வட-கிழக்கு மக்கள் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய நிலை அவசியம்
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
ஆனால் யுத்த நிலவரங்கள், இப் பிராந்திய மக்கள் தமது அன்றாட விவசாய மற்றும் மீன்பிடி தொழில்களை செய்ய்ய முடியாதவாறு பல்வேறு அச்சுறுத்தல்களை கொணர்ந்த வண்ணம் உள்ளன.
ஒக்ரோபர் 16ம் திகதியன்று அம்பாறை மாவட்டம் திருக்கோயிலில் கமத் தொழில் நிமித்தம் சென்று கொண்டிருந்த 4 விவசாயிகளின் படு கொலை இப் பகுதி மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை வாழ்வு நிலை அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.
'வட்டமடு விவசாயிகளின் பரிதாப மரணம்' என்ற தலைப்பில் இன்று ஒக்ரோபர் 18ம் திகதி, விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களில் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வீரகேசரி நாளிதழ் ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது.

அம்பாறை மாவட்டம்-சம்மாந்துறையில் உள்ள நெல் வயல்~படப் பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
வீரகேசரி ஆசிரியத்தலையங்கம் முழுவதுமாக:
வட்டமடு விவசாயிகளின் பரிதாப மரணம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் வட்டமடு வயல் பிரதேசமொன்றில் வைத்து நான்கு விவசாயிகள் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களுமாக நால்வர் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதற்றம் நிலவியதுடன் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.
இவர்கள் நால்வரும் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுடைய வயல் பகுதிகளுக்கு சென்ற சமயமே இவ்வாறு ஆயுததாரிகளினால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் இப்பிரதேச விவசாயிகள் மிகுந்த அச்சத்துக்கும் கவலைக்கும் ஆளாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, மேற்படி வட்டமடு படுகொலைகளை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று கோரியுள்ளார்.
அத்துடன் இப்பகுதி மக்கள் அச்சமின்றி தமது அன்றாட வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் தற்பொழுது பாதுகாப்பு முற்று முழுதாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு அப்பாவி விவசாயிகளின் உயிரோடு எவரும் விளையாடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் அங்குமிங்குமாக தொடரும் படுகொலைகள் ஒருபுறம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை மேலோங்க செய்துள்ளதுடன் மறுபுறம் தொழில் நடவடிக்கைகளில் நிம்மதியாக ஈடுபடமுடியாத சூழலையும் உருவாக்கி வருகின்றது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேமக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். எனினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பெருமளவு நிலம் தரிசாகக் காணப்படுவதுடன் பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்களும் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.
அதேபோன்றே சுதந்திரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாது அரசின் நிவாரணங்களையே எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதனால் வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதுடன் மக்களும் தங்கள் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் ஆங்காங்கே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விவசாயிகள் மீண்டும் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டும் வந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக இவ்வாறான அச்சுறுத்தல்கள் மேலோங்கியிருப்பது விவசாயிகள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் அரிசி மற்றும் மீன் வகைகளின் விலைவாசிகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதுடன் மக்கள் அவற்றை கொள்வனவு செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் பணவீக்கமும் பன்மடங்கு அதிகரித்து செல்கின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிலைமை சீரடைந்து மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடக் கூடிய சூழ்நிலை இருக்குமேயானால் அவர்களின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் கணிசமானளவு இருப்பதுடன் பொருட்களின் விலைவாசிகள் குறைவடையவும் வாய்ப்பாக இருக்கும்.
ஆனால் இன்று தோன்றியுள்ள சூழ்நிலை மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது போயுள்ளதுடன் அரச நிவாரணங்களையே நம்பி வாழவேண்டிய இக்கட்டான நிலையை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் விவசாய நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணம் கணிசமான பங்களிப்பை செலுத்தி வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களில் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அதன் மூலமே நாட்டின் நெற்செய்கையை விஸ்தரிப்பதுடன் அரிசியின் விலையையும் கட்டுப்பாட்டுக்குள் பேணக்கூடியதாக இருக்கும்.
மாறாக இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடருமானால் அது விவசாய நடவடிக்கைகளை பரந்த அளவில் பாதிக்கச் செய்வதாக இருக்கும். எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருக்க அரசாங்கம் உறுதி செய்வது மிகவும் அவசியம்.

