« March 2008 | Main | May 2008 »

April 19, 2008

மாறுபட்ட மழைவீழ்ச்சி, வெள்ளம் என்பன நெல் விளைச்சலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

லங்கை மழைவீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் காரணமாக விவசாயிகள் காலம் தாழ்த்தி நாற்று நடுதலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான போகமாகக் கருதப்படும் பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கைகளில் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும்.

எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால் குறிப்பாக பருவம் மாறிய மழைவீழ்ச்சி பெறுகையினால் ஒக்ரோபர் மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வரை நெல் விதைப்பிற்காக காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மழை பொழியும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயத் திணைக்களத்தின் விவசாய-காலநிலைப் பிரிவு தலைவர் கலாநிதி பி. புண்யவர்தன தெரிவித்தார்.

வழமையாக பெரும்போக அறுவடைகள் பெப்ரவரி மாதத்திலேயே மேற்கொள்ளப்படும். எனினும் தற்போது அது மார்ச் மாத நடுப்பகுதி அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வருடத்தில் வழமைக்கு மாறாக கடும் மழை பெய்தததனால் மார்ச் மாத நடுப்பகுதியில் கூட அறுவடை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என கலாநிதி புண்யவர்தன மேலும் குறிப்பிட்டார்.

கடுமையான மழை 400,000 பேரை தாக்கியுள்ளது

கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஆரம்பித்த கடும் மழையினால் நாடு முழுவதிலும் உள்ள பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் பெறப்பட்ட மழை வீழ்ச்சிப் பெறுதி வழமையான மழைவீழ்ச்சிப் பெறுதியைவிட 70 வீத அதிகரிப்பைக் காட்டியதாக வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் ஐ.ஆர்.ஐ.என். இற்குத் தெரிவித்தார்.

[திருகோணமலையில் விவசாயி ஒருவர்-படப்பிடிப்பு: அமாந்த பெரேரா]

அம்பாறை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய நெல் விளைச்சல் அதிகமாக சாகுபடியாகும் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த கன மழையின் தாக்கத்தினால் குறிப்பிட்ட மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வருடாந்தம் இலங்கை சுமார் 3.3 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்வதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், இந்த வருடம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மொத்த உற்பத்தியில் 2.5 வீதம் இழக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பிரதிப் பணிப்பாளரான சாந்த எமிட்டியாகொட சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மொத்த கேள்விக்கும், தேசிய நெல் உற்பத்திக்கும் இடையில் 10 வீதமான இடைவெளியொன்று பொதுவாகக் காணப்படுகிறது. எனினும், இம்முறை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இந்த இடைவெளியை 12.5 வீதமாக அதிகரிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரிசி விலை உயர்வு

அரிசிக்கான இந்த அதிக கேள்வி உள்நாட்டு சந்தையில் விலையேற்றம் ஏற்பட ஏதுவாக அமைந்ததுடன், தரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என எமிட்டியாகொட தெரிவித்தார்.

அடுத்த நெல் அறுவடைக்காக நெல் விதைகளை ஒதுக்க வேண்டியுள்ளது, இவ்வாறு விதை நெல்லுக்காக நெல் மணிகளை ஒதுக்கும் போது, அரசி விலையில் தாக்கங்கள் ஏற்படும்.

ஏற்கனவே, விவசாய திணைக்களம் சுமார் ஆறு மில்லியன் கிலோ கிராம் நெல் விதைகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிக உள்நாட்டுக் கேள்வி மற்றும் உலக சந்தையில் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் என்பவற்றின் காரணமாக கடந்த வருடம் அரிசி விலை வெகுவாக உயர்வடைந்து காணப்பட்டது.

சில வகை அரிசிகள் 60 – 80 வீத விலை அதிகரிப்பை காட்டியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான வரையறுக்கப்பட்ட அறிவு

இதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விஞ்ஞான ஆய்வுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது வருத்தமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலை உச்சளவு உள்நாட்டு நெல் அறுவடையைப் பெற்றுக்கொள்வதில் தடையாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நெல் அறுவடையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிறுவன திட்ட இணைப்பதிகாரி நளின் முனசிங்க தெரிவித்தார்.

எனினும், ஒக்ரோபர் மாத அறுவடைகள் காலம் தாழ்த்தப்படுவதனூடாக விவசாயிகள் இதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளமையை புலப்படுத்துகிறது. அவர்களிடம் விஞ்ஞான அறிவு காணப்படவில்லை என்ற போதிலும் நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயற்படுவதுவும் நெல் விதைப்பு காலம் தாழ்த்தப்படுவதற்கான ஒரு காரணியாகும் என அவர் குறிப்பிட்டார்.

பயிர்ச்செய்கை முறைமையை மாற்றுவதனைவிட வித்தியாசமான நெல் வகைகளை பயிர்செய்வது ஒரு வெற்றிகரமான திட்டமாக பரிந்துரைக்கப்படுகிறது.

அநேகமான நெல் வயல்கள் தாழ் நிலங்களில் காணப்படுகின்றன. வெள்ள நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நெல் வகைகளை பயிரிடுவதன் மூலம் இந்த நிலமையை சமாளிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயி;ற்சி நிலைய ஆய்வாளர் பண்டா கிராகம தெரிவித்தார்.

மோசமான கால நிலை பற்றி எதிர்வுகூறப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே முற்றாத கதிர்களை அறுவடை செய்ய முடியும். எனினும், இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெற் கதிர்கள் விரைவில் நுகரப்பட வேண்டும். இந்த நெல் நீண்டகாலத்திற்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Variable rains and flooding impact on rice harvest இனது தமிழாக்கம்]

April 17, 2008

விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்

அரிசி மற்றும் உணவுப் பொருள் விநியோக வீழ்ச்சி..... விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்..

க.தி.குமாரன்

லகளாவிய ரீதியில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரித்துச் செல்கின்றது. கடந்த சில மாதங்களில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனேகமான மக்களின் பிரதான உணவுப் பொருளாக அரிசி காணப்படுகின்றமையால், மக்களின் வாழ்க்கைச் செலவும் மேலும் உயர்வடையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அரிசி வகைகளின் விலை கடந்த வருடத்தை விட 100 வீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த மாதத்தில் மட்டும் 30 வீதம் உயர்வடைந்துள்ளது.

அண்மைக்காலமாக சடுதியான உயர்வுப் போக்கைக் காட்டிவரும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் சர்வதேச உணவு உதவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பாரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசிய பிராந்தியம் முழுவதும் அரசியின் விலை உயர்வுபோக்கை காட்டிச் செல்கிறது. இந்த நிலைமை பிராந்தியத்தில் உள்ள வறிய மக்களுக்கான உதவித் திட்டங்களை மோசமாக பாதிக்கும்.

உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம், உலகம் முழுவதிலும் உள்ள 73 மில்லியன் மக்களுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு நிவாரணத் திட்டங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை மிகவும் வறிய நாடுகளில் பாரதூரமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என அந்த அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் 2008ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அரை பில்லியனால் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறைபோசாக்குடைய ஆகாரங்களை உட்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மந்த போஷாக்கினால் அல்லலுறக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டுகின்றது.

அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றமை உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது.

எனினும், சில நாடுகளில் காலநிலை மற்றும் உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அரசி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் விவசாயிகளது பல நெல் வயல்களை, இலங்கை இராணுவத்தினர் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.

விவசாயிகள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக வாய்ப்புகள் மறுதலிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மழைவீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பல பிரதேசங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

காலநிலையினால் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அடிமட்ட வறிய மக்களே தாங்கிக் கொள்ள நேரிடும் என சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்தின் முன்னாள் தலைவரும், முன்னணி விவசாய ஆய்வாளருமான எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே காலநிலை மாற்றங்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு, காலநிலை மாற்ற முகாமைத்துவம் பற்றிய வழிப்புணர்வு என்பன குறித்து வறிய விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான நெல் வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நெற் பயிர்ச்செய்கை மேம்படுத்தல் என்பவற்றின் மூலமாக தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளது பங்களிப்பை ஊக்குவிக்க சர்வதேச நெல் ஆய்வு நிறுவகம்; நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தெற்காசிய மற்றும் சஹரன் - ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 400,000 மேற்பட்ட விவசாயிகளுக்கு மாறுபட்ட நெல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பில் மற்றும் மிலின்டா கேட்ஸ் நிதியம் 19.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நெல் ஆய்வு நிறுவகத்திற்கு வழங்கியுள்ளது.

அடுத்து வரும் பத்தாண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட விவசாயிகள், வழமையான விளைச்சலைக் காட்டிலும் 50வீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மனிதாபிமான சமூகங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கைத்தொழில் மயமாக்கல் மற்றும் நகர மயமாக்கல் என்பனவே விவசாய நிலங்களைத் தாக்கும் மிகப் பாரிய அச்சுறுத்தல்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

தனிநபர்கள் மற்றும் நிபுணர்களினூடாக உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி நுட்பங்களை முன்னெடுப்பதன் மூலம் விசாயிகளும், விவசாய நிலங்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.

உள்நாட்டு கலவரங்கள் விவசாயத்துறையை எங்கனம் பாதித்துள்ளது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள பசுமையான விவசாய விளைநிலங்கள் விவசாயிகளுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திருப்பப்பட வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளில் அரிசி விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.

நெல் வயல்களில் தற்போது நிலைகொண்டுள்ள பளுப்புநிற தலைக்கவசங்களை அந்தப் பிரதேசத்திலிருந்து அகற்றி மீண்டும் பச்சைப்பசேல் என நெற் கதிர்கள் அசைவதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் விரைந்து செயற்பட வேண்டும்.

April 16, 2008

நிலக்கண்ணிவெடி மீட்பாளருடைய வாழ்க்கையில் ஒருநாள்

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

நிலக்கண்ணி வெடிகளை தடைசெய்வதற்கான சர்வதேச பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணி வெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்கண்ணி வெடி அமைப்பு தெரிவிக்கின்றது.

153 நாடுகள் நிலக்கண்ணி வெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணி வெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

வருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணி வெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணி வெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணி வெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

"உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணி வெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்" என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

"ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது"இ "மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலக்கண்ணி வெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாள மக்கள் கண்ணி வெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.

விரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வருடம், ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது இலங்கையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மில்லியன் கணக்கான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் பல்லாயிரக் கணக்கான கண்ணி வெடிகள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன.

எனினும், வடக்கு கிழக்கில் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கக் தொடங்கியதுடன் யுத்தகளத்தில் உள்ள தரப்பினர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்தனர்.

இலங்கை ஒட்டோவா உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

யுத்தத்தின் எச்சங்களாக கருதப்படும் வெடிக்கப்படாத வெடிபொருட்களை களையும் பணி இலங்கை முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கின் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் நிலக்கண்ணி வெடிகளின் பேராபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்பது அங்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறியக் கிடைத்தது.

ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு தினத்தின் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலக்கண்ணி வெடி தொடர்பான கல்வியை வழங்குவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

யாழ் தீபகற்பத்தின் ஏனைய இளைஞர்களைப் போன்றே மகாலிங்கம் ஜெகநாதனுக்கும் தனது சொந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மகாலிங்கம் ஜெகநாதன் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் நிலக்கண்ணிவெடி மீட்பாளராக பணியாற்றுகின்றார். 32 வயதான மகாலிங்கம் ஜெகநாதனை அவர்களது தொழில் சகாக்கள் “ஜெக்” என செல்லமாக அழைக்கின்றனர். அவரது தமிழ் நண்பர்கள் ஜெகா என அன்போடு அழைக்கின்றனர். ஜெகநாதன் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவராவார்.

யாழ்ப்பாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடியகழ்வுப் பணிகளில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

[மகாலிங்கம் ஜெகநாதன்]

மகாலிங்கம் ஜெகநாதன் தனது அனுபவத்தையும், உணர்வுகளையும் ஊடகவியலாளர் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளையுடன் பகிர்ந்துகொண்டார்.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கேள்வி: எதனால் நீங்கள் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: 2001ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதனைத் தொடர்ந்து நான் யாழ்ப்பாணத்திற்கு செல்லத் தீர்மானித்தேன். நான் ஒரு தொழில்நுட்பவியலாளராக கொழும்பில் பணியாற்றினேன். எனது கிராம மக்களின் புனர்வாழ்வு பணிகளுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என நான் உணர்ந்தேன். ஹலோ ட்ரஸ்ட் தொண்டு நிறுவனத்தில் நானொரு மொழிபெயர்ப்பாளனாக இணைந்துகொண்டேன். (தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்) எனக்கு மூன்று மாத கால பயிற்சி வழங்கப்பட்டது.

கேள்வி: நீங்கள் நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றீர்கள் என்பதை அறிந்து கொண்ட போது உங்களது குடும்பத்தாரின் மனோநிலை எவ்வாறிருந்தது?

பதில்: ஆரம்பத்தில் எனது குடும்பத்தாருக்கு நான் கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தெரியாது. சில காலத்திற்கு பின்னர் நான் கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொண்டார்கள். ஆபத்தான கண்ணிவெடிகளை நான் கையாள்கிறேன் என்று அறிந்த போது அவர்கள் சற்று வருத்தமடைந்தனர். பின்னர் எங்களது பிரதேச மக்களின் நலன்கருதி தன்னார்வமாக மனிதாபிமான ரீதியில் இந்தப் பணிகளை நான் மேற்கொள்வதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இதனால் அவர்கள் மகிழ்;ச்சியடைகின்றனர்.

கணக்காளர் மற்றும் பொறியியலாளர் போன்ற தொழில்களை விடுத்து கண்ணிவெடி மீட்பாளர் பணியை தெரிவு செய்தேன். எனினும், மிகப்பாரிய ஆபத்தான சவால்களை நான் எதிர்நோக்குகின்றேன்.

கேள்வி: நிலக்கண்ணிவெடி மீட்புப்பணியாளர் என்பதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: நிலக்கண்ணிவெடி அகழ்வுப் பணியாளர் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எனினும், இதுவொரு ஆபத்தான தொழில். ஒரு சிறிய பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற சுமார் 40 நாட்கள் தேவைப்படும். மழைபெய்யாத காலத்தில் நிலம் மிகவும் இருக்கமானதாக காணப்படும்.

பாண்டாத்தரிப்பு, வில்லான், சாவகச்சேரி, இருபாலை, ஊரெழு மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். சுமார் 20,000 உயிர் நிலக்கண்ணிவெடிகளை யாழ்ப்பாண பகுதிகளிலிருந்து அகற்றியுள்ளேன். இதன் மூலம் பல விலைமதிப்பற்ற உயிர்களை என்னால் பாதுகாக்க முடிந்துள்ளது.

கேள்வி: நீங்கள் முதல் முதலாக ஒரு நிலக்கண்ணி வெடியை அவதானித்த போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

பதில்: என்னை அன்புடனும், அரவணைப்புடனும் வளர்த்த எனது தாயாரின் திருமுகம் நினைவுக்கு வந்தது. பின்னர் அடுத்த நிலக் கண்ணிவெடி எங்கு புதைக்கப்பட்டிருக்கும் என்ற யோசனை எனக்குத் தோன்றியது.

நான் பல சந்தர்ப்பங்களில் மதிப்பீடு செய்யப்படாத சிறிய நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ள களங்களுக்கு சென்றுள்ளேன். நான் இதுவரையில் உயிர் வாழ்வதை ஒரு அதிஷ்டமாக கருதுகின்றேன். ஒவ்வோர் அனுபவத்தையும் நல்லதொரு பாடமாகவே நான் நோக்குகின்றேன்.

கேள்வி: நிலக்கண்ணிவெடி புதைக்கப்பட்ட பிரதேசத்தை அடையாளங் காண்பதற்கும், சேதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் பொதுமக்கள் எவ்வாறான நடைமுறைளை பின்பற்ற வேண்டும் என நீங்கள் ஆலோசனை வழங்குவீர்கள்?

பதில்: சந்தேகத்திற்கு இடமான பிரதேசங்களில் கால் பதிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு நான் மக்களுக்கு குறிப்பிடுவேன். மிருக எலும்புக் கூடுகள் காணப்படுகின்ற பிரதேசங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும்.

மேலும், இராணுவ முகாம்கள் மற்றும் காவலரன்கள் அமைந்திருக்கும் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். நிலக்கண்ணி வெடி இருப்பதாக அடையாளங் காணப்பட்ட பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடி இருப்பதாக அறிவுப்புப் பலகை இடப்பட்டிருக்கும். இந்தப் பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் பூர்த்தியடையும் வரை குறித்த பிரேசத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நிலக்கண்ணி வெடிகள் காணப்படும் என சந்தேகம் நிலவினால் அருகில் இருக்கும் மீட்புப் பணி நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட வேண்டும். நான் நிலக்கண்ணி வெடிகளினால் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்துள்ளேன். நிலக் கண்ணி வெடிகள் தொடர்பாக அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறே நான் பொதுமக்களிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

கேள்வி: போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் பல்லாயிரக் கணக்கான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. தற்போது வன்முறைகள் உக்கிரமடைந்து வருகின்றன இதனால் போரில் ஈடுபடும் தரப்பினர் நிலக்கண்ணி வெடிகளை புதைக்கலாம். இந்த நிலைமை உங்களுக்கு சவாலாக அமையுமா?

பதில்: நிச்சயமாக, 2001ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டதன் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தைமார், தாய்மார், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக் கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர்.

மேலும், மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவரும் இந்த யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான சிவிலியன்கள் இடம்பெயர்ந்துள்ளனர். விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியேறிய பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மக்கள் தமது வழமையான வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருந்தனர்.

எனினும், மிகவும் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்த போது, புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, விவாசய நடவடிக்கைகள் எழுச்சிப் பெறத் தொடங்கியிருந்தது.

கேள்வி: நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு இளைஞர்களையும், யுவதிகளையும் ஊக்குவிப்பீர்களா?

பதில்: ஆம், நிச்சயமாக, தற்போதைய யாழ்;ப்பாண நிலைமையை கருத்திற் கொண்டு இளைஞர் யுவதிகள் நிச்சயமாக அர்ப்பணிப்புடன் இந்த தொண்டில் ஈடுபட வேண்டும் என்பதே என வேண்டுகோள்.
_____________________
dushi.pillai@gmail.com ]

April 09, 2008

அதிகரித்து வரும் உணவு கையிருப்பு குறித்த நிச்சயமற்ற நிலை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் உணவு கையிருப்பு குறித்த நிச்சயமற்ற நிலை

நெல் அறுவடையில் வீழ்ச்சி, சர்வதேச ரீதியில் உயர்ந்து வரும் உணவு பொருட்களின் விலைகள் மற்றும் நிலை கொண்டுவிட்ட போர்ச் சூழல் யாவும் இணைந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் அன்றாடம் உணவு பெறுவதில் நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளன.

அரசாங்கத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி நாளாந்த குறைந்தபச்ச தேவையான 2030 கலோரிகளை நாட்டின் 20 மில்லியன் சனத்தொகயில் அரைவாசியினர் மட்டுமே பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2008 இல் புள்ளி விபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வறுமைக்கோட்டு குறியீடுகள் - குடும்ப வரவு, செலவு தகவல் அளவீடு-2006/7, என்ற அறிக்கை மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் சராசரி வறியவராக கருதப்படுபவர் 1,696 கலோரிகளையும் வறுமைக்கோட்டிற்க்குள் இல்லாதோர் 2,194 கலோரி உணவுகளையும் பெறுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான குடும்பத்தினர் உணவு பகிர்ந்து கொள்கின்றனர்: படம்: அமாந்த பெரேரா

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உணவு ஸ்தாபன அதிகாரிகளின் தகவலின் படி கிராமப்புறங்களில், முக்கியமாக 25 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் கணிசமானளவினர் போஷாக்கு குறைவான நிலையில் உள்ளனர்.

சர்வதேச உணவு ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதி தலைவர் ஜீன் யீவ்ஸ் லிக்கியும், "போஷாக்கு குறைவானவர்கள் வடக்கு-கிழக்கிலும் மற்றும் நாட்டின் மத்தியில் உள்ள குறிக்கப்பட்ட சில வரண்ட பகுதிகளிலுமே கூடுதலாக காணப்படுகின்றனர்," எனத் தெரிவித்துள்ளார்.

"எமக்கு கிடத்துள்ள தகவல்களின்படி இப் பகுதிகள் நாட்டின் மிக வறிய பகுதிகளை உள்ளடக்குவதுடன், அதிகளவு போஷாக்கின்மை, குறைவான கல்வித்தரம், சுகாதாரயீனம் என்பனவும் ஒருங்கிணைந்து போஷாகின்மைக்கு வழிகோலுகின்றன," என மேலும் தெரிவித்துள்ளார் லிக்கியும்.

பொதுவாக வறுமை, அதே நேரம் அதிகளவில் சக்தியின் தேவைப்பாடுகள் என்றே கிராமப்புற நிலவரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார் கொழும்பில் உள்ள சர்வதேச சிறுவர் கல்வி நிதியத்தின் தொடர்புத்துறை தலைவர் கோர்டன் வெயிஸ். "முக்கியமாக விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளில், பாரியளவில் வேலைகள் உள்ளதனால் அவர்களுக்கு கூடுதலளவில் கலோரிகள் தேவையாகவுள்ளது. பெரும்பான்மையான கமம் சார்ந்த பகுதிகள் வறிய பகுதிகளாகவே உள்ளன."

"இலங்கையில் சிறார்களிடையேயான போஷாக்கு குறையீனம், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனான (US $ 1,599) ஒப்பீட்டளவு எதிர்பார்ப்புகளைவிட கணிசமானளவு அதிகமாகவேயுள்ளது," எனத் தெரிவித்துளார் லிக்கியும். "உண்மையில் இலங்கையில் நிலவும் சிசு மரண புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள சிறார் நிறைக்குறைவு நிலையானது மூன்று மடங்கு அதிகமாயுள்ளது."

சர்வதேச சிறுவர் பராமரிப்பு நிதியம், இலங்கையில் 14 வீதமான ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் கடுமையான நிறைக்குறைவிலும், 29 வீதமான ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்கள் தொடர்ச்சியான நிரந்தர நிறைக்குறைவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச சிறுவர் பராமரிப்பு நிதிய அதிகாரி வெயிஸ், எவ்வாறாயினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கூடியளவு வீதத்தில் நிறை குறைவான சிறார்கள் பதிவாகியுள்ளதாயும் தெரிவித்தார்.

கூட்டு மொத்தத்தில், அரசாங்கதிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடரும் யுத்தத்தினால், போர் சூழ்ந்த பிரதேசங்களில் வாழ்பவர்களது உணவுக் கையிருப்பிற்கான நிச்சயத்தன்மை, போஷாக்கு நிலை என்பவற்றின் மீது கேள்விக்குறிகள் வளர்ந்துள்ளன.

யுத்தத்தினால் பாதிகப்பட்ட இடங்களில் உணவு பெறுவதில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்தளவு காணப்படுகிறது; இவ்வாறு சர்வதேச உணவு ஸ்தாபனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மனிதனேய கட்டப் பகுப்பொன்று ஏப்ரல் 2007 இல் மேற்கொள்ளப்பட்ட போது தெரியவந்துள்ளது, என லிக்கியும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லத்தீவு, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையான உணவு மற்றும் இடர்ப்பாடுகள் நிரம்பிய வாழ்க்கை நிலவும் பிரதேசங்களாயும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மனிதபிமான அவசர கால நிலை உள்ள பிரதேங்களாயும் வகுக்கப்பட்டுள்ளது.

17.5 வீதம் உயர்ந்துள்ள விலைவாசி, மேலும் போஷாக்குக் குறைபாட்டை அதிகரிக்கும் அச்சம் நிலவுவதாயும் சர்வதேச உணவு ஸ்தாபன அதிகாரி தெரிவித்துள்ளார்.

லிக்கியும் மேலும், "பருவம் தவறி பெய்த மழையினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்போக அறுவடை பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. இது சர்வதேச ரீதியில் எற்றம் கண்டுள்ள உணவு விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு என்பவற்றுடன் கூட்டிணையும் போது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம்," எனத் தெரிவித்துள்ளார்.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Food insecurity a growing problem இனது தமிழாக்கம்] - தமிழாக்கம்: க.திருக்குமாரன்

April 05, 2008

ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலய பௌர்ணமி தினம்

ஸ்ரீ அனுமான் பக்த அடியார்களுக்கு பௌர்ணமி தினம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மலை உச்சியில் வீற்றிருக்கும் ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தில் தெய்வீக பரவசத்துடன் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.

குளிர் காலத்தில் கதிரவன் தனது ஒளிக்கற்றைகளை ஆலய சுற்று வட்டாரத்தில் பரப்புவதற்கு முற்பகல் வரை செல்லும்.

ஆலயத்திற்கு சென்ற அது போன்றதொரு பௌர்ணமி தினத்தன்று, மலர்கள், பட்டாடைகள் மற்றும் ஏனைய சுவாமி அலங்காரப் பொருட்களை திரட்டுவதில் ஆன்மீக தோற்றமுடைய வீரப்ப சந்திரபோஸ் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்; ஸ்ரீ அனுமான் விக்கிரகம் மீது செந்தூரம் இட்டு, அலங்காரங்கள் பல செய்த வண்ணம் விழாவிற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.

செந்தூரம் வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது. ஆஞ்சனேய ஆலயங்களில் மாத்திரமே செந்தூரம் வழங்கப்படுகின்றது.

ஸ்ரீபக்த அனுமான் விக்கிரகத்திற்கான அலங்காரப் பணிகளை தொடர்ந்து கொண்டு உரையாடினார் வீரப்ப சந்திரபோஸ்.

25 வயதான வீரப்ப சந்திரபோஸ் புஸ்ஸலாவைப் பகுதியைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாலை கட்டுபவராக தமது பணிகளை சந்திரபோஸ் ஆரம்பித்திருந்தார். 1999ம் ஆண்டு முதல் இதுவரை ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் பூமாலை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இராம நாமத்தைச் உச்சரிப்பதன் மூலம் ஸ்ரீ அனுமானை மிக எளிதில் அடையமுடியும் என நம்பப்படுகிறது

[காணொளியில் ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயம், பின்னணியில் 'சாகா வரம் அருள்வாய்..' சுப்பிரமணிய பாரதியார் பாடலுடன்...வழங்குபவர் சாவித்ரி ராமனந்த்]

எவரெல்லாம் ஸ்ரீ அனுமானை மனப்பூர்வமாக நம்புகின்றனரோ அவர்களையெல்லாம் எம்பெருமான் காத்தருள்வார் என வீரப்ப சந்திரபோஸ் கூறுகின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "நான் ஸ்ரீ அனுமானை பூரணமாக ஏற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன, நான் ஸ்ரீ அனுமானின் பாதகமலங்களில் சரணடைந்தேன்," என குறிப்பிட்டார்.

மாதம்பை மற்றும் குருனாகலிருந்து அவர் பூமாலை கட்டுவதற்கான மலர்களைக் பெற்றுக்கொள்கின்றார். அவற்றில் இருந்து விசேட நிகழ்வுகளுக்காக, அழகிய பல நிறங்களிலான நூல்களினால் மலர் மாலைகள் உருவாக்கப்படுகின்றன.

சிறந்த படைப்பாற்றல்களை வெளிக்காட்ட வேண்டும் என்ற முயற்சியும், ஆவலும் சந்திரபோசிடம் நிறைவே காணப்படுகின்றது. சந்திரபோஸினால் கட்டப்பட்ட எழில்மிகு மலர் மாலைகள் தொடர்பாக பக்த அடியார்கள் வழங்கும் பராட்டுரைகள் அவரை அதிக ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றது. மெல்லிய புன்னகையின் மூலம் அவ்வாறான பாராட்டுக்களுக்கு அவர் நன்றி நவில்கின்றார்.

மலர் மாலை கட்டுவதைத் தவிர சுவாமி விக்கரங்களுக்கான அலங்காரப் பணிகளை சந்திரபோஸ் சிறந்த முறையில் மேற்கொள்கின்றார்.

திருமணம், பூப்படைதல் போன்ற நிகழ்வுகளுக்கான மலர் மாலைகளை கட்டுவதிலும் சந்திரபோஸ் கைதேர்ந்தவராகக் காணப்படுகின்றார்.

மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களின் ஆலய அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு குறித்த பிரதேசங்களுக்கு செல்வதாகவும் சந்திரபோஸ் தெரிவித்தார்.

எனினும் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிராந்தியத்திற்கு அவர் செல்வதில்லையென்றார்.

மலையடிவாரத்தில் சந்திரபோஸிற்கு ஒரு சிறிய கடையொன்று உள்ளது. இந்தக் கடையில் சுவாமி அலங்காரப் பொருட்கள், சிலைகள் மற்றும் மலர்மாலைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

18 அடி உயரமுடைய ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமானின் சிலை

ஆலயத்தின் பிரதான கட்டிடமாகக் கருதப்படும் கோபுரம்

ஸ்ரீ பக்த அனுமானை ஒரு மீட்பராக பக்த அடியார்கள் போற்றுகின்றனர்

ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் பிரதம குரு மகேஸ்வர குருக்கள் மெய்அடியர் ஒருவரது நெற்றியில் செந்தூரம் இடுகின்றார்

ஸ்ரீ பக்த அனுமான் விக்கரத்திற்கு வீரப்ப சந்திரபோஸ் ஆடையலங்காரம் செய்யும் விதம்

விசேட தினங்களில் வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படும் ஸ்ரீ பக்த அனுமானின் பித்தளை விக்கிரகம்

பூரணை நாட்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது

அலங்காரத்திற்கென மாதம்பை மற்றும் குருனாகலிலிருந்து மலர்கள் தருவிக்கப்படும்

குளிர் காலநிலை காரணமாக மலர்கள் வாடாமல் புதுர்ச்சியுடன் காணப்படுகின்றன

தனக்கு வாழ்க்கைத் துணையொன்றை தேடுகின்றார் வீரப்ப சந்திரபோஸ்

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பக்த அனுமான் விழாவிற்காக அலங்காரம் செய்யப்பட்டுள்ளார்

வீரப்ப சந்திரபோஸ் அனுக்கிரகம் தரும் அலங்காரப்பணிகளில் ஈடுபடுகின்றார்

பக்த அடியார்கள் ஆலயத்திற்கு குழுமும் காட்சி

சிவபெருமானின் மறுவடிவமாகவும் அனுமான் கருதப்படுகின்றார்

தனது பணித்திறன்கள் குறித்து சந்திரபோஸ் திருப்தியுடன் காணப்படுகின்றார்

ஸ்ரீ பக்த அனுமானிற்கு வெற்றிலைமாலை சாத்தி வழிபாடுகள் நடத்தப்படுகிறது

பல இனங்களைச் சேர்ந்த பக்த அடியார்களும் ஸ்ரீ பக்த அனுமானின் அனுக்கிரகம் பெற குவிகின்றனர்

அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்பவற்றை ஸ்ரீ அனுமான் குறித்து நிற்கின்றார்

இராமயண இதிகாசத்தின் பிரதானமான பாத்திரங்களில் அனுமான் பாத்திரமும் ஒன்று

ஸ்ரீ அனுமானின் ஆயுதமாக கடாயுதம் காணப்படுகின்றது

வீரப்ப சந்திரபோஸ் மலையடிவாரத்தல் உள்ள தனது கடையில்

பல்வேறு சுவாமிப் பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன

இலங்கையில் ஸ்ரீ அனுமான் வழிபாட்டு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது

ஸ்ரீ பக்த அனுமான் அடியார்கள் புடை சூழ வீதி உலா வருகின்றார்

மெய் அடியார்கள் ஸ்ரீ பக்த அனுமானை தமது தோள்களில் சுமக்கின்றனர்.

ஆலயத்தில் நீண்டநேரம் வழிபாடுகள் நடைபெறுகின்றன

இராம நாமத்தைச் உச்சரிப்பதன் மூலம் ஸ்ரீ அனுமானை மிக எளிதில் அடையமுடியும் என நம்பப்படுகிறது

ஆலய முகப்பில் ஸ்ரீ பக்த அனுமான் விக்கிரகத்திற்கு மலர்த்தூவி ஆராதிக்கப்படுகிறது

மற்றுமொரு மாலை உச்சியிலிருந்து நோக்கும் போது ரம்பொட ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் தரிசனம்
_______________________________________________
[ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை-மின் அஞ்சல்: dushi.pillai@gmail.com ]