நீங்காத திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ஸ்ரீதர் காலமானார்
பழம்பெரும் திரைப்படை இயக்குனர் ஸ்ரீதர் ஒக்ரோபர் 20ம் திகதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.
கல்யாணப் பரிசு, தேனிலவு, வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, உரிமைக் குரல், மீனவ நண்பன் உட்பட, காலத்தால் அழியாத பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த பெருமை அவருக்கு உண்டு.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன் உள்பட உச்ச நட்சத்திரங்கள் பலர் ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.
திரை உலகதிற்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் 'வெண்ணிறாடை' நிர்மலா, 'வெண்ணிறாடை' மூர்த்தி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஸ்ரீதர்.
[ஊட்டி வரை உறவு திரைப்பட பாடல் காட்சி - பூமாலயில் ஓர் மல்லிகை]
1961-ம் ஆண்டில் சித்திரலாயா என்னும் பட கம்பெனியை தொடங்கி தயாரிப்பாளராகவும் உயர்ந்த ஸ்ரீதர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
காலஞ்சென்ற இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி பெயர் தேவசேனா. இவருக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

