« August 2008 | Main | October 2008 »

September 15, 2008

பல்துறை அறிஞன் அறிஞர் அண்ணா

எம்.கே.ஈழவேந்தன்

செப்டெம்பர் - 15 அறிஞர் அண்ணாவின் 99 வது பிறந்த தினம்

"நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி, சுற்றாமல் சுற்றும் கண்ணில் துடிப்பினைத் தேக்கி, மண்ணில் கற்றவர் திகைக்கும் வண்ணம் காண்பவர் ஒருவர் அண்ணா 'என்று கவிஞர் வேழவேந்தன் வாழ்த்துவதற்கு அமைய, நெற்றியில் அறிவைத் தேக்கி, நெஞ்சத்தில் வீரத்தைத் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு மழைபோல், சொற்பொழிவுகளை பொழிந்தவர் அண்ணா. சுற்றாமல் சுற்றாமல் சுற்றும் தன் கண்ணில் துடிப்பினைத் தேக்கி வைத்த அண்ணா தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை துடித்தெழச் செய்தார்.


[அறிஞர் அண்ணாவின் அங்குரார்ப்பண உரையொன்றின் காணோளி வடிவம்]

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பது முதுமொழி. ஆனால், அண்ணாவின் சிந்தனையும் பேச்சும் எழுத்தும் தமிழகத்தின் கற்றாரை மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் கற்றாரையே திகைப்படையச் செய்தது. எனவே, தான் அண்ணாவின் கன்னிப் பேச்சினை செவிமடுத்த நேரு "இவர் தம் வருகை வரவில் வைக்கப்பட வேண்டியதாகும்' என்று கூறிச் சென்றார்.

காஞ்சி நடராசனுக்கும் பங்காரு அம்மையாருக்கும் 15.09.1909 அன்று தோன்றிய அறிஞர் அண்ணா, 03.02.1969 இல் தனது அறுபதாவது அகவையை எட்டும் போது நம்மை விட்டுப் பிரிந்தார். இந்தியெனும் புற்றுநோய் தமிழினத்தை தாக்குவதை எதிர்த்து போரிட்டு பெரு வெற்றி கண்ட அறிஞர் அண்ணா தன்னை தாக்கிய புற்றுநோயிடம் தோல்வி கண்டார். தமிழக மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பை வைத்திருந்தனர் என்பதை அவர் மறைந்தபோது அவர்கள் துடிதுடித்து ஐயோ! என்று அலறிய காட்சி சான்று கூறும். அறிஞர் மறைந்ததையடுத்து 04.02.1969 இல் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பின்வரும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.'If tears could bring back a man to life Mr.Annadurai would be living again' (மக்களின் அழுகை ஒரு மனிதனின் உயிரை மீட்க முடியுமென்றால் திரு. அண்ணாதுரை மீண்டும் எம்மிடையே வாழ்ந்திருப்பார்) என்பதேயாகும்.

அண்ணா ஏறக்குறைய 40 ஆண்டுகள் தமிழக அரசியலில், சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை உருவாக்கியவர். அவர் முதலமைச்சராக 23 மாதங்கள் தான் இருக்க முடிந்தது. புற்றுநோய் அவரை முற்றுகையிட, அவரது வாழ்வு முடிவுற்றது. எனினும், அவர் பதவி வகித்த 23 மாதங்களில் எம் வழித்தோன்றல்கள் அவரை என்றும் நினைத்துப் பார்க்கின்ற முறையில் வரலாறு வாழ்த்துகின்ற வகையில் தமிழனின் தன்மானம் காக்கவும் அவனின் தனித்துவத்தை நிலைநாட்டவும், தன்மானத் திருமண முறையை (சுயமரியாதை திருமணத்தை) சட்டமாக நிறைவேற்றினார்.

இந்தியை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை முறியடித்து இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கவும் பக்கத் துணையாக ஆங்கிலம் அமையவும் வழி வகுத்தார்.

சென்னை மாகாணத்திற்கு ""தமிழ் நாடு' என்று பெயர் சூட்டி தமிழனுக்கு ஒரு நாடு உண்டு, அங்கு பேசப்படும் மொழி தமிழ், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் , அங்கு ஆளும் மொழி தமிழ் என்பதை உலகுக்கு பறைசாற்றினார்.

ஆட்சி மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதை வற்புறுத்திய அண்ணா, பயிற்சி மொழி தமிழாக இருந்தால்தான் ஆட்சி மொழி தமிழாக மலர முடியும் என்பதை உணர்ந்து தமிழைப் பயிற்சி மொழியாக்கப்பாடுபட்டார். அவரின் தமிழ் உள்ளத்தை பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.

""தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்று சொல்வது இந்த நாட்டில் தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம் தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த இல்லாத விந்தை இங்கேதான் இருக்கின்றது. "தமிழில் கற்பிக்கலாமா? என்னும் கேள்வியும் முடியுமா? என்னும் எதிர்ப்பும் பார்க்கலாம் என்னும் சந்தேகமும் தமிழ் மொழிப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவார்கள்? இதுவரை பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்த நாட்டிலேதான் பேசப்படுகிறது' என்று அவர் கூறிய கூற்று ஏற்ற முறையில் தமிழைப் பயிற்சி மொழியாக ஆக்க முடியவில்லையே என்று அவருக்கிருந்த ஆழ்ந்த கவலையை எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்க்காக அன்றே குரல் எழுப்பியவர்

தமிழகத்தின் தலைவர்களில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கலையொட்டி இன்று நேற்றல்ல; அன்றே பிரச்சினையை ஆழமாக அறிந்த நிலையில், அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் ஈழத்தமிழருக்காக குரல் எழுப்பியவர் நம் அண்ணா.

இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப் போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார். சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தரை இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களை இந்தியாவிற்கு அனுப்ப அன்று ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசு முயன்றபோது அக்கொடிய செயலைக் கண்டித்தவர் நம் அண்ணா.

""சாத்துக்குடி பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறியும் நிகழ்ச்சியே இம்மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சி' என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன் தமிழின உரிமை வேட்கையையும் உணர்த்தியவர் நம் அண்ணா.

ஈழத்தமிழர் மீது 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகப் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கி இனப் படுகொலை செய்ய முயன்றபோது ஓங்கிக் குரலெழுப்பியவர் அண்ணா. தமிழக சட்டமன்றத்திலும் டில்லி மாநில அவையிலும் அவர் ஆணித்தரமாக கூறிய கருத்துகளை சட்டமன்றப் பதிவேடுகளிலும் மாநில அவைப் பதிவேடுகளிலும் காணலாம்.

அவர் தனது "திராவிட நாடு' இதழிலும்,"ஹோம் ?ல்'" ஹோம் லாண்ட்'இதழிலும் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் தன் ஆழ்ந்த அரசியல் அறிவினைக் காட்டும் முறையிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையிலும் கூறிய சொற்களை இன்றும் படிக்கின்றபோதும் எம்மை மீறிக் கண்கள் கலங்கும்.

ஈழத்தமிழர் சார்பில் உலக அரங்கமாகிய ஐ. நா. மன்றத்திலும் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகளை அனுப்பி ஈழத் தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாக்கியவர் நமது அண்ணா.

ஈழத்தமிழர் சார்பில் அண்ணா குரலெழுப்பியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது முறையல்ல என்று கூறியபோது, அறிஞர் அண்ணா தனக்கே உரிய தனி நடையில் பொடி போடும் முறையில் "கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்' என்று கூறிய அவர் "என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான் பார்க்கமாட்டேன், மாறாக, வெட்கித் தலைகுனிந்து வேறு இடம் சென்று விடுவேன். ஆனால்,அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவியின் கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் ஐயோ என்று அலறுகின்ற போது, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில் கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று அண்ணா கூறிய போது அதற்கு கிருஷ்ணமேனன் பதில் கூறியதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் எந்தக் குறிப்பும் இல்லை.

அந்தளவிற்கு தூய்மையோடு, தெளிவோடு, துணிவோடு, ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தவர் நம் அண்ணா என்பதை நாம் மறக்க முடியாது. அரசியலில் வசதிக்காக ஈழத்தமிழன் அழிவைப் பற்றி அக்கறை கொள்ளாது அமைதி மேற்கொண்டுள்ள அண்ணாவின் தம்பிமார்கள் அண்ணா அன்று பேசிய பேச்சுகளை, ஏற்றமிக்க கட்டுரைகளை, அறிக்கைகளைப் படித்து தம் மறதியைப் பற்றி போக்கிக் கொள்வது வரலாறு. அவர்கள் மீது வசைபாடாதிருக்கத் துணை நிற்கும். அண்ணாவின் உணர்வில் ஊறிய நம் கவிஞர் வேழவேந்தன் ஈழத்தமிழர் நிலையைப் பற்றி எம்மை அப்படியே ஆட்கொள்ளுகின்ற முறையில் பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்.

"தாய்நாட்டு தமிழனுக்கோ இந்தித் தொல்லை: தணல் போன்று சிங்களமோ உனக்குத் தொல்லை! நாய்வாழ்வு வாழுதடா தமிழ்ச்சாதி நாகரிக முதல் மனிதன் நீயா? வெட்கம்! ஓய் தமிழா! உலகத்து ஐ.நா. மன்றில் உனக்காக வாதாட ஒருவர் தேவை! பாய்போட்டே உறங்கியது போதும்: இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு.

ஆம், நம் கவிஞர் வேழவேந்தன் கூறுவதற்கமைய, உலகத்து ஐ. நா. மன்றத்தில், தமிழன் அழிவைத் தடுக்கின்ற குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தின் தலையாய கடமை. "பாய்போட்டே உறங்கியது போதும் இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு' என்ற வேழவேந்தன் கூற்றுக்கு ஈழவேந்தனாகிய நாமும் வழிமொழி கூற விரும்புகின்றோம். அண்ணா மனம் திறந்து வாழ்த்திய கவிஞன் வேழவேந்தன் என்பதற்கு அண்ணா வேழவேந்தன் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை சான்று கூறும்.

அறிஞர் அண்ணா இன்று உயிருடன் இருந்து தன் தலையை அசைத்தால் ஆயிரம் படைகள் கூடுவது உறுதி. அண்ணா நா அசைத்தால் அணுவெல்லாம் வீரம் பாடும். அண்ணா கண் அசைத்தால் ஆதிக்கம் அசைந்தே ஆடும். அன்னவர் விரல் அசைத்தால் அடுபகை நடுங்கி ஓடும். அத்தகைய அண்ணா எம்மிடம் இன்று இல்லை. எனினும், அண்ணாவின் அருமைத் தம்பிமார்கள் என்று உரிமை கொண்டாடுகின்ற தம்பிமார்கள் அண்ணாவின் சிந்தனை வழி செயற்பட வேண்டுமென்பது எமது விடுதல் அறியா விருப்பம்.

பல்துறை அறிஞன்

அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா. அவர் உண்மையில் இந்நாட்டின் புதிய சமையற்காரர் என்று கூறுவது முற்றும் பொருந்தும்.இவற்றையெல்லாம் நினைவு கொண்டுதான் நம் தமிழ்த் தென்றல் திரு. வி. க.; அண்ணாவைப் பற்றி அன்றே போற்றிப் பாடிய பாடலில்;

"அண்ணா துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில் வாய் மொழியில் பண்ணாவான் சிற்பனெழுத் தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென்றாடு' என்று போற்றிய உரை வெறும் புகழுரை அல்ல. மாறாக பொருள் பொதிந்த பொன்னுரை என்பதனை அண்ணாவின் வாழ்வு எமக்கு உணர்த்தியுள்ளது.வரலாறு தருகின்ற தீர்ப்பும் அதுவேயாகும் [நன்றி: தினக்குரல்]

September 14, 2008

பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்

ல விருதுகளை குவித்த குன்னக்குடி வைத்தியநாதன், திரைப்பட இசையமைப்பாளர், தியாகபிரம்ம ஆராதனை குழுவின் செயலாளர், ராகா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆகிய பொறுப்புக்களை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசைச் சேவையை பாராட்டி, இந்திய மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

[குன்னக்குடி வைத்தியநாதன், மார்ச் 2, 1935 - செப்டெம்பர் 8, 2008]

குன்னடிக்குடி வைத்தியநாதனுக்கு பாக்கியரதி என்ற மனைவியும், சேகர், சீனிவாசன், ஸ்ரீதர், டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகிய மகன்களும், பானுமதி என்ற மகளும் உள்ளனர்.குன்னக்குடி வைத்தியநாதன், 1935ம் ஆண்டு குன்னக்குடியில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி சாஸ்திரி, தாய் மீனாட்சி.

குன்னக்குடி வைத்தியநாதன் எம்.ஜி.ஆர்., நடித்த நவரத்தினம், சிவாஜி நடித்த மனிதனும் தெய்வமாகலாம், தேவரின் தெய்வம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலியாக ~ Inspiration II ~ உத்வேகம் II ~
இசை குறுந்தட்டில் இருந்து....

மகன் குன்னக்குடி டாக்டர் வை. பாலசுப்பிரமணியன் (கீ போர்ட்), தந்தை குன்னக்குடி வைத்தியநாதன் (வயலின்) இயைபிசை (Fusion) அருவி:

Romantic Moods

Blossom Bilahari

Sweet Dreams

Emotional Bliss

Mindful Relaxation

Vedic Chants

September 10, 2008

என்ன கொடுமை (கலைஞர்) கருணாநிதி இது?

ஞாநி

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.

[கலைஞர் கருணாநிதி]

கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 இலட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாகக் கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 இலட்சம் தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபா கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா?

ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா?

என்ன கொடுமை.......

கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே... என்ன பேச்சு சார் அது? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்குப் போட்டதே உங்கள் ஆட்சிதானே?

அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள்? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் ?இவர் மீது பொய் வழக்குப் போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன்? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை...

கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைத்தானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது.

அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலைவராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கு, நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது.

கங்கை காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லோரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.

உதவாதினி தாமதம், உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா? என்ன கொடுமை....

கேள்வி 4: 40 இலட்சம் ரூபாக்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் இரத்த வாரிசுகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 இலட்ச ரூபாக்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் இரகசியமாகச் சொல்வார்.

அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதைவிட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி.தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.

அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்லவேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா.

அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துகளை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லிவந்தார்.

ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேக்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை?

உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை?

அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம்? என்ன கொடுமை...

கேள்வி 5: இராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே. அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி.

விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா?

புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதிமன்றம் கருத முடியுமல்லவா?

உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டாமா? எது சரி? என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன கொடுமை....

கேள்வி6: உலகளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்ற நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள் உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் ரி.வி. மட்டும் இதில் பின் தங்கிவிட முடியாதல்லவா.

அதனால் தான் இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி என்று அறிவிக்காமல், "விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரமழான், கிறிஸ்மஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதேபோல விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசனிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல்.

விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா? என்ன கொடுமை...

கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை.

ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டுக் கம்பனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணிநேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால், உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை.

தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி. வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்?

ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மரதன் ஓட்டம் நடத்தி ஒருநாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மரதன் செலவுப் பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?

மின்வெட்டைப்பற்றி 1973 இல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறிஸ்தவக் கல்லூரி ஆண்டு மலரின் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை

"இந்த ஆட்சியில் வாழ்வதை விட

சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால்,

சே... மின்வெட்டாம்'

பிற்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கௌரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் இரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

நன்றி: குமுதம்

September 01, 2008

தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை

~ செப்டெம்பர் 1 ~ இன்று வண. பிதா. தனிநாயகம் அடிகள் நினைவு தினம் ~

மிழாய்வுத் தேன் வடம்பிடித்து
தரணியெங்கும் வலம்வந்த தன்னிகரில்லா அருட்தந்தையே!
தமிழ்த் தூதின் தனிநாயகமே!

வண. பிதா. சேவியர் தனிநாயகம் அடிகள்

[ஆகஸ்ட் 2, 1913 - செப்டெம்பர் 1, 1980]

நீங்கள், இந்
நானிலத்தை விட்டு மறைந்து
நாலேழாண்டுகள் முடிந்திடினும்
ஞாலம் மறந்திடுமோ? - உங்கள்
நா நலத்தை நயந்தாற்றிய
நற்றமிழ்த் தொண்டுகளை;
நாடெல்லாம் பரப்பிய நல்லாய்வுகளை,
ஞாலம் மறந்திடுமோ?
தமிழின் தொன்மையை, சிறப்பை,
சீரிளமையை, நாகரீகத்தை
இலக்கிய வளத்தை, இலக்கணச் செழுமையை
திரித்து, மறைத்து, ஒளித்து
வடமொழியைச் சபையேற்றி
துதிபாடிய தொரு கட்டத்தில்
துணிவோடு உண்மையை
"தமிழ்ப் பண்பாடு' இதழ் நடத்தி
தரணி முழுதும் முரசறைவித்த
தண்டமிழ்க் காவற் துறவியே!
தமிழியற் துறையைத் தனியாக்கி
பல்கலைக்கழகங்கள் பயின்றிடவே
பாதையமைத்த தமிழ்க் கடலே!
பன்மொழிப் புலமையாலும்
இன்மொழிப் பேச்சினாலும்
இலங்கை, இந்தியா, மலேசியாவோடு
எங்கெலாம் தமிழர் உளரோ
அங்கெலாம் சென்று தமிழால்
மக்களை இணைத்த மாதவத் திருவே!
தமிழர் ஒற்றுமையிலும்
தமிழாய்வு மாநாட்டிலும்
தணியாத தாகம் கொண்ட தமிழ்மலையே!
நீங்கள்
மூட்டிய தாகம் தணியாது!
நாடுகளில்
ஏற்றிய தமிழாய்வுத் தீபம்
என்றுமே அணையாது!!
தமிழுக்குத் தொண்டு செய்வோர்
என்றும் சாவதில்லை; சாவதில்லை! - ஜீ. போல் அன்ரனி

[நன்றி: வீரகேசரி நாளிதழ்]