« April 2008 | Main | June 2008 »

May 21, 2008

ஜே.பி. ஜெயரட்னம்: சிங்கப்பூரின் முதுபெரும் அரசியல்வாதி

புதிய கட்சியொன்றின் மூலம் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சி

புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதென்பது ஓர் காலம் கடந்த முயற்சியாகவே தோன்றும். எனினும் திரு. ஜே.பி. ஜெயரட்னத்தின் அரசியல் வாழ்வில் இதுவோர் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் அரசியல் வரலாற்றின் அழையா விருந்தாளியாகவும், அரசியல் விவகாரங்களிலிருந்து விலகியிருக்க மறுதலிக்கும் ஆர்வமிக்கதோர் அரசியல்வாதியாகவுமே ஜெயரட்னம் நோக்கப்படுகின்றார்.

[ஜே.பி. ஜெயரட்னம்]

ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஜெயரட்னம் களமிறங்கினார். இந்த சிரேஸ்ட வயோதிப அரசியல்வாதி மீண்டுமொருமுறை அசைக்க முடியாத சிங்கப்பூர் அரசியல் நிறுவனத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

“நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என தனது புதிய கட்சி தொடக்க விழாவில் அவர் தெரிவித்தார். சிறிய ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு சீர்திருத்த கட்சி ஆரம்பம் பற்றி சமீபத்தில் அவர் தெளிவுபடுத்தினார்.

82 வயதான முதியவர் அலுவலகத்திற்கு சென்று வருவதென்பது வழமைக்கு மாறான நிலைமையாகத்தான் நோக்கப்பட வேண்டும்.

1971ம் ஆண்டிலிருந்து இவ்வாறான அரசியல் பணிகளை ஜெயரட்னம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

எனினும், தனது அரசியல் பயணத்தை தடுப்பதற்கான வாய்ப்புக்களை எவருக்கும் திரு.ஜெயரட்னம் வழங்கவில்லை. ஆளுமைத் திறமையும், கொள்கைப் பிடிப்பும் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட கொடைகளாகும்.

கடந்த ஆண்டில் ஜெயரட்னம் பாரிய நிதி சிக்கல்களை எதிர்நோக்கினார். 2001ம் ஆண்டு சிங்கப்பூர் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக பெருமளவிலான நட்டஈட்டுத் தொகையை செலுத்த நேரிட்டது.

மேலும், நீதிமன்றத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமது சில அரசியல் கூற்றுக்களின் மூலம் அவதூறு இழைக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை என ஜெயரட்னம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளது என அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

தமது கண்களை அகல விரித்து, பொக்கை வாயில் காணப்படும் மூன்று பற்களுடன் மிக நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த வண்ணம் நாட்டை நாம் பாதூக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற வேண்டும், அதிகாரங்கள் மக்களின் கைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதே எனது அழுத்தமான கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நடைமுறைச் சாத்தியமற்ற காலம் கடந்த முயற்சியாகவே அவரது முயற்சி நோக்கப்படுகிறது. எனினும் 10 பேர் அவரது கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏனையோர் வலுவான ஆளும் கட்சிக்கு எதிராக குரல்கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

அவரது இலட்சியத்திற்காகவோ அல்லது புதிய கட்சியின் ஆரம்ப விழா காரணமாகவோ ஊடகவியலாளர்கள் குழுமவில்லை. உண்மையில் ஜெயரட்னம் என்ற அரசியல்வாதியின் ஆற்றல் மிக்க அனுபவ ஆளுமையே ஊடகவியலாளர்கள் ஈர்க்கப்பட்டமைக்கான பிரதான ஏதுவாகும்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது தோல்விகள் மற்றும் விடா முயற்சியான போராட்டங்களுக்கு மத்தியில் சிங்கப்பூர் பொருளாதாரம் தன்னிறைவு பாதையில் ஸ்திரமான வெற்றியை பதிவு செய்தது.

கடந்த 42 ஆண்டுகால வரலாற்றில் 4.5 மில்லியன் மக்கள் முதல் பிரதமரின் கனவை நனவாக்கியுள்ளனர். மூன்றாம் மண்டல நாடுகளின் சொர்க்கபுரியாக சிங்கப்பூர் அமைய வேண்டும் என அந்நாட்டின் முதல் பிரதமர் லீ க்வான் யூ தெரிவித்திருந்தார்.

அநேகமான மக்கள் சிவில் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றனர். தமது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான விலையாகவே பேச்சு சுதந்திரத்தை கருதுகின்றனர். ஜெயரட்னத்தைப் போன்ற சிலர் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என சிலாகிக்கின்றனர்.

ஜெயரட்னம் தொடர்பாக கலந்துரையாடிய போது, “நாங்கள் சற்று குறுகிய உள்ளம் படைத்தவர்கள்” என பெயர் குறிப்பிட விரும்பாத 16 வயது மாணவி ஒருவர் தெரிவித்தார். நாங்கள் பட்டம் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதற்குமே அதிக சிரத்தை காட்டுகின்றோம். அரசியல் பற்றி சிந்திக்கவில்லை, அது எங்களது கலாச்சாரமும் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாங்கள் எங்களது கல்வியை தொடருவதில் அதிக கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், திரு.ஜெயரட்னத்திற்கு ஆதரவு கிடைக்கப் பெறுகிறதோ அல்லது ஆசனமொன்றை வகிக்கின்றாரா என்பதைவிட எதிர்த்தரப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் பிரதிபலிக்கின்றார்.

எனினும், சிங்கப்பூரை பொருத்தமட்டில் மிக சொற்பளவிலான பங்கையே எதிர்க்கட்சியினால் வகிக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாக காணப்படுகின்றது.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 16 ஆண்டுகள் வரை முதல் பிரதமர் லீயின் ஏகபோக ஆட்சி உரிமையே நிலவியது எனக் கூறின் அது பிழையாகாது. 1965ம் ஆண்டு சுதந்திரமடைந்தது முதல் 1981ம் ஆண்டு வரை பிரதமர் லீயின் மக்கள் செயற்கட்சி தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது.

பாராளுமன்ற ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஜெயரட்னம் 6 தடவைகள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் விசேட தேர்தல் ஒன்றில் ஜெயரட்னம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தில் அதிகமாக குரல்கொடுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினராக ஜெயரட்னம் திகழ்ந்தார்.

பிரித்தானிய சட்டக்கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் அவரது துனைவியாரான மார்கரட்டை சந்தித்து கரம்பிடித்தார். ஜெயரட்னம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்னார் மார்கரட் மார்பக புற்று நோயினால் உயிரிழந்தார்.

தனது வெற்றிக்காக அரும்பாடுபட்ட தனது துணைவியார் வெற்றி பெறும் தருவாயில் இந்த மண்ணைவிட்டு நீங்கியிருந்தமை ஜெயரட்னத்தை ஆழமாக பாதித்தது.

திரு. ஜெயரட்னத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக எப்போதும் அயைமவில்லை. அநேக சந்தர்ப்பங்களில் அவரை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தனித்து நின்று மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அவர் எத்தனித்தார்.

1986ம் ஆண்டு முதல் தடவையாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஜெயரட்னம் இழந்தார். கட்சியின் கணக்கு விபரங்கள் தொடர்பாக போலியான தகவல்களை அவையில் சமர்த்த குற்றத்திற்காக ஒரு மாத காலச் சிறைத் தண்டனையும், அபாரதமும் விதிக்கப்பட்டது.

எனினும், இதனை ஓர் அரசியல் சூழ்ச்சித் திட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தல்களில் ஒரு தேர்தலில் மாத்திரம் போட்டியிடுவதற்கு அவருக்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனினும், சிங்கப்பூர் தேர்தல் சட்டத்தின்படி சிறந்த தோல்வியாளர் என்ற அடிப்படையில் அவருக்கு ஆசனமொன்று கிடைக்கப் பெற்றது.

முன்னாள் பிரதமர் கோ சொக் தொங்கிற்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படும் வரை திரு. ஜெயரட்னம் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தார்.

2011ம் ஆண்டில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என மிகவும் உறுதியான குரலில் அழுத்தமாக திரு. ஜெயரட்னம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“எனக்கு 82 வயதாகிறது, இன்னமும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னால் தேர்தலில் போட்டியிட முடியும்” என நம்பிக்கையுடன் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் மக்கள் செயற்கட்சி அபரிமிதமான வெற்றிகளை பெற்றுக்கொண்ட ஓர் கட்சியாக அடையாளப்படுத்த முடியும். எனினும், தனிப்பட்ட அரசியல் திறமைகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கட்சியினால் வழங்கப்படவில்லை.

திரு. லீயின் சுவடுகளை பின்பற்றிச் செல்வதே கட்சியின் தாரக மந்திரமாக இன்றுவரை நீடித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசன எண்ணிக்கைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, ஆளும் கட்சிக்கு எதிரான மாற்றுக் கொள்கையையுடைய குழுக்கள் இருக்க வேண்டும் என்பதே பிரதான கருதுகோளாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஏன் வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லை என்று சில காலங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலுவான எதிர்கட்சியொன்றை உருவாக்க நானும் முயற்சித்தேன் எனினும் அது சாத்தியப்படவில்லை என ஜெயரட்னம் தெரிவித்தார்.

திரு.ஜெயரட்னம் அவர்களின் மாற்றுக் கொள்கைகளின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கான கதவு திறக்கப்பட்டது. நான்கு உறுப்பினர்களே உச்சபட்ச எதிர்க்கட்சி உறுப்பினர்களாக சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் செயற்பட்டுள்ளனர்.

84 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களும் ஆளுங்கட்சியுடன் நட்புறவான கொள்கைகளை கடைபிடிக்கின்றனர்.

திரு. ஜெயரட்னத்தின் செயற்பாடுகள் பிரதமர் லீயை வெகுவாக பாதித்திருந்தது. பிரதமர் லீ மற்றும் ஜெயரட்னம் ஆகியோரது உறவு உலகின் மிக நீண்ட அரசியல் முறுகல்களில் ஒன்றென அரசாங்கத்திற்கு சார்பான பத்திரிகையொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

கவனயீனமே ஜெயரட்னம் அவர்களின் பிரதான பலவீனம் என தனது வாழ்க்கை சரிதத்தில் பிரதமர் லீ க்வான் யூ குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான சந்தர்ப்பங்களில் அவரது உரைகள் தயாரற்ற நிலையில் ஒப்புவிக்கப்படுகின்றன என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புள்ளிவிபரங்கள் அல்லது தகவல்கள் குறித்து எவரேனும் ஜெயரட்னத்திடம் சவால் விடுத்தால் அவர் நிலைகுலைந்து விடுவார் என லீ குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சிறிய விடயங்களைக்கூட விசுவரூபமாக்க ஜெயரட்னம் சற்றும் தயங்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் புகழுடன் திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக போலியான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார், ஏனைய சில நாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களைப் போன்றே ஜெயரட்னமும் செயற்பாடுகின்றார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருதலைப்பட்சமான அரசியல் செயற்பாடுகளினூடாக தனது கருத்துக்களை பலவந்தமாக திணிப்பதற்கு ஜெயரட்னம் முனைவதாக முன்னாள் பிரதமர் லீ தமது வாழ்க்கை சரிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடனான போட்டி ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்திருந்தென பிரதமர் ஓர் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளியும், அங்கிலிக்கன் கிறிஸ்தவருமான ஜொஸ்வா பென்ஜமின் ஜெயரட்னம் 1926ம் ஆண்டு தற்போது மலேசியாவாக பிளவுபட்டிருக்கும் பகுதியில் பிறந்தார்.

பிரித்தானியாவின் லண்டன் சட்டக் கல்லூரியில், 1951ம் ஆண்டு சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

அவரது புதல்வரான பிலிப் தந்தையின் பாத சுவடுகளைப் பின்பற்றி சட்ட வல்லுனராக பரிணமித்துள்ளார். சிங்கப்பூர் சட்டப் பேரவையின் தலைவராக பிலிப் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மற்றைய புதல்வர் கெனத், லண்டனில் பொருளியல் வல்லுனராக கடமையாற்றுகின்றார். நிதி சிக்கல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் இரண்டு புதல்வர்களும் பாரியளவு நிதியுதவியை தமக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் சட்டக் கல்வியை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்பிய ஜெயரட்னம் துரித கதியில் வளர்ச்சியடைந்தார். நீதவான், மாவட்ட நீதவான், சட்ட ஆலோசகர், உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் இரண்டாம் நிலை நீதிமன்றங்களில் தலைவர் உள்ளிட்ட மிக முக்கியமான உயர் பதவிகளை வகித்தார்.

திரு.ஜெயரட்னம் 1963ம் ஆண்டு தனது 37 ஆவது வயதில் அரச சட்டத்துறையிலிருந்து பதவி விலகி தனியார் துறையில் பணியாற்ற ஆரம்பித்தார். தொழில் தொடர்பாக ஏற்பட்ட விரக்தியே அரச துறையிலிருந்து பதவி விலகுவதற்கான பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1971ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட அநேக சந்தர்ப்பங்களில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையின் மெய்யான பெறுமதி குறித்த மக்களின் சிந்தனைகளை சீர்திருத்துவதே எனது முதன்மை நோக்கம் என அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

“ஏன் நாம் இங்கு இருக்கிறோம்?”, “என்ன நோக்கத்திற்காக நாம் இங்கு இருக்கின்றோம்? என அவரது கருத்துக்களுக்கு உடன்படாத மக்களிடம் அவர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது சில கேள்விகளை எழுப்பினார்

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையை மக்கள் மனதில் விதைபதற்காக, இந்த வயதிலும் ஜெயரட்னம் எத்தனிக்கும் பாங்கு பாராட்டுக்குரியதெனக் கூறின் அது மிகைப்படாது.

[நியு யோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் செத் மெய்டன் எழுதிய கட்டுரை, ஊற்ரு. கொம் இற்காக தமிழாக்கம் செய்யப்பட்டது]

May 11, 2008

கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும்.

நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேசப் பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணிவெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்கண்ணிவெடி அமைப்பு தெரிவிக்கின்றது.

[தாளையடி-வடமராட்சி கிழக்கில் கண்ணி வெடிகள் அகற்றும் பணி-ஏப்ரல் 2005 இல்]

153 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

வருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணிவெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணிவெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி மூன்றாவது தடவையாகவும் உலகம் பூராவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

“உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணிவெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் 4ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“இவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுகின்றனர்”. “ இந்த மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலக்கண்ணிவெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாள மக்கள் கண்ணிவெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.

விரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி பாதுகாப்பு தினம் ஏப்ரல் 4ம் திகதி இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

கிழக்கில் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் இந்தப் பிரதேசங்களுக்கான விஜயத்தின் போது இந்த பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகளினால் ஏற்படக்கூடிய அபாயம் புலனாகியிருந்தது.

உலகளாவிய ரீதியில் நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தல்கள்

ஒவ்வொரு 30 நிமிடத்திற்குள் ஒருவர் நிலக்கண்ணிவெடியின் மீது கால் பதிப்பதன் மூலம் ஒரு குடும்பம் பாதிப்படைகின்றது. பாரிய வெடிப்பு அல்லது சிறுவர் உயிரிழப்பு அல்லது கள ஊழியர்கள் காயமடைதல்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் முழுக் குடும்பமே துயரத்திற்கு உள்ளாகின்றது என ஒரு இலங்கை என்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஒரு இலங்கை நிறுவனம் பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கின்றது:

ஒரு நிலக்கண்ணிவெடியை புதைப்பதற்கு 3 முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகின்றது. எனினும், நிலக்கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர் வரை செலவாகின்றது

அணு, இரசாயன மற்றும் உயிரி ஆயுத பாவனையினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான உயிர்களை நிலக்கண்ணிவெடிகள் காவுகொண்டுள்ளன.

வருடாந்தம் 15,000 மேற்பட்டோர் நிலக்கண்ணிவெடிகளினால் பாதிப்புறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 288 பேரும், நாளொன்றுக்கு 41 பேரும், ஒரு மணித்தியாலத்தில் 2 பேரும் நிலக்கண்ணிவெடியின் கோரப்பிடியில் சிக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

70 வீதத்திற்கும் அதிகமான சிவிலியன்களே நிலக்கண்ணிவெடிகளினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுவர்கள் எனவும்; 50 வீதத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்த ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் 100 நாடுகளில் புதைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

பசுமையான விவசாய நிலங்கள், நகரங்கள், வீதிகள், நீர் நிலைகள், மற்றும் கால்நடை வளங்கள் செறிவாக காணப்படும் பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலக்கண்ணிவெடிகளினால் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் துரதிஷ்டவசமாக மிகச் செழுமையான விவசாய நிலங்கள் மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

யாழ் தீபகற்பத்தின் விவசாய நிலங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 700,000ற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை பாதுகாப்பு படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புதைத்திருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு 25,000 நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

2002ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திரடப்பட்டதனைத் தொடர்ந்து பாரிய நிலக்கண்ணிவெடியகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக புதைக்கப்பட்ட 1.5 மில்லியன் நிலக்கண்ணிவெடிகளும், ஏனைய வெடிபொருட்களும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் அகற்றப்பட்டன.

நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தினத்தின் மூலமாக பிராந்தியத்தில் நிலக்கண்ணிவெடிகளினூடாக ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக மீண்டும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

யுத்த அனர்த்தம் உக்கிரமடைந்தைத் தொடர்ந்து நிலக்கண்ணிவெடியினால் ஏற்படக்கூடிய அனர்த்த வீதமும் உயர்வடைந்துள்ளது.

நிலக்கண்ணிவெடி தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது.