுவது பற்றி கண்டும் காணாதது போல் இருக்கின்றது.

காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தமிழ் மக்களுக்கெதிராக போருக்கான போ?னை நடத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சமாதானத்துக்கான போரினைக் கொண்டு நடத்தினார். தற்போது இன்றைய அரசு மனிதாபிமான யுத்தத்தை நடத்துவதாகக் கூறுகின்றது.

மேற்கூறிய அனைத்து "யுத்தங்களாலும்'' இறுதியில் பாதிப்புக்குள்ளாகியவர்கள் தமிழ் மக்கள்தான். இலங்கை அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் யுத்தங்களால் தமிழ் மக்கள் விடிவையோ விமோசனத்தையோ பெற்றதாக இல்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் இல்லை என்பதுதான் உண்மையாகும்.

இலங்கையில் தொடர்ந்து ஆட்சிபீடமேறும் அரசுகளின் யுத்தக் கொள்கைகளால் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்காக தமிழகம் மாத்திரமே தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. தற்போதும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகத் தமிழகம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.

இந்த எழுச்சியின் விளைவாக தமிழகத்தின் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்துள்ளது.

இச்சந்திப்பின்போது தமிழக முதல்வரின் வலியுறுத்தலையடுத்து போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமுகமாக வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இந்திய மத்திய அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைப்பதாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் உறுதி மொழி வெளிவந்த அதேதினத்தில், "விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு எமக்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.

ஆனால் இதற்குள் நாம் சிக்கிக் கொள்ள மாட்டோம். போர் நிறுத்தம் செய்வதற்கு நாம் தயாரில்லை. அதற்காக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயார்'' என பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதம் ஆகியவற்றில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.

அதாவது இந்தியப் பிரதமர் தமிழக முதல்வர் தலைமையிலான சர்வகட் சித் தலைவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசின் சார்பில் வெளிநாட்டமைச்சரை இலங்கைக்கு அனுப்புவதாக உறுதியளித்த அதே தினமான வியாழக்கிழமை (04.12.2008) பிரதமர் நாடாளுமன்றத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை மிகத் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இந்த ஒரு பின்னணியில் இந்திய வெளிநாட்டமைச்சரின் வருகை சாதிக்கப் போவது என்ன என்ற கேள்வி பலமாக எழுப்பப்படுகின்றது.

PKMKK126.jpg

[அக்டோபர் 26: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதலை நிறுத்தி, இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் விலகுவது என்ற அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவை தள்ளிவைத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

சோனியா காந்தியின் தூதராக சென்னைக்கு வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, பதவி விலகல் முடிவை தள்ளிவைப்பதாகத் தான் அவரிடம் உறுதியளித்தாகக் கருணாநிதி கூறினார்]

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக இந்திய மத்திய அரசின் பிரதிநிதிகள் வரிசையில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை ஏழாவது முக்கிய விஜயமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலம் சென்ற இந்திரா காந்தி இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான 1983 ஜூலைக் கலவரத்தையடுத்து அப்போது வெளிநாட்டமைச்சராகப் பணியாற்றிய நரசிம்மராவ் அவர்களை இலங்கைக்கு அனுப்பினார்.

இலங்கை இந்தியாவுக்கு ஆதரவானதல்ல. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டும் என்று நரசிம்மராவ் இந்திரா காந்தி அம்மையாருக்கு தனது இலங்கை விஜயத்தையடுத்து விளக்கினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திரா காந்தி அம்மையார், "இலங்கையில் நடப்பது உள்நாட்டுச் சண்டை அல்ல. இனப் போராட்டமே'' என்று கூறினார்.

இதனையடுத்து இந்தியத் தூதுவராக ஜி. பார்த்தசாரதி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

தமிழர் பகுதியைத் தன்னாட்சி கொண்ட அமைப்பாக மாற்றினால் தான் தமிழர் விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்குமென்ற முடிவுக்கு வந்த அவர் அறிவித்த திட்டம் "இணைப்பு சி" என்ற பெயரில் முன்வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு அப்போதைய ஜனாதிபதி காலம் சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனா ஒப்புக் கொண்டபோதும் பின்னால் அதனை எதிர்த்தார்.

இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்தையடுத்து பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தியிடம் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானால் ஜி. பார்த்தசாரதி அனுப்பப்படக்கூடாது என்ற நிபந்தனையையும் ஜே.ஆர். ஜயவர்தனா விதித்தார்.

இதற்குப் பிறகு ஏ.பி. வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்ட போதும் அவ்வேளையில் நடைபெற்ற விடயங்களில் அதிருப்தி தெரிவித்து அவர் ராஜினாமா செய்து விட்டார். "வங்காளியர், பஞ்சாபியர் சம்பந்தப்பட்டதாக இலங்கைப் பிரச்சினை இருந்திருக்குமானால் இந்தியா இந்நேரம் மீண்டும் ஒரு வங்கப் போரினை தொடக்கியிருக்கும்" என்பது தான் ஏ.பி. வெங்கடேஸ்வரனின் இறுதிக் கூற்றாகும். பிறகு ஜே.என். தீட்சித், ஹர்கிரத் சிங், டி.ஆர்.

கார்த்திகேயன், எம்.கே. நாராயணன் இறுதியில் தற்போது இந்திய வெளிநாட்டமைச்சரின் வருகை இடம்பெறவுள்ளது.

மொத்தத்தில் கூறுவதானால் இந்திராகாந்தி அம்மையாரைத் தவிர்த்து ஏனைய இந்தியத் தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இலங்கையை நம்பியே தமிழ் மக்களுக்கு மோசம் செய்து விட்டனர்.

தற்போதைய இந்திய மத்திய அரசும் இதனையே செய்கின்றது.

வடக்கு கிழக்கு இணைந்த அதாவது தமிழகம் போன்றதொரு மாநில ஆட்சி அதிகாரப் பரவலாக்கலுக்குக் கூட இலங்கையின் ஆட்சியாளர்கள் இணங்கப் போவதில்லை. இந்தியா நினைப்பது போல் இலங்கை இந்தியாவின் நண்பனாக இருக்கவும் போவதில்லை என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாகும். இலங்கை சீனா அல்லது பாகிஸ்தான் பக்கம் நிரந்தரமாக எதிர்காலத்தில் சாய்ந்து கொள்வதற்கான ஏது நிலைகளே கூடுதலாக உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். உண்மையில் தமிழர்களே இந்தியாவின் உண்மையான நண்பர்கள்.

அந்த நண்பனை நாசமாக்கி அழித்தொழிப்பதற்கு இன்று இந்தியா துணை போவதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக சீனாவோ, பாகிஸ்தானோ நிரந்தரமாக இலங்கையில் கால் பதிக்கும்போது தமிழ் நண்பன் இந்தியாவுக்குத் தேவைப்படலாம். ஆனால் அவ்வேளையில் நிலைமை கட்டுமீறி இந்தியாவின் கைகளுக்கு அப்பாற்பட்டதான நிலையே இருக்கும் என்பது மட்டும் உண்மையாகும் என்பதைத் தமிழ் மக்கள் இந்தியப் பேரரசுக்குச் சுட்டிக் காட்டுகின்றனர்.

December 05, 2008

வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகளையே கோருகிறார்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்

லாநிதி ஆ.க.மனோகரன் எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், ஒருவரலாற்றுப் பார்வை 1948-2007" நூல் வெளியீட்டு வைபவம் நவம்பர் 30, ஞாயிற்றுக் கிழமை மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை:

ன்றைய வெளியீடு கிட்டத்தட்ட என்னைப் போன்ற மூவிருபதும் பத்துங் கண்ட மூத்தவர்கள் சிலர் வாழ்ந்து வந்துள்ள அறியும் பருவத்து நிகழ்கால இலங்கை அரசியல் களத்தில் காணப்பட்டு வரும் சமூக முரண்பாடுகளையும் அவற்றின் பல்வேறு பரிமாணங்களையும் ஆராயும் ஒரு நூலாக அமைந்துள்ளது.

ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட இந் நூல் தற்போது தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு கொழும்பில் வெளியிடப்படுகிறது. உண்மையில் ஆங்கில நூலின் பிரதி கைக்குக் கிடைத்திருந்தால் நூலடக்கம் சம்பந்தமான எனது வாசிப்பும் கூடிய முழுமை பெற்றிருக்கும். மொழி பெயர்ப்புகளுக்கும் மூல நூல்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. மூல நூலின் ஆசிரியருடன் ஆத்மார்த்தமாக இணைந்தாற் தான் மொழிபெயர்ப்புகள் இலகு வாசிப்புக்கு வழி வகுப்பன. அன்றேல் புறமானது அழகு காட்ட அகம் மறைந்திருக்கச் சந்தர்ப்பம் உண்டு. எனினும், இந்நூல் ஒரு முழுமையான நூல் என்று கூறலாம்.

அதாவது 1948 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சென்ற ஆண்டு வரையிலான எமது அண்மைய கால வரலாற்றையே ஆராய்வதாக இந் நூல் அமைந்திருப்பினும் அத்தியாயம் 2 இல் சரித்திர காலத்திற்கு முன் தொடங்கி இலங்கையின் வரலாற்றுப் பின்னணி ஆராயப்பட்டுள்ளது. ஏதாவதொன்றின் பின்னணி புரிந்தாற் தான் நடைமுறை நடப்புகள் புரிவன. இன்று பிரச்சினை என்று கூறப்படுவதெதுவும் நேற்று நடந்த அல்லது நேற்று நடந்ததாகக் கருதப்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் அல்லது பல நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவோ தொடர் நடவடிக்கையாகவோ அல்லது எதிர் விளைவாகவோ தான் பொதுவாக அமைகின்றது.

அந்த விதத்தில் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நீண்ட வரலாற்றுப் பின்னணி, நிலம், மொழி, வாழ்க்கைமுறை தழுவிய தனித்துவம், இந் நாட்டின் பூர்வீகக் குடிகளின் ஒரு அம்சமே. தாங்கள் என்ற அவர்களின் உறுதியான நிலைப்பாடு ஆகிய எல்லாமே இலங்கையின் இன முரண்பாடுகள் இலேசாகத் தீர்த்து வைக்கப்படுவதைத் தடை செய்து வந்துள்ளன என்று கூடக் கூறலாம். அதாவது எங்கள் சரித்திரோபாயமான எண்ணங்களே எம்மை ஒரு வித்தியாசமான இன அலகாகப் பிரதிபலித்து வந்துள்ளன என்று நாங்கள் கருத இடமளிக்கின்றது.

உதாரணத்திற்கு எமது மலையகச் சகோதர, சகோதரிகளையும், முஸ்லீம் சகோதர, சகோதரிகளையும் அதுவும் முக்கியமாகக் கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் முஸ்லீம் சகோதர, சகோதரிகளையும் அவர்களின் அண்மைக் கால வரலாற்றுப் பின்னணிகளையும் எடுத்துப் பார்த்தோமானால், வடகிழக்கு இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நெட்டுயிர்த்து நிற்கும் அவர்களின் பழமை, தனித்துவம், நாட்டின் ஒரு பகுதி மீது கொண்டிருக்கும் உரிமை, எண்ணங்கள் ஆகியன எவையுமே மேற்குறிப்பிட்டவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவில்லை என்று உணரக் கூடியதாய் இருக்கிறது. இங்கு எனது அவதானத்தைத் தான் கூறுகிறேன். எவரையுங் குறைகூறவேண்டிய அவசியம் எனக்கில்லை.

இலங்கையின் மலையகத்திற்கு நாங்கள் ஒரு சில தலைமுறைகளுக்கு முன்னர் தானே வந்தோம், நாங்கள் இந் நாட்டின் வேலைதேடி வந்தேறு குடிகள் தானே என்ற எண்ணம் மலையக மக்களின் அடி மனதில் இதுகாறும் இருந்து வந்துள்ளதால் இந்த நாட்டின் அரசாங்கங்களுடன் அரசியல், பொருளாதாரப் பேரம் பேச அவர்கள் பின்னிற்கவில்லை. நான் உன்னைச் சொறிந்தால் நீ எனக்குத் திரும்பச் சொறிவாயா? என்ற அடிப்படையில் கடந்த 60 ஆண்டுகளையும் அவர்கள் கடத்தி வந்துள்ளார்கள். அந்த மனோபாவத்தின் நிமித்தம் அவர்களால் சிங்கள மொழியைச் சரளமாகப் பேசவும் சிங்கள மக்களிடம் இருந்து பேரம் பேசி பல சலுகைகளைப் பெறவும் முடிந்துள்ளது.

முஸ்லீம் சகோதர சகோதரிகளைப் பொறுத்தவரையில் அவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரியமாகத் தமிழ்பேசும் மக்கள்தான் என்றாலும் மதத்தினால் வேறுபாடுடையவர்கள் என்ற காரணத்தினாலும் அவர்களின் மதவழிதான் அவர்களுக்கு அடையாளச் சான்றாக அமைந்திருந்து வந்ததாலும், சுதந்திரத்தின் பின் வந்த ஆரம்பகால வரலாற்றின் போது பழமையின் சுவடுபடாமல், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களுடன் ஒருவித பண்டமாற்றுக் கைங்கரியத்தில் இறங்க அவர்கள் பின்னிற்கவில்லை.

இதன் காரணத்தினால் தமிழ்பேசும் மக்களின் கட்சிகளின் ஊடாகப் பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதித்துவம் பெற்ற பல கிழக்கிலங்கை முஸ்லீம் அரசியல்வாதிகள் கட்சி மாறிப் பெரும்பான்மை மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த அப்போதைக்கப்போதைய அரசாங்கக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஏதோ கிடைத்ததை வாங்கிவைத்துத் திருப்தி அடைந்து வந்துள்ளார்கள்.

இப்பேர்ப்பட்ட ஒரு வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு என்று கேட்டு காலத்திற்குக் காலஞ் சில வடகீழ் மாகாணத் தமிழ் மக்கள் கூட அப்போதைக்கப்போதைய அரசாங்கங்களிடம் இருந்து அனுசரணை பெற்று, முக்கியமாகத் தமக்கென்று தனித்துவமான சலுகைகள் பெற்று, பண்டமாற்று அரசியலுக்குள் தம்மை உட்படுத்தி வந்துள்ளனர்.

இன்று கூடத் தமது வழிநடத்தல்களை வசப்படுத்தி வைக்கப் பெருவாரியான பணம் வேண்டுமென்று கூறி மிகப்பெரிய பண முடிச்சுகளை மாதாமாதம் பொதுமக்களின் நிதியில் இருந்து அரசாங்கங்கள் ஊடாகப் பெற்று பெருவாரியான இலங்கைத் தமிழ் மக்களின் மனோநிலைக்கு மாறான ஒரு அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நான் எந்தக் கட்சியினதும் ஆதரவாளன் அல்ல. ஆனால் கூட்டிக் கழித்தால் அது தான் உண்மை. சென்ற வாரம் மின்னல் நிகழ்ச்சியில் கூட தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து பணம்பெறும் பல கட்சிகள் பற்றிக் கூறியிருந்தார்கள்.

அண்மையில், இதனை மனதில் வைத்தே என்னவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் அவர்களுக்குத் தேவையானதை அவர்களிடமே கேளுங்கள் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அதுமட்டுமல்ல; அவ்வாறு செய்தால் மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று கூட ஆணித்தரமாகக் கூறினார். அதன் அர்த்தமென்ன? பெருவாரியான வடகிழக்குத் தமிழ் மக்களின் சிந்தனை வேறு; சுயநலத்திற்காக அரசியல் நடத்தும் வடகிழக்குத் தமிழ் மக்கட் தலைவர்கள் என்று தம்மைக்கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் சிந்தனை வேறு என்பது ஒரு கருத்து.

அதேபோல் தமிழ் பேசும் மலையக அல்லது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் மனோபாவம் வடகிழக்குத் தமிழ் மக்களின் மனோபாவத்தினின்றும் வேறுபட்டது என்பது இன்னொரு கருத்து. ஆகவே அம்மக்களின் உள்ளக் கிடக்கையை நியாயமாக, வஞ்சகமின்றிக் கேட்டறிந்து அதற்கு மதிப்புக் கொடுக்குமாறு திரு.சம்பந்தன் அவர்கள் கூறியிருந்தார். அம் மக்களின் உண்மை மனோநிலையைக் கண்டறிந்த பின்னர் தாம் அதற்குக் கட்டுப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். யதார்த்தத்தைத் திரிபுபடுத்த விழையும் அரசாங்கங்கள் இந்த உத்தமக் கூற்றை நடைமுறைப்படுத்த முன்வருவார்களா?

பெரும்பான்மை வடகிழக்கு மக்களின் மனோநிலைக்கு மாறான கருத்தையே இன்றைய வடகிழக்குப் பாராளுமன்ற அங்கத்தினர் கொண்டுள்ளனர்; துப்பாக்கியின் வலுக்கட்டாயத்திற்கு அடிபணிந்தே அவர்கள் தமது தொகுதி மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கையைத் திரிபுபடுத்தி வருகின்றனர் என்று கூறி வந்த அரச தரப்பாருக்கும் பெரும்பான்மையின சிங்கள மக்கட் பிரதிநிதிகளுக்கும் பெரும்பாலான தமிழ்மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்துமாப் போல் இந்தப்பேச்சு அமைந்துள்ளது.

அதாவது வடகிழக்குத் தமிழ் மக்களின் பாரம்பரியம், பார்வை, பான்மை என்பன யாவும் வேறுபாடுடையது என்பதைத் திரு.சம்பந்தன் அவர்கள் மறைமுகமாக இப் பேச்சின் மூலம் எடுத்துக் கூறியுள்ளார். வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் இதுகாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகளின் பார்வையையும் வடகிழக்கு மக்களிடையேயிருந்து வந்த மகிந்த சிந்தனைகளைப் பரப்பும் மதியூகிகளின் பார்வையையும் அதே நேரத்தில் மலையக மற்றும் முஸ்லீம் மக்கட் பிரதிநிதிகளின் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இலங்கையில் எழுந்துள்ள தேசிய இன முரண்பாடுகளின் தாற்பரியத்தையும் இம்முரண்பாடுகளை நீக்க எடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் தோல்வியில் முடியக் காரணமாயிருந்தவற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள வசதி அளிப்பதாக அவை இருப்பதைக் காணலாம்.

தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத ரீதியில் தம்மைப் பார்க்கிறார்கள்; மலையக மக்கள் பொருளாதார ரீதியில் தம்மைப் பார்க்கிறார்கள்: மகிந்த சிந்தனை மதியூகிகள் சுயநல ரீதியாகப் பார்க்கிறார்கள். சுயநலம் என்று கூறும்போது தாமுந் தம்மைச் சார்ந்தவர்களும் என்று அர்த்தமாகும். ஆகவே அவர்களின் குறிக்கோள் முறையே மதம், பொருளாதாரம், சுயநலம் என்பவையே. நாளைக்கு சிங்கள பௌத்த அரசாங்கங்கள் இஸ்லாமிய மதத்திற்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டார்கள் என்றால் உடனே ஜீஹாடில் தமது உயிரையும் பணயம் வைக்க முஸ்லீம் சகோதரர்கள் பின்நிற்கமாட்டார்கள். மலையக மக்களின் வயிற்றில் அடித்தால் தொழிற்சங்க நடவடிக்கைகள், சத்தியாக்கிரகம், அடிதடிப் போராட்டம் என்று கிளர்ந்தெழுந்து விடுவார்கள் எமது மலையகச் சகோதரர்கள்.

தமக்குத் தரப்பட்டுக் கொண்டிருக்கும் ரொக்கமும் பாதுகாப்பும் கப்பம் பெறத் தரப்பட்டிருக்கும் வசதிகளும் வாபஸ் பெறப்பட்டால் உடனே மகிந்த சிந்தனையைக் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். அடிபணிந்தால் அடிவாங்கத் தேவையில்லை என்ற சித்தாந்தங் கொண்ட எமது காருண்யம் மிக்க ஆனந்த தேவாதிதேவப் பிள்ளைகள். அவரவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது ஒவ்வொருவரும் கூறுவது சரியெனத் தோன்றும். ஆனால் இந்த மூன்று நோக்குகளையும் புறக்கணிப்பது போல் அமைந்துள்ளது பெரும்பான்மை வடகிழக்குத் தமிழ் மக்களின் பார்வை.

அவர்கள் முக்கியமாக வேண்டுவது தமது பாரம்பரிய உரிமைகளை; சலுகைகளை அல்ல. அண்மையில் ஒரு வயதான தமிழ் அன்னையார் வெள்ளவத்தையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். விலையைக் குறைக்கச் சொல்லி அடம்பிடித்தார். கடைக்காரர் அம்மா! நீங்கள் சும்மாவே எடுத்துக் கொண்டு போங்கள். பணம் வேண்டாம் என்றார். உடனே அந்த அம்மையார் வெகுண்டெழுந்து ஏன்! நீ எனக்கு மச்சானா, மாமனா? எனக்கு சும்மா வேண்டாம். நியாயமான விலைக்குக் கொடு என்றார்.

அதுபோல் வடகிழக்குத் தமிழர்கள் கேட்பது நியாயமாகத் தமக்குக் கிடைக்க வேண்டியவற்றையே; சலுகைகளை அல்ல. அதாவது உரிமைகள் கொண்ட, தனித்துவமான வடகிழக்குத் தமிழ் மக்களின், பறிக்கப்பட்ட அவர்களின் உள்ளார்ந்த பாரம்பரிய உரிமைகளையே, அவர்கள் கோருகின்றார்கள். பூர்வீக காலந்தொட்டு, சரித்திர காலத்திற்கு முன்பிருந்த இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் பறிக்கப்படக்கூடாத ஆனால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகளையே அவர்கள் கோருகின்றனர்.

அந்த விதத்தில் செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதே போல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள். வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கட் தலைவர்கள், காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கையப் பிறப்பிடமாக கொண்ட சிங்கப்பூர் எழுத்தாளருக்கு இலக்கிய விருது

சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிகையில் 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய ‘நான் கொலை செய்த பெண்கள்’ புத்தகத்திற்கு இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டுள்ளது.

K125.jpg

[கனகலதா கிருஷ்ணசாமி ஐயர்]

சிங்கப்பூர் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் டிசம்பர் 3ஆம் திகதி நடந்த விழாவில் விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கப்படும் இவ்விருதோடு $10,000 உம் அடங்குகிறது.

கனகலதா இலங்கையில் பிறந்தவர், சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர்.

இலங்கையில் நீர்கொழும்பை பிறப்பிடமாக கொண்ட கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் நீர்கொழும்பு விஜயரட்ணம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், 1983 ஜூலை கலவரத்தின் பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றவர்.

தற்போது சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் செய்தி ஆசிரியராக பணி புரிந்தவாறே படைப்பிலக்கியத் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

கனகலதா தீவெளி, பாம்புக் காட்டிலில் ஒரு தாழை போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் படைத்தவர்.

சிங்கப்பூர் பன்மொழி தொகுப்புக்கள் பலவற்றிலும், இந்திய சாகித்திய அக்காதெமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

இன்னும் மனிதனாக வைத்திருக்கிறது என்ற இருமொழிக் கவிதை, சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தில் இடம் பெற்றது. அடையாளம் சிறுகதை - தமிழிலும் ஆங்கிலத்திலும் ‘சிங்கா’ இதழில் வெளிவந்துள்ளது.

இவரின் எழுத்துகள் தமிழ் முரசு நாளிதழிலும், தமிழகத்தின் காலச்சுவடு, கணையாழி, ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளிலும், இலங்கையின் சரிநிகர் மற்றும் வேறு நாடுகளின் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. தீவெளி கவிதைத் தொகுப்பு, பெரியார் கல்லூரியில் தமிழ்- இளநிலை பட்டக்கல்விப் பாடநூல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் மற்றும் தமிழகத்தில் வேறு பல கல்லூரிகளிலும் தற்கால இலக்கியப் பகுதிகளில் இவரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

இணையத்தில் தமிழ் முரசு: http://tamilmurasu.tamil.sg/

தமிழக முதல்வர் கோரிக்கையினை ஏற்று இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பு செல்வார் என அறிவிப்பு

முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை டிசம்பர் 4ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:

MK124.jpg

[தில்லியில் பிரதமரை வியாழக்கிழமை சந்தித்த பின்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
சமத்துவ மக்கள் கட்சி பிரதிநிதி ராதிகா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. ஏ.கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து - படம்: [தினமணி] ]

"அனைத்துக் கட்சிகளின் சார்பில் பிரதமரிடம் மனுவைத் தந்தேன். மனுவில் உள்ள விஷயங்களை வலியுறுத்தி நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களில் பலரும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டோம். இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பல கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடத்தில் வலியுறுத்திப் பேசினார்கள்.

இலங்கை செல்கிறார் பிரணாப்... இறுதியாக அனைவர் சார்பிலும் பிரதமரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இலங்கையில் நிலைமை சீர்படுவதைப்பற்றி கவனிக்கவும், போரை நிறுத்துவது பற்றி வலியுறுத்தவும் அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யவும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.

அதனையேற்று, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைக்க பிரதமர் ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் இலங்கை செல்வார் என்றும் பிரதமர் உறுதியளித்து இருக்கிறார்.

சாதகமாக இருக்க வேண்டும்... பிரதமரிடம் அளித்த மனுவின் நகலை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடமும் கொடுத்தேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும் என அவரை கேட்டுக் கொண்டேன். பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றால் நிலைமை சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல உள்ளங்களில் இருந்து வருகின்ற பதில் அதுவாகத்தான் இருக்கும்.

இலங்கைக்கு ஆயுத உதவியா...இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று அப்போது சொல்லியிருக்கிறேன். இப்போதும் வலியுறுத்தியுள்ளேன். அவ்வாறு ஆயுத உதவி செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

இலங்கைக்கு பிரணாப் முகர்ஜியை அனுப்ப ஒப்புக் கொண்டு விட்டார்கள். போகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைப் பற்றி பின்னர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷ தில்லி வந்தபோது, போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். இப்போது வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார் முதல்வர் கருணாநிதி.

December 02, 2008

காணொளி: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு

"சகாப்த சாட்சியமாக வாழ்ந்து மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் தடம் தொடரும் இன்னொரு கலைவாணருக்காகத் தமிழ்க் கலையன்னை இன்னும் எத்தனை காலம் தவமிருக்க வேண்டுமோ?"

இப்படி கேள்வியெழுப்பி கலைவாணரின் பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக நாளேடு தினமணி சிறப்புக் கட்டுரையொன்றினை பிரசுரித்துள்ளது.

நவம்பர் 29, 1908 இல் தமிழ் நாட்டில் நாகர் கோயிலில் பிறந்த என்.எஸ். கிரிஷ்ணன், 48ஆவது அகவையிலேயே ஆகஸ்ட் 30, 1957இல் மறைந்து விட்டாலும் தமிழ் கலையுலகில் பெரும் பங்காற்றியவர்.

சோழ. நாகராஜன் ஆக்கத்தில்: இந்தியாவின் சார்லி சாப்ளின் என்.எஸ்.கே

மிழ் சினிமா வரலாற்று நாயகர் பலருள் தன்னிகரில்லாத கலைஞர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவர் ஒரு நகைச்சுவை கலைஞர்தான். ஆனால், அவரின் நகைச்சுவை தனித்துவமானது. சிரிக்க வைத்து, நாட்டைச் செழிக்கவைக்கிற இயல்பு கொண்டது. தமிழில் வேறொரு நகைச்சுவை கலைஞர் எவரும் இன்றுவரையில் முயன்று பார்க்காத, அறிவார்ந்த தளத்தில் இயங்கிய அவரின் நகைச்சுவை பாணி வியக்க வைக்கும்.

NSK122.jpg
தமிழ் மண்ணில் மண்டிக்கிடந்த பழைமைக் குப்பைகளையெல்லாம் கூட்டிப்பெருக்கிக் குவித்து எரிக்கக் கிளம்பிய தந்தை பெரியார் சிந்தனைகளுக்கும், நிலக் குவியல் ஒடுக்குமுறைக்கு சிம்மசொப்பனமாக எழுந்த பொதுவுடைமை இயக்கக் கருத்துகளுக்கும், தேசிய உணர்வுக்கும் பாலமாக நின்று, அந்தத் தத்துவங்களின் நல்ல வளமைகளையெல்லாம் தன்வயப்படுத்திக்கொண்டு புறப்பட்ட கலைவாணர் தனது நகைச்சுவையினூடாக தமிழர் மனங்களில் அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்த பாங்கு கலை உலகம் கற்றொழுக வேண்டிய ஒன்று. தன்னை வெறும் கோமாளி என்று அடையாளப்படுத்த விரும்பாமல், தான் ஒரு "நாகரிகக் கோமாளி!' என்று தன்னைத்தானே விளித்துக்கொண்டவர்.

அவரைத் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று கூறுவர். சார்லி சாப்ளின் பேசாப்பட யுகத்தின் மகா கலைஞன். உடல், மொழி சார்ந்த நகைச்சுவை கொண்டது சாப்ளின் பாணி. ஆனால், நம் கலைவாணரின் நகைச்சுவை பாணி என்பது வசனங்களை அடிப்படையாகக் கொண்டது. காரணம், கலைவாணர் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த கலைஞர். சாப்ளினுக்கும் கலைவாணருக்கும் இந்த வகை வேறுபாடு இருந்தபோதிலும் கலைவாணரைத் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று சொல்ல வைத்தது இவர்கள் இருவரிடமும் ததும்பி வழிந்த மனிதநேயமும் அதனை நகைச்சுவை வழியாகச் சொல்ல வந்த இந்த இருவரின் பாங்கும்தான். இந்த வகையில் பார்த்தால் கலைவாணரை இந்தியாவின் சார்லி சாப்ளின் என்றே சொல்லலாம்.

சொந்த வாழ்க்கையிலும் சரி. சினிமாவிலும் சரி. கலைவாணரின் வெளிப்பாடுகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது அவரது அறிவியல் கண்ணோட்டம்தான். இன்னும் சொல்ல வேண்டுமானால், வாழ்க்கையையே அறிவியல்பூர்வமாகத் தரிசித்தவர் கலைவாணர். இதில் சற்றும் மிகை காண வாய்ப்பே தரவில்லை அவர்.

கலைவாணரின் நகைச்சுவைக்கு பலம் சேர்த்தவை அவரது பாடல்கள். கருத்தாழம்மிக்க அவரது பாடல்களில் பெரும்பாலானவற்றை அன்றைய மிகச்சிறந்த சினிமா பாடலாசிரியர்களில் ஒருவரான உடுமலை நாரயணகவி எழுதினார். எனினும் அவை கலைவாணரின் உள்ளத்துக் கருத்துகளையே பிரதிபலிப்பனவாய் இருந்தன. எம்.ஜி. ஆருக்காகவே கண்ணதாசனும், வாலியும் பாட்டுகள் எழுதியது போலத்தான் இவையும். கலைவாணரின் கூடுதல் பலமாக அவரின் காதல் மனைவி டி.ஏ. மதுரம் அமைந்தார். அவரது சக நகைச்சுவைக் கலைஞர்களும் அவருக்கு ஒத்திசைந்து நின்றனர்.

நாகர்கோவில் பக்கத்தில் ஒழுகினசேரியில் மிகவும் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணன், நாடக ஆர்வத்தால் நடிக்கத் தொடங்கிய அந்தச் சிறு வயதிலேயே தனது தனித்த கலை அடையாளத்தை வெளிப்படுத்தியவர்.

பின்னாளில் சினிமாவில் கொஞ்சம் சம்பாதித்திருந்த கலைவாணரிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படிக் கேட்டாராம்: ""நீங்கள் இப்போது ஒரு பணக்காரர்தானே?''

கலைவாணரின் பதில்: ""ஆமாம். ஆனால் மற்ற பணக்காரர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நான் சம்பாதிப்பது இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்காகத்தான்!''

ஆமாம். அவரின் கொடையுள்ளம் அவரின் இன்னொரு பரிமாணம், உண்மையில் கொடுத்துக்கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையதுதான். துன்பம் என்று எவர் தன்வீட்டு வாசலில் வந்து நின்றாலும் துடித்துப் போய்விடும் இயல்பு கலைவாணருடையது. அதுமட்டுமல்ல. தன்வீட்டில் திருட வந்த இளைஞன் ஒருவனுக்குச் சோறுபோட்டு துணிமணிகளும் பணமும் தந்து "திருடாமல் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்' என்று புத்திசொல்லி அனுப்ப கலைவாணரைத் தவிர வேறு எவருக்கு மனம் வரும்?

கலைவாணரின் இந்தக் கொடை உள்ளம் அவரின் மூச்சு நிற்கும் வரையில் தொடர்ந்தது. இடையில் அவருக்கு வந்த நட்டம்கூட அவரின் கொடுக்கும் குணத்துக்குத் தடையாய் இருந்துவிடவில்லை.

படங்களில் நகைச்சுவை நடிகராகத்தான் பெரும்பாலும் தோன்றினார் கலைவாணர். ஆனால் அவரின் படங்கள் வெறும் பொழுதுபோக்கு ரகமாக இல்லாமல் பார்க்கிறவர்களுக்கு மகிழ்ச்சியூட்டி - அதேநேரத்தில் அவர்களின் மனங்களை உழதுபோடும் தரத்திலிருந்தன. சாதிய ஒழிப்பை, மூட நம்பிக்கை ஒழிப்பை, பெண் சமத்துவத்தை, கல்வியின் அவசியத்தை, சமூக மாற்றத்தை முன்மொழிந்தன அவரின் நகைச்சுவை.

சினிமாவில் இத்தனையும் சொல்லச் சாத்தியமா என்று இன்றும் வியந்து புருவம் உயர்த்துவோருக்கு கலைவாணர் ஒரு சகாப்த சாட்சியமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவரைப் பயின்று அவர் தடம் தொடரும் இன்னொரு கலைவாணருக்காகத் தமிழ்க் கலையன்னை இன்னும் எத்தனை காலம் தவமிருக்க வேண்டுமோ?

December 01, 2008

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளா விடில் இறைமை பற்றி பேச முடியாது

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் அங்கு நாள்தோறும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எமது பூர்வீக மண்ணில் வாழும் உரிமை எமக்குண்டு. நாம் நாட்டில் சமமாக வாழ் வோம் அல்லது தனித்து வாழ்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச நியமங்களை ஏற்றுக் கொள்ளாவிடின் இறைமை பற்றி பேச முடியாது. இறைமைக்குள்ளே மனித உரிமையும் அடிப்படை உரிமைகளும் அடங்குகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, டிசம்பர் 1ம் திகதி நடைபெற்ற இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக, கொழும்பிலிருந்து வெளி வரும் முதன்மை தமிழ் தினசரி வீரகேசரி தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் திரு. இரா. சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அங்கு ஒவ்வொரு நாளும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 4ஆம் திகதி நவம்பர் 2009 அன்றிலிருந்து நவம்பர் 29ஆம் திகதிவரை 22 பேர் நீதிக்குப் புறம்பான முறையில் பலியெடுக்கப்பட்டுள்ளனர். ஜுன் மாதம் முதல் இன்றுவரையிலும் அம்பாறை மாவட்டத்தில் 20 பேர் பலியெடுக்கப்பட்டதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளனர். தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றன. சட்டத்திற்கு முரணான ரீதியில் மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இது வடக்குகிழக்கில் விசேடமாக இடம்பெறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர். அங்கு மனித அவலம் அரங்கேறுகின்றது.

அவர்கள் மீது விமானக் குண்டு வீச்சுகளும் பல்குழல் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது

வன்னிக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முயாது பயமுறுத்தப்பட்டுள்ளனர். தாமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படலாம் என்பதனால் அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். இலங்கை அரசாங்கத்தின் மீது ஐ. நா. உறுப்பினர்கள் மனித உரிமை விடயத்தில் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனத்தின் நடு நிலைமையை இழந்து பெறுமதியற்றதாகவே இயங்குகின்றது.

நோபல் பரிசு பெற்றவர்கள் கவலை

மனித உரிமைகள் தொடர்பில் நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் கவலை கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் உண்மை நிலை, நம்பகத்தன்மையிலிருந்து மாறி வருவது கவலைக்குரியதாகும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

15 ஊடகவியலாளர்கள் பலி சிங்கள ஊடகவியலாளர் உட்பட 15 ஊடகவியலாளர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளி ஒருவருக்கு எதிராகவேனும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. பல ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போதலும் கைது செய்தலும் தொடர்கின்றன.

ஐ.நா. முகவர்களை வெளியேற்றியது ஏன்?

வன்னியில் அவதிப்படுகின்ற மக்களுக்கான உணவு இந்தியாவினால் ஐ.சி.ஆர்.சி.யூடாக வழங்கப்படுகின்றது. ஐ.நா. வின் முகவர்களை வெளியேற்றி விட்டு என்ன செய்கின்றீர்கள்?

அங்கு அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படுகின்றது. ஐ.சி.ஆர்.சி. 600 தொன் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்கின்றது. அங்கு உணவின் தேவையோ அதிகமாகும் என்பதனால் நீண்டகால உணவுத் திட்டம் தேவையாகும்.

IRIN121.jpg

[வன்னியில் இடம் பெயர்ந்துள்ள குடும்பம்-படம்: ஐ.நா]

கிடுகு வழங்கப்பட்டதா?

வன்னியில் 20 ஆயிரம் குடும்பங்கள் உறைவிடம் இன்றி இருக்கின்றனர். கிடுகு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அம்மக்கள் திறந்த வெளியிலேயே வாழ்கின்றனர். உகந்த உறைவிடமின்றியும் அடிப்படை வசதிகளான குடிநீர், மலசலகூட வசதிகள் இன்றியும் மக்கள் அல்லல்படுகின்றனர்.

மக்கள் மரக்கிளைகளுக்கு இடையில் சாக்குகளை கட்டி அதன் கீழே வாழ்கின்றனர். எனினும் புலிகள் இராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தலாம் என்பதனால் கூடாரங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுப்படுத்துமாறு இராணுவ பேச்சாளர் கோரி நிற்கின்றார். எனினும் உறைவிடங்களுக்கான வசதிகள் தேவைப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

குடும்பமே இலக்காகும் நிலை

கிழக்கு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அங்கு ஒவ்வொரு நாளும் கொலைகள், கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

இது அரசாங்கத்திற்கே வெட்கக்கேடானதாகும். காணாமல் போதல் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு அஞ்சுகின்றனர். ஒருவருக்காக முறைப்பாடு செய்தால் குடும்பமே இலக்காகும் நிலை, காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

பங்காளிகள்

கொலைகள் இடம்பெறுகின்றன, கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடருகின்றன.

மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர். கொலை செய்பவர்களும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் அரசாங்கத்துடன் இணைந்தவர்களாக பங்காளிகளாக கூட்டணியாக இருப்பதனால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

ஆதாமின் இறுதி நிலை

நாடு பாலும் தேனும் சொர்க்காபுரி என்றனர். எனினும் தமிழ் மக்கள் ஆதாமின் இறுதி நிலைக்கு சென்றுள்ளனர். மரக்கிளைகளுக்கு கீழ் வெள்ளம், பாம்புக் கடி என்பவற்றுக்குள் அகப்பட்டு அல்லற்படுகின்றனர். இன்பம் மிகுந்த பூமி என்றனர். எனினும் பாதுகாப்பும் சுதந்திரமும் இங்கில்லை.

இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகள்

இந்தியாவிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ வழங்கிய உறுதி மொழிகள் என்ன? அதிகாலை வேளைகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றபோதே விமானக் குண்டு வீச்சுக்கள் அதுவும் அகதி முகாம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களை வன்னியிலிருந்து விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு அதிகாலை வேளையில் அகதி முகாம்களில் குண்டுகள் வீசப்படுகின்றன. இழந்த விடுதலையை நாம் நம்ப வேண்டுமா? நம்புமாறு கூறுகின்றனர். மக்களை விடுதலை செய்வதாக கூறிக் கொண்டு பல்குழல், விமானக்குண்டு வீச்சு தாக்குதல்களை மேற்கொள்வது ஏன்?

இறைமை பற்றி பேசமுடியாது

சர்வதேச மனித உரிமை நிறுவனத்தில் உறுப்பினராக இருந்துகொண்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் இறைமையை பற்றி பேமுடியாது. இறைமைக்குள்ளே மனித உரிமை களும் அடிப்படை உரிமைகளும் அடங்குகின்றன.

முரண்பட்ட விடயமாகும்

இராணுவம், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட சகலரும் மனித உமைகளை மீறிக்கொண்டே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

சட்டமா அதிபரின் பாத்திரம் நிறுவனப்படுத்தப்படுகின்றன. ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்குவது முரண்பட்ட விடயமாகும்.

மாயமான சட்டமூலம்

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும் இடையில் மாயமாகி விட்டது.

சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறவேண்டும் என்று கூறப்பட்டது. எனினும் இடை நடுவிலேயே சட்ட மூலம் மாயமாகி விட்டது.

மூடி மறைக்க முடியாது

சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் விசாரணைகள் நடைபெறுகின்றன. உண்மைகளை யாருமே மறைக்க முடியாது. என்றோ ஒரு நாள் அது அம்பலமாகும்.

குப்பையில் போடுவேன்

ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று கூறிக்கொண்டே கடிதங்களை சிங்களத்தில் அனுப்புகின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது. இக்கடிதத்தை குப்பையிலேயே போடுவேன்! வடக்கிற்கும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் உதவியை செய்யுங்கள்.

திருகோணமலையில் பலியெடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது.

எனினும் அங்கு பலியெடுக்கப்பட்ட தமிழர்கள் 261 பேருக்கும் நட்ட ஈடு வழங்கப்படவில்லை. நாட்டில் சமமாக வாழ வேண்டும் அல்லது தனித்து வாழ்வோம். அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடத்தலாம், வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை எமக்குண்டு.