« June 2008 | Main | August 2008 »

July 29, 2008

திரை இசை: "மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்.."

பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. - மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..

தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை - நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்..?

[வாழைப்பூ, இலங்கை, பம்பலப்பிட்டி, வீட்டுத் தோட்டமொன்றில்]


வின்டோஸ் மீடியா பிளேயரில்: பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்

பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் - அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்

தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்

வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ - அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ

(பனை)

மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு - அது

(பனை)

நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் - அது
நல்லதைச் செய்திட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்

சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் - நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்

தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை - நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்

இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ - நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..

நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..

படம் : குலவிளக்கு
குரல் : இசைக்குயில் பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை : திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன்
நடிகை : சரோஜாதேவி

யாழ் வளவொன்றில் செவ்விளநீர் தென்னைகள்

[பனை, நுங்கு, கோயில் போறதீவு, மட்டக்களப்பு]

July 07, 2008

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூலை மாதம் 10 ஆந்; திகதி அனைத்துச் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது, ஏழைத் தொழிலாளர்களின், சாதாரண பொது மக்களின் விரக்தியை, வெறுப்பை, அவர்களது கஷ்டங்களைத், துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும். அந்த வகையில் சகல தொழிற் சங்கங்களும், எந்த வித வேறுபாடுமின்றி இதில் கலந்து கொள்ள வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டை தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழைமக்களைப் பிச்சாபாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது. எனவே இன, மத,பேதமில்லாமல், கட்சி வேறுபாடுகள் இல்லாமல், சகல தொழிற் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கோருகின்றது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் யுத்தத்தின் பின்னணியில் அரசு தனது பல தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் நீண்ட காலமாக வேருன்றி வந்திருக்கும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசால் இற்றை வரையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டம் முன் வைக்கப்படவில்லை. அரசால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளையே அரசு முறியடித்து, 1988 ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்டு அந்த நேரத்திலேயே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது அரசியல் சாசனத்தை ஒரு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன் மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசின் விருப்பமின்மை தெளிவாக எடுத்துக்;காட்டப்படுகின்றது. இக் காரணத்தின் நிமித்தமே அரசு தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கையைக் கையாளுகின்றது. ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டுமென நீண்ட காலமாகச் சர்வதேச சமூகம் விசேடமாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஓன்றியம், இணைத்தலைமை நாடுகள் போன்றவை வலியுறுத்தி வந்திருக்கின்றன. அவ்விதமான ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதாக அரசாங்கத்தால் வாக்குறுதி; கொடுக்கப்பட்ட போதிலும் வாக்குறுதியை நிறை வேற்றமுடியாமல் அரசு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, இராணுவத் தீர்வின் மீதே தனது முழு நம்பிக்கையை வைத்துச் செயற்படுகின்றது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன் வைக்கும் பொறுப்பிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது.

நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமானால் யுத்தத்துக்காகத் தற்பொழுது செலவு செய்யப்படும் பாரிய தொகையை அரசு மக்களின் வேறு நியாயமான தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும்.

யுத்தத்தை நடத்துவதனால் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் நடைபெறும் பாரிய ஊழல்கள் மக்களுக்குத் தெரிந்த விடயமே. யுத்ததின் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம், பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். பல இளைஞர்கள், படையினரோ அல்லது இயக்கத்தினரோ கொல்லப்படுகிறார்கள். பொது மக்களின் சொத்துக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுகின்றது. பல இலட்சக் கணக்கான மக்கள் குடிபெயர்ந்து அகதிகளாகப் பல விதமான கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்து ஓர் அரசியல் தீர்வைக் கண்டு யுத்தத்தை நிறுத்தி யுத்தச் செலவினத்தை குறைக்க வேண்டியது அரசின் முதற் கடமை.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம், அரிசிவிலையேற்றம் போன்றவை தான் இலங்கையில் ஏற்படும் விலையேற்றத்துக்கும் காரணம் என்று அரசு கூறுகின்றது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு என்பது உண்மை தான்.ஆனால,; இலங்கையில் எரிபொருள் விலை 20ரூபா 30ரூபாவால் அதிகரிக்கின்ற போதிலும், உதாரணமாக இந்தியாவில் எரிபொருள் ஆக 2ரூபாவால் மட்டுமே அதிகரிக்கின்றது.

எமது நாட்டில் ஏற்படும் விலையுயர்வு வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் விலைக்குச் சமனாகவே உள்ளது. அவ்வாறான நாடுகளில் தொழிலாளிகள் பெறும் சம்பளம் மிக உயர்ந்தாகவே உள்ளது. எமது நாட்டில் ஒரு தொழிலாளி பெறும் சம்பளம் அவனது உணவுக்கே போதுமானதாகவில்லை.

மேலும, அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தல், மற்றும் ஜனநாயக விரோதச் செயல்கள் போன்றவை அரசினால் நடத்தப்படும் யுத்தத்தின் பெயராலேயே மேற் கொள்ளப்படுகின்றது. இச் செயல்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறித்துப் பீதியும், பயமும் நிறைந்த ஒரு சூழலில் வாழ்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கின்றது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தைச் சாட்டாகக் கூறும் அரசு நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும் ,அளவற்ற ஜனாதிபதி ஆலோசகர்களையும் நியமனம் செய்து, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காகப் மக்களின் பெருந்தொகைப்பணத்தை வீண் விரயம் செய்கின்றது என்பதை அரசு இன்னும் உணரவில்லை.

எனவே, மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

மாவை.எஸ்.சேனாதிராஜா
பொதுச் செயலாளர்

இரா.சம்பந்தன்
பாராளுமன்ற குழுத்தலைவர்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

July 05, 2008

காணொளி: அடிப்படை தண்ணீர் வசதியின்மையினால் கொத்மலை ரிவர்சைட் தோட்டத் தொழிலாளர் அவஸ்தை