« February 2008 | Main | April 2008 »

March 29, 2008

தொடரும் கடின நிலவரங்களுக்கு மத்தியில் யாழ்வாசிகள்

"தீவிரமான பதட்ட நிலவரம் உள்ளது. முக்கியமாக 16 ஜனவரிக்கு பிற்பாடு (ஸ்ரீ லங்கா அரசு புலிகளுடனான 2002 சமாதான ஒப்பந்தத்தை முடிவுற்ற தருணம்), அத்துடன் அதீத இராணுவப்பிரசன்னமும் காணப்படுகிறது"

யாழ் குடா நாட்டில் வாழ்பவர்களின் மனத்தில் ஆழப் பதிந்திருக்கிறது ஆகஸ்ட் 11, 2006 திகதிய மாலைப் பொழுது. அன்று மாலை 5:30 மணியளவில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும், தெற்கே உள்ள புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கும் இடையேயான முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தினர். இத் தாக்குதல் நடவடிக்கையானது யாழ் குடா நாட்டையும், நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் ஒரே பிரதான நெடுந்தெருவாகிய ஏ-9 இனது மூடுதலுக்கு வழிகோலியது.

ஏ-9 பாதையின் சுமார் 100 கி.மீ. பகுதி புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களினூடாகவே செல்கிறது. பொதுசன போக்குவரதுக்குப் பாதை மூடப்பட்ட பின் யாழ்வாசிகள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

"ஏ-9 பாதை மூடுதலே யாழ் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய சம்பவம்", என்கிறார் கொழும்பில் உள்ள மாற்று கொள்கைகளுக்கான நடுவகத்தினை சேர்ந்த மனித உரிமைகள் ஆய்வாளர் மிராக் இரஹீம். இடம் பெற்ற எனைய தொடர் விளைவுகள் யாவும் பாதை மூடுதலின் தோற்றப்பாடுகளே எனவும் அவர் கூறுகின்றார்.

தற்போது யாழ் குடா நாட்டில் வசிக்கும் 632,000 பேர் மட்டுப்படுத்தப்ப்பட்ட அளவிலான அளவில் கடல்-ஆகாய மார்க்கமாக கொண்டு வரப்படும் அத்தியாவசியப் பொருட்களிலேயும் மற்றும் மருந்துப் பொருட்களிலேயுமே தங்கியுள்ளனர். பெப்பிரவரி 18ம் திகதியன்று வெளியிடப்பட்ட உலக உணவு திட்டம், ஐக்கிய நாடுகள் சிறுவர் பராமரிப்பு சபை, சர்வதேச தொழில் அமைப்பு என்பவற்றின் ஜனவரி மாதத்திற்கான யாழ் உணவு மற்றும் பாதுகாப்பு பற்றிய செய்தி சுற்றறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நிலவரம் 2006 இல் இருந்ததனை விட முன்னேற்றம் கண்டுள்ளது. "உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச ஸ்தாபனங்களும் ஒத்துழைத்து இது விடயத்தில் இயங்குவதன் பிரதிபலன், பரந்த அடிப்படையில் உணவு மற்றும் உறையுள் தேவை பொருட்கள் கிடைக்கூடியதக உள்ளதாகும்", என்கிறார் சமீபத்தில் யாழ் நகரிற்கு விஜயம் செய்து நிலவரங்களை பார்வையிட்ட ஸ்ரீ லங்காவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் நீல் பேஹ்ன்.

[யாழ் நகரில் உள்ள ஓர் சில்லறை விற்பனைக் கடை-படப்பிடிப்பு: பிரெனன் ஜோன்ஸ்]

"பெரும்பாலும் சகல அத்தியாவசிய பொருட்களும் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன; இருப்பினும் பொது சந்தையில் மளிகைப் பொருட்களின் விலை கையிருப்பு மற்றும் ஏனைய நிலவரங்களையும் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது; இவ்வாறு தெரிவிக்கிறது யாழ் உணவு மற்றும் பாதுகாப்பு பற்றிய சுற்றறிக்கை.

மேலும் நாட்டின் ஏனைய பகுதகளை விட விலை இன்னும் அதிகமாக இருப்பினும், ஆகஸ்ட் 2007 இல் இருந்ததனை விட விலைகள் குறைவடைந்துள்ளன, என்று செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

"குடா நாட்டில் உள்ள பல்வகை உணவு கையிருப்புக்கள் மூன்று மாதங்களுக்கு போதுமானது," என்கிறது செய்தி சுற்றறிக்கை. எட்டு சரக்குக் கப்பல்கள் யாழ் விநியோக சேவையில் உள்ளன.

"அங்கு பாவனைக்கு மாதந்தம் 25,000 மெட்ரிக் தொன்களே தேவைப்படினும், இக் கப்பல்கள் மூலம் மாதம் 30,000 மெ.தொ. களை அனுப்பவியலும்." மேலும், சுற்றறிக்கை 326,000 பேர் உலக உணவு திட்டம் மற்றும் அரச அனுசரணை பெறுவதாயும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நிலவரம் குறுகிய கால அவகாசத்தில் மோசமடையலாம் என்று விசனப் படுகிறார் இரஹீம். "தீவிரமான பதட்ட நிலவரம் உள்ளது. முக்கியமாக 16 ஜனவரிக்கு பிற்பாடு (ஸ்ரீ லங்கா அரசு புலிகளுடனான 2002 சமாதான ஒப்பந்தத்தை முடிவுற்ற தருணம்), அத்துடன் அதீத இராணுவப்பிரசன்னமும் காணப்படுகிறது" என்கிறார் இரஹீம்.

"இன்னும் கடப்பதற்கு கணிசமானளவு சவால்கள் உள்ளன." என்கிறார் பேஹ்ன். "யாழ்ப்பாணம் இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளமை, பொருளாதாரம் மீழ்ச்சி பெறும் வய்ப்புக்களை மட்டுப்படுத்தியே வைத்துள்ளது."

"பொது மக்கள் அன்றாட வீதி போக்குவரத்து இராணுவ அணியினர் நடமாட்டத் தேவைகளுக்குக் கட்டுப்பட்டது. மற்றும் குடா நாட்டின் பகுதிகள் பல அதி உயர் பாதுகப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது; இவ்விரு காரணிகளும் சேர்ந்து நிவாரண அமைப்புக்கள் பணிகளுக்கு குந்தகமாக உள்ளன." என்று வெளிநாடுகளினதும் உள்ளூர் தொண்டர் ஸ்தாபனங்களினதும் கூட்டாமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜீவன் தியாகரஜா கூறுகின்றார்.

"அதி உயர் பாதுகாப்பு வலையங்கள், வீதி அடைப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு என்பன நடமாட்டங்களை பல மாதிரியும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது," என்கிறார் ஸ்ரீ லங்காவில் உள்ள யூனிசெப் தொடர்புத்துறை பணிப்பாளர் கோர்டன் வெயிஸ்.

வேறு தொண்டர் அமைப்புக்கள் தடைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றினைச் சுற்றி, அத்தியவசிய தேவைப் பொருட்கள் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்படுவத்னை தவிர்க்கும் பொருட்டு பணி புரிவதாக கூறுகின்றன.

"இரணுவத் தொடர் அணிகள், ஊரடங்கு நேரங்கள் என்பவற்றை சிரத்திற் கொண்டு திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளலாம்," என்கிறார் சிறுவர் பாதுகாப்பு (ஐக்கிய இராச்சியம்) அமைப்பின் பேச்சாளர் மேனகா கலிரத்ன. "முன் கூட்டியே மாற்று பாதைகள், திட்டமிடுதல் மூலம் தடங்கல்களை சந்திப்பதனை தவிர்த்து வருகிறோம்."

ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், தேவயற்ற தடங்கல்களை தவிர்க்க விசேட சிரத்தை கொள்வதயும் கூறுகின்றனர். "இராணுவத்தினரை குறி வைத்து நாடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களில் பொது மக்களும் அகப்பட்டு பலியாகிப்போயினர்," என்கிறார் இராணுவத்தினர் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Tough times continue for Jaffna residents இனது தமிழாக்கம்]

March 28, 2008

கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வேட்டைத் திருவிழா

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த திருவிழா உற்சவங்கள் 2008 பங்குனி மாதம் 12ம் திகதி நந்திக் கொடியேற்றத்துடன் கோலகலமாக ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற இந்த உற்சவங்களினால் ஆலயம் அற்புத தரிசனமாக மிளிர்ந்தது.

திருவிழாவை முன்னிட்டு காலையிலும், பிற்பகலிலும் விசேட பூஜை ஆராதணைகள் நடைபெற்றன.

அழகிய கோலங்கள், தோரணங்கள் மற்றும் மலர்களினால் பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானம் எழில்கோலம் பூண்டிருந்தது.

உற்சவத்தின் எட்டாம் நாளில், மிருக யாத்திரை என்றழைக்கப்படும் வேட்டைத் திருவிழா (மிருக யாத்திரை) 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி நடைபெற்றது.

வர்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி விக்கிரகத்தை தாங்கிய குதிரை, அதனைத் தாங்கிய தேரை பக்தகோடிகள் தமது தோள்களில் தாங்கியவாறு உலாச் சென்ற காட்சிகள் காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

வேட்டைத் திருவிழா நடைபெற்ற கிழக்கு வீதி மனோ ரம்மியமான வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெள்ளைநிற மிருதுவான துணிகள், புதிய மரக்கறி வகைகள் குறிப்பாக கத்தரிக்காய், சாம்பல் வாழை, பாவற்காய், புடலங்காய் முதலியவற்றினாலும், மாவிலைத் தோரணங்களாலும் காண்போரை ஈர்க்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விக்கிரகத்தைத் தாங்கிய மெய் அடியர்கள் மூன்று முறை கோயிலை வலம் வந்தனர். அதன் பின்னர் ஆலயத்தின் பிரதம அர்ச்சகர் சிறிய பூஜையொன்றை நடாத்தினார்.

திருவிழா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்த தவில் வாத்தியமும், நாதஸ்வர இசையும் ஒரு தெய்வீக தன்மையை உணர்த்தியது.

அலங்காரம் செய்யப்பட்டு, தென்னங் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த மரக்கறி வகைகளை ஒவ்வொன்றாக ஆலயத்தின் பிரதம குருவான பாலசுந்தர குருக்கள் வெட்டி (வேட்டையாடினார்) அகற்றினார்.

மெய் அடியார்கள் இரு கரம் கூப்பி “அரோகர” என மெய்மறந்து தமது பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினர்.

மிருதுவான துணியில் சுற்றப்பட்ட மரக்கறி வகைகள் புனித ரதத்தின் உச்சியில் வைக்கப்பட்டு, பின்னர் ரதம் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது.

வேட்டைத் திருவிழா மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றதனைக் அடையாளப்படுத்தும் வகையில் ரதத்தில் உள்ள குதிரையின் கால்களில் ஒரு மெல்லிய பட்டுத்துணியை முடிந்து, சிலையின் நெற்றியில் பிரதம குரு திலகமிட்டார்.

திருவிழாவின் முடிவில் பக்தர்களினால் மீண்டும் சுவாமி விக்கிரகம் ஆலயத்தில் மீள பிரதிஷ்டை செய்யப்பட்டது.



கோபுரத்தின் முகப்புப்பகுதி

வேட்டைத் திருவிழாவின் தெய்வீக வாகனமான குதிரை உலா போவதற்கு காத்திருக்கும் காட்சி

வேட்டைத் திருவிழா நடைபெறும் இடம்

ஆலயத்திற்கு வெளியே தேவஸ்தான மூர்த்தி எழுந்தருளச் செய்யப்பட்டார்

எட்டாம் நாள் திருவிழாவாக மிருக யாத்திரை இடம் பெறுகிறது

திருவிழா நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர்

அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி விக்கிரகம் ஆலயத்திற்கு வெளியே....

மிருக யாத்திரை - வேட்டைத் திருவிழாவினை கொழும்பு ஆலயங்களில் காண்பது மிகவும் அரிதான சந்தர்ப்பமாகும்

இந்த ஆலயத்தில் நடைபெறும் முதன்மையான எழில்மிகு விழாக்களில் ஒன்று

வேட்டைத் திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்னர் தீப ஆராதணைகள் சமர்ப்பிக்கப்படுகிறது

இந்த விழாவை கண்டு களிக்க நோக்கில் பக்தகோடிகள் குழுமி வருகின்றனர்

ஆலயத்தின் வடக்கு வீதியினூடாக மூர்த்தி உலா வருகின்றார்

வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டார்

பிரதம குரு பாலசுந்தர குருக்கள் பூஜைவழிபாடுகளில் ஈடுபடுகின்றார்

சுவாமியை தெய்வ வாகனமான குதிரை சுமந்து செல்கின்ற அதேவேளை, தெய்வ ரதத்தை ஆண் பக்தர்கள் தோள்களில் சுமந்து செல்கின்றனர்

மூர்த்தியின் உருவச் சிலை வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.



பக்தர்கள் வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் விதம்

வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்தில் மூர்த்தி வரவேற்கப்படுகின்றார்

மரக்கறி வேட்டை ஆரம்பம்

பக்தர்கள் வேட்டைத் திருவிழாவை தரிசிக்கும் காட்சி

தவில், மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் விழாவிற்கு மேலும் மெருகேற்றினர்

அடியார்கள் வேட்டைத் திருவிழவை கண்டுகளித்து பரவசமடைகின்றனர்

வேட்டைத் திருவிழா இனிதே நிறைவுற்றதை குறிக்கும் வகையில் குதிரை வாகனத்தில் காலில் பட்டுத் துணியை பிரதம குரு கட்டுகின்றார்

சுவாமி சிலையின் மீது மலர் தூவி ஆராதிக்கப்படுகிறது

சுவாமி சிலை மீண்டும் பக்தர்களினால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

தீப ஆராதணை காட்டப்படுகிறது

பல வித்தியாசமான கோலங்களினால் ஆலய வளாகம் முழுவதும் எழில்கோலம் பூண்டிருந்தது

மரத்தினால் தயாரிக்கப்பட்ட பாரமான குதிரை உருவத்தை பல மணித்தியாலங்கள் பக்த அடியர்கள் தமது தோள்களில் சுமந்து கெண்டிருந்தனர்

இறுதி நிகழ்வாக நடைபெறும் சடங்குகளுக்காக காத்திருக்கும் குதிரை வாகனம்



ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலிருந்து மூலஸ்தானம் நோக்கி பஞ்சாச்சராரத்தியை ராஜன் சர்மா குருக்கள் காட்டுகின்றார்

March 23, 2008

இயற்கைச் செல்வம்

காணொளியில் தமிழ் கவிதை:

பாவேந்தர் பாரதிதாசன் பாட்டருவி ~ குறு இசை தட்டில் இருந்து....பாட்டு: நித்தியஸ்ரீ மகாதேவன் ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

விரிந்த வானே, வெளியே, - எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமை குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி, புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் "ஆடற்-கலை" தான்
அமையச் செய்தாய் வாழி! - பாவேந்தர் பாரதிதாசன்


காணொளியில் தமிழ் கவிதை: இயற்கைச் செல்வம்

காணொளியில் தமிழ் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன் பாட்டருவி ~ குறு இசை தட்டில் இருந்து.... பாட்டு: நித்தியஸ்ரீ மகாதேவன் ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ஹோலிப் பண்டிகை

சாகாவரத்தையுடைய காதல் வாழ்கையையும், குதூகலத்தையும் வர்ணங்களால் வெளிப்படுத்திக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை  

ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ந்தியாவின் முதன்மையான பண்டிகைகளில், வர்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையும் ஒன்றாகும். குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கான பருவ மாற்றத்தை இந்தப் பண்டிகை குறித்து நிற்கிறது. பல வர்ணக்கலவைகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் ரம்யமான பண்டிகையே ஹோலி என்றழைக்கப்படுகிறது.

வேம்பின் இலை, குங்குமம், மஞ்சள், வில்வ இலை மற்றும் மருத்துவ குணங்கள் செறிந்த பல மரபுவழியிலான இயற்கை பொருட்களைக் கொண்டு இந்த வர்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன.


[வர்ணங்களினால் எழுச்சி பெறும் ஹோலிப் பண்டிகை]



இந்த வர்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்வதனூடாக மருத்துவ பலன்களை அடைய முடியும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.

பிரகாசமான நிறங்கள் புத்துணர்ச்சியையும் சந்தோசமான வாழ்க்கையும் குறித்து நிற்பதாக மக்கள் மத்தியில் ஓர் ஐதீகம் நிலவியது. உண்மையில் இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிகா எனும் தொன்மைமிக்க பண்டிகையே ஹோலிப் பண்டிகையின் நதிமூலமாக குறிப்பிடப்படுகிறது.

வசந்தகாலத்தின் வருகையையும், காதல் பருவத்தினையும் கொண்டாடி களிப்படையக்கூடிய ஓர் அற்புத வழிமுறையாக ஹோலிப் பண்டிகை இந்தியாவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

இந்த ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்பாக அறிஞர்கள் பல கருத்துக்களை குறிப்பிடுகின்றனர். இவ்வாறு விதந்துரைக்கப்படும் பல கதைகளில் கிருஸ்ணபகவானிற்கும் ராதைக்கும் இடையிலான அமரத்துவ காதல் அந்யோன்யம் மிக முக்கியமான ஒன்றாகும். 

யசோதையின் சுட்டிக் குழந்தையான கிருஸ்ணர் தீராத விளையாட்டு பிள்ளையாகவும், புராணக் கதைகளின் தலைவனாகவும் போற்றப்படுகின்றார்.

சுட்டிக்குழந்தை கிருஸ்ணா ஏன் நான் மட்டும் கருமையாக இருக்கின்றேன்? ராதை மட்டும் அழகிய நிறத்தில் ஜொலிப்பதன் இரகசியம் என்ன என்று தனது செல்ல அன்னை யசோதாவிடம் கேட்கிறான். அதற்கு தாய் யாசோதா, “உனக்கு ராதையின் நிறம் மீது அவ்வளவு பொறாமை இருந்தால் அவள் மீது கடும் வர்ணங்களைப் பூசு அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள் என்று பதிலளித்தார். கிருஸ்ண பகவான் ராதை மீது வர்ணங்ளை அள்ளி பூசினார். 

அன்று முதல் அனைத்து காதல் ஜோடிகளும் தங்களது துணைகளின் மீது நிறங்களைப் பூசி அன்பை அபரிமிதமாக வெளிப்படுத்தும் இந்த ஆனந்தக் கொண்டாட்டம் ஆரம்பமானது.

தமிழ் நாட்டில் காமதேவனுடைய உன்னத தியாகத்தை வியந்து பாராட்டும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது. 

ஹோலிப் பண்டிகை மூன்று வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. காமன் பண்டிகை, காமவிலாஸ் மற்றும் காம தஹனம் என்ற மூன்று வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தமிழ் நாட்டு மக்களிடையே சிவபெருமான் மற்றும் காமதேவன் ஆகிய கடவுளர் மீது அதீதமான நம்பிக்கை காணப்படுகிறது. 
தனது பத்தினியின் மறைவினால் ஆத்திரமும், வேதனையுமடைந்த சிவபெருமான் கடும் தியானத்தை மேற்கொண்டார். இதனைப் பார்த்த மலைமகள் பார்வதி, சிவனை தனது கணவனாக அடைய வேண்டும் என கடும் தவத்தை மேற்கொண்டனர்.

சிவபெருமானின் உக்கிர நிலையை கட்டுப்படுத்தி சாந்தப்படுத்தும் நோக்கில் காமதேவனிடம் பார்வதி உதவி கோரினார். காமதேவன் காதல் கடவுள் அல்லவா? எப்படி மறுப்பார். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவது எவ்வளவு பாரதூரமானதென்பதை காமதேவன் நன்கு உணர்ந்திருந்த போதிலும், பார்வதி தேவிக்கு உதவி செய்வதாக வாக்குறுதியளித்தார்.

உக்கிர தியானத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் மீது, காமதேவன் காமக் கணையை தொடுத்தார். இதனால் கடும் சினங்கொண்ட சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணை திறந்து காமதேவனை எரித்து சாம்பலாக்கினார். 

எவ்வாறெனினும், காம பாணத்தின் லீலையினால் பரமசிவன் பார்வதி தேவியை தனது பத்தினியாக ஏற்றுக் கொண்டார்.

எனினும், கடவுள் காமதேவனின் மறைவினால் அவரது மனைவி ரதிதேவி பெரும் துயரத்தில் ஆழ்ந்தார். தனது சோகக் கதையை பரமசிவனிடம் ரதிதேவி முறையிட்டு, தனது கணவனை மீண்டும் உயிர்ப்பித்து தருமாறு இறைஞ்சி மன்றாடினார்.

இதனைக் கேட்ட சிவபெருமன் ரதிதேவி மீது கொண்ட கருணை காரணமாக காமதேவனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க ஒப்புக்கொண்டார்.

ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்த காதல் சொட்டும் பாடல்களே இந்தக் காமன் பண்டிகையின் போது தமிழ் நாட்டில் பாடப்படுகின்றது.

தீக்காயங்களினால் பீடிக்கப்பட்ட காமதேவனுடைய உடம்பிற்கு மக்கள் சந்தனம் தடவுவதாக ஒரு ஐதீகமும் காணப்படுகின்றது. 

எனவே இந்தப் பண்டிகை காமதேவனுக்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவும், காதல் திருவிழாவாகவும் தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது.

இந்த வர்ணஜாலப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வடஇந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஹோலிப் பண்டிகைத் தினமன்று வெள்ளை நிறத்திலான ஆடைகளே பொதுவாக அணியப்படும். கிராமிய பாடல்களும், நடனமும் இந்தக் காதல் பண்டிகையின் முக்கிய அங்கங்களாகும்.

இந்த வருடத்தில் மார்ச் மாதம் 22ம் திகதி ஹோலிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இது குதூகலக் காதல் கொண்டாட்டக் காலம். 

கடந்த வருடம் மார்ச் மாதம் 4ம் திகதி இலங்கையின் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்தக் ஹோலிக் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
 

March 16, 2008

கர்நாடக சங்கீத மாமேதை ஸ்ரீ தியாகராஜருக்கு கொழும்பில் இசைவிழா

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

“ஒவ்வோர் கீர்த்தனையும் எழில்மிகு ஆலயம், பாடுவோர் மற்றும் கேட்போரின் இதயங்களில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்யக்கூடிய வல்லமை உயரிய இசைப்படைப்பாளிகளின் படைப்புகளுக்கு உண்டு” – ராஜாஜி

சை மாமேதை ஸ்ரீ தியாகராஜார் இசை உலகிற்கு ஆற்றிய அரிய தொண்டுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனைத்து இசைக்கலைஞர்களும், இசைப்பிரியர்களும் கூடியிருந்தனர். இசை மாமேதையின் அற்புத படைப்புக்களை பாடி மகிழ கிடைத்த சந்தர்ப்பம் அங்கு குழுமியிருந்தோர் பெற்ற பெரும் பாக்கியமாகும். மிக எழில் மிகுந்த ஆடைகள் அணிந்த ஆண்களும், பெண்களும் அரங்கில் கூடியிருந்தனர். ஆராதணைகளின் போது பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. பஞ்சரதன கீர்த்தனைகள் நாட்டி ராகத்தில் அமைந்த ஜகதான்தா, கோவல ராகத்தின் டுடுகுலகா, ஆரபி ராகத்தின் சதின்சானி, வராலி ராகத்தின் கனகனா ருசிரா மற்றும் ஸ்ரீ ராகத்தின் எந்தாரு மாஹானு பவாலு ஆகியனவே இந்த பஞ்சரதன கீர்த்தனைகளாகும்.

 

[இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜர் தென்னிந்திய இசை பாரம்பரியத்தின் வளர்ச்சியில் உன்னத உந்துகோலாக இருந்தவர்]

தனது காதல் கடவுளான ராமரை நோக்கி புகழ்ந்து பாடும் வகையில் அமைந்துள்ள இந்த கீர்த்தனைகள் அனைத்தும் மிகச்சிறந்த ரம்மியமான இசை சிருஷ்டிகளாகும். இந்த அனைத்து கீர்த்தனைகளும் ஆதி தளத்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஒவ்வொரு ராகமும் குறித்த கீர்த்தனையின் உணர்வையும், பாடல் வரிகளின் கருத்தாழத்தையும் படம்பிடித்துக் காட்டுவதனைப் போன்று சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ராகம், தாளம், பல்லவி என்ற கிராம முறையில் ஸ்வர அமைப்புக்களுடன் காணப்படுகின்றன. 

ஸ்ரீ தியாகராஜரை புகழ்ந்து பாராட்டும் கர்நாடக சங்கீத விழா கடந்த 2008 பெப்ரவரி மாதம் 15ம் திகதி  கொழும்பு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தியாகராஜ ஆராதணை என்ற இசைத் திருவிழா இரண்டாவது தடவையாக இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

161ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதணைகள் நிகழ்வு கடந்த ஜனவரி 27ம் திகதி திருவையாற்றில் நடைபெற்றது. தமிழகத்தின் எல்லா பிராந்தியங்களிலிருந்தும் இசைக்கலைஞர்கள் இந்த இசை விழாவில் கலந்து ஆர்வத்துடன் கொண்டனர். காவிரி ஆற்றிக்கு அருகாமையில் அமைந்துள்ள இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜரின் சமாதிக்கு அவர்கள் தமது பக்தி கலந்த மரியாதையை செலுத்தினர். 

இசை மாமேதை ஸ்ரீதியாகராஜர் 1767ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாற்றில் பிறந்தார். ராமபிரகாமிற்கும் சீதாஅம்மாவிற்கும் மூன்றாவது குழந்தையாக அவர் இந்த உலகில் பிறந்தார். தியாகராஜரின் தந்தை ஒர் கதாசிரியர். தியாகராஜர் பிறந்த சில காலத்திலேயே அவரது குடும்பம் திருவையாற்றிற்கு சென்றது. தியாகராஜருக்கு 18 வயதிருக்கும் போது 1784ம் ஆண்டு பார்வதி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். 1789ம் ஆண்டு அவரது பாரியார் இந்த உலகத்தை விட்டு நீத்தார். அப்போது தியாகராஜருக்கு வயது 23 மட்டுமே. அதன் பின்னர் பார்வதி அம்மையாரின் தங்கைக் கமலாவை 1790ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். கமலா அம்மையார் ஒரு பெண்குழந்தையை ஈன்றார். அந்த பெண் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி எனப் பெயரிடப்பட்டது. 1847ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி தியாராஜர் முக்தியடைந்த நாளாகக் நம்பப்படுகிறது. திருவையாற்றில் அமைந்துள்ள புஷ்ய பகுல பஞ்சமியில் அன்னார் சமாதியடைந்தார். 

மாமேதை தியாகராஜர் மிகப் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத கலைஞராவார். மேலும் அவர் ஒரு சிறந்த கவிஞராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் காணப்பட்டார். 

மனித நேயத்தையும், இராம பக்தியையும் இசையினூடாக மக்களுக்கு கற்றுக்கொடுப்பதில் இசை மாமேதை தியாகராஜர் ஓர் உன்னத மா மனிதராகவே கருதப்படுகின்றார்.

இராம பிரானே இந்த உலகத்தின் முழுமுதற் கடவுளாக அவர் பாவனை செய்தார், இராம பிரானாலேயே மனித குலத்தை காப்பாற்ற முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு அவர் தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார்.

ஸ்ரீஇராமரை வழிபட்டார், அவரை விமர்சித்தார், அவருக்காக கண்ணீர் மல்கினார், அவருக்காக இன்சொல் உரைத்தார், இராம கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் என்றுக் கூறின் அது பிழையென்றாகாது.

ஸ்ரீதியாகராஜர் சமஷ்கிருதத்தையும், சோதிடத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது தாய் மொழியான தெழுங்கில் புலமைப் பெற்று விளங்கினார். அவர் பல்வேறு கிர்த்தனைகளை உருவாக்கியுள்ளார். அவர் சுமார் 200க்கும் மேற்பட்ட ராகங்களைக் கொண்டு கீhத்தனைகளுக்கு உயிரூட்டினார்.

திவ்யானம சங்கீர்தனங்கள் மற்றும் உற்சவ சம்ராத்ய ஆகிய கீர்த்தனைகள் அவரது மிகப்பிரபலமான மெல்லிசை கீர்த்தனைகளாக போற்றப்படுகின்றன.

இசை மா மேதை ஸ்ரீதியாகராஜரின் சிருஷ்டிகளில் ஏறக்குறைய 1800 கீர்த்தனைகளும், இரண்டு சங்கீத நாடகங்களும் அடங்குகின்றன. “பிரதாள பக்தி விஜயம்” மற்றும் “நொவ்கா சித்திரம்” என்பவையே அந்த பிரபலமான சங்கீத நாடக சிருஷ்டிகள். 

அவரது அனேகமான கீர்த்தனைகள் தாய் மொழியான தெலுங்கிலும், ஏனையவை சமஷ்கிருதத்திலும் யாக்கப்பட்டன.

ஸ்ரீதியாகராஜர் என்ற இசை பிரம்மாவின் படைப்புக்களுக்கு மனதை பறிகொடுக்காத, அந்த கீதங்களில் பாதிக்கப்படாதோரே இல்லை என்று குறிப்பிடலாம்.

இந்த உலகத்தில் உதித்த மிகச்சிறந்த இசை மாமேதைகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் செய்யக்கூடிய உயரிய நன்றி பாராட்டுதலாகவே ஸ்ரீ தியாகராஜ ஆராதணை இசைத் திருவிழா அமைந்துள்ளது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே இசையுலகம் வியந்து நோக்குகின்றது. 

இசை மாமேதை ஸ்ரீதியாகராஜர் இசை உலகின் மூவேந்தர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார். 

ஸ்ரீ தியாகராஜர், இந்துக் கடவுளான இராமரை புகழ்ந்து பாடும் நூற்றுக் கணக்கான பக்தி பாக்களை உருவாக்கியுள்ளார்.

மிக எளிமையான மொழியமைப்பு, உருக்கமான வரிகள் மற்றும் மிக உயர்தரமான மெட்டுக்களின் காரணமாக அவருடைய இசை படைப்புகள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று, சகாவரம் பெற்று என்றென்றும் இந்தக் காற்று மண்டலத்தை வசந்தப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

 

பாலர்கள் பஞ்சரதன கீர்த்தனைகளுடன்

 

இசை விழாவில் நேசன் தியாகராஜா

 

இசை பங்களிப்பு செய்ய சகல கலைஞர்களும் ஒரே கூரையின் கீழ் கூடினர்

 

கலந்து சிறப்பித்த சபையோரில் ஒரு பகுதியினர்

 

விழாவில் மோர்சிங் வழங்கும் கலைஞர். மோர்சிங் கர்னாடக இசையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 'யூத யாழ்' இசைக் கருவிக்கு ஒத்த மோர்சிங், கிராமிய பாடல்களுக்கு இசை வளங்கவும் பயன் படுத்தபடுகிறது

 

இசை வழங்கிய அன்னையருடன் சிறார்களும் இணந்து குதூகலித்தனர்

 

இசை விழாவில் கலாசூரி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன், மாணவர்கள் மற்றும் சக இசை கலைஞர்களுடன் இணைந்து கொண்டார்

 

இது இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜருக்கு இசை கலைஞர்கள் எடுக்கும் வருடாந்த விழா

 

இசை விழாவில் வீணையிசை வழங்கும் கலைஞர்கள்

 

ஸ்ரீ தியாகராஜரின் முத்துக்களை பாடுவதில் சபையினரும் இணந்து கொண்டனர்

 

இசை பிரியர்களுக்கு பரவசமளிக்கும் ஓர் இசை விழா

 

பாடல் இசைத்தோருடன் மிருதங்கம், வீணை மற்றும் மோர்சிங் இசை கலைஞர்களும் இணந்து சிறப்பித்தனர்

 

விழாவின் இசைக்கோலத்தில் அனைவரும் உளமார இணைந்து சிறப்பித்தனர்

[மின் அஞ்சல்: dushi.pillai@gmail.com]

கொசோவோவும் இலங்கையும் : உள்ளக முரண்பாடுகள் புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு வழிகோலும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

“சுதந்திரம் என்பது கடவுளில் தங்கி வாழ்தலையே குறிக்கும்” என முன்னாள் புனித தோமஸ் கல்லூரியின் மதகுரு வணக்கத்திற்குரிய எல்.ஜே.பி. பெர்னாண்டோ தமது குறுகியநேர ஆராதணைகளின் போது குறிப்பிடுவார்.

பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தின் போது எனக்கு இந்த வாசகம் நினைவிற்கு வந்தது. உண்மையாகவே கொசோவோ சுதந்திரம் அடைந்துள்ளதா? அல்லது பலம் பொருந்திய மேற்குலகத்தில் தங்கிநிற்கிறதா?

கொசோவோ சுதந்திரமான இறைமையுடைய ஒரு நாடா? அல்லது மேற்குலகத்தின் கைப்பொம்மையா?

கொசோவோ பிரதமர் ஹாசீம் தாசியினால் வாசிக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஒரு மாய விம்பமாகவே நோக்கப்படுகிறது.

சுதந்திரப் பிரகடனத்தினூடாக யுகோஸ்லாவியாவுடனான பிணைப்பு அறுத்தெறியப்பட்டது.  கொசோவோ சுதந்திரமானதும், இறைமை மிக்கதுமான ஒரு தனி இராச்சியம் என பிரதமர் ஹசீம் தாசி பிரகடனம் செய்தார்.

இந்த சுதந்திரப் பிரகடனத்தின் ஊடாக எமது மக்களின் விருப்பங்கள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் மார்டி அதிசாரியின் கொசோவோவிற்கான தீர்வுத் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சுதந்திரப் பிரகடனத்தை பிரதமர் தசி நியாப்படுத்தியுள்ளார்.

 

(மார்டி அதிசாரி)

மார்டி அதிசாரி கொசோவோவிற்கு விதந்துரைத்த திட்டம் என்ன?

முன்னாள் பின்லாந்து அதிபரும், ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவருமான மார்டி அதிசாரி கொசோவோவிற்கான மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரத் திட்ட வரைவொன்றை 2007 ஆண்டு மார்ச் மாதம் முன்வைத்தார்.

எனினும், இந்த தீர்வுத் திட்டத்தை சேர்பியாவும், ரஸ்யாவும் நிராகரித்தன.

அதிசாரியின் தீர்வுத் திட்டம் வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்கான நிகழ்ச்சி நிரலொன்று தயாரிக்க இந்த நிலைமை வழிகோலியது. 

இந்தத் தீர்வுத் திட்டம் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள வழியமைத்துக் கொடுத்தது.

அதிசாரியின் தீர்வுத் திட்டம் கொசோவோ சுதந்திரத்திற்கு எவ்வாறான பங்களிப்பை நல்கியது?

1999ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினுடைய 1244ம் சரத்தின் அடிப்படையில் யுகொஸ்லாவிய படையினர் கொசோவோவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிடம் கொசோவோவின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.

1244ம் சரத்தில் கொசோவோவிற்கான சுதந்திரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. யுகஸ்லாவிய சமஷ்டி குடியரசிற்குள் கணிசமானளவு சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 1244ம் சரத்தின் 10ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொறுப்பின் கீழ் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2000மாம் ஆண்டில் சேர்பிய அதிபர் மிலொச்சிவிக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமது சொந்த தந்திரோபாய காரணிகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா கொசோவோவை சுதந்திரப் பாதைக்கு தள்ளியது.

ஐக்கிய நாடுகளின் சட்டங்களுக்கு முரணாகவே இந்த நடைமுறை காணப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான ரஸ்யா கொசோவோ சுதந்திரத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. 

கொசோவோவேவின் சுதந்திரம் நோக்கிய முன்னகர்வுகளை ரஸ்யா தடுத்து நிறுத்தியது.

எனினும், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுடைய ஆதரவை அமெரிக்காப் பெற்றுக்கொண்டது. கொசோவோவிற்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தங் கொடுக்கும் ஒரு சாதனமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தை பயன்படுத்திக் கொண்டது. 

ஐக்கிய நாடுகளின் விசேடப் பிரதிநிதி மார்டி அதிசாரியினால் பரிந்துரை செய்யப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையில் இந்த சுதந்திர முன்னகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் பின்னணியின் கீழ் கொசோவோவிற்கான சுதந்திரம் அதிசாரியின் திட்ட வரைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதென்பது வெளிப்படையானதொன்றாகும்.

ஏழு பந்திகளைக் கொண்ட கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தில் எட்டு தடவைகள் மார்டி அதிசாரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

இந்த சுதநதிரப் பிரகடனத்தின் பிரதான சரத்துக்கள் பின்வருவனவாகும்.

* கொசோவோ சுதந்திரம் தொடர்பான மார்டி அதிசாரியின் திட்டத்தில் அடங்கியுள்ள அனைத்து விடயங்களையும் பூரணமாக ஏற்றுக் கொள்கின்றோம். அத்துடன் கொசோவோ தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்களை வரவேற்கின்றோம்.

* அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளும் கொசோவோவின் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

* அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உரிய வகையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிப்பதற்கு சர்வதேச சிவில் பிரதிநிதியொருவருக்கு அழைப்பு விடுப்பதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

* நேட்டோ தலைமையிலான சர்வதேச இராணுவப் படையினரால் கொசோவேவில் பாதுகாப்பு கடமைகள் முன்னெடுக்கப்படுவதனை நாம் வரவேற்கின்றோம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் 1244 (1999) சரத்தின் அடிப்படையிலும், அதிசாரியின் திட்ட வரைவின் பிரகாரமும் பாதுகாப்புகாப்பு கடமைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக கொசோவோவில் பாதுகாப்பு முறைமைகள் திருப்திகரமாக அமைக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும்.

* அதிசாரி திட்டத்தின் 8ம் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கொசோவாவின் சர்வதேச எல்லைகள் நிர்ணயிக்கப்படும்.

இறுதியாக, அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுக்கும், விதிகளுக்கும் சட்டரீதியாக கொசோவோ கட்டுப்பட்டது என்பது இத்தால் உறுதி செய்யப்படுகிறது.

விசேட தூதுவர் மார்டி அதிசாரியின் திட்டத்தை தழுவியதாகவே கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

கொசோவோவின் அனைத்து சட்ட யாப்புக்களிலும் அதிசாரியின் திட்ட வரைவு முன்னிலைப் பெற்றிருந்தது. எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அதிசாரியின் திட்டவரைவில் காணப்படும்  அநேகமான சரத்துக்கள் ஏற்கனவே அமுலில் உள்ளன.

சுதந்திர போட்டியுடைய திறந்த பொருளாதாரக் கொள்கைகளை உடைய நாடாக கொசோவோ காணப்படும் என அதிசாரியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் எனவும், அரச வருமானங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் பொறிமுறையொன்று உருவாக்கப்படும் எனவும் விதந்துரைக்கப்பட்டிருந்தது.

பொதுமுயற்சியான்மை மற்றும் சமூக முயற்சியான்மை நிறுவனங்களை கொசோவோ நம்பிக்கை முகவர் நிதியம் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என அதிசாரி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

நூற்றுக் கணக்கான பொதுமுயற்சியான்மை மற்றும் சமூக முயற்சியான்மை நிறுவனங்களை  கொசோவோ நம்பிக்கை முகவர் நிலையம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யதுள்ளது.

இந்த தனியார் மயப்படுத்தல்களின் காரணமாக பல தொழிலாளர்கள் ஆத்திரமடைந்தனர். 

உண்மையில் இந்த தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைளின் போது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. 

கொசோவோ, சர்வதேச சமூகத்தில் ஒரு உறுப்பினராக செயலாற்றக்கூடிய அமைப்பு முறைமையை அதிசாரி தமது திட்ட வரைவின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தார். குறிப்பாக மாநாடுகள், பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகத்தின் ஒரு பங்களிப்பாளராக கொசோவோவை அமர்த்தக்கூடிய திட்டத்தை அதிசாரி வகுத்திருந்தார்.

21 பேரைக் கொண்ட ஆணைக்குழுவினால் கொசோவோ அரசியல் சாசனம் வகுக்கப்படும். 9 நீதவான்களைக் கொண்டமைந்த அரசியல் சாசன நீதிமன்றின் மூன்று உறுப்பினர்களை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத் தலைவர் தெரிவு செய்வார்.

கொசோவோவின் நீதிமன்ற ஆணைக்குழு 13 உறுப்பினர்களைக் கொண்டமைந்ததாக காணப்படும். இதில் இரண்டு பேர் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாவர். நீதிமன்ற ஆணைக்குழுவின் நியமனங்கள் தொடர்பாக இவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

புதிய கொசோவோவின் பாதுகாப்புப்படை 2,500க்கு மேற்படாத இலகு ஆயுதங்களைக் கொண்ட படையணியாக உருவாக்கப்படும். மேலும் 800 உதிரிப் படைவீரர்கள் சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக அமர்த்தப்படுவர்.

கொவோவோவின் முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவராக சர்வதேச சிவில் பிரதிநிதி செயற்படுவார். ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதியாகவும் இவர் கடமையாற்றுவார்.

சர்வதேச வழிகாட்டல் குழுவினால் சர்வதேச சிவில் பிரதிநிதி நியமிக்கப்படுவார்.; பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஆணைக்குழு, நேட்டோ மற்றும் ரஸ்யா ஆகியன சர்வதேச வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

சர்வதேச சிவில் பிரதிநிதியின் தீர்மானங்களை அங்கீகரிக்கும் பூரண அதிகாரம் சர்வதேச வழிகாட்டல் குழுவிற்கு உள்ளது.

கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சர்வதேச சிவில் பிரதிநிதியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநியாகவும் பொஸ்னிய - ஹெர்சகொவின்யாவிற்கான முன்னாள் நேட்டோ அரசியல் ஆலோசகர் பீட்டர் பெயித் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஜேர்மனியின் அமெரிக்கத் தூதுவர் லெபிஸிஸ் அவரின் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதிசாரியின் திட்ட வரைவுகளை அமுல்படுத்தும் அதிகாரம் சர்வதேச சிவில் பிரதிநிதிக்கு காணப்பட்டது. மேலும் கொசோவோ நிர்வாகத்தின் சட்டங்களை விஞ்சி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், பொதுத்துறை அதிகாரிகளை நியமித்தல் மற்றும்  பதவி நீக்கம் செய்தல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் சர்வதேச சிவில் பிரதிநிதிக்கு உண்டு.

இதற்கு மேலதிகமாக, கணக்காய்வாளர் நாயகம், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், வரி நிர்வாகப் பணிப்பாளர், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கொசோவோ மத்திய வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகிய நாட்டின் பிரதான நிர்வாகப் பொறுப்புக்களுக்கான நியமனங்களை நேரடியாக சர்வதேச சிவில் பிரதிநிதி மேற்கொள்ள முடியும்.

சர்வதேச சிவில் பிரதிநிதியின் அனுமதியின்றி கொசோவோ சட்டசபையில் உத்தியோகபூர்வமாக சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட முடியாது.

அதிசாரியின் திட்டத்தில் கொசோவோவிற்கான ஐரோப்பாவின் பாதுகாப்பு கொள்கைகள் பற்றி விரிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளன. கொசோவோவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கொள்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

கொசோவோவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தற்போது ஐரோப்பிய பாதுகாப்பு படைத்தரப்பொன்று நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இது அதிசாரியின் பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதொன்றாகும். மேலும் நேட்டோ தலைமையிலான சர்வதேச இராணுவப் படைப்பிரிவின் (ஐ.பீ.எம்) 16000 துருப்புக்கள் இதன் கீழ் உள்வாங்கப்படுவார்கள்.

துரதிஷ்டவசமாக, எவ்வித அனுமதிகளோ, முன் அறிவித்தல்களோ இன்றி சர்வதேச இராணுவப்படையினர் கொசோவோவின் எந்தப் பிரதேசத்திலும் துருப்பினரை நிலைநிறுத்தக் கூடிய பூரண அதிகாரம் காணப்படுகின்றது.

மாநகரசபைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் படைப்பிரிவு என்பவற்றின் முறைமைகள் பற்றியும் அதிசாரியின் திட்டவரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொசோவோவாவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரம் ஒரு மிக சிக்கலான கீழ்மட்ட சுதந்திரமாகவே காணப்படுகின்றது.

 

(இந்த நீலநிறத்திலான பின்னணி எதிபார்ப்புக்களை குறிக்கின்றது, இந்த வரைபடத்தினூடாக புதிதாக பிறந்த கொசோவோவின் எல்லைகள் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு நட்சத்திரங்களும் கொசோவோவில் வாழும் பிரதான ஆறு இனங்களை குறித்து நிற்கின்றது)
 
அதிசாரியின் திட்டமும், அடிமைத்துவ அங்கீகாரத்தின் மூலம் உருப்பெற்ற புதிய கொசோவோ அரசாங்கத்தின் சுதந்திரம் என்ற பதம் மேற்குலகத்தில் தங்கி வாழ்தலையே அர்த்தப்படுத்துகின்றது.

இவ்வாறான வெளிநாட்டு தலையீடுகள் சில வேளைகளில் சுயநலவாத உள்நோக்கத்தை முதன்மைப்படுத்தியதாக இல்லாமல் கூட இருக்கலாம். எனினும், கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் மற்றும் யுகோஸ்லாவியாவின் பிளவு என்பவற்றின் மூலம் நல்லதொரு பாடம் எமக்கு புகட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தலையீடு செய்வதற்கான நியாயப்படுத்தலாக அமைந்துவிடுமே தவிர மெய்யான அக்கறையாக அமையாது. எது எவ்வாறு இருப்பினும் இந்த சக்திகளின் கரிசனை எதாவது ஒரு சுயநலப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது என்பதே வெளிப்படையான உண்மை.

ஐக்கிய அமெரிக்கா, பலம் பொருந்திய ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் கொசோவோவாவின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்துள்ளன.

சுயநிர்ணய அதிகாரம் என்ற கொள்கையினூடாக தேசிய இறைமை என்ற எண்ணக்கரு மறுவுருவம் பெற்றுள்ளது. சேர்பியாவின் இறைமை மிகத் தீவிரமாக மீறப்பட்டுள்ளது.

கொசோவோவிற்கான சுதந்திரத்தை தனிமைப்படுத்தி நோக்குவது உசிதமாகாது. அது இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்த காலத்திலிருந்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தற்போது அந்த வரலாற்றை மீண்டுமொருமுறை எம் கண் முன் கொண்டுவரும் காட்சியாகவே கொசோவோ சர்ச்சை திகழ்கிறது.

கொசோவோவின் சுதந்திரப் பிறப்பு யுகொஸ்லாவியாவின் உச்ச கட்ட பிளவாகவே நோக்கலாம்.

குறிப்பாக சேர்பிய பெரும்பான்மையினரின் கடும்போக்குடைய தேசியவாதமே பிரதான உள்விவகார காரணியாகும். இதன் காரணமாகவே யுகொஸ்லாவியா துண்டுகளாக பிளவுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தலையீடு செய்ய கொடூரமான இன அடக்குமுறைச் சம்பவங்களே வழியமைத்துக் கொடுத்தன. இதேபோன்ற சூழ்நிலைகளையுடைய வேறு பிராந்தியங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த உத்வேகத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக யுகொஸ்லாவிலிருந்து பிரிந்து செல்லும் இறுதிக் கட்டத்திலேயே கொசோவோ காணப்பட்டது எனக் கூறின் அது பிழையாகாது.

இனத்துவ சமஷ்டியை அடிப்படைக் கொள்கையாக கொண்ட ஒரு ஆட்சி முறைமையின் கீழ் ஒரே தேசத்தில் பல்லின மக்கள் வாழக்கூடியதொரு முறைமை யுகொஸ்லாவியாவில் காணப்பட்டது.

ஏனைய விடயங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், டிட்டோவின் தலைமைத்துவம் இந்த ஒருமைப்பாட்டை அர்ப்பணிப்புடன் காத்துவந்தது.

டிட்டோவிற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை உரிய முறையில் முன்னெடுக்காததன் காரணமாக ஒரு இடைவெளி தோன்றியது. கடும்போக்குடைய சேர்பிய தேசிய இனவாதம் படிப்படியாக தலைதூக்கத் தொடங்கியது. உண்மையில் இதனை கடும்போக்குடைய தேசியவாதம் என்றே குறிப்பிட வேண்டும் ஏனெனில் யுகொஸ்லாவியா சேர்பியர்களை மாத்திரம் கொண்ட நாடாக திகழவில்லை. 

புறச்சக்திகள் இந்த பிளவை சூட்சுமமாக பயன்படுத்தியமையினால் யுகொஸ்லாவியா பிளவுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது.

இந்தப் காலப்பகுதியில் அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் யுகொஸ்லாவிய மீது அதிக அக்கறை காட்டி வந்தன. 

பொருளாதாரத்தை உதாசீனப்படுத்தியமையும் யுகொஸ்லாவியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது. மேற்குலத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக கடன்தொகை மற்றும் சர்வதேச நாணய நிதியம் சுமத்திய அழுத்தங்கள் காரணமாக இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

பலம்பொருந்திய யுகொஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுவாக பலவீனப்படுத்தியதுடன், தேசியவாதக் கொள்கைகள் கிளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது. நாட்டில் இனமுரண்பாட்டு பதற்றம் அதிகரித்தது.

 

(கடந்த பெப்ரவரி மாதம் நியூயோர்க்கின் ரைம்ஸ் சதுக்கத்தில் கொசோவோவின் சுதந்திரம் கொண்டாட்டப்பட்ட விதம்)
 
அமெரிக்கா திடீரென தனது அக்கறையை பிராந்தியத்தின் மீது அதிகமாக காட்டத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் யுகொஸ்லாவிய மீது காட்டிய அதே சிரத்தையாக இது இருக்க முடியாது. 

யுகொஸ்லாவியாவின் வீழ்ச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு இன்றியமையாத தேவையாக காணப்பட்டதாக வொஷிங்டனின் கொள்கை வகுப்பாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

பெல்கன் தீபகற்ப நாடுகளை அழுத்தங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பல்வேறு தந்திரோபாய நன்மைகளை அடைய முடியும். இதற்கு யுகொஸ்லாவிய பிளவுபடுதல் மிகவும் இன்றியமையாதாகும். கொசோவோ விவகாரம் இதன் உச்ச கட்டமாக நோக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வித்தியாசமான கோணத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக ஜேர்மனியுடனான தொடர்புகளை மேற்கோள் காட்டலாம். அமெரிக்காவின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் ஐரோப்பா ஒரு கட்டத்தில் வெறுத்து நிராகரித்தது.

எனினும், தந்திரோபாயமாக அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் யுகொஸ்லாவிய விடயத்தில் கூட்டுச்சேர்ந்தன.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஐரோப்பிய நாடுகளுக்கு காணப்பட்டது. குறிப்பாக ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்தும், தனித்தும் பால்கன் தீபகற்ப நாடுகளில் தாக்கம் செலுத்த முற்பட்டன.

யுகொஸ்லாவிய விவகாரத்தில் அமெரிக்காவின் தந்திரோபாய துணையாக ஜேர்மனி செயற்பட்டது. அமெரிக்காவும், ஜேர்மனியும் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு இரகசிய இராணுவப் பயிற்சிகளையும், நிதியுதவிகளையும் வழங்கினர்.

யுகொஸ்லாவியாவை வெற்றிகரமாக பிளவுபடுத்தியதன் பின்னர் பிளவடைந்து சென்ற புதிய நாடுகளுடன் (சேர்பியா தவிர்ந்த) அமெரிக்காவும், ஜேர்மனியும் நெருங்கிய தொடர்புகளை பேணியது. 

பெல்கன் நாடுகளின் ஆபரணமாக கொசோவோ திகழ்கிறது. பொதுவாக பெல்கன் தீபகற்ப நாடுகள் அதிலும் குறிப்பாக கொசோவோ கருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும், முக்கிய எரிசக்தி வளங்களைக் கொண்ட கஸ்பியன் கடலின் முக்கிய மையமாகவும் கொசோவோ காணப்படுகிறது.

எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் ரஸ்யாவினூடாக அமைக்கப்படவுள்ளது. இதன் போது கொசோவோ முக்கியமான மையமாகக் கருதப்படுகின்றது.

இவற்றைவிட, குறைந்தளவு பொருளாதார வளர்ச்சியுடைய கொசோவோவில் தங்கம் மற்றும் நிலக்கரி வளம் வெகுவாகக் காணப்படுகின்றது. இந்த சுதந்திர கொவோவோவின் வளங்கள் மோசமான வகையில் சுரண்டப்படுதனைத் தவிர்க்க முடியாது.

மேலும், கொசோவோ தொடர்பான கரிசனையில் ஒரு இராணுவ தந்திரோபாயப் பரிமாணமும் காணப்படுகின்றது. 

நேட்டோவை முன்னிலைப்படுத்திய அமெரிக்க இராணுவ நிலைகளை பல்கன் தீபகற்ப நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நிறுவுவதன் மூலம்; ரஸ்யாவை கண்காணித்துக் கொள்வது வொஷிங்டனின் மற்றுமொரு உபாயமாகக் கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் நேட்டோ “பேச்சு மாத்திரமே செயல் இல்லை” என்று வர்ணிக்கப்பட்டது. எனினும் அண்மைக் காலங்களில் ஐரோப்பா தொடர்பான அமெரிக்க கரிசனைகளின் கடிவாளமாக நேட்டோ செயற்பட்டு வருகின்றது.

பல பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஏவுகணை எதிர்ப்பு மையம், போலாந்திலும், ஸ்லோவானியாவிலும் அமைக்கப்பட்டுள்ள ரொக்கட் தளம் மற்றும் செக் குடியரசில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் மையம் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

அமெரிக்காவின் (நேட்டோவின்) மிகப் பெரிய இராணுவ மையங்களில் ஒன்றாக கொசோவோவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவப்படைத்தளம் கருதப்படுகிறது. சுமார் 955 ஏக்கர்களில் இந்த இராணுவப் படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு படையினரின் ஏழாயிரம் வீடுகள் கொசோவோவில் காணப்படுகின்றன. குவான்தமானோவைப் போன்று பயங்கரவாத சந்தேகநபர்களை விசாரணை செய்யும் ஒரு மையமாக கொசோவோ செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கொசோவோவின் எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் அமெரிக்க, நேட்டோ பாதுப்பு படையினரின் துருப்புக்கள் மேலும் அதிகளவில் குவிக்கப்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

வெறும் பெயரளவிலேயே கொசோவோ சுதந்திரம் அடைந்துள்ளது. அரசியல் - புவியியல் சதுரங்க ஆட்டத்தில் ஒரு பகடைக் காயாகவே கொசோவோவை பலம் பொருந்திய நாடுகள் பயன்படுத்தியுள்ளன.

உள்நாட்டு முரண்பாடுகள் வெளிநாட்டு தலையீடுகளுக்கு வழிகோலும். 
கொசோவோவிற்கும், இலங்கைக்கும் வழங்கக்கூடிய எளிமையான எடுத்துக்காட்டு இதுவன்றி வேறெதுவுமில்லை.